Wednesday, July 6, 2011

பாலாவின் அவன் -இவன்

avanivan

பாலாவின் இயக்கத்தில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வழங்கியிருக்கும் (சன் அல்லது கலைஞர் குடும்பக் கம்பெனிகளிடமிருந்து விலகி தானே வெளியீடு செய்துள்ள) படம் அவன் இவன்.எந்திரன் படத்துக்குப் பிறகு ரசிகர்கள் தாமாகவே வரிசைக்கு வந்து பெரும் அளவில் முன் பதிவு செய்கிற அளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம்.தேசிய விருது பெற்றுள்ள பாலா ஏற்கனவே நான்கு படங்களைத் தந்துள்ளார்.ஆர்யா,விஷால் என இரு கதாநாயகர்கள் நடித்துள்ளதாலும் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு.

உடல்ரீதியாக இயற்கையிலேயே குறைபாடு உள்ள மனிதர்கள்பால் எப்போதும் கவனம் குவிக்கும் பாலா இப்படத்திலும் கதாநாயகன் விஷாலை ஒரு மாறுகண் பார்வை உள்ளவராகப் படைத்துள்ளார்.களவைத் தம் குலத்தொழிலாகக் கொண்டுள்ள இரு சகோதரர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டுள்ளது படம்.விஷாலுக்குக் களவில் ஆர்வமும் இல்லை.திறமையும் இல்லை. கலையின்மீதுதான் அவருக்கு ஆர்வம்.அந்தக் கலை ஆர்வத்தை கமுதிக்கோட்டை ஜமீனாக வரும் ஜி.எம்.குமார் தூண்டிக்கொண்டே இருக்கிறார்.ஜமீன் போனாலும் இன்னும் ஜமீனாகவே ஒரு கற்பிதத்தில் வாழும் கதாபாத்திரத்தில் ஜி.எம்.குமார் படத்தின் மிகப்பெரிய பலம்.தன் பிரஜைகளைக் காக்கும் உணர்வோடு படம் முழுக்க ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்.அவருக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் சகோதரர்களான ஆர்யாவும் விஷாலும் தங்கள் தகப்பனைப்போன்ற அவரை நிர்வாணமாக்கி ஓட ஓட அடித்தே கொன்ற வில்லனைக் கொன்று பழி தீர்ப்பதே கதை.

நான்கு படங்களுக்குப் பிறகு கதையே இல்லாமல் ஒரு படத்தை துணிச்சலோடு எடுத்திருக்கிறார் பாலா என்றுதான் சொல்ல வேண்டும்.கதை சொல்ல ஆரம்பித்து நாம் கேட்க ஆரம்பிக்கும்போதே படம் முடிந்து அதோட கதை சரி என்றாகி விடுகிறது.காவல்கோட்டம் நாவலும் ,குற்றபரம்பரை அரசியல் குறித்த பல நூல்களும் வெளிவந்து கள்ளர்,களவு குறித்த விரிவான பேச்சு நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் இந்தக் கதை எங்கே நடக்கிறது எந்தக்காலத்தில் நடக்கிறது என்கிற நம்பகத்தன்மை எதையும் நமக்கு உருவாக்காமல் பாலா ஏதோ ஒரு ’கதை’ விட்டிருக்கிறார். அம்பிகா,விஷால்,ஜி.எம்.குமார் போன்றவர்கள் ஏற்றுள்ள பாத்திர வார்ப்புகளும் அவர்கள் நடிப்பும் அற்புதமாக அமைந்திருக்க, அவர்களை மையமாகக் கொண்டு மிக வலுவான ஒரு கதையைக் கட்டி எழுப்பியிருக்க சகல வாய்ப்புகளும் இருக்க எந்த அக்கறையுமற்றவராக பாலா படத்தை இயக்கியிருப்பதாகப் படுகிறது.ஜமீனாக வரும் பாத்திரம் தவிர எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் நமக்கு அழுத்தமான பிடிப்பு ஏதும் ஏற்படவே இல்லை.

வணிகரீதியான வெற்றிக்கு உதவக்கூடிய சில அம்சங்கள் படத்தில் அழுத்தமாக இருக்கின்றன. கலக்கலான துவக்கக்காட்சி விஷாலின் மாறுபட்ட தோற்றமும் சிறப்பான நடிப்பும்.யுவன் சங்கர் ராஜாவின் அதிரும் இசை.எஸ்.ராமகிருஷ்ணனின் சொலவடைகள் ததும்பும் வசனம் -சில இடங்களில் வக்கிரமாகவும்.ஆர்தர் வில்சனின் கண்கவரும் ஒளிப்பதிவு எல்லாம் படத்தில் சிறப்பான பங்களிக்கின்றன.ஆகவே படம் ஓடிவிடக்கூடும்.

நான் கடவுள் போல ஒரு கொலைகாரப் படமாக இல்லை இது என்பதே நமக்கு ஆறுதல்தான். சாதாரணமாக நம் கண்கள் காணத்தவறும் அடிமட்டத்து மனிதர்களையே கதாபாத்திரங்களாக்கும் பாலா தமிழ்நாட்டில் கதை நடப்பதுபோன்ற உணர்வை இதுவரை எந்தப்படத்திலும் தந்ததில்லை. இதையே தனது பாணியாக அவர் கருதினால் நமக்கு ஏமாற்றமும் நஷ்டமும்தான்.ஏனெனில் தமிழ் சினிமா உலகில் சினிமாவைப் புரிந்து கொண்ட ஒரு கலைஞன் பாலா. பெரியகுளத்தில் பிறந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பயின்று இயக்குநர் பாலு மகேந்திராவிடம் கலை பயின்று சினிமாமொழியை அற்புதமாகக் கையாள வல்ல ஒரு நுட்பமான கலைஞன்.

சேது, நந்தா,பிதாமகன்,நான் கடவுள்,அவன் இவன் என அவரது இந்த ஐந்து படங்களிலுமே பார்வையாளர்களை கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாக்கிப் பிரமிக்க வைப்பதை ஒரு பாணியாகக் கொண்டுள்ளார்.அவன் இவன் படத்தில் கடைசியில் ஜமீன்தாரை முழு அம்மணமாக்கி ஓட விட்டுக் கொல்லும் காட்சியை அந்த வரிசையில் சேர்க்கலாம்.காட்சிகள் நுட்பங்கள் கைகூடி நம்மை லயிக்க வைக்கும் என்பது உண்மை.அடிப்படையான கதையில் அவர் எப்போதும் நம்மோடு இல்லை.தமிழ் மண்ணின் வாழ்விலிருந்து எடுத்த தெறிப்புகள் அவர் படங்களில் ஊடாடும் என்பது உண்மை.ஆனால் மையக் கதையை அவர் தமிழ் வாழ்விலிருந்து எடுத்ததில்லை என்பதே நம் கவலையாக இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் கலை பற்றிய ஒரு பார்வை இருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டாலும் பாலா போன்ற அற்புதமான கலைஞனின் கைவண்ணத்தில் எம் தமிழ் வாழ்வு படமாகவில்லையே என்கிற ஏக்கம் வருவதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்.

1 comment:

ஜீயெஸ்கே said...

பிம்பங்கள் உடைகின்றன.