Wednesday, July 6, 2011

என் சக பயணிகள்-9: ஜெயந்தன்

kadu

’நினைக்கப்படும்’ என்கிற அவருடைய நாடகப் பிரதியைத்தான் நான் முதலில் வாசித்தேன்.அந்நாடகங்களில் துள்ளித்தெறித்த கோபம் என்னை வெகுவாக ஈர்த்தது.அது 70களின் பிற்பகுதி.மீடியாக்கள் உலகைப் பூதம் போலப் பிடித்து ஆட்டத்துவங்கியிராத காலம்.கோபமோ வருத்தமோ பாசமோ வெறுப்போ எல்லா உணர்வுகளும் சிதையாமல் அப்படியே வெளிப்பட்ட கடைசிக் காலகட்டம்.அப்புறம் அவருடைய சம்மதங்கள் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது.நாடகத்தில் காணக்கிடைத்த கோபம் ஆவேசமாய் முழு வீச்சில் சிறுகதைகளில் வெளிப்பட்டிருந்தது. வண்ணநிலவன்,வண்ணதாசனின் எழுத்துக்களின் பாசத்திலும் அழகிலும் அப்படியே விழுந்து கிடந்த என்னை எழுந்திருடா என்று அதட்டித் தூக்கி நிறுத்திய கதைகளாக ஜெயந்தனின் எழுத்துக்கள் இருந்தன.70களில் இளைஞர்களின் மனங்களில் மையங்கொண்டிருந்த சமூகக் கோபத்தின் வார்த்தை வெளிப்பாடுகளாக அவருடைய படைப்புக்கள் இருந்தன.

வாசித்த நாள் முதல் இன்றுவரை என்னை அலைக்கழிக்கும் கதை என்று அவருடைய ‘ அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்’ கதையைச் சொல்வேன்.பெண் அடிமைப்பட்டுள்ள கேவலத்தையும் அதற்கெதிராகக் கோபம் கொண்டு அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இதைப்போல சொன்ன இன்னொரு கதையை இன்னும் நான் வாசிக்கவில்ல.இந்தக் கதை தொடர்ந்து என்னை மீட்டிக்கொண்டே இருக்கிறது.பெண் விடுதலை குறித்து பல கூட்டங்களில் பேசிக்கொண்டிருக்கிறேன்.பெண்மை என்றொரு கற்பிதம் என்ற பேரில் சிறிய நூல் எழுதினேன்.ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் எழுதினேன்.என்ன செய்தாலும் ஜெயந்தன் இந்தக் கதையில் தொட்ட எல்லைகளை என்னால் இன்றுவரை தொட முடியவில்லை.தன் வாசகன் யார் என்கிற தெளிவும், அவனுக்கு உணர்வை மட்டும் கொடுத்தால் போதாது அறிவையும் சேர்த்தே தர வேண்டியிருக்கிறது என்கிற சரியான புரிதலுடன் ஒவ்வொரு கதையிலும் வாசகனுக்குக் கல்வியையும் அதன் மூலம் கோபத்தையும் சரியான அளவில் கலந்து புகட்டிய முதல் தமிழ்ப் படைப்பாளி ஜெயந்தன் என்று உரக்கக் கூறுவேன்.அதே சமயம் அது எத்தனை அற்புதமான கலையாக பூரணமான அழகுடன் மிளிர்கிறது என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரலாம்.

சம்மதங்களுக்குப் பிறகு ஜெயந்தன் கதைகள் தொகுப்பு வந்தது.தீண்டாமை-79 என்கிற கதை எவ்வளவு கல்வியை வாசகனுக்கு இன்றும் தருவதாக இருக்கிறது?பகல் உறவு,தீண்டாமை-79 ,நிராயுதபாணியின் ஆயுதங்கள் என சாதியம் குறித்த விதவிதமான சித்திரங்களை அவர் தீட்டியுள்ளார்.

அன்று அவருடைய துப்பாக்கி நாயக்கர் கதை மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட கதை. வசந்த் தயாரித்த ஒரு திரைப்படத்திலும் இக்கதை மையமாக நின்றது. அவரது ஒவ்வொரு கதையும் ஒருவிதமாக என்னைப் பாதித்த கதையாகவே இருந்தது. சம்மதங்கள் கதையை வாசித்த நாள் இப்போதும் நினைவில் நிற்கிறது.அதை வாசித்து முடித்த பிறகு கனத்த மௌனத்தில் மனம் வீழ்ந்தது.யாரோடும் பேசப்பிடிக்காமல் தனிமையில் முகம் புதைத்துக் கிடந்தேன்.பாலியல் தொழிலுக்கு வல்லந்தமாகக் கொண்டுவரப்பட்ட பாலம்மா தப்பிச் சென்று பிடிபட்டு மீண்டும் வீரநாச்சியின் கொட்டடிக்குள் கொண்டுவரப்பட்டு சித்ரவதைக்குள்ளாகும் கதை.அவள் தப்பியோட உதவி செய்த தோழியான வள்ளியும் தாக்கப்படுகிறாள்.கதையின் இறுதியில் வரும் வரிகள்:

“மாலை ஐந்து மணி சுமாருக்கு தன் தோழியின் வேதனையினால் என்றுமில்லாத அளவுக்கு அதிர்ந்து போன வள்ளி,தன் குடிசைக்கு முன்னால் நின்று மெயின் ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.ரோட்டில் சைக்கிள்கள் போயின.ஒரு போலீஸ் லாரி கூடப் போனது.மனிதர்கள் போனார்கள்.

அவளுக்கு வேதனையும் ஆச்சரியமுமாக இருந்தது.இவ்வளவு பக்கத்திலேயே கூப்பிடும் தூரத்திலேயே இருந்தும்,இந்த மனிதர்கள் எப்படித் தங்களுக்கு ஒரு சம்பந்தமுமில்லாது அவர்கள் பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்?” கதையின் இந்த இடம்தான் கலையின் அரசியல் பூரணம் பெறும் இடம்.கதையின் தலைப்பு சம்மதங்கள் என்பதை இந்த வரிகளோடு சேர்த்து வாசிக்கும்போது பல அர்த்தங்கள் வாசக மனதுக்குள் வந்து சேர்கின்றன.கூப்பிடு தூரத்தில் நடக்கும் எத்தனையோ கொடுமைகளை அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் திராணியின்றிக் கடந்து போகும் நம் மனங்களில் குற்ற உணர்ச்சியைத் தூண்டும் கதையாக இது நின்று நம் நெஞ்சை அறுக்கிறது.

அவருடைய பிற்காலக்கதைகளில் என்னை மிகவும் ஆக்கிரமித்த கதை என ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள்’கதையைச் சொல்வேன்.சிதம்பரம் பத்மினி,பாப்பாப்பட்டி- கீரிப்பட்டி -நாட்டார்மங்கலம், ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை எனச் சமகாலக் கொடுமைகள் எல்லாவற்றையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்து உணர்வலைகளைத் தூண்டிவிட்ட கதை அது.பாப்பாப்பட்டி கீரிப்பட்டி கிராமங்களைத் தீயிட்டுக்கொளுத்தும் மனநிலை ஏற்பட்டதில் நியாயம் இருக்கலாம்.ஆனால் அதற்கு அவசியமில்லாமல் அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டதை அவர் வாழ்வின் இறுதி நாட்களில் பார்த்துவிட்டது வாழ்வின் யதார்த்தம். சமகால நிகழ்வுகளைக் கதையாக்கத் திணறும் நம் தோழர்களுக்கு ஓர் பாடமாக இக்கதை அமைந்துள்ளதென்பேன்.

குடிசைப்பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மனிதர்களின் வழ்க்கையிலிருந்து மத்தியதர வர்க்கம்,துப்பாக்கி நாயக்கர் வரை பல தரப்பட்ட வாழ்க்கைகளை அதனதன் அழகுகளோடும் குரூரங்களோடும் வரைந்து செல்லும் கதைகள் அவருடையவை.சிக்கலில்லாத நேரடியான எளிமையான மொழியில் அவர் காட்சிகளை விரித்துச்செல்லும் அழகு வாசகரை ஆழ வசீகரிக்கும்

அவருடைய இறுதி நாட்களில் ஞானக்கிறுக்கன் என்கிற கதாபாத்திரம் கருப்பசாமி என்கிற பேரில் எல்லாக்கதைகளுக்குள்ளும் வருகிறமாதிரி 11 கதைகள் எழுதினார்.அவை வேறு ரகமான கதைகள்.ஒரு தத்துவ விவாதத்தை இந்த ஒவ்வொரு கதைக்குள்ளும் வைத்து எழுதிச்சென்ற கதைகள் இவை.

எண்பதுகளில் கல்கியில் அவருடைய நாவல் ஒன்று தொடராக வந்துகொண்டிருந்தது.இரண்டு அல்லது மூன்று நாவல்கள் எழுதினார் என்று நினைவு.அந்நாவல்களிலும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரமாக வருவது உட்பட பல சமகால நிகழ்வுகளைப் படப் பிடித்திருப்பார்.அங்கதச் சுவையோடு அந்நாவல்கள் வந்தன என்றாலும் சிறுகதைகளிலும் நாடகத்திலும் போல கச்சிதமான வடிவம் நாவல்களில் அமையவில்லை என்பதுதான் என் நினைவில் இருக்கிறது.

சிலகாலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக அவர் பணியாற்றியபோது நெருக்கத்தில் அவரோடு பேசிப்பழக வாய்ப்புக்கிடைத்தது. கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் போராட்டங்களிலும் அவர் பங்கெடுப்பார் என்று தோழர் ஏ.ராமசாமி மூலம் அறிந்திருக்கிறேன்.ஒரு சமூக அக்கறை மிக்க மனிதராக நுட்பமான படைப்பாளியாக இறுதி நாட்கள் வரையிலும் செயல்துடிப்புடன் இயங்கிய ஒரு போராளியாக அவரைப்பற்றிய சித்திரம் என் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

அவரது 58 சிறுகதைகளை அசோகமித்திரனின் சிறிய முன்னுரையோடு வம்சி பதிப்பகம் வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்துள்ளது. செம்மலரில் அவர் எழுதிய குடும்பங்களின் நுட்பமான உணர்வுகளைப் படம் பிடித்த குறுநாவல்களும் பிற நாவல்களும் நூல் வடிவம் பெற்றனவா என்பது எனக்குத் தெரியவில்லை.

1 comment:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.