Tuesday, June 28, 2011

என் பார்வையில் சுந்தரராமசாமி

sundararamasamy1

(சுரா-80 என்கிற தலைப்பில் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டுக் காலச்சுவடு அறக்கட்டளை கன்னியாகுமரியில் ஜுன் 2,3,4 ஆகிய 3 நாட்கள் கருத்தரங்கம் நடத்தியது.100 பேருக்கு மேலான பேச்சாளர்கள் மூன்று நாட்களிலுமாக சு.ராவை நினைவுகூர்ந்தார்கள்.அங்கு நிகழ்த்தப்பட்ட என் உரையின் திருத்தப்பட்ட வடிவம் இது)

I

என் பார்வையில் சுந்தரராமசாமி என்னும் தலைப்பின் கீழ் நான் சுரா அவர்களை ஒரு ஆய்வாளனாக நின்று மதிப்பீடு செய்ய வரவில்லை.சுரா அவர்கள் குறித்த என் மனப்பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளவே விழைகிறேன்.அவரை அடிக்கடி சந்தித்து உரையாடியவன் அல்லன் நான்.சிறு வயதிலிருந்தே எனக்கு எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இல்லாதிருந்தது ஒரு காரணம்.இப்போதும் அந்த உணர்வு எனக்குள் மேலோங்கி இருந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்துக்களின் வழி நமக்கு அறிமுகமாகும் மதிப்புக்குரிய எழுத்தாளர்களின் பிம்பம் நேரில் சந்திக்கையில் உடைந்து போவதும்கூட அப்படியான ஆர்வமின்மைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும்.அவர் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு உரையாடியது என்று பார்த்தால் ஒரு நான்கைந்து முறைக்கு மேல் இருக்காது.ஆனாலும் ஒரு மன நெருக்கம் எங்களுக்குள் எப்போதும் இருந்தது.

என் முன்னோடிகளில் ஒருவரான சுரா அவர்களின் மீது அவரை நேரில் சந்திக்கும் முன்பே அவருடைய எழுத்துக்களின் வழியாகப் பெரும் மதிப்புக்கொண்டிருந்தேன்.1959இல் பதிக்கப்பட்ட அவரது முதல் தொகுப்பான அக்கரைச்சீமையில் மற்றும் 1964இல் பதிப்பிக்கப்பட்ட பிரசாதம் ஆகிய இரு கதைத் தொகுதிகளும்தான் எனக்கு முதலில் வாசிக்கக் கிடைத்த சுரா அவர்களின் படைப்புக்கள். அக்கரைச்சீமையில் தொகுப்புக்கு தோழர் ரகுநாதன் கச்சிதமான ஒரு முன்னுரை எழுதியிருப்பார்.பிரசாதம்தான் முதலில் வாசித்தேன்.அவர் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டுகளான ரகுநாதனும் விஜயபாஸ்கரனும் முறையே நடத்திய சாந்தி,சரஸ்வதி ஆகிய இதழ்களில்தான் தன் முதல் 15 கதைகளை எழுதினார். முஷ்டி உயர்த்தும் வரிகளோடுதான் கதையை முடிப்பார்கள் என்கிற விமர்சனத்தை முற்போக்காளர்கள் மீது நவீன இலக்கியவாதிகளில் சிலர் சதா வைப்பதுண்டு.அத்தகைய கதைகளுக்கும் முன்னோடி சுந்தரராமசாமி அவர்கள்தான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.சாந்தியில் வெளியான அவருடைய ‘தண்ணீர்’ சிறுகதையின் கடைசி வரிகளே இதற்குச்சான்று. அவர் தொடங்கி வைத்த இந்தப் பாரம்பரியத்தைத்தான் சில முற்போக்கு எழுத்தாளர்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள் என்பேன்.

அவருடைய எழுத்து வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் உண்டு.கம்யூனிஸ்ட்டுகளோடு –கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு-அவர் நெருக்கமாக இருந்த முதல் கட்டம்.அதிலிருந்து முற்றிலுமாக விலகி பிரபஞ்ச வெளியில் சூரியனை நோக்கிப் பறக்க முயலும் ஒரு பறவையாக வாழ ஆசைப்பட்ட இரண்டாவது கட்டம்.நிதானமும் முதிர்ச்சியும் கொண்ட மூன்றாவது காலகட்டம்.

இரண்டாவது தொகுப்பான பிரசாதம் கதைகளுக்கு அவரே எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்,” 1956 ஆம் ஆண்டு உலக நிகழ்ச்சிகள்,அன்று வரையிலும் மனவேதனையை அளித்துக்கொண்டிருந்த சந்தேகங்களைச் செம்மையாக ஊர்ஜிதம் செய்து என் முள் முடியைப் பிடுங்கி எறிந்துவிட்டன.இதன் பின் வாழ்க்கைக் கண்ணோட்டமும், அதன் ஒரு கிளையான கலைக்கொள்கைகளும் மாறுதல் உற்றன.இந்த ‘இரண்டாவது மனநிலை’யில் எழுதிய கதைகள் இவை “ 1950 களில் தோழர் ஜீவாவுடனான நெருக்கத்துடன் துவங்கிய அவரது இடதுபக்கப் பயணம் 1956களின் உலக நிகழ்வுகளால் திசை மாறியது.1956இல் என்ன நடந்த்து? சோவியத் படைகள் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அதிரடியாக நுழைந்தது.உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹோப்ஸ்வாம் போன்ற சில மார்க்சிய அறிஞர்களைத்தவிர பெரும்பாலான அறிவுஜீவிகள் அப்போது கம்யூனிசத்தின் மீது கோபம் கொண்டு வெளியேறினார்கள்.அந்த உலகநிகழ்வைத்தான் சுராவும் குறிப்பிடுவதாக நினைக்கிறேன். இப்படிப் புற உலக நிகழ்வுகளுக்குச் செவி சாய்ப்பவராக-முகம் கொடுப்பவராகத்தான் அதன் பிறகும் அவர் இருந்தார்.இறுதிவரை அப்படியேதான் இருந்தார்.உள்மனத் தேடல் என்று அவர் ஒருபோதும் கிளம்பிவிடவில்லை. எப்போதும் ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் அவர் பெரும்பாலும் இருந்தார் என்று நான் உணர்கிறேன்.

இரண்டாம் கட்டம் எனப்படும் காலப்பகுதியில் மட்டும் வாழ்வின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்த சில குழப்பங்கள் அவரிடம் இருந்ததாக நான் கருதுகிறேன்.அக்காலகட்ட்த்தையே நவீன இலக்கிய உலகில் பலரும் பாராட்டிப் பேசுவதும் உண்மை.வாசனை,அழைப்பு,போதை போன்ற கதைகளிலும் ஜேஜே சில குறிப்புகள் நாவலிலும் அதற்கான அடையாளங்களைக் காணலாம்.நினைவின் எந்தப்பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகள் மலிந்து கிடக்கும் அவமானம் என்று மனம் பிறழும் ஒருவரின் கதையான அழைப்பு,சாதிய மனமோ என்கிற ஆழமான சந்தேகத்தைக் கிளப்பும் போதை மற்றும் வாசனை கதைகளை இப்போது வாசித்தாலும் அந்தச் சிக்கலை உணர முடிகிறது.அவரது மரணத்தின் போதுகூட எந்த சாதி மதச்சடங்குகளும் இல்லாமல் தன் உடல் மின்மயானத்தில் எரிக்கப்படவேண்டும் என்று சொல்லிச்சென்ற சாதி மத மறுப்பாளராகிய அவரா போதையையும் வாசனையையும் எழுதினார் என்று நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது.இவை இரண்டுமே இரண்டாம் காலகட்ட்த்தில் அவர் எழுதியவை.இரண்டாம் கட்டத்திலும்கூட அவர் பல நல்ல யதார்த்தக் கதைகளை எழுதியுள்ளார்.தமிழ்ச்சிறுகதை உலகின் சிகரமான கதைகளில் ஒன்றான ரத்னாபாயின் ஆங்கிலம் கதையும் இக்காலத்தில் எழுதப்பட்ட்துதான்.

என்னதான் அமைப்புரீதியான விஷயங்களுக்கு எதிராக அவர் பேசி வந்தாலும் வாழ்நாள் முழுவதிலும் கச்சிதமான யதார்த்தவாதக் கதைகளையே அதிகம் எழுதினார் என்பது மறுக்க முடியாத உண்மை.அவரது மூன்றாம் கட்ட்த்தில் மீண்டும் அவர் சரஸ்வதி காலத்து எழுத்துமுறையிலான கதைகள் பலவற்றை எழுதினார்.நாடார்சார்,பிள்ளை கெடுத்தாள் விளை,அந்த ஐந்து நிமிடங்கள்,கிட்னி என்று பல கதைகளைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

கல்கி,தினமணி கதிர்,யாத்ரா,தீபம்,,காலச்சுவடு எனப் பல இதழ்களில் அவர் எழுதியிருந்தபோதும் அதிகமான கதைகளை அவர் சாந்தியிலும் சரஸ்வதியிலும்தான் எழுதினார் என்பதை அழுத்தமாக்க் குறிப்பிட விரும்புகிறேன்.உரைநடையைப் பின் தொடர்ந்த்துபோல அவரது கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்ததில்லை.பசுவய்யா என்கிற பெயரில் அவர் எழுதிய சில கவிதைகளை மட்டுமே வாசித்த அனுபவம் எனக்கு.கவிதைகளில் வேறு ஒரு மனதை வாசித்த நினைவே எனக்கிருக்கிறது. மரணம் பற்றிய பயம் அவ்ருடைய சில கவிதைகளில் தென்பட்டதை அவரிடமே பேசியிருக்கிறேன்.

II

தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்குமிடையே பேசிக்கொள்ளாத ஒரு நெருக்கம் இருந்த்து. ஆங்கிலத்தில் சொன்னால் அது ஒரு LOVE AND HATE RELATIONSHIP .The love was too personal and the hate was organizational என்று சொல்ல்லாம்.என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் உற்சாகமடைந்து ‘ என்ன தலைவரே..’ என்று அழைத்துக் குஷியாகப் பேசுவார். உருப்படியாக எழுதிக் கொண்டிருக்காமல் கட்சி,இயக்கம் என்று சுற்றிக்கொண்டிருப்பதில் அவருக்கு என்மீது வருத்தம் இருந்த்து.அதைச் சுட்டித்த்தான் தலைவரே என்றழைத்துக் கேலியாகப் பேசித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துவது அவர் வழக்கம்.கலைஞனை சமூகத்தில் எல்லோருக்கும் மேலான இட்த்தில் வைத்துப் பார்ப்பது அவர் மனம்.அதில் எனக்கு உடன்பாடு இருந்த்தில்லை. தொழிலாளர்கள், குழந்தைகள்,பெண்கள் ,கலைஞர்கள் இவர்கள் நால்வருமே சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பது என் கருத்தாக இருக்கும்.குழந்தைகள்,பெண்கள் ,ஆண்கள் என்று வரிசைப்படுத்தித் தன் நாவலுக்கு அவர் பெயர் வைத்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்.

மலையாள அறிவு உலகில் மாற்றுச்சிந்தனைகளை முன்வைத்த எம்.கோவிந்தன் மீதும் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தோழர் எம்.என்.ராய் மீதும் அளப்பரிய மரியாதை கொண்டிருந்தார்.இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றி அதிகம் அவர் பேசியதில்லை.இதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது.கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு தகப்பனுக்குரிய இடம் என் மனதில் அவருக்கு இருந்தது உண்மை.ஒரு கறாரான தந்தை.என்ன எழுதினாலும் அவர் வாசித்தால் என்ன நினைப்பாரோ என்கிற ஒரு சிறு பயம் எனக்கு அந்த நாட்களில் இருந்துகொண்டேதான் இருந்தது.நான் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது அவருக்குச் சொல்ல வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் எப்போதும் இருக்கும்.

கல்வி குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.வசந்திதேவியுடன் அவர் நட்த்திய உரையாடல் மட்டுமின்றி அவரது பல படைப்புகளில் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்.அவர் ஆசைப்பட்ட விதத்தில் நாங்கள் ஒரு பள்ளியை பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நட்த்தி வருகிறோம்.அந்த இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளியில் பிரம்பு கிடையாது.வீட்டுப்பாடம் என்கிற சித்ரவதை கிடையாது.பாடங்களை விளையாட்டாகக் கற்பிக்கிறோம்.குழந்தைகள் அப்படி ஒரு ஆனந்த்த்தோடு குதித்துக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். அப்பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான வெற்றிகள் பெறும் போதெல்லாம் சுரா அவர்களுக்குப் போன் செய்து பேச வேண்டும் என்று ஆசைப்படுவேன். அவரை எங்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்கிற அவா

நிறைவேறாமலே போனது.இப்போதும் கூட பள்ளியில் எது நடந்தாலும் சுரா சாருக்குப் போன் பண்ணிச் சொல்லணும் என்று மனதில் ஒரு எண்ணம் மின்னி மறைவதும் அடுத்த கணமே அவர் இல்லையே என்கிற ஏக்கம் ஒரு கேவலுடன் கண்ணீராய் என் கன்னங்களில் உருளுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.தெருவில் எது நடந்தாலும் அம்மாவிடம் ஓடிச்சென்று சொல்லும் ஒரு குழந்தையின் மனநிலைதான் அது.அப்படி ஒரு இடம் அவருக்கு என் மனதில் எப்போதும் உண்டு-விமர்சனங்களை எல்லாம் தாண்டி.

அவருடைய கடைசி நாட்களில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.அப்போதும்கூட அவர் எழுதினார்.கடைசியாக அவர் எழுதிய பத்துக்கட்டுரைகளில் ஒன்று என் ‘இருளும் ஒளியும்’ என்கிற புத்தகம் பற்றியது என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு.அக்கட்டுரை புதிய பார்வை இதழில் வந்த்து.அறிவொளி இயக்க அனுபவங்களின் தொகுப்பான அப்புத்தகத்தை அவருடைய இடையறாத தூண்டுதல் காரணமாகவே எழுதினேன்.பார்க்கும்போதெல்லாம் தலைவரே புத்தகம் என்னாச்சு என்று கேட்ட அந்தச் சிரித்த முகம் மனதில் அப்படியே நிற்கிறது.அந்த அனுபவங்களை அவர் மிகவும் மதித்தார்.

அவர் மீது எனக்கு இருக்கும் தீராத வருத்தம் ஒன்று உண்டு.இடதுசாரிகளை விட்டு அவர் விலகியபிறகு அவர் இட்துசாரிப் படைப்பாளிகளின் படைப்புகளை ஏறெடுத்தும் பார்க்காமல் விட்டுவிட்டார்.கந்தர்வன் கதைகளைக்கூட அவர் வாசித்திருக்கவில்லை.என்னுடைய கதைகளை அவராக வாசிக்கவில்லை.ஜோதிவிநாயகம் சிபாரிசு செய்து அவரிடம் என் தொகுப்பைக் கொடுத்ததால் வாசித்தார்.ஆனால் வாசித்த பிறகு அவரே காலச்சுவட்டில் தமிழ்ச்செல்வன் ஒரு கலைஞன் என்று எழுதினார்.எவ்வளவு போதையூட்டும் ஒரு வரியாக அது எனக்கு இருந்துகொண்டிருக்கிறது! எங்கள் தோழர்களின் படைப்புகளை வாசித்தால் நிச்சயம் அவர் கொண்டாடியிருப்பார்.ஆனால் இடதுசாரி எழுத்துக்கள் என்றால் வாசிக்காமலேயே கருத்துச் சொல்லலாம் என்கிற ஒரு பாரம்பரியத்தை அவர்தான் உருவாக்கிச் சென்றார் என்கிற வருத்தம் எனக்கு ஆழமாக உண்டு.இந்தக் கருத்தரங்கிலேயே இன்று காலை நண்பர் பெருமாள் முருகன் சமகால பத்தாண்டு எழுத்துக்கள் பற்றி வாசித்த கட்டுரையில் கூட எஸ்.லட்சுமணப்பெருமாள், சுப்பாராவ் ஆகிய இரண்டு அற்புதமான படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிடவே இல்லை.அவர்கள் செம்மலரில் எழுதுகிறார்கள் என்பதால்தானே இந்தப் புறக்கணிப்பு?அல்லது மறதி? லட்சுமணப்பெருமாளின் வயனம் ஒரு கதையையாவது வாசியுங்கள்.சுரா இருந்து அக்கதையை வாசித்திருந்தால் நிச்சயம் கொண்டாடியிருப்பார்.மிக வலுவான படைப்பாளிகளின் படை வரிசையாக முற்போக்காளர்கள் இன்று வந்திருப்பதை நீங்கள் வாசிக்க வேண்டும்.( நான் பேசி முடித்ததும் பெருமாள் முருகன் வந்து லட்சுமணப்பெருமாளைத் தான் வாசித்திருப்பதாகவும் அவரை காலத்தால் முந்தியவராகக் கருதியதால்தான் சேர்க்கவில்லை என்றும் சுப்பாராவ் பற்றி அறியாமல் இருந்தது பற்றிய என் விமர்சனத்தை ஏற்பதாகவும் கூறினார்).

III

ஒவ்வொரு நூற்றாண்டும் உலகத்துக்குச் சில வார்த்தைகளை விட்டுச்செல்வதாக எரிக் ஹோப்ஸ்வாம் குறிப்பிடுவார்.ஒவ்வொரு படைப்பாளியும் அவ்விதமே சில வாக்கியங்களை விட்டுச் செல்கிறான்.ஒரு எழுத்தாளன் தான் வாழும் சமூகத்துக்கு வேறு என்னதான் செய்துவிடப் போகிறான்.சில வார்த்தைகளை,வாக்கியங்களை விட்டுச்செல்லலாம்.அவ்வார்த்தைகளில் சில நம்மைக்கொல்லும்.சில நாம் சோர்ந்து வீழும்போது தூக்கி நிறுத்தும்.முகம் துடைத்து ஆறுதல் சொல்லும்.சுந்தரராமசாமி அவ்விதமாக எனக்கான வரிகளாகச் சிலவற்றை விட்டுச் சென்றிருக்கிறார்.என் வாழ்நாள் பூராவும் கூட வரும் வரிகளாக இவை இருக்கின்றன.சுரா என்பது இந்த ஏழெட்டு வாக்கியங்கள்தானா என்று ஒரு கேள்வியும் எனக்குள் எழுகிறது.ஆனால் அவரால் இவ்வளவு வரிகளை எனக்காக விட்டுச்செல்ல முடிந்திருக்கிறதே ,நான் வாழ்க்கை பூராவும் எழுதி எழுதி என் வருங்கால சந்ததியினர் நினைவு கொள்ளத்தக்க ஒரு வரியையாவது விட்டுச் செல்வேனா என்கிற ஏக்கம்தான் மிச்சமாக இருக்கிறது.

ஜீவா மறைந்தபோது தாமரை அவர் நினைவாக மலர் ஒன்று கொண்டு வந்தது.அதில் பல தலைவர்கள் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.அவை எல்லாவற்றிலும் பார்க்க சுந்தரராமசாமி அவர்களின் கட்டுரையான காற்றிலே கலந்த பேரோசைதான் எல்லோருடைய மனதையும் உலுக்குவதாக- ஜீவாவின் முழுமையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.ஜீவாவுக்கு அதை விடச் சிறப்பான அஞ்சலியை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் யாருமே செய்து விடவில்லை.(காற்றிலே கலந்த பேரோசை என்கிற தலைப்பில் அவருடைய கட்டுரைத் தொகுப்பு பின்னர் வந்தபோது நண்பர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என்று கையெழுத்திட்டு 10.2.98 தேதியிட்டு சுரா எனக்களித்த அப்புத்தகப் பிரதியை ஒரு பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.)

அக்கட்டுரையின் துவக்க வரிகள் இன்றும் என்னை அலைக்கழிக்கிற வரிகளாக இருக்கின்றன.

“ நண்பர் ஒருவரிடம் ‘ஜீவா மறைந்து விட்டார்’என்றேன்.1963 ஜனவரி மாதம் பதினெட்டாம் தேதி.நண்பகல் வேளை.செய்தி தபால் நிலையத்துக்கு வந்து அப்போது ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை.’ஆ!’ என்று கூவி ஸ்தம்பித்து நின்ற நண்பர், இரண்டொரு நிமிஷங்களுக்குப் பின் ‘கூட்ட்த்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?” என்று கேட்டார்.” இந்த ஒரு வரியை நான் வாசித்தபோது எனக்கு வயது 21.கம்யூனிஸ்ட் இயக்கத்தில் காலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த நேரம்.இந்த வரி எனக்குள் புகுந்து ஒரு பூதம்போல ஆட்ட்த்துவங்கியது.வாழ்ந்தால் ஜீவா மாதிரி வாழணும்.தமிழ்ச்செல்வன் செத்துட்டானா மேடையில் பேசிக்கிட்டிருக்கும்போதா? இயக்கப்பணிகளின்போதா? என்றுதான் பேசப்பட வேண்டும் என்று ஒரு சங்கற்பம் அன்று ஏற்பட்டது.இன்று வரை என் கூடவே எனக்கு ஓரடி முன்னால் சென்று என்னை இழுத்துச்செல்லும் வரியாக இது இருந்துகொண்டிருக்கிறது என்பேன்.

இரண்டாவது வரி “ புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று நம்பிய கடைசித் தலைமுறை நாங்கள்” என்று சுந்தரராமசாமி எழுதிய அல்லது நேர்காணலின்போது சொன்ன ஒரு வரி.வாசித்த உடன் நான் மறுத்துத் தலை ஆட்டிய வரி இது.இல்லை சுரா சார்..உங்களுக்கு அப்புறமும் வந்துள்ள இரண்டு தலைமுறைகளாக புரட்சி பற்றி நீங்கள் கண்ட கனவை சுருதி சுத்தமான ஒரு உலகைப் படைக்கக் கனவைக் காணும் தோழர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறோம் என்று ஒரு வரி என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எத்தனை வெற்றி தோல்விகள் வந்தாலும் வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும் கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் அழியாமல் இயங்குவது புரட்சி பற்றிக் கனவுகள் கொண்ட தோழர்கள் வந்து கொண்டே இருப்பதால்தான்.புரட்சி பற்றிய கனவுகளுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் கடைசித்தலைமுறை என்று ஒன்று இருக்கவே முடியாது.

மூன்றாவது வரி இடதுசாரி எழுத்தாளர்கள் பற்றி அவர் எங்கோ எழுதிய ஒரு வரி “ இவர்கள் இலக்கியக் கால் நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்”இவ்வரியின் அங்கதத்தை இப்போதும் நான் ரசிக்கிறேன் என்றபோதும் இந்த வரியைப்பொய்யாக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ்ந்துவிட வேண்டும் என்கிற வெறியை எனக்குள்ளும் என் தோழர்கள் பலருக்குள்ளும் கிளர்த்துகிற வரியாக இது நிலைத்து நிற்கிறது.

நான்காவது வரி “ படைப்புகளை அணுகும்போது பண்டிதம் எவ்வித அனுபவங்களையும் பெறுவதில்லை.இன்றுவரையிலும் அது எந்தச் சீரிய கலைஞனையும் புன்னகையுடன் வரவேற்றதில்லை” இளம் படைப்பாளிகளை அணுகும்போதும் எதை வாசிக்கும்போதும் எனக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இவ்வரிகள் துணை நிற்கின்றன.

ஐந்தாவது வரி “ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள் ,த்த்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்ட்தும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்கிறேன்.தவிர இந்த வரிகளை அவர் 1963இல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய தருணத்தில் எழுதினார் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறாவதாக, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரும் ஒரு வரி “ இந்த பூமியில் சரஸ்வதி கடாட்சம் இல்லாத குழந்தை என்று யாரும் இல்லை”-என்ன அற்புதமான வரி இது. கல்வித் தளத்தில் எம் முயற்சிகளுக்கு அடிநாதமாக இவ்வரி எப்போதும் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கிறது.

ஏழாவதாக ரத்னாபாயின் ஆங்கிலம் கதையில் வரும் வரிகள் “ பாஷை ஒரு அற்புதம்.கடவுளே உனக்கு நன்றி” என்றாள்.இதை விட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள்.மீண்டும் கண்ணாடி முன் நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடித்த்தைப் படித்தாள் “ அந்தக் கதையே தன் ஆங்கில மொழி அறிவு மற்றும் மொழி அழகில் தானே மயங்கி அதையே தன் வாழ்வின் வரமாக்க் கற்பிதம் செய்து வாழும் பெண்ணைப்பற்றியது.அக்கதையின் கடைசி வரிகள்தாம் இவை.ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொருந்தும் வரிகள் இவை.வார்த்தைகளை விட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது?

இப்படியான வார்த்தைகளாக சுந்தரராமசாமி நம்மோடு வாழ்கிறார்.வணக்கம்.

3 comments:

ஓலை said...

Nice one.

venu's pathivukal said...

சு ரா குறித்த உங்களது பதிவு, தேர்ந்த மொழியில் செறிவாகவும், தேடலோடும் நிறைந்திருந்தது. யாரையும் காயப் படுத்தாமல் விமர்சிக்கும் உங்களது பக்குவம் போற்றுதற்குரியது.

தமிழ் இலக்கிய வாசிப்பில், சு ரா தவிர்க்கமுடியாத முக்கிய எழுத்தாளுமை மிக்கவராக விளங்கினார் என்பதை மிக வெற்றிகரமாக இயக்கப் பார்வையில் ஆனால் அதன் அழகு குலையாமல் பேசி வந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

எஸ் வி வேணுகோபாலன்,
சென்னை 24

Samikkannu said...

கம்யூனிஸ்ட் என்றாலே கரடுமுரடானவன்; எதையும், எவரையும் தன் கோட்பாட்டின் வழி மட்டுமே பார்ப்பவன்; சுருங்கச் சொன்னால் , அவன் சதா இயக்கமும் மாற்றமும் கொண்ட இப்பேரண்டத்தையும் அதன் அங்கமான சக மனிதனையும் தான் சார்ந்த தத்துவத்தின் சோதனைக் கூடமாகவும், சோதனை எலியாகவுமே பாவிப்பவன் என்கிற பிம்பத்தை--சில மெதாவிகளால் வேண்டுமென்றே இட்டுக் கட்டப்பட்டிருக்கிற பொய்மையை-- உடைத்துச் சுக்கு நூறாக்குகிற வரிகள் இவையும் தாங்கள் தொடர்ந்து எழுதி வரும் 'என் சக பயணி'களும். சுராவின்'ஜெ.ஜெ. சில குறிப்புகள் ' என்கிற நாவலை மட்டுமே நான் படித்தவன்;அதைப் படித்த பின்னர் இன்றுவரை அவரின் வேறெந்த நூலையும் படிக்க விரும்பியதில்லை; அவ்வளவு வெறுப்பு என்னுள்; கட்சியில் தான் கண்ட சில அருவறுப்பூட்டக்கூடிய கபடவேடதாரிகளை மட்டும் முன்னிறுத்தி இம்மானுடத்தின் மேன்மைக்காகத் தங்கள் இன்னுயிரைக்கூடத் தியாகம் செய்கிற எத்தனையோ தோழர்களையும் சேர்த்து அனைவரையும் கிண்டலடித்துக் கேலிபேசுகிற அந்த நாவல் அவர்மீது என்னுள் வெறுப்பை விதைத்தது இயல்பே-----ஒருவர் கடைசி நாட்களில் எப்படி இருந்தார் என்பதை வைத்தே அவரின் பங்களிப்பை மதிப்பிட முடியும் என்பதை நான் இன்றும் நம்புகிறவன் ஆதாலால். தங்களின் இந்த வரிகளைப் படித்த பின்னர் ஒருவரின் குறை நிறைகளைக் காய்தல் உவத்தலின்றி கண்டறிவது எப்படி என்பதை அறிந்து கொண்டேன்; நன்றி.
பின் குறிப்பு : இக் கட்டுரையில் வரும் " புரட்சி பற்றிய கனவுகளுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் கடைசித் தலைமுறை என்று ஒன்று கிடையவே கிடையாது" என்கிற வரிகள்தாம் தாங்கள் பின் சந்ததிக்கு விட்டுச் செல்லவிருக்கும் எத்தனையோ வரிகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய்--தலை வரியாய்த்--திகழப் போகிறவை.