Saturday, November 13, 2010

தெறித்து விழுந்தது...

 

 lonely

மனம் விசாலமாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் அதே விசாலத்துடன் இருக்க எல்லா நேரங்களிலும் வாய்ப்பதில்லை.இப்படிச் சொல்வதுகூட ஒருவித தப்பித்தல்தான்.மனதளவில் ஏற்றுக்கொள்வது என்பது வேறு. வாழ்க்கையில் கடைப்பிடிப்பது என்பது வேறு.தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் படுத்த அது பழக்கமாகித்தான் பின் மனசின் வரைபடத்தோடு நடைமுறைநாம் ஒட்டுவோம்.சரி.நேரடியாக விசயத்துக்கு வருவோம்.

அன்று பஸ்ஸில் சரியான கூட்டம்.திண்டுக்கல்லில் பஸ் ஏறி நாமக்கல்லுக்குப் போகிறேன்.நல்ல வெயில் நேரம் என்பதால் பனியன் கசகசக்க( இல்லை சொதசொதக்க என்பதுதான் சரி) உள்ளே ஏறினேன்.நிரம்பி வழிந்தது பஸ்.பையை மேலே போட்டுவிட்டு கம்பியில் நானும் ஊஞ்சலாட பஸ் புறப்பட்டது.வயிறு நிறைய சோறு சாப்பிட்டுவிட்டுப் பஸ்ஸில் பயணிப்பது போலக் கொடுமை ஏதுமில்லை.ரெண்டே ரெண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டு விட்டு பஸ் ஏறிவிட வேண்டும்.இது என் 30 ஆண்டு காலக் கனவு.ஆனால் இலையில் (அல்லது தட்டில்) உட்கார்ந்தால் கையும் வாயும் மனம் சொல்வதை எங்கே கேட்கின்றன.சோத்தைக் குழைத்து அடித்தால்தான் நிம்மதி ஆகிறது.சோற்றைக் குவித்து வைத்து உருட்டி உருட்டித் தின்பதை என்றைக்குத் தமிழன் நிறுத்துகிறானோ அன்றைக்குத்தான் தமிழினம் உருப்படும்.இது தந்தை பெரியார் அல்லது தம்பி சீமான் சொன்ன பழமொழி அல்ல.எனக்கு நானே தினமும் சொல்லிக்கொண்டிருப்பது.

தின்ற வயிறு பிதுங்க பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது கவனித்தேன்.அதோ அங்கே ஒரு சீட் காலியாக இருந்தது.இரண்டுபேர் உட்காரக்கூடிய இருக்கையில் ஒருவர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்.ஓர் இருக்கை காலியானால் ஓடிப்போய் உட்காரும் என் தமிழினம் ஏன் இப்படி அதை விட்டு வைத்திருக்கிறது?கீழே கால் வைக்க முடியாதபடிக்கு யாரும் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்களா என்று அச்சத்துடன் அவ்விருக்கையை எட்டிப்பார்த்தேன்.அப்படி ஏதும் இல்லை.ஓ..அதில் உட்கார்ந்திருந்த நபர்தான் பிரச்னை.காக்கிச் சட்டையும்(மேல் பித்தான்கள் மூன்று திறந்து கிடக்க) அழுக்கான வெள்ளை வேட்டியும் வாய் நிறைய வெத்திலையும் கண் நிறைய போதையுமாக அவர் சரிந்து உட்கார்ந்திருந்தார்.கப்..கப் என்று வாடை சுற்றுச்சூழலை மயக்கிக்கொண்டிருந்தது.

என் மன விசாலம் பற்றித்தான் தெரியுமே.ஆகவே நான் வேகமாகச் சென்று அவரை அண்ணே.. கொஞ்சம் நேரா உட்காருங்க.. என்று சொல்லியபடி அவரை நிமிர்த்தி உட்கார வைத்துவிட்டு அவரருகில் வயிறார உட்கார்ந்தேன். ஆனால் அடுத்த கணமே அவர் என் மீது சரிந்தார்.ஒரு துளி வெற்றிலை எச்சில் என் சட்டை மீது தெறித்தது.எப்போது நான் வெள்ளைச்சட்டை போட்டாலும் ஒரு துளி சாம்பார் அல்லது துளி தேநீர் பட்டு விடும்.அது சர்வ நிச்சயம்.சற்று முன் திண்டுக்கல்லில் அதே கவனத்துடன் சாப்பிட்டதால் முழு வெள்ளையாகத் தப்பிவிட்டேன் என்று சிறு மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்.சிரித்துக்கொண்டேன்.மீண்டும் அவரை நிமிர்த்தி உட்கார வைத்தேன்.நாங்கள்ளாம் என்ன முட்டாளா என்று பேருந்து மௌனமாக என்னை வேடிக்கை பார்த்தது.

கரூர் நெருங்கும்போது அவருக்குச் சற்றே போதை இறங்கியது போல் தோன்றியது.தானே நேராக உட்கார்ந்து சிரித்து வழிந்தபடி எனக்கு ஒரு வணக்கம் வைத்தார்.இரண்டுமுறை சன்னல் வழியே துப்பினார். செருமிக்கொண்டு மறுபடி கண்களை மூடிச் சரிந்து விட்டார்.என்மீதல்ல.சன்னல் மீது.சற்று நேரத்தில் பழகிவிட்டபடியால் வாடை என்னை ஒன்றும் செய்யவில்லை.தவிர எழுத்தாளனாக இருப்பதால் குடிகாரர்களைச் சந்தித்துச் சமாளிக்கும் முன் அனுபவமும் நமக்குக் கை கொடுத்தது.

பாதி உறக்கமும் பாதித் தெளிவுமாக அவர் பயணம் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு பாலம் கடந்தபோது அவர் பேசத்துவங்கினார்.தொடர்ச்சியான பேச்சல்ல.மனதில் அவர் தொடர்ந்து யாருடனோ பேசிக்கொண்டிருப்பது எனக்குப் புரிந்தது.வாய் வார்த்தைகள் அவ்வப்போது ஒன்றிரண்டாகக் குழறித் தெறித்தன.குழறலுக்குள்ளிருந்து வார்த்தைகளைச் சுத்தம் செய்து நான் எடுத்துக்கொண்டிருந்தேன்.

மேஸ்திரின்னா என்ன பெரிய புடுங்கியா...என்று ஒருமுறை வரும்.அப்புறம் நீண்ட மௌனம்.பிறகு

..நீங்க பாத்து அப்படிச் செஞ்சா..என்று அழுகிற மாதிரியான தொனியில் ரெண்டு வார்த்தை.மீண்டும் மௌனம்.

மிதிச்சே கொன்னுறுவேன் பாத்துக்க... மௌனம்.

சரிங்க சார்.

மௌனம்.

அதுக்கு மேலே நான் ...

மௌனம்.

துப்புரவுத்தொழிலாளியான அவரது அன்றைய வாழ்வில் அவர் அடைந்த ஏதோ காயத்திலிருந்து வழியும் வார்த்தைகளாக அவை எனக்கு அர்த்தமாகத் தொடங்கியதும் நான் உறைந்து போனேன்.

அந்தப் பேருந்து மட்டுமல்ல தேசமே அவரை அக்கோலத்தில் வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதான உணர்வு மின்னலாய்த்தாக்க - ஒரு சிறிய கேவலுடன் என் கண்களில் குற்றம் துளிர்த்து வழிந்தது.என் சகோதரனே.. என்று அவரை என் இடது கையால் சேர்த்து அணைத்துக்கொண்டேன் –மனசால் மட்டும்தான்.

5 comments:

Anonymous said...

என்னை செங்கொடியின் கைகள் தானே அள்ளிக்கொண்டாது, பாடல் கேட்ட உணர்வை .....

Madumitha said...

படித்து முடிந்ததும் ஒரு துளி
கண்ணீர் வழிந்தது உங்கள்
எழுத்துக்காகவும்,
அந்த சகோதரருக்காகவும்.

S.Raman, Vellore said...

Dear Comrade,

It is very glad to see you after a long time and that too with three posts. Kindly keep us engaged

Raman, Vellore

ஈஸ்வர சந்தானமூர்த்தி said...

நன்று தோழர், இப்படி நாம் தினசரி மனதால் பல தோழமைகளை கடந்தே செல்கிறோம்.வெவ்வேறு வீதிகளில், வெவ்வேறு பொழுதுகளில்...ஆனால் அவர்களுக்கு....?

Unknown said...

வணக்கம் சார்..

ஒவ்வொரு பதிவுக்கும் தாங்கள் காட்டும் இடைவெளியை கண்டு வருகிறேன் . எதாவது எழுதி பக்கங்களை நிரப்பவுவதை விட நல்ல விசயங்களை எழுதி மனதில் பதிய வைப்பது , தங்கள் வழக்கம் . அதுதான் தங்கள் சிறப்பு ..

நிராகரிப்பின் வலிகளை சுமந்து வாழும் மனிதர்களை காணும் பொழுது மனதில் ஆற்ற முடியா ஏக்கம் நிலை கொண்டு விடுகிறது . நான் பஞ்சாப்பில் ரானுவத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் பணி புரிந்து கொண்டிருந்த போது நிராகரிப்பின் வலிகளை சுமந்து திறியும் பல மனிதர்களை ஒரே நாளில் கண்டேன் அந்த தாக்கம் என்னை பயணம் சிற்றிதழில் "மனம் பிறழ்ந்த முகங்கள் என்னும் பத்தியை எழுத வைத்தது .

மீண்டும் மனதை அந்த நினைவுகழலில் மூழ்க செய்து , மனித நேயத்தை நினைவுபடுத்திய தங்கள் எழுத்திற்கு நான் வந்தனம் செய்கிறேன் .

நேசமுடன்
தேவராஜ் விட்டலன்.
ஐயா,
நேரம் இருந்தால் எனது தளத்தில் நான் பாசாயிட்டேன் என்ற சிறுகதை எழுதி உள்ளேன் .
வாசித்து பார்க்கவும் .
http://vittalankavithaigal.blogspot.com