வண்ணநிலவன்
” தலையைக் குனிந்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தான்” – வண்ணநிலவன் பற்றிச் சிறிய மின்னலென ஒரு நினைப்பு வரும்போதும் கூட இந்த ஒரு வரி கூடவே சேர்ந்து வந்து நிற்கும்.என் மனதில் பதிந்துள்ள வண்ணநிலவனின் சித்திரத்தோடு சேர்ந்த ஒரு தீற்றலாகவே இந்த ஒரு வரி.அவர் எழுதிய கரையும் உருவங்கள் சிறுகதையின் முதல் வரி இது. நவீன இலக்கியத்தில் வேலை கிடைக்காத இளைஞர்களின் மன உலகைப் பதிவு செய்த முதல் தலைமுறை எழுத்தாளர் வண்ண நிலவன். இந்த ஒரு வரி, தனக்குள்ளே ஒடுங்கிப்போகும் அத்தகைய இளைஞனின் சொல்ல முடியாத -பகிர்ந்து கொள்ளப்படாத-துயரத்தின் குறியீடாக அமைந்துவிட்ட வரி.மெதுவாகத் துவங்கும் ஓர் உருமிச் சத்தம்போலத் துவங்கும் இந்த வரியிலிருந்து கதை மேலெழும்பிச் சென்று அவன் வீட்டுக்குள்ளே எல்லோரும் தூங்கியிருக்க தனக்காக விழித்திருக்கும் தன் அக்காள் எடுத்து வைத்த சாப்பாட்டைத் தொட மறுத்துச் சுவரில் சாய்வதும் பிரியத்துடன் அதட்டி அக்கா அவனுக்கு சாதத்தைப் பிசைந்து கையில் உருட்டிக்கொடுக்கச் சாப்பிடுவதும் என்று உருமி மேலே மேலே எழும்பி சட்டென்று அவன் அக்கா மடியில் முகம் புதைத்து அழுவதில் உச்சம் கொண்டு முடியும்.தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட கதை இது.
முதலில் நான் வாசித்தது அவருடைய சிறுகதைகளை அல்ல. கடல்புரத்தில் நாவலைத்தான்.ஜெயகாந்தனும் நா.பார்த்தசாரதியும் போன்ற பெரியவர்களின் அரசாட்சி நாவல் உலகில் பெரும் சத்தத்தோடு நடந்தேறிக்கொண்டிருந்த ஒரு நாட்களில் சத்தமேயில்லாமல் வந்து எல்லோரையும் சாய்த்துப்போட்ட நாவல் கடல்புரத்தில்.கல்லூரி வாழ்க்கை முடிந்து ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு விடுமுறைக்கு வந்தபோது கடல்புரத்தில் நாவலை வாசித்த அந்த இரவு இன்றைக்கும் கண்ணீரோடுதான் நினைவில் தங்கியிருக்கிறது.அந்தப் பிலோமிக்குட்டிக்காக அந்த ராத்திரிப்பூராவும் அழுது கிடந்தேன்.எவ்வளவு சின்ன வயசில் எத்தனை துயரங்களை அவள் சந்தித்து விட்டாள்?
’இதெல்லா என்ன பிரியங்களும் பாசங்களும். ஒண்ணும் நிசமில்லே.அவிய எம்மேலே இருக்க மாதிரி என்னாலே அவிய மேல பிரியமாட்டு இருக்க முடியலே.ஒருத்தராலே ஒருத்தரு மேலதா ரொம்ப உயிராட்டு இருக்க முடியும்’ என்று பிலோமியிடம் ரஞ்சி சொல்லும்போது அவள் செபஸ்தி மீது கொண்டிருந்த நிறைவேறாக்காதலின் சுமை நம்மையும் அழுத்தும்.
”எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்பட வில்லை.அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும்தான் காரணம்” இதுதான் வண்ணநிலவன் இந்த உலகுக்குச் சொல்லும் செய்தி. எத்தனை சத்தியமான வார்த்தைகள்.பிரியங்களும் சினேகங்களும் அற்றுப்போகிற கணத்தில்தான் தற்கொலை எண்ணம் வலுப்பெற்று விடுகிறது போலும்.ஆனால் பிலோமியின் அம்மை வாழ்ந்த காலம் பூராவும் தன்னை யாருக்கும் பிடிக்காது என்று நினைத்துத்தான் வாழ்ந்தாள்.அவளுடைய மரணம்தான் அவள் மீது மற்றவர்கள் கொண்டிருந்த பிரியத்தைக் காட்டிக்கொடுத்தது.ஆனால் அதை அறியாமலே அவள் மாண்டு போனாள்.
கடல்புரத்தில் முன்னுரையில் வண்ணநிலவன் ‘அன்புவழி’ யைப்போல ஒரு நாவலை எப்போதாவது எழுதிவிட மாட்டேனா என்று ஒரு வரி எழுதியிருப்பார்.அந்த ஒரு வரியைப் பற்றிக்கொண்டுதான் நான் உலக இலக்கியங்கள் என்னும் பெருங்கடலை அடையாளம் கண்டு அதில் அமிழ்ந்து போனேன்.பாரபாசின் அன்புவழியைப்போல பல கதைகளை உண்மையில் வண்ணநிலவன் எழுதிவிட்டார்.கடல்புரத்தில் மட்டுமல்ல.
கம்பாநதி நாவலில் பாப்பையாவும் கோமதியும் இண்டர்வியூவுக்குப் போய்விட்டு மழை விட்ட மாலையில் நயினார்குளத்துக் கலுங்கில் கால்களைத் தொங்கப்போட்டபடிக்கி பேசிக்கொண்டிருக்கும் அந்த எட்டுப்பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உச்சமான பக்கங்கள்.காதல்வயப்படுதல் என்கிறார்களே அது இதுதான். வெண்ணிற இரவுகள் படித்துவிட்டுத் தூக்கம் பிடிக்காமல் விடிய விடியத் தெருக்களில் சுற்றித் திரிந்ததுபோல கம்பாநதியின் இந்தப் பக்கங்களைப் படித்துவிட்டுப் பல இரவுகள் வேறொரு மனசோடு கண்களில் வழிந்து கொண்டேயிருக்கும் கண்ணீரைத்துடைக்கவும் மனசின்றி அலைந்து திரிந்ததுண்டு.அப்படி ஒன்றும் அவர்கள் பேசியிருக்கவும் மாட்டார்கள்.அவன் முன்னிலையில் அவள் அழுகிறாள்.ஏன் அழுதாள் என்று அவளுக்கும் தெரியவில்லை.அவனுக்கும் புரியவில்லை.ஏன் ஏன் என்று அவன் கேட்டுக்கொண்டே இருப்பான்.அவன் அப்படிக்கேட்டுக்கொண்டே இருந்தது அவளுக்கு ரொம்பவும் பிடித்திருக்கும்.என்னம்போ போலத் தோணிச்சி.அதான் அழுதேன்.... இதுதான் அவள் சொல்லும் காரணம்.அவள் சொன்னதில் எவ்வளவோ இருந்ததாக அவனுக்குப் பட்டது.தான் ஒளிக்காமல் அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட நிறைவு அவளுக்கும் இருக்கும்.அவ்வளவுதான்.என்ன ஒரு மனநிலை அது.இப்பக்கங்களை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் என்னைப்போலவே தன் பாலியல் சார் கசடுகள் எல்லாம் தானே உருகி வழிந்து தரையில் ஓடுவதைக் கண்ணாரக் காண்பார்.உண்மையில் விடலைத் தனமாக ஓடிக்கொண்டிருந்த அன்றைய என் மனநிலையில் ஒருவித முதிர்ச்சியையும் பக்குவத்தையும் பெண்கள் சார்ந்து ஒரு புதிய பார்வையையும் கண்ணோட்டத்தையும் இந்த எட்டுப்பக்கங்கள்தான் ஏற்படுத்தின என்று மனம் திறந்து கூறுவேன்.
அவருடைய அன்புவழி பற்றி 70களில் கேலி பேசியவர்கள்கூட உண்டு.அன்பினாலேயே உலகத்தைத் திருத்த முடியுமா என்று. அன்பும் சினேகமும் கருணையும் முற்றிலுமாக வற்றிப்போய்க்கொண்டிருக்கும் இந்த நாட்களில் வண்ணநிலவனின் எழுத்துக்களுக்குப் புதிய அர்த்தமும் தேவையும் உண்டாகியிருப்பதாக உணர்கிறேன்.சண்டையும் சச்சரவுகளும் மலிந்துவிட்ட நம் தெருக்களில் வாங்க டீ சாப்பிடலாம் என்று கேட்கிற ஒரு அன்பான குரல் எத்தனை ஆறுதலானதும் முற்போக்கானதுமாகி விடுகிறது.
இப்போது வாசித்துப்பார்க்கையில் வறுமையை-இல்லாமையை-அது உண்டாக்கும் மனச் சிதைவுகளை –உறவுகளில் அது உண்டாக்கும் விரிசல்களை வண்ணநிலவன் அளவுக்கு யார் சொல்லியிருக்கிறார்கள் என்று படுகிறது.மயானகாண்டம் கதை ஒன்று போதும்.பிணமே விழாத ஊரில் பிணம் எரிக்கும் பண்டிதன் தன் குல மரபுப்படி தன் குடும்பத்தின் பட்டினியை ஊருக்குத் தெரிவிக்கச் சங்கு எடுத்து மயானக்கரையில் நின்று ஊதும் காட்சி மனதை நடுக்குறச்செய்யும். பட்டினியை சங்கின் ஒலியாக மாற்றி ஆறு,வயல்,வண்டிப்பாதை எனப் பரவவிட்டு இப்பிரபஞ்சமே பட்டினியைக் குரலாகக் கேட்க நேரும் மாயத்தை இக்கதை செய்திருக்கிறது.
எல்லோரும் கொண்டாடிய எஸ்தர் கதை என்றென்றும் அழியாப்புகழ் பெற்றுவிட்டு அமரகாவியமாகும்.பஞ்சம் வந்தால் மனித மனம் எப்படியெல்லாம் ஆகிவிடுகிறது?பெண்கள்தான் அதையெல்லாம் எப்படித் தைரியமாக எதிர்கொள்கிறார்கள்! அக்கதையில் வரும் ஊழியன் ஈசாக்கு காட்டிலேயே கிடந்து உழைப்பவன்.காடெல்லாம் விளையாமல் கனலாகத் தகிப்பது கண்டு காட்டுக்காக அழுவான்.அந்தக்காடு ஏதும் அவனுக்குச் சொந்தமுமில்லை.என்றாலும் அழியும் காடுகளைப்பார்த்து ஏங்கி அழும் மனநிலையை 70களிலேயே வண்ணநிலவன் எழுதிவிட்டார்.
இந்த தண்டாவாளத்தை நீயும் அப்பாவும் தானம்மா போட்டீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் தன் மகனுடன் ரயில் ஏறி படித்த மனிதர்களால் டிக்கட் இல்லாமல் ஏறியதற்காக இறக்கி போலீஸ் ஸ்டேசனில் விடப்படும் அந்த ஏழை உழைப்பாளிப் பெண்ணின் கதை எவ்வளவு பெரிய அரசியலை சத்தமில்லாமல் பேசியது?
அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் எஸ்தர்,தர்மம்,தாமிரபரணிக்கதைகள்போன்றவற்றையும் நாவல்களில் கடல்புரத்தில்,கம்பாநதி,ரெய்னீஸ் அய்யர் தெரு,நேசம் மறப்பதிலை நெஞ்சம் வரைக்கும் பின் தொடர்ந்தேன்.அப்புறம் நம் வாழ்க்கை வேறு பக்கமாக ஓட்டத்தைச் சுழித்துவிட்டதால் அப்புறமான அவரது படைப்புகளை வாசிக்க வாய்க்கவில்லை.
வண்ணநிலவன் என்றாலே மனதை உருக்கும் எழுத்து என்றுதான் அர்த்தம்.எவ்வளவு இறுக்கமான மனிதனையும் குற்றவாளியையும் மனம் திரும்பச்செய்ய வண்ணநிலவனின் எழுத்துக்களை வாசிக்கச்செய்யலாம்.அப்படி ஒரு HEALING EFFECT- ஆற்றுப்படுத்தும் தன்மை - உள்ள அபூர்வமான எழுத்து வண்ணநிலவனுக்குரியது.
No comments:
Post a Comment