Wednesday, August 11, 2010

நெளிந்துபோன பாத்திரங்களுக்கு நடுவே வெறித்த பார்வையோடு நம் தந்தை அம்பேத்கரின் புகைப்படம்

.Ambedkar-Jayanti-20101

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் எழுதிய கட்டுரையைக் கீழே தருகிறேன்.நாளை 12.8.10 காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீடிழந்த மக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற இருக்கிறது.இதுபோன்ற கொடுமைகள் நம் கண்முன்னால் அன்றாடம் நடந்து கொண்டிருக்க நாம் மௌன சாட்சிகளாக வாழ நேர்ந்துள்ளது பெரும் அவலம்.குறைந்தபட்சம் அவரவர் வழியில் இச்செய்தியைப் பரப்ப முயற்சிப்போம்.தார்மீக ஆதரவையேனும் அம்மக்களுக்குத் தெரிவிப்போம்.வாய்ப்புள்ள நண்பர்கள் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைச் சந்தித்தும் வரலாம் போராட்டத்திலும் பங்கேற்கலாம்.

தரைமட்டமான சமத்துவபுரம் ஒரு நேரடி ரிப்போர்ட் -கே.சாமுவேல்ராஜ்

நகரின் பிரதான பகுதிகளில் இருக் கிற ஏழைகளின் குடிசைகள் வில்லன் களால் இடித்துத் தள்ளப்படுவது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்தி ருக்கிறோம். ஆனால் திரைப்படங்களை மிஞ்சுகிற காட்சி, மக்கள் வீடுகளை விட்டு தலைதெறிக்க வெளியேறி பார்த் துக் கொண்டிருக்கும் போதே பட்டப் பகலில் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்ட கொடூரம், வீதியில் வீசியெறியப்பட்ட மக்கள், என நடந்த நிகழ்ச்சிகளை விவ ரிக்கிறபோது அதிர்ச்சியில் நிலை குலைந்து போனோம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர் 36வது வார்டு, மேல் ஆலத்தூர் சாலை யோரத்தில் வரிசையாக 35 வீடுகள். நூறு ஆண்டுகளைக் கடந்த குடியிருப்பு, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகிய உரிமைகளுடன் 4வது தலைமுறையினர் அந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அருந்ததியர்கள், ஆதி திராவிடர்கள், லெப்பைப் பிரிவை சேர்ந்த இஸ்லாமி யர்கள் என ஒரு சமத்துவபுரமாகவே அந்த குடியிருப்பு இருந்துள்ளது. எல்லோருமே ஏழைகள், அன்றாடக் கூலிகள்.
சர்வே எண் 674ல் அமைந்துள்ள இந்த குடியிருப்பை ஒட்டியுள்ள நிலத்தை நில புரோக்கர் மொசைக் செல்வம் வாங்கி பிளாட் போடுகிறார். தனது பிளாட்டிற்கும் சாலைக்கும் இடையே உள்ள தரித்திர குடிசைகளை அகற்றிவிட்டால் பிளாட் பொன்முட்டையிடும். இது மொசைக் செல்வத்தின் கணக்கு. உடனே பாட் டாளி மக்கள் கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவி வருகிறார். வந்தவுடன் அமைச்சர் துரைமுருகனாரிடம் ஆசியும் பெற்றாராம். அவ்வளவுதான் அவருக்கு யானைபலம் வருகிறது. வார்டு கவுன் சிலர் பார்த்திபன் பக்க துணையாக வருகிறார்.
தலித் குடியிருப்பின் ஆண்களை கடத்தி வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டி வெற்றுப்பேப்பர்களில் கையெ ழுத்து பெற்று, வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மின் வாரியமும் மின்னல் வேகத்தில் ஒத்துழைப்பு கொடுத் துள்ளது. ‘கரசேவைக்கு’ நாள் குறிக்கப் பட்டது. தலித் குடியிருப்பை நிர்மூலமாக் கிட அவர்கள் தேர்வு செய்த நாள் ஏப்ரல் 14, அதாவது டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம்.
அனைத்து துறைகளையும் கவ னித்துவிட்டு மொசைக் செல்வம் வகை யறா களம் இறங்கியுள்ளது. காலை 10 மணி அளவில் சுமார் 300 அடியாட்கள், ஜே.சி.பி, புல்டோசர் பின்தொடர மொசைக் செல்வம், பார்த்திபன் வகையறா குடி யிருப்பில் நுழைந்துள்ளனர். அடியாட் களின் மதிய உணவிற்காக ஆடுகளை வெட்டி, அப்படியே இரத்தம் வடிகிற அரி வாள்களோடு வீதியில் வலம் வந் துள்ளனர். வீடுகளுக்கு முன்பிருந்த முருங்கை, வாழை மரங்களை ஒரே வெட்டில் சாய்த்து மக்களின் இரத்தத்தை உறைய வைத்துள்ளனர். குலை நடுக்கம் ஏற்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வெளி யேறி அடியாட்களின் கால்களில் விழுந்து மன்றாடிக் கொண்டிருக்கும் போதே ஜே.சி.பியும், புல்டோசரும் வீடுகளை நொறுக்கி சிதைத்தது. நான்கு தலைமுறை யின் உழைப்பு, கேட்பதற்கு நாதியற்று தெருவில் சரிந்தது. இடிபாடுகளுக் கிடையே எளியவர்களின் தட்டுமுட்டு சாமான்கள், குடிநீர் குழாய்கள் உடைத் தெறியப்பட்டன. சின்டெக்ஸ் தொட்டி தொலைவில் உள்ள சுடுகாட்டில் குப் புறக் கிடக்கிறது. வெளியேற்றப்பட்டவர்கள் புகார் கொடுக்காமல் தடுக்க அடி யாட்கள் மக்களை சிறைப்பிடித்து வைத்திருந்தனர். வேலைக்குச் செல்ல அனுமதியில்லை. சைக்கிளில் விற்ப னைக்கு வந்த கம்மங்கூழ் மட்டுமே உணவு.
செய்தி தாமதமாக கிடைத்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப் பான இடத்தில் தங்க வைத்துள்ளது. குடி யாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா மூன்று முறை மாவட்ட ஆட்சியரை சந் தித்து பேசியும் மாவட்ட நிர்வாகம் அசையவில்லை. 8.7.10 அன்று மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள். ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மற்றொருவர் பாது காப்பற்ற சூழ்நிலையில் பிரசவத்தை திகி லுடன் எதிர்நோக்கியுள்ளார். பதினேழு வயதிற்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் பரிதவித்து நிற்கிற காட்சி நம்மை பதற வைக்கிறது. வேலூர் மாவட்ட தோழர் களுடன் பாதிக்கப்பட்டவர்களை சந்திக் கச் சென்ற போது படுக்கையில் கிடந்த மூதாட்டி ‘நீ இங்கேயே இரு’ என எம்எல்.ஏ லதாவின் கைகளை பற்றி கண்ணீர் விட்டார். 36 குடும்பங்களுக்கும் கிடைப்பதைக் கொண்டு ஒரே சமையல். மர நிழலில் பாய், படுக்கை சுருண்டு கிடந்தது. சற்று தள்ளி ஒரு ஓரத்தில் நெளிந்துபோன பாத்திரங்கள். பாத்திரங்க ளுக்கு நடுவே வெறித்த பார்வையோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் புகைப்படம்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கைக் கோரியும், தலித் மற்றும் இஸ்லாமிய மக் களை மீண்டும் அதே இடத்தில் குடி யமர்த்தக் கோரியும், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஆகஸ்ட் 12 அன்று வேலூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தவிருக்கி றது. தோழர்கள் பி.சம்பத், கே.சாமுவேல் ராஜ், ஜி.லதா எம்.எல்.ஏ, ஏ.நாராயணன், வி.குபேந்திரன், பி.குணசேகரன், என். ஜோதிபாசு ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களோடு பாதிக் கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு வரு கிறோம்.
உத்தப்புரம், சிதம்பரம் கோவில் போராட்டங்களைப் பற்றி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்னும் போர்வை யில் மார்க்சிஸ்ட் கட்சி கலகம் செய்வ தாக தமிழக முதல்வர் கருத்து தெரி வித்திருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, போராடுவது கலகம் என்றால், அதை நாங்கள் தொடர்வோம்.

No comments: