Thursday, August 12, 2010

குடியாத்தம் போராட்டம்-தோழர்கள் கைது-15 நாள் சிறை

நேற்று இட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்று நடந்த போராட்டம் பற்றி...

gudi-1

வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு தெருவில் நிற்கும் மக்களை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர்.பி.சம்பத் ,மாநிலச்செய்லாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ்,மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தோழர் லதா, வேலூர் மாவட்டச்செயலாளர் நாராயணன் போன்றோர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற ஊர்வலமாகப் போன போது இடையில் வழிமறித்த காவல்துறை ஆர்.டி.ஓ வும் வட்டாட்சியரும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாகவும் பேசித் தீர்க்கலாம் எனவும் தலைவர்களை அழைத்துச்சென்றனர்.

பேச்சு வார்த்தையில் தோழர்கள் அந்த நிலப்பகுதியை மறு நில அளவை (சர்வே) செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.முதலில் மறுத்துப் பின் கடைசியில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வட்டாட்சியர் அதில் கையொப்பம் இட்டு ஆர்.ட்.ஓ கையொப்பம் இடப்போகும் நேரத்தில் மேலிடத்திலிருந்து ஒரு தொலைபேசி வர ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் வட்டாட்சியரிம் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு ஆர்.டி.ஓ ‘தப்பி’விட்டார்.ஆர்டிஓ கையெழுத்துப் போடாமல் நான் என்ன செய்ய என்று வட்டாட்சியர் அம்மாவும் மறுத்துவிட தலைவர்களையும் அந்நேரவரை மணிக்கணக்காக நடுரோட்டில் வெயிலில் காத்திருந்த மக்களையும் கைது செய்வதாக காவல்துறை அறிவித்தது.15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுத் தோழர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் இன்னும் தெருவில்தான்.

தமிழ்ச்சினிமாக்களில்தான் இப்படி வில்லன்களுக்கு ஆதரவாக உச்சகட்டத்தில் மேலிடத்திலிருந்து தொலைபேசி வரும்.நிஜ வாழ்க்கையிலும் இன்று அப்படி நடந்துள்ளது காவல்துறை நண்பர்கள் சி.எம் ஆபீசிலிருந்தே அரெஸ்ட் பண்ணச்சொல்லி தகவல் வந்ததாகக் கூறுகிறார்கள்.பற்பல ஆண்டுகளாக வீடுகட்டி நன்கு வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.வடாட்சியர் அலுவலத்தை விட்டு இன்று துரத்தப்பட்டுள்ளனர்.பராசக்தி வசனம்போல மக்கள் ஓடினாள் ஓடினாள் என்று ஓடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.ஆளுக்கு 50 வீடும் பங்களாவும் என்று மாவட்ட வாரியாக ‘வாழ்ந்து’ கொண்டிருக்கும் உடன்பிறப்புகளின் குடியிருப்புகளுக்குள் வஞ்சிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு நுழைவார்கள் .காவல்துறை பலத்தோடும் கட்சிமாறி திமுகவுக்குள் வரும் இதுபோன்ற தாதாக்களின் தயவிலும் தேர்தலில் கவர் கொடுக்கும் அன்னன் அழகிரியின் ராஜதந்திரத்தை வைத்தும் ரொம்ப காலத்துக்கு வண்டியை ஓட்டிவிட முடியாது.மக்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டியாலும் அரிசியாலும் மட்டும் கொடியை நாட்டிவிட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

நியாயமான மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களைக்கூட தன் மாசுமருவற்ற ஆட்சிக்கு எதிரான சதி என்றும் கலகம் என்றும் பீதியடையாமல் கலைஞர் தன் பகுத்தறிவின் பரப்புக்குள் நின்று இப்பிரச்னைகளை அணுகவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இன்றைய போராட்டக் காட்சிகள்:

gudi-1

gudiyaththam

gudi-2

gudi-3

2 comments:

புதுவை ஞானகுமாரன் said...

வேதனையாய் இருக்கிறது.மார்க்சிஸ்டுகள் நடத்தும் போராட்டம் எதுவானாலும் வந்ம்ரையால் அடக்கும்படி தமிழக அரசு தனது பரிவாரங்களுக்கு ஆணை பிறப்பித்து விட்டது போலும்!மக்கள் நலனாவது மண்ணாவது தேர்தல் நேரத்தில் இரண்டு பெரிய காந்தி படங்களை சிரிக்க வைத்து விட்டால் மீண்டும் அரியணை தங்களுக்குதான் என்று எண்ணுகிறார்கள் போலும்
வரலாறு எப்போதும் இப்படியே நீளாது. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் என்பது பாரதியின் கற்பனை இல்லை.உண்மை அதுதான்.

S.Raman,Vellore said...

அன்றைய போராட்டத்தின் போது
நானும் அங்கிருந்தேன். காலை எட்டு
மணி முதலே ஏதோ ஒரு போருக்கான தயாரிப்போடு குடியாத்தம் தாலுகா
அலுவலகம் செல்லும் அனைத்து
வழிகளும் மூடப்பட்டிருந்தன. அங்கே
இருந்த ஸ்டேட் வங்கிக்குக்கூட
யாரும் செல்ல முடியவில்லை.
முதலமைச்சர் வருகை போல
காவலர்கள் திசை எங்கும்
குவிக்கப்பட்டிருந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று
காவல்துறை ஏ.டி.எஸ்.பி தான்
தோழர் சம்பத்திடம் கூறினார்.
பத்து நிமிடத்தில் ஆர்.டி.ஒ
வந்து விடுவார் என சொல்லப்பட்டாலும்
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு
பின்புதான் அந்த அம்மையார் வந்து
சேர்ந்தார். தாலுகா அலுவலகத்திற்கு
வெளியே குழும மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு சென்று
ஒரு மணி நேரம் ஆனதும் காவல்துறையின்
போக்கில் மிகப்பெரிய மாறுதல்
தென்பட்டது. வேன்களை முன்னும்
பின்னும் மாற்றி மாற்றி நிறுத்தினார்கள்,
அங்கே நின்று கொண்டிருந்த தோழர்களோடு
வலுக்கட்டாயமாக வம்பிழுத்தார்கள்.
தடித்த வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்.
கைது செய்யப்போகிறோம், வண்டியில்
ஏறுங்கள் என மிரட்டினார்கள். ஜனநாயக
மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர்
தோழர் சங்கரியுடன் ஒரு மோதலை
உருவாக்கி கொந்தளிப்பான சூழலை
ஏற்படுத்தினார்கள். பேச்சுவார்த்தையில்
உள்ள தலைவர்கள் வெளியே வரட்டும், கைதாகிறோம் என்று தோழர்கள் சொன்னபோது அதெல்லாம் முடியாது
என மறுத்தார்கள். இதெல்லாம் தலைவர்கள் தாலுகா அலுவலகத்திற்குள் இருக்கும் போது
வெளியே நடந்தது, அதுவும் அவர்கள் வெளியே வந்து கைதாவதற்கு அரை மணி நேரம் முன்பே. பேச்சுவார்த்தை நாடகம்
நடத்திக்கொண்டே கைதுப்படலத்திற்கான ஏற்பாடுகளையும்
அரசு திட்டமிட்டு செய்துள்ளது. அந்த வழியாக யார்
சென்றாலும் அவர்களுக்கு காவல்துறையின் வசவுகள்தான்
கிடைத்தது. மக்களைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாத
அரசு என்பதை கலைஞர் மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டு வருகிறார். அவரது நள்ளிரவு
கைது பிரச்சினையாக்கப்பட்டது. அவரும் அதே
வழிமுறைகளை கையாளுகிறார். பிரச்சினைக்கான
சரியான பதிலளிப்பதற்குப் பதில்
திசைதிருப்பும் பாணியை அவரது
புதிய உடன்பிறப்பும் கையாண்டு
தோழர் லதா மீது பொய்ப்புகார்
அளித்துள்ளார். அதற்கு முக்கியத்துவம்
அளித்து வெளியிட்ட ஊடகங்கள்
அரசு அராஜகத்திற்கோ, அடிப்படை
பிரச்சினைக்கோ முக்கியத்துவம்
அளிக்கவில்லை. மறுநாள்
தோழர் ஜி.ஆர் வேலூர் வந்தபோது
சிறையிலிருந்து அவர் வெளியே
வருவது போல புகைப்படம்
எடுப்பதில் மட்டும் ஆர்வம்
காட்டியது ஒரு தனிக்கதை.