Monday, July 19, 2010

சிதம்பரம் தெற்கு வாசல்-கருணாநிதி நக்கலும் தோழர் அருணனின் பொறுப்பான எதிர்வினையும்

(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை கீழே-இன்னும் சில கட்டுரைகளை அடுத்தடுத்து வெளியிடுவோம்.கொலையை ஜோதியில் குளித்தான் என்று மறைத்த அந்தணர்கள் சார்பாக தினமலர் வெளியிட்ட கட்டுரையில் வந்துள்ள செய்திகள் நாம் ஏற்கனவே அறிந்த ‘கதைகள்’தாம் .அதைப்படித்துவிட்டு சில நண்பர்கள் பதட்டமடைந்து பின்னூட்டம் அனுப்பியுள்ளனர்.தெற்கு வாசல் என்ற ஒன்றே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுள்ளனர்.நம் பயணம் தொடரும்)

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள்! நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது! அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது! ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல்! வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு! ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே!
இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும்? கோவில் நுழைவுப்போராகும்? புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.
இன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.
இந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.
கோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.
ஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.
ஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.
நல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா? போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான்? திரும்பி வந்தானா? சொந்த ஊர் திரும் பினானா? தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா? ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா? அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்? சாட்சாத் சேக்கிழார்!
இந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்!
விஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.
தீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, புராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.
இப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா? தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக! இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது!
இந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு? ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.
சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தி! அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.
இப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.
கோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.
இப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல்லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர்? அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.
நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா? தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா? இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.
பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.
நந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.
இதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.

7 comments:

பனித்துளி சங்கர் said...

உங்களின் ஆதங்கங்கள் நியாயமானதுதான் . இது அறியாமையால் இவர்கள் செய்யும் நாடகம் இல்லை அறிந்தே செய்யும் கொடுமைகள் .

Anonymous said...

இவ்வளவு நியாயங்களை எல்லாம் விலாவாரியாக எழுதும் தமிழ் செல்வன் ஏன் இன்னமும் இழிந்து போன ஓட்டு பொறுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார் என்பது தான் புரியவில்லை.

யோகன்

S.Raman, Vellore said...

தெற்கு வாசல் தகர்க்கப்படும், சிதம்பர ரகசியம் அன்று அம்பலமாகும் என ஒரு காலத்தில் கடலூர் மாவட்டம் முழுதும் பரபரப்பாக சுவரொட்டி ஒட்டிய
சிறுத்தைகள், பின்பு தீட்சிதர்களின் பூர்ண கும்ப மரியாதைக்குப் பின்
பொய்முகம் தகர்ந்து போய் வேடம் அம்பலமாகி நின்றார்கள். அவர்கள்
போல் இல்லாமல் இடதுசாரிக் கட்சிகள் போராடுவதை சமூக நீதிக் காவலரால் செரிக்க முடியவில்லை. உத்தப்புரம் ஆனாலும் சரி நந்தன் பாதையானாலும் சரி இவரது பகுத்தறிவு பறிபோய் விட்டது என்பதையே இவரது அறிக்கைகள்
உணர்த்துகிறது

Guruji said...

ஆதங்கங்கள் நியாயமானதுதான்


http://ujiladevi.blogspot.com/

veligalukkuappaal said...

உத்தப்புரம் ஆகட்டும், சிதம்பரம் நந்தன் கோவில் ஆகட்டும், தி.மு.க.வின் இலக்கிய அணியில் இருக்கின்ற நாடறிந்த திராவிட அறிஞர் பெருமக்கள் ஆன கவிப்பேரரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல்ரகுமான், உலகப்பெரும் கவிஞர் கனிமொழி, தி.மு.க.வின் கொடியை ஏற்றுவது என்னும் மாபெரும் இலட்சியத்திற்காக தனது ஆசிரியர் பதிவியை துறந்த தமிழச்சி போன்ற இன்னபிற பேரறிஞர்கள் யாரும் இதுவரை அனல் தெறிக்கும் கவிதைகளோ கட்டுரைகளோ எழுதி உயர்சாதி வெறியை சாம்பலாக்கியதாக எதுவும் செய்தி இல்லை. தொலைக்காட்சிகளில் இதுகுறித்து வரிந்துகட்டிக்கொண்டு ஏதாவது கவியரங்கம் நடத்துகின்றார்களோ என்று தேடிப்பார்த்தால் அதுவும் இல்லை. குறிப்பாக உத்தப்புரம், சிதம்பரம் நந்தன் பிரச்னைகளில் 'எரிமலை எப்படிப் பொறுக்கும், நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்...சிங்கக்கூட்டம் நிமிர்ந்தால்...' போன்ற அனல்கக்கும் கவிதைகளை கவிப்பேரரசு கவிசாம்ராஜ்யம் கவிப்பஞ்சாயத்து வைரமுத்துவிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். 'எழுத்துங்கறது பொழைக்க ஒரு வழி சார், நீங்க இப்புடியெல்லாம் எதிர்பாக்கலாமா, விடுங்க சார்' இப்புடியாவது இவங்க சொல்லிட்டுப்போனா நாமளும் பேசாம இருக்கலாம், அதுவும் இல்ல. இந்த லட்சணத்துல சிற்றிதழ்கள் பேரிதழ்கள் என எங்கே திரும்பினாலும் இவர்களின் கவிதைகள், அதற்கு மற்றவர்களின் பதவுரை பொழிப்புரை..! என்னே நாடகம்! தூ!
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்னைக்காக த.மு.எ.ச. ஐந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடத்திய மாபெரும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் உணர்வோடு வந்து கலந்து கொண்டு உரையாற்றிய சல்மா இப்போது மவுனமாக இருப்பது வேதனை.
இக்பால்

புதுவை ஞானகுமாரன் said...

கலைஞருக்கு என்ன சொல்வது என்னசெயய்வது என்று ஒன்றும் புரியவில்லை.நந்தன் வரலாறுக்குப் பெரியாரைக் கேட்கச் சொல்லும் அவர் ராமன் கற்பனைக்காக சேது சமுத்திரத்தையே நிறுத்தி விட்ட சாதனையை நினைவு கூற முடியவில்லை போலும்! சாத்திய எதிர்ப்பு,தன கட்சியில் இருந்து எப்போதோ விடைபெற்று விட்டதே!இவர்கள் போராட்டத்தால் உத்தப் புறம்சுவர் உடைப்பு, கீறிப் பட்டி,பாப்பாரப் பட்டிபஞ்சாயத்துத் தேத்தலில் நிலையான தீர்வு, அருந்ததியர் இட ஒதுக்கீடு,இடது சாரிகள் ஆதரவால் தனிழுக்குச் செம்மொழித் தகதி கிடைத்தது என்று உண்மையை எச்சூரி உரக்கப் பேசிவிட்டது,தமிழில் படிப்போருக்கு வேளையில் முன்னுரிமைக்கு இவர்கள் குரல் கொடுத்து தாம் அறிவிக்க நேர்ந்தமை ....என்று அவரால் தாங்க முடியவில்லை.அதுதான் நந்தனுக்குப் பிறப்புச் சான்றிதழ் கேட்க வைத்துள்ளது.

venu's pathivukal said...

அன்புத் தமிழ்

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். . ...

சாதிய விஷயங்களை அணுகுவதில், ஆட்சிப் பீடத்தின் மீதுள்ள அசைக்கவியலாத ஆசை தான் முதல்வரை இப்படியெல்லாம் குதர்க்கம் பேச வைக்கிறது.

பராசக்திக்கு வசனம் எழுதும் போது என்ன தேடல் இருந்ததோ, அதற்குக் குறைவில்லாத புகழும், சம்பத்தும் அடைந்தவர்க்கு அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் அல்லவா....

உள்ளார்ந்த சமூக மாற்றத்திற்கான வேட்கை இல்லாத அரசியல்வாதிகள், வசதிக்கேற்றபடி தான் சமூகத்தின் நிலை பற்றி எதிர்வினை ஆற்றுவார்கள்.
ஆட்சி எதிர்ப்பு (anti establishment ) என்பது தேவைப்பட்டதே ஒழிய, அடிப்படை மற்றம் குறித்த கனவுகளோ, இலக்குகளோ இல்லாதிருந்தவரே அவர் என்பது தான் இப்போது கொஞ்சம் அதிகமாக அம்பலமாகி நிற்பது...

நல்ல பதிவுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தமிழ்..

எஸ் வி வி