Thursday, July 15, 2010

நந்தன் நடந்த பாதை

thillai 1

பத்திரிகைச் செய்தி

சிதம்பரம் நடராசர் ஆலயத்திற்கு தலித் சமுகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட்டுள்ள கதவைத் திறந்திடவும், தடுப்புச் சுவரை அகற்றிடவும் வலியுறுத்தி புதனன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

மேற்கண்ட போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் நடத்தியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அம்முன்னணியின் உயிர்ப்புள்ள ஓர் அங்கம்.நானும் எமது அமைப்பைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும் நேற்றைய (14.7.10) மறியலில் பங்கேற்றுக் கைதானோம்.

இன்று சில தொலைக்காட்சிகளில் அந்தப் பாதைக்கும் நந்தனுக்கும் தொடர்பில்லை.அது வேறு காலம் இது வேறு காலம் என்று வரலாற்று அறிஞர் என்ற பேரில் ஒரு பக்தர் பேட்டி கொடுப்பதைக் காட்டினார்கள். தமிழக அரசும் சிதம்பரம் ஆலயத்தில் ட்ய்ஹமிழக அரசு மேற்கொண்டுவரும் நல்ல காரியங்களைக் கெடுக்கவே இப்படிப் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் கண்டனம் செய்துள்ளதாக அச்சேனல் (ஜீ தமிழ்)கூறியது. நல்லது.உத்தப்புரம் பிரச்னையில் அத்தனை தடியடி நடத்தியபிரகும் கம் என்று உட்கார்ந்திருக்கும் தமிழக அரசு தில்லைவாழ் அந்தணர்களுக்காகவேனும் வாய் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சிதம்பரம் நடராசர் கோவில் கட்டப்பட்டது கி.பி.600 வாக்கில் இருக்கலாம்.நந்தன் வாழ்ந்ததும் திருப்புன்கூரில் அவர் சிவனைத் தரிசித்ததும்( சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று நந்திக்கு சிவன் ஆணையிட்டதும்) பின்னர் அத்தைரியத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் அவர் நுழைந்ததும் அங்கே அவர் தில்லைவாழ் அந்தணர்களால் தீயில் தள்ளி உயிரோடு எரிக்கப்பட்டதும் கி.பி.700 களில் நடந்தது.சிதம்பரம் கோவிலின் இன்றய கட்டட அமைப்பு பின்னர் குலோத்துங்க சோழன் மற்றும் பல குறுநில மன்னர்கள் செல்வந்தர்களால் கி.பி.1000த்தை ஒட்டி அல்லது அதற்கு முன் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டவை அல்ல.நந்தன் வாழ்ந்த ஊர் ஆதனூர் அது சிதம்பரம் கோவிலின் தெற்கு வாசல் பக்கம்தான் இருக்கிறது. தெற்குவாசல் கட்டப்பட்டு அது பின்னர் ஏன் சுவர் வைத்து மறிக்கப்பட்டது என்பதற்கான சரியான சால்ஜாப்புகளை தில்லைவாழ் அந்தணர்களோ தமிழக அரசோ இதுவரை சொல்லவில்லை.உண்மையில் அது நந்தன் நடந்ததால் தீட்டான பாதை என்பதற்காகவே அடைக்கப்பட்டது.இது ஒரு lore – வழக்காறாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாகப் புழங்குவது.எரித்துக்கொன்ற நந்தன் கொலை வழக்கை தானே தீயில் (ஓமக் குளத்தில்) (ஓமக்குளமும் கோவிலுக்குத் தெற்கேதான் இருக்கிறது) இறங்கி ஈசனின் ஆணைப்படி பறையன் என்னும் பிறப்பால் ஏற்பட்ட தீட்டை எரித்து பிராமணனாக புது அவதாரம் எடுத்துத் திருநாளைப்போவாராகக் கோவிலுக்குள் நுழைந்தார் என அந்தணர்கள் கதை கட்டி விட்டதைப் போல இப்பாதை குறித்தும் பல கதைகளை அந்தணர்கள் உலவ விட்டுள்ளனர்.அவையும் சில நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பதால் இப்போது அவற்றையெல்லாம் இப்போராட்டக் காலத்தில் பலரும் ‘அவுத்து’ விடுகின்றனர். தெற்குவாசலும் கீழ வாசலும் குடமுழுக்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் பயன்பாட்டில் வைப்பதில்லை . ஆகவே தெற்குவாசல் மூடப்பட்டது என்று சில தீட்சிதர்கள் நேற்று எங்களிடம் கூறினர். அப்படியானால் கீழவாசல் ஏன் சுவர் வைத்து மறிக்கப்படவில்லை என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.

thillai-3

மற்ற சைவக்கோவில்களைப்போல அல்லாமல் இக்கோவிலில் நடராசர் தெற்கே பார்த்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு நேராக இருக்க வேண்டிய நந்தியை அவரைப் பார்க்க விடாமல் சுவர் வைத்து மறைத்துள்ளனர்.இது சைவ ஆகம விதிகளுக்கே புறம்பானதாகும் என்று சைவ அறிஞர்கள் கூறுகின்றனர்.இப்படி ஆகம விதிகளையே புறக்கணித்துச் சுவர் எழுப்பியிருக்கிறார்கள் என்றால் சும்மா ஏப்பை சாப்பையான காரணங்களுக்காக அதைச் செய்திருக்க முடியாது.பாதை நந்தன் வருகையாலும் கொலையாலும் தீட்டுப்பட்டது என்கிற வலுவான காரணத்தாலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது.நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நானும் உடன் இருந்தேன்.கோவில் அதிகாரி எங்களிடம் உச்சநீதிமன்றம் மறு உத்தரவு வரும்வரை இக்கோவிலிலின் கட்டமைப்பில் எதையும் மாற்றக்கூடாது(புதிதாக எதையும் கட்டவும் கூடாது.இடிக்கவும் கூடாது) என்று தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால் இச்சுவரை இப்போது இடிக்க முடியாது என்றுதான் கூறினார்.உடனிருந்த கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்,காவல்துறை அதிகாரிகள் எல்லோருமே இச்சுவர் ஏன் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும் சார் நாங்க என்ன சார் செய்ய முடியும் கவர்மெண்ட்டுதானே முடிவு எடுக்கணும் என்றுதான் கூறினார்களே ஒழிய இது நந்தன் நடந்த பாதை என்பதற்காக அடைக்கப்படவில்லை என யாருமே கூறவில்லை.

இதே பிரச்னைக்காக முன்னர் தோழர் தொல்.திருமா தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது.அவருக்கு அந்தணர்கள் எதிர்சேவை செய்து அவருக்குப் பரிவட்டம் கட்டி உள்ளே அழைத்துச்சென்றபடியால் மனம் குளிர்ந்து போராட்டத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே பிரச்னைக்காக அடுத்த வாரம் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது. எல்லாருமே முட்டாள்கள் அல்லர்.சரித்திர ஞானம் அற்றவர்களும் அல்லர்.எந்தப் போராட்டத்தையும் மாசு மருவற்ற தன் சாதனை ஆட்சிக்கு எதிரான கலகமாகவே பார்ப்பதை விடுத்து இன்னும் மிச்சம் மீதியிருக்கும் (இருப்பின்) தந்தை பெரியாரின் வாசனையில் கொஞ்சத்தையேனும் பயன்படுத்தி இச்சுவரை இடிப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு காண வேண்டும்.

thillai-2

13ஆம் தேதி தீக்கதிரில் வெளியான முழக்க வரிகளைக் கீழே தருகிறேன் :

நந்தன் அழைக்கிறான்

ச.தமிழ்ச்செல்வன்

நந்தன் அழைக்கிறான்

நானிலமே கிளர்ந்தெழுக !

பிறப்பின் தீட்டழிக்க

நெருப்பில் குளித்தெழுந்து

புறப்பட்டு வா எனவே

ஈசன் சொன்னான் எனக்

கட்டிவிட்ட கதைக்குள்ளே

எரிகின்றான் நந்தன் எரிகின்றான்.

அவன் உடலம் எரிந்து

எலும்புகள் தெறிக்கையில்

சிரித்துக் கைகொட்டிச்

சுற்றிநின்ற சாதியத்தின்

வேரறுத்து வீழ்த்திடவே

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக.

அவன் நடந்து வந்த பாதை

நடராசன் கோவிலிலே

தீட்டுப் பட்டதெனச்

சுவரெழுப்பி மறித்தார்கள்.

நந்தன் மடிந்துவிட்டான்

நெருப்பிட்டுக் கொலை செய்த

அந்தணரும் மரித்து விட்டார்.

சுவர் இன்னும் நிற்கிறது -

சுற்றிவரும் போதெல்லாம்

சாதியால் தாழ்த்தப்பட்ட எம்

சரித்திரத்தை நினைவூட்டி.

அந்நினைவுகளின் வலி மறக்கத்

திமிர்ந்து நிற்கும் இச்சுவர் தகர்த்து

வரலாற்றை நேர் செய்ய வா.. .. ..

நெருப்புக்கு உள்ளிருந்து

கங்குகளில் சொல்லெடுத்து

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

நாட்டு மக்கள் நீர் அருந்த

நாடெல்லாம் குளம் வெட்டிக்

கோயிலும் கோபுரமும்

உயர்ந்திடவே மண்சுமந்து

கட்டி முடித்த கோவில்

எட்டி உதைத்ததாலே

காயம்பட்ட இதயத்தின்

எரிகின்ற நெருப்பாக

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

வரலாற்றைப் படைத்தவர்கள்

வரலாறாய் வாழ்ந்தவர்கள்

வரலாற்றின் பக்கங்களில் ஒரு

வரியிலும் இடம் பெறாதவர்கள்

அவ்வலியின் நினைவை மட்டும்

சுமந்தபடி வாழ்பவர்கள்

வலிகளின் நினைவுகளை

நித்தம் புதுப்பிக்கும் இச்

சிதம்பரத்துச் சுவர் தகர்த்துச்

சீர்படுத்த வேண்டுமெனச்

சாதியரால் சதித்துக் கொலையுண்ட

சரித்திர நாயகனாம்

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

தில்லைவாழ் அந்தணர்கள்

தின்று செழித்திடவே

சொந்தக்கோவிலாகச்

சிதம்பரத்து நடராசன்

சிறைப்பட்டுக் கிடந்த காலம்

தேவாரம் திருவாசகம் எனச்

செந்தமிழும் சிறைப்பட்ட கொடுங்காலம்.

சாதிகாத்த அரசுகள்

சரிந்து வீழ்ந்தபின்னும்

சாதிக்கு எதிராகத் தமிழ்ச்சாதியை

எழுப்பி விட்ட காவிய நாயகனாம்

பெரியாரின் வழிநின்று

சமத்துவபுரம் எழுப்பும்

சனநாயக காலத்திலும் ஒரு

சாதிச்சுவர் இன்னும் நின்று சிரிப்பதா?

அரசின் கைகளில் கோவில் வந்தபின்னும்

அச்சுவர் மட்டும் இன்னும் அசையாமல் நிற்பதா?

நந்தன் கேட்கின்றான்

நானிலமே பதில் பேசு.

7 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வெட்கக்கேடான விசயந்தான். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சமூக நீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள்.

அவசியமான பகிர்வு. வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

//மற்ற சைவக்கோவில்களைப்போல அல்லாமல் இக்கோவிலில் நடராசர் தெற்கே பார்த்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்//

பொதுவாகவே நடராசர் சிலை எல்லாக் கோவில்களிலும் தெற்கு நோக்கித்தான் இருக்கும். எனவேதான் தென்முகக் கடவுள் என்று அழைப்பதுண்டு.

Anonymous said...

1)சு.சாமி தொடர்ந்த வழக்கில் கோயிலில் எந்த மாற்றமும் அதாவது புதிதாக கட்டுவது,இருப்பதை மாற்றுவது போன்றவை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதை அரசு மீறமுடியுமா.கோயில் அரசின் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அவ்வாணையை மீறி அரசு என்ன செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
2)அவ்வாறு சுவர் இருப்பதால் பொதுமக்களுக்கோ அல்லது வழிபடுவோருக்கோ இடைஞ்சல் உள்ளதா.
3)இதை மாற்ற/சுவரை நீக்கக் கோர என்ன காரணம்.நாளைக்கு ஒவ்வொரு கோயிலிலும் இதே போல் அதை இடி,
இதை மாற்று,இந்த சுவரை அகற்று, சந்ந்தியை இடம் மாற்று என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டால் அவைகளையும் ஆதரிப்பீர்களா.
4)உங்கள் நோக்கம் என்ன.சிதம்பரம் கோயிலை ஏன் நீங்கள் எல்லோரும் குறி வைக்கிறீர்கள்.தீட்சிதர்களை துரத்திவிட வேண்டும், கோயில் அரசின் கீழ் வரட்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா.
5)இப்போது கோயிலில் தலித்க்ள் வழிபட தடை இல்லாத போது சுவர் இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.
6)சிபிஎம் இந்து விரோதக் கட்சியாக மாறி வருகிறது.ராமர் பாலத்தை இடித்தாவது சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என கோருகிறீர்கள்.கேரளாவில் இந்துக்களின் எதிர்ப்பினால் இடதுசாரி முண்ணனி கொண்டுவரவிருந்த சட்டம் கைவிடப்பட்டது.
7)சிபிம் மைனாட்டிரிகளுக்கு ஆதரவாக இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால் இருக்கிற ஆதரவும் போய்விடும்.

? said...

நந்தன் நுழைந்த வாயிலை இடிக்க கிளம்பி உள்ளதற்கு வாழ்த்துக்கள்.

பார்ப்பனீயம் என்று சொன்னால் உங்களது கட்சி அதனை காரணம் காட்டி போராட முன்வராத முன்சம்பவம் பற்றி உங்களுக்கு கருத்து எதுவும் இல்லையா
க‌டந்த சில ஆண்டுகளாக சிவனடியார் ஆறுமுகசாமி போராடியதை வரலாற்று புரட்டாளர் கருணாநிதியே மறைக்க முடியவில்லையே... வரலாற்றை வரையும் போக்கில் நக்சல்பாரி அரசியல் மீதுள்ள தங்களது வெறுப்பால் அந்த நவீன நந்தனின் போராட்டங்களை இருட்ட்டிப்பு செய்கின்றீர்களே... இதுதான் நீங்கள் பயின்ற நாகரீக அரசியலா

hariharan said...

தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் இந்த இயக்கங்கள் தந்தை பெரியார் விட்டுச்சென்ற பணி. சாதி இழிவைப் போக்க சமூகப்புரட்சியை நம் தமிழகத்தில் ஆரம்பித்தவர் பெரியார். பெரியார் வழி, அண்ணா வழி வந்தேன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் தீண்டாமையை ஒழிக்க அரசே முன் கை எடுத்திருக்க வேண்டாமா? வெறும் சமத்துவ புறங்கள் தீண்டாமையை ஒழிக்காது பத்தாண்டுகளாக சமத்துவபுறங்கள் கட்டப்பட்டு வருகின்றன, இதன் மூலம் கழககண்மணிகள் டெண்டர் பெற்று காண்ட்ராக்டர் ஆகலாம் தவிர சாதி இழிவு நீங்கவில்லை.

தீண்டாமை ஒழிப்பு முண்ணனி தமிழக்த்தில் கள ஆய்வு செய்து பல்வேறு வடிவங்களில் நிலவும் தீண்டாமையை அரசுக்கு தெரிவிக்கிறது. அதை அரசுஇயந்திரம் செய்யாத பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துகிறது.

தலித் களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொள்வோர் தீண்டாமை பிரச்ச்னையில் கவனம் செலுத்தவில்லை. (அதெல்லாம் அவகளுக்கு வெட்டிவேலை).

pavithrabalu said...

arumaiyana kavithai.. pala nutrandu kadantha theendamai theeyin veppam ungal vaarthaigalil therigirathu..

S.Raman, Vellore said...

சிதம்பரம் ஆலயத்தில் தேவாரம் பாட மறுக்கப்பட்டபோது அப்பிரச்சினைக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சிதம்பரத்தில் மறியல் நடத்தியது என்பதையும் அதற்கு முன்பாக மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் நடத்தியது,

த.மு.எ.ச, மட்டுமல்ல பல்வேறு அமைப்புக்களும் வாலிபர்
சங்க இயக்கத்திற்கு பின்புலமாக துணை நின்றது என்பதை
கேள்விக்குறி மறந்து விட்டாரா? அல்லது மார்க்சிஸ்ட் கட்சி
மீதான காழ்ப்புணர்வால் வரலாற்றை மறைக்கிறாரா?

? said...

பார்ப்பன என்ற சொல்லினால் ஆதிக்க சாதியினரை காயப்படுத்தல் ஆகாது எனக் கூறி கூட்டியக்கத்தில் இருந்து வெளியேறிவர்கள் சிதம்பரம் நகர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர். மாறாக ஆறுமுகசாமி என்ற சிவனடியாரின் போராட்டத்தின் மூலமாக இந்த பிரச்சினையை கையில் எடுத்து இரண்டு முறை சிதம்பரம் நகரத்தில் களத்தில் நின்று போராடி அடிவாங்கி போராடியதை தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளிலேயே முதற்பக்க தலைப்பு பசெய்தியாக வந்த வரலாறு மறந்து விட்டதா... நீங்கள் மாநிலம் தழுவிய அளவில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர்கள் தியாகத்தால் பெற்ற உரிமைகளுக்கு சொந்தம் கொண்டாட வந்தீர்கள் என்பதை மாநில தலைநகரின் திருமண மண்டப மேடைகள் அறியும். அந்த தூண்களும் கூட சிரித்திருக்கும்.