Monday, July 12, 2010

மெல்லச்சாகும் மொழிகள்

 

footsteps_on_beach_1024x768(2)

மெல்லத்தமிழினிச்சாகும் என்று ஒரு பண்டிதர் சொல்ல அவரைப் பேதை என்று கோபத்துடன் குறிப்பிட்டு ‘என்றந்தப் பேதை உரைத்தான்’ என ஒருமையில் திட்டினான் பாரதி.

மேலும் ஒரு கட்டுரையில் பாரதி இவ்விதமாகப் பேசுகிறார்:

“தமிழ் பாஷை இறந்து போய்விடுமென்றும் நமது நாட்டில் எல்லா பாஷைகளுக்குமே பிரதியாக இங்கிலீஷ் பாஷை ஏற்படுமென்றும் நம்பிய மூடர்கள் சுமார் 10 வருஷங்களின் முன்பு நமது ஜனங்களிலே பலர் இருந்தார்கள்.இப்போதும் அந்நம்பிக்கையுடையவர் ஆங்கிலேயர்களிலே அனேகர் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பாஷைகளெல்லாம் மடிந்துபோய் அவற்றினிடத்திலே இங்கிலீஷ் நிலவி வருமென்பது இவர்களுடைய எண்ணம். இஃதிவ்வாறிருப்ப , மகா வித்துவான் ஸ்ரீ உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சில தினங்களின் முன்பு இவ்விஷயத்தைப் பற்றிப் பேசியபோது பின் வருமாறு கூறியிருக்கிறார்:

’அன்னியர்களைக் குறை கூறிப்பயனில்லை.தமிழ்ப்பாஷையின் செல்வங்களையெல்லாம் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் நம்மவர்களையே சார்ந்ததாகும்.எவ்வாறாயினும் நமது தாய்மொழி ஸாமனியத்தில் இறந்துவிடக் கூடியதன்று.பெரியோர்கள் இதனைக் “கன்னி”த்தமிழ் என்று பெயரிட்டழைத்திருக் கிறார்கள்.இது எக்காலமும் வனப்பும் இளமையும் மாறாத கன்னிகையாகும்.இதற்கு முதுமையே கிடையாது.மரணமுமில்லை.”

பாரதியின் கோபமும் தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் நம்பிக்கையும் மதிப்புமிக்கவை.ஆங்கிலேயர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த அந்த நாட்களிலேயே இவ்விதமான நம்பிக்கையை வெளியிட்ட இவ்விரு மகான்களின் மொழியுணர்வு பின் வந்த காலங்களில்- குறிப்பாக விடுதலை பெற்று ஆங்கிலேயர் நாட்டை விட்டுப் போன பிறகு –இன்னும் குறிப்பாக 1967க்குப் பின் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆட்சி இடையறாது நடைபெற்று வரும் பின்னணியில் – மேலும் வளர்வதற்கு மாறாகத் தேய்ந்து கொண்டே வந்ததையே வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இன்று தமிழ் அழிந்து விடவில்லை.வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனாலும் பாரதியும் உ.வே.சா.வும் பேசிய அதே நம்பிக்கையான தொனியில் நம்மால் இன்று பேச முடியுமா?

யுனெஸ்கோ நிறுவனம் வரைந்துள்ள இலக்கணங்களின்படி பல்வேறு மொழிகள் அழிந்து வருவதைக் கண்ணுறும்போது நாம் அச்சப்படாமல் இருக்க முடியவில்லை.இன்று உலக மக்கள் பேசும் மொழிகளாக 6900 மொழிகள் இருக்கின்றன.இவற்றில் 2500 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன.அல்லது இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நிச்சயம் அழிந்துவிடும் நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன.2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது அழியும் ஆபத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 900 ஆகவே இருந்தது.இப்போது அந்த எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என யுனெஸ்கோ நிறுவனம் அறிவிக்கிறது.

உலகமயப்பொருளாதார நடவடிக்கையின் விஸ்தரிப்பின் பகுதியாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் உலக நாடுகளில் எல்லாம் வெகு வேகமாகப்பரவி வருவதன் தொடர்ச்சியாகவே இம்மொழிகளின் அழிவை நாம் பார்க்க வேண்டும்.ஒப்பீட்டளவில் எந்த நாடுகளில் இத்தகைய அழியும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அந்த நாடுகள் இதுபற்றி மிகமிகக் கவலையுடன் அவசரமாக அம்மொழிகளைக் காக்க ஆனதெல்லாம் செய்ய வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனம் அறிவுறுத்துகிறது.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்கிறது யுனெஸ்கோவின் புள்ளிவிவரம்.ஒரு நாடாளுமன்றக் கேள்விக்கு அளித்த எழுத்துப் பூர்வமான பதிலில் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்திய மொழிகளில் 196 மொழிகள் அழிவின் விளிம்பில் நிற்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.இவற்றில் 9 மொழிகள் அழிந்தே விட்டன,36 மொழிகள் உடனடியாக அழியும் அபாயத்தில் உள்ளன,62 மொழிகள் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கின்றன,84 மொழிகள் அபாயத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் அப்பதிலில் பட்டியலிட்டுள்ளார்.

உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 192 மொழிகளும் பிரேசிலில் 190 மொழிகளும் இந்தோனேசியாவில் 147 மொழிகளும் சீனா மற்றும் மெக்சிகோவில் தலா 144 மொழிகளும் அபாயத்தில் இருப்பதாக கபில் சிபல் குறிப்பிடுகிறார்.

இன்றைய நிலையில் வட கிழக்கு மாகாணங்களில் வாழும் மொழிகளில் 120 , இமாச்சலப்பிரதேசம்,ஜம்மு காஷ்மீர்,உத்தர்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் வாழும் மொழிகளில் 44, ஒரிஸ்ஸா,ஜார்கண்ட்,மே.வங்கத்தில் 42 ஆபத்தில் இருக்கின்றன. இம்மொழிகள் 20-30 ஆண்டுகளில் அழிந்துவிடக்கூடும்.

இப்பட்டியலில் இன்று தமிழ் இல்லை என்று நாம் ஆசுவாசப்பட முடியாது.இன்னும் 50 ஆண்டுகளில் இப்பட்டியலுக்கு வர வாய்ப்புள்ள மொழிகள் என்று பார்த்தால் (இன்றைய போக்கு இப்படியே நீடித்தால்) தமிழ் நிச்சயம் அந்த அபாயத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகில் இன்றுள்ள மொழிகளில் 50 சதவீதமானவை அழிந்தே தீரும் என்று யுனெஸ்கோ கூறியுள்ள புள்ளிவிபரம் நம்மை உண்மையிலேயே அச்சுறுத்துகிறது.

யுனெஸ்கோ மற்றும் உலகின் மொழியியல் அறிஞர்கள் அழியும் மொழிகள் பற்றிக் கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்துகிறார்கள்:-

1. அழிந்துவிட்ட மொழிகள் –பேச,எழுத யாருமே இல்லாது போன மொழிகள் (extinct languages)

2. அநேகமாக அழிந்துவிட்ட மொழிகள்-பேசுபவர்கள் யாரும் இருக்கிறார்களா என உறுதிப்படுத்த இயாலாத நிலையில் உள்ள மொழிகள்(possibly extinct languages)

3. கிட்டத்தட்ட அழிந்துவிட்ட மொழிகள்- பேசுபவர்கள் பத்துக்கணக்கில் மட்டுமே-அவர்களும் வயதானவர்கள்(nearly extinct languages)

4. கடுமையான ஆபத்தில் உள்ள மொழிகள் –பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.ஆனாலும் அவர்கள் மத்தியில் குழந்தைகளே இல்லை என்கிற நிலையில் உள்ள மொழிகள்(seriously endangered languages)

5. ஆபத்தில் உள்ள மொழிகள் – சில பகுதிகளில் குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் நிலையில் உள்ள மொழிகள்(endangered languages)

6. இயல்திறன் ரீதியாக ஆபத்தில் உள்ள மொழிகள்-நிறையக் குழந்தைகள் இம்மொழிகளைப் பேசலாம்-ஆனாலும் அதிகாரபூர்வமான மொழியாக ஒரு மரியாதைக்குரிய மொழியாக இல்லாம்ல் இருக்கும் நிலையில் உள்ள மொழிகள்(potentially endangered languages)

7. ஆபத்தில் இல்லாத மொழிகள்-அடுத்த தலைமுறைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் கடத்தப்படும் மொழிகள்( not endangered languages)

இன்று நம் தமிழ் மொழி சந்தேகத்துக்கிடமில்லாமல் 7 ஆவது வகையில்தான் உள்ளது.ஆனால் 5 மற்றும் 6 ஆவது வகை ஆபத்துக்கள் நமக்குக் காத்திருக்கின்றன.மத்தியில் ஆட்சி மொழியாக தமிழ் இல்லை.மாநிலத்தில் பாதிக்கும் குறைவான சதவீதமே நிர்வாக மொழியாக உள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக இல்லை.கோவில்களில் வழிபாட்டு மொழியாக இல்லை.ஊடகத்தில் தமிழ் சிதைந்து கொண்டிருக்கிறது.தமிழ் மக்களின் பேச்சிலாவது தமிழ் மிச்சமாக இருக்கிறதா? தமிங்கிலம்தான் தமிழரின் பேச்சு மொழியாகக் கோலோச்சுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் மனம் வெந்து சொன்னது போல’ “ மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை.தோப்பில் நிழலா இல்லை.தமிழகத்தில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை”

மிக மிக முக்கியமாக பயிற்றுமொழியாகத் தமிழ் இல்லாமல் போகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் சூழல்தான் நமக்கு மிகுந்த அச்சமளிக்கிறது.ஆங்கிலவழியில் கற்றால் மட்டுமே நாளைய உலகம் நம் பிள்ளைகளுக்குக் கிட்டும் என்கிற அச்ச உணர்வு கொண்ட தமிழ்ப் பெற்றோரின் மனவியாதிக்கு உடனடியாக மருந்து வேண்டும்.அதை அரசுகள் மட்டுமே வழங்க முடியும்.தமிழ் மட்டுமல்ல.இந்திய மொழிகள் அத்தனைக்குமே ஆங்கிலம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பூதாகரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. உள்ளூர் பயிற்று மொழியின் நிலை குறித்து கல்விக்கான திட்டமிடல் மற்றும் நிர்வாகத்துக்கான தேசியப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அகில இந்திய அளவிலான புள்ளிவிவரம் கீழே:

பயிற்று மொழி- மாணவர் சேர்க்கை எண்ணிக்கை

                                        மில்லியன்களில்

                                          2004                              2009

1. இந்தி                               7.2                                 83.2

2.ஆங்கிலம்                         8.4                                15.3

3.வங்காளி                           1.4                               13.3

4.மராத்தி                            10.6                              12.4

5.தெலுங்கு                          9.1                                 7.6

6.குஜராத்                             6.4                                 7.3

7.தமிழ்                                 7.9                                 7.0

8.கன்னடம்                          6.3                                 6.2

9.ஒரியா                              5.7                                 6.2

10.அஸ்ஸாமி                    3.2                                 4.6

11.உருது                           3.0                                  3.6

12.மலையாளம்               2.9                                   2.8

13.பஞ்சாபி                      2.4                                   2.4

பல்வேறு கிளை மொழிகள்,மலைவாழ்/பழங்குடி மக்களின் மொழிகளை விழுங்கி இந்தி வளர்ந்துள்ளது.இருளர்,குறும்பர் போன்ற மலைவாழ் மக்களின் மொழிகளைத் தமிழ் தின்றுள்ளது.பொதுவாக தென்னாட்டு மொழிகள் தேய்மானத்தில் உள்ளதையும் ஆங்கிலவழிக்கல்வி இருமடங்கு அதிகரித்திருப்பதையும் நாம் இப்புள்ளி விவரத்தில் காண முடிகிறது.

மத்திய அரசின் தவறான மொழிக்கொள்கையின் விளைவாக இச்சிதைவு எல்லா இந்திய மொழிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.திராவிட ஆட்சிகள் அதைத்தடுக்கப் போராடவும் இல்லை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.மாறாக ஆங்கிலத்தைத் தங்கள் தோள்களில் சுமந்து பரப்பிவருகிறார்கள்.1967க்கு முன் இருந்த ஆங்கிலப்பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்காக பல்கிப்பெருகி இருப்பது திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் என்கிற ஒரு சான்று போதும் இதை விளக்க.1930களிலும் 60களிலும் தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டங்களின் காலத்தில் இந்தியால்தான் தமிழுக்கு ஆபத்து என நம்பினோம்.ஆனால் இன்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலம்தான் அசலான ஆபத்தாக வந்து நம் எதிரே பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது-அரசுகள் உடுக்கடிக்க.

பேய் ஆடுவதற்கான இந்த உடுக்குச் சத்தத்தை பேயை விரட்டுவதற்கானதாக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது.

1 comment:

சித்திரவீதிக்காரன் said...

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்று பாரதி சொன்ன வரிகள் தான் ஞாபகம் வருகிறது. தமிழின் இன்றைய நிலை குறித்து அச்சமாகத்தான் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.