Tuesday, June 9, 2009

தொட்டதெல்லாம் உள்ளூர் மண்ணாக...

 

habib1 habib3 ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் அவரைப் பார்த்தது 1999 இல் டெல்லியில் சஹ்மத் ( SAHMAT-Safdar Hashmi Memorial trust) நடத்திய சப்தரின் பத்தாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகளின்போதுதான்.அப்போதே அவர் தன் 70களில் இருந்தார். முதுமை முகத்தில் தெரிந்த போதும் உடலிலும் உள்ளத்திலும் இல்லை.இரண்டு மூன்றுநாட்களாக அவரைத் தூர இருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன்.கவனத்தை ஈர்க்கும் கனத்த குரல்.பிரளயனுக்கு ஏற்கனவே அவரோடு அறிமுகம் இருந்தது.அவரைப்பற்றி என்னிடம் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.வட இந்தியாவில் முக்கியமான ஒரு அரங்க ஆளுமை என்கிற அளவில் ஒரு மதிப்புக் கொண்டேன்.

ஆனால் இரண்டாம் நாள் இரவு அரங்கேற்றப்பட்ட அவருடைய நாடகம் Jisne Lahore Nai Dekhya Wo Jamyai Nai ( = யார் லாகூரைக்காணவில்லையோ அவர் வாழ்ந்தென்ன என்று பொருள் கூறலாம்.லாகூரைக் காணாத கண்ணென்ன கண்ணோ என்றும் சொல்லிக்கொள்ளலாம்.உணமையில் இது வடமேற்கு இந்தியா முழுதும் நாட்டார் வழக்கில் உள்ள ஒரு சொலவடையாகும்) என் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தலைகீழாக என்னைப் புரட்டிப்போட்ட கலைப்படைப்பாக அது இருந்தது.கவிதைகளும் நாட்டுப்புறக் கலைக்கூறுகளும் பின்னிப் பிணைந்த அற்புதமான படைப்பு அது.ஒரு வட இந்தியக் கலைஞர் என்கிற என் பார்வை தகர்ந்து ஒரு சர்வதேசக் கலைஞனாக அவர் அந்த இரவில் என் மனதில் எழுந்து நின்றார்.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் நான் அதுவரை பார்த்திருந்த நாடகங்கள் எவையும் தொட்டிராத உயரத்தில்/ஆழத்தில் அந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.ஆனால் ஹபிப் சாருடைய மிகச்சிறந்த நாடகம் ’சரண் தாஸ் சோர்’ என்கிற நாடகம்தான் என்று அருகே அமர்ந்திருந்த பிரளயன் சொன்னார்.பின்னர் நானும் படித்துத் தெரிந்து கொண்டேன்.போட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வடக்கு ,கிழக்கு,மேற்கு இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய நாடகம் சரண்தாஸ் சோர்.

1923 இல் பிறந்த ஹபிப் மாமா 1945இல் அன்றைய இடதுசாரி பண்பாட்டு இயக்கங்களாகத் திகழ்ந்த IPTA ( Indian people’s Theatre Association) விலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டார்.அந்த பந்தத்தின் அர்த்தம் மேலும் அடர்த்தியாகும் வண்ணம் எளிய மக்களின் பக்கம் நின்று தன் படைப்புகளை முன் வைத்தார்.லண்டன் ராயல் நாடக அகாடமியில் மூன்று ஆண்டுகள் முறையாக நாடகம் பயின்றவர்.எதை நான் செய்யக்கூடாதென விரும்புகிறேனோ அதையெல்லாம் அங்கு கற்றுக்கொண்டேன்.அங்கு கற்றதையெல்லாம் கழட்டி எறிந்த பிறகுதான் என் நாடகங்கள் நான் விரும்பத்தக்கவையாக அமைந்தன என்று பின்னர் கூறினார்.பிரெக்ட்டின் நாடகங்களை ஜெர்மனியில் நேர்ல் சென்று பார்த்து அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொண்டார்.சதிஸ்கர் நாட்டுப்புறக்ககலைஞர்களை அப்ப்டியே தன்னுடைய நாடகக்குழுவில் இணைத்துக்கொண்டார்.நம் நாட்டு நாடகம் நாட்டுப்புறக் கலைகள் இவற்றிலிருந்து மட்டுமே நமக்கான நாடகம் வேர்கிளம்பி வரமுடியும் என்பதை நிகழ்த்திக்காட்டினார்.

மைதாஸ் கதையில் அவன் தொட்டதெல்லாம் பொன் ஆவது போல ஹபீப் சார் எதைத் தொட்டாலும் அது சதிஸ்காரிப் படைப்பாக உள்ளூர்த் தன்மை பெற்று ஒளிர்ந்தது.ஷேக்ஸ்பியர் துவங்கி சப்தர் ஹாஷ்மி வரை பலருடைய கதைகளை அவர் நாடகமாக்கியபோதும் எல்லாமே ச்திச்காரி மொழி பேசுகிற நாட்டுப்புற அசைவுகளும் பாடல்களும் கொண்ட படைப்புகளாகவே மேடையேறின.என் கிராமமே எனது அரங்கு என் பெயர் ஹபீப் என்பது அவரைப் பற்றி உலகம் சொன்ன வார்த்தைகளாகும்.கவிதையையும் நாட்டுப்புறவியலையும் நவீன பார்வைகளுடன் இணைத்து நாடகம் தயாரித்தவர் அவர்.

சப்தர் காங்கிரஸ் குண்டர்களால் கொலை செயப்பட்டபோது அதை எதிர்த்த போராட்டங்களில் முன் நின்றவர் ஹபீப்.

டெல்லியில் அவரைத் தரிசித்த அந்த நாட்களில் நான் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை பற்றிய எழுதப்படாத வரலாறுகளைத் தேடித்தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.ஊர்வசி புடாலியாவின் The Other side of Silence மற்றும் கமலா பாஷின் /ரித்து மேனன் எழுதிய Borders and Boundaries போன்ற நூல்களைப் படித்துவிட்டுத் தாள முடியாமல் இரவுகளில் தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தேன்.அந்த மனநிலையில் ஹபிப் மாமாவின் லாகூரைக் காணாத கண் என்ன கண்ணோ நாடகத்தைப் பார்த்தது சொல்ல முடியாத துக்கத்திலும் பரபரப்பிலும் என்னை ஆழ்த்தியது. 1947 தேசப்பிரிவினையின்போது இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு இங்கு ஓடிவர இஸ்லாமியர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஓடினர்.லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த வரலாற்றின் மிகப்பெரும் சோகநாடகம் இந்திய-பாக் பிரிவினையின் போது நடந்ததுதான். அப்படி பாகிஸ்தானின் லாகூர் நகரை விட்டு இந்தியாவுக்கு ஓடிப்போன ஒரு இந்துக்குடும்பம் ஒரு வயதான மூதாட்டியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு ஓடியிருக்கும்.அந்த வீடு இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானுக்கு ஓடி வந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும்.அக்குடும்பம் தங்கள் சொந்த வீடாக அவ்வீட்டை நினைக்க – அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து பல்லாண்டு காலம் அங்கேயே வாழ்ந்த அந்தக் கை விடப்பட்ட இந்துக் கிழவி வரலாற்றின் சாட்சியாக அங்கேயே இருந்துகொண்டிருக்க அவளுக்கும் அக்குடும்பத்துக்கும் ஏற்படும் உறவை மையமாக வைத்து பாகிஸ்தானில் நடந்த மதவாத நடவடிக்கைகள் மற்றும் அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினை மீதான ஆழ்ந்த விமர்சனத்தை வைத்தபடி அந்நாடகம் செல்லும்.கடந்த காலத்தில் கொண்டுபோய் என்னை –லாகூரிலேயே- வாழவைத்தது அந்நாடகம்.நாடகம் பார்த்த அந்தக் குளிர் இரவு வாழ்வில் மறக்க முடியாத இரவுதான்.

மீண்டும் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரின் தலைநகரான பாட்னாவில் ஜன்வாதி லேகக் சங்கின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.இந்தி மற்றும் உருது எழுத்தாளர்கள் மாநாடு அது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக சகோதரப் பிரதிநிதியாக வாழ்த்திப்பேச நான் அங்கு போயிருந்தேன். முதல் நாள் மாலை இந்துத்வ எதிர்ப்புப் பேரணியைத் துவக்கி வைக்க சாட்சாத் ஹபிப் தன்வீர் சாரே வந்துவிட்டார். பரவசமடைந்த நான் ஓடிப்போய் கூட்டத்தோடு கூட்டமாகக் கை குலுக்கினேன்.

மாநாட்டைத்துவக்கி வைத்து அவர்தான் பேசினார்.அப்போது அவருடைய நாடகங்களை நடத்த விடாமல் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள்.அரங்குகளில் அவருடைய நாடகம் பார்க்க வந்த மக்களின் மீது கல் வீசுவது அவருடைய மற்றும் அவர் குழுவினருடைய வாகனங்களை மறித்துத் தாக்குதல் தொடுப்பது என்கிற அவர்களின் பிறவிக்கடனை ஆற்றிக்கொண்டிருந்த நேரம்.நான் அவர்களுக்குப் பணிய மாட்டேன்.நாடகம் எனது பிறப்புரிமை என்று மாநாட்டில் கம்பீரமாகப் பிரகடனம் செய்தார்.உங்களை எல்லாம் பார்த்தபிறகு நான் இன்னும் கூடுதலான தெம்படைகிறேன்.இன்னும் அதிக வாழ்நாளை இன்று பெற்றுத் திரும்புகிறேன் என்று பேசினார்.

நாடகம் குறித்த அவருடைய பார்வைகள் அவரால் எழுதப்படவேண்டும் என்று அரங்கவியலாளர் எல்லோரும் -உலகம் முழுதும்- ஆவலுடன் விரும்பினார்கள்.ஆனால் அவர் நாடகம் போடாமல் சும்மா ஓய்வில் இருந்தால்தானே எழுதுவார்.உடல்ரீதியாக இயங்க முடியாமல் போனால் மட்டுமே அது நடக்கும்.அப்படிச் சில காலம் படுத்த படுக்கையாகி எழுத மாட்டாரா என்று கூடப் பலர் ரகசியமாக மனதுக்குள் விரும்பினர்.

ஆனால் அவர் உஅடலும் உள்ளமும் ஓய்வே எடுக்கவில்லை.நாடகத்துக்காகவே வாழ்ந்த அம்மாமனிதன் இறக்கும்வரை நாடகம் படைப்பதையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதையும் ஒருநாளும் நிறுத்தவே இல்லை.

நேற்று(8-6-09) அவர் நம்மிடமிருந்து விடை பெற்றார்.

வெற்றிடத்தில் நிற்கிறோம்.

4 comments:

venu's pathivukal said...

வரலாற்றில் சில பெயர்களே கம்பீர நினைவுகளைச் சுமந்திருக்கும். சிறு குறிப்புகள் கூட அறியாதிருந்தாலும் பரந்த ஒரு கூட்டம் அந்த ஆளுமைகளைப் போற்றத் தலைப்படும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாகி, வாக்கினிலும் ஒளி வீச வாழ்ந்து செயல்பூர்வமாகவும் சிந்தனைகளுக்கு நியாயமான வாழ்க்கையை வாழ்ந்து விடைபெறுகிற அத்தகைய மனிதர்களின் பிரிவு நேரம் தான் அவர்கள் குறித்த ஏராளமான செய்திகளைக் கூடை கூடையாகக் கொண்டுவந்து மடியில் கொட்டுகிறது. அவை உள்ளத்தைக் கீறிப் பெருகும் கண்ணீர் அந்த வரலாற்றுச் செய்திகளை ஈரத்தோடு காக்கக் தொடங்குகிறது. நேர்மையானவர்கள் துணிச்சல்காரர்களாகவும் இருப்பது ஒரு சமூகத்தின் வரம். அவர்கள் படைப்பாளிகளாக வாய்ப்பது தவம்.

2. ஹபீப் குறித்த நினைவின் அடுக்குகளை உணர்ச்சிப் பெருக்குற எடுத்து வைத்திருக்கிறீர்கள் தமிழ்!

எஸ் வி வேணுகோபாலன்

முத்துக்கிருஷ்ணன் said...

அந்த நாடகத்தை நாம் ரசித்துக்கிடந்த பொழுது நம் அருகில் ஒரு ச்ர்வதேச பத்திரிக்கை புகைப்பட நிருபர் புகைக்படம் எடுத்துக்கொண்டிருந்தார், நாடாக்த்தின் நடுவே நான் உங்களை அவரை பார்க்கும் படி கவனப்படுத்தினேன்.., காமிரா புகைப்படங்களை எண்ணிக்கையற்றூ அவள் கிளிக் செய்துகொண்டிருந்தார்... அவள் கண்களிலிருந்து கண்ணீர் சாரை சாரையாக ஒடிக்கொண்டிருந்தது... உன்மையிலேயே அந்த நாடகம் தான் பிரிவினையின் வலியை என் ஆழ் மனதில் பெரும் கசப்புடன் கிளர்ந்து சென்றது. அது முதல் பல அறிய பிரிவனை தொரர்புடைய நூல்களை என் வர இந்திய பயனங்கள் ஒவ்வொன்றிலும் சேகரைத்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் பேட்டிகள் குறித்து வைத்துள்ளேன் அவைகளை எடுத்துவிட்டால் ஒரு படைப்பை முடித்துவிடலாம். This would be one my pet works.
அதன் பிறகு நான் இர்பான் ஹ்பீப் அவர்களை பல முறை வேறு வேறு சந்தர்பங்களில் தூரத்தில் இருந்த பார்த்தேன். ஒரு முறை போபாலில் அவரை சென்று சந்தித்தேன், அது மறக்க முடியாத சந்திப்பு. ஆர்.எஸ்.எஸ் இன் கரங்கள் மிக நீண்டவை தந்திரம் நிறைந்தவை என்பதை அவர் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.அந்த பேட்டியை நானும் Parallelஆக குறித்து வைத்தேன். அவரது துடிப்புமிக்க பேச்சு உடலில் ஒரு நடுக்கத்தை தக்கவைத்தபடி இருந்தது.

பிறகு ஒரு முறை நான் அவரது முதல் மனைவியான கிரிஸ்டியை சந்தித்தேன். அவர் ஐரோபாவில் வசித்து வருகிறார். வந்தனா சிவா நடத்தும் ஒரு உலகமயம் சார் வகுப்பில் நாங்கள் அனைவரும் 15 நாட்கள் தெக்ராடூனில் தங்கிப் பயின்றோம். ஹபீப் குறித்து அவர் பெரும் பரவசத்துடன் என்னிடம் உறையாடினார். அவர் தொடர்ந்து எனக்கு ஹபீப்பின் பல பேட்டிகளை அனுப்பிவருகிறார். கிரிஸ்டியின் மகள் அண்ணா தன்வீர் (Anna Tanivir) முறை தனது இந்திய சுற்றுப் பயனங்களில் மதுரை வந்தார். அவர் பிரான்சிலேயே வளர்ந்த படியால் ஹபீப் பற்றிய பெரும் நினைவுகள் இல்லாது இருந்தார்.
அதுவெல்லாம் சரி ஹபீபை நினைக்கும் பொழுது எல்லாம் என் மனதில் உடன் ஒரு குரல் ஆவேசமாய் ஒளிக்கும். அது சப்தர் கொல்லப்பட்ட நேரம் ஹபீப் தன்வீர் அளித்த பேட்டியின் வரிகள்,`எங்களுக்கு (நாடக க்லைஞர்களுக்கு) இனி அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை, நாங்களே இனி எங்களை ஆயுதம் ஏந்தி பாதுகாத்துக் கொள்கிறோம்’. ( சப்தர் குறுந்தகடு என்னிடம் உள்ளது அதை நான் விரைவில் you tube இல் பதிவேற்றம் செய்ய விருக்கிறேன்)

முத்துக்கிருஷ்ணன் said...

To celebrate the life, theatre, politics and creativity of

Habib Tanvir
(1923-2009)

join us at the memorial meeting at

6.00 p.m.
10 June 2009
Muktadhara Auditorium

Banga Sanskriti Bhavan

18-19 Bhai Veer Singh Marg, near Gol Market

Jana Natya Manch
Sahmat
Janvadi Lekhak Sangh

யுவன் பிரபாகரன் said...

பிரிவினை பற்றி தேடி தேடி படித்த நீங்கள் அப்படியே ” சதத் ஹசன் மண்டோவை” பற்றி ஒரு வார்த்தை போட்டு இருக்கலாம் சார்....