3
இயற்கையின் படைப்புகளுக்கு நோக்கமோ, அர்த்தமோ இருக்க முடியுமா? ஒரு நோக்கத்தோடு ஒரு ஜீவராசியை- ஒரு பொருளை இயற்கை படைத்தது என்று நாம் சொன்னால் அதன் பொருள் என்ன? இயற்கை நன்றாக யோசித்துத் திட்டமிட்டு அந்த உயிரைப் படைக்கிறது என்றல்லவா அர்த்தம். அது கருத்து முதல்வாதமல்லவா? இப்பிரபஞ்சத்தில் யோசனை என்கிற ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே உரியது. இயற்கைக்கு மூளை கிடையாது. இயற்கையின் ஒரு பகுதியான மனிதன் மட்டு மே சிந்தனை செய்கிறவன். இயற்கை மனிதன் மூல மாகவே தன்னை அறிகிறது. ஆகவே படைப்பு என்கிற சொல்கூட இந்த இடத்தில் சரியல்ல. இயற்கையில் எல் லாமே தற்செயலாகத்தான் நடக்கிறது. தாமே தோன்றி தாமே அழிபவை தான் எல்லாம். "இடையறாத தற்செயல் நிகழ்வுகளுக்கு ஊடாக இயக்கவிதிகள் செயல் படுகின்றன" என்று ஏங்கல்ஸ் குறிப்பிடுவதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சில குறிப்பிட்ட விதிகளின் படியே எல்லாம் இயங்கு கின்றன. ஆனால், அவை தற்செயலாக - முன் திட்ட மின்றி - இயங்குகின்றன.
தற்செயலாக நாம் ஆண்களாகவும், பெண்களாகவும் ஆகிவிட்டோம். மிருகங்களில் தற்செயலாகத்தான் ஆணும் பெண்ணும் இணைக்கின்றன. கருச்செல்களின் இணைவு ஏற்பட்டுவிட்டால் குட்டிகள் பிறக்கின்றன. சூழ லிலும் தட்ப வெப்ப நிலையிலும் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் தாக்குப்பிடிக்கும் சக்தி அந்த உயிரினங்களுக்கு இருந்தால் அவை தொடர்ந்து வாழும். இல்லையேல் அவை அழியும். மிகப் பெரிய டினோசர்கள் என்கிற வகையே ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையைத் தாங்க முடி யாமலும் விண்கற்களின் வீழ்ச்சியாலும் ஒரே சமயத்தில் அழிந்துவிட்டதல்லவா?
ஆகவே, இயற்கையின் நிகழ்வுப் போக்கில் தற்செயலாக பெண்களுக்குக் கருப்பை என்கிற உறுப்பு வந்து சேர்ந்துவிட்டது. டெஸ்ட் ட்யூப்பில் குழந்தை பிறப்பதை விட - குளோனிங் முறையில் பிராய்லர் கோழிகளைப் போல - முட்டைகளைப் போல - மனிதர்களை உற்பத்தி செய்வதைவிட - ஒரு தாயின் வயிற்றில் கருப்பையில் உருவாகி குழந்தை வளருவதுதான் இயற்கையானது. ஆரோக்கியமானது. ஆனால், அதன் அர்த்தம் எந்தப் பெண்ணானாலும் அவள் பிறப்பே பிள்ளை கொடுக்கத் தான் என்பது அல்ல. அப்படி நாம் ஆணி அடிக்க முடி யாது. அதற்கு நமக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை. அது அந்தப் பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அது அவளது மனித உரிமை. அது கணவனது உரிமை அல்ல. மாமனார் மாமியாரின் விருப்பமோ, உரிமையோ அல்ல. சர்வதேச சட்டங்களும் அவ்வாறு தான் உள்ளன. ஆனால், எந்த மனித உரிமைச் சட்டங் களும் சர்வதேசப் பிரகடனங்களும் ஐ.நா. சபையும் கூட நுழைய முடியாத பண்பாட்டுக் கோட்டைகளான குடும்பச் சிறைகளுக்குள் கிடக்கும் பெண்கள் "ஈன்று புறந்தரு தல் என்தலைக் கடனே...." என்று அந்தக் கவிச்சியுடனே தான் கிடக்க வேண்டியிருக்கிறது. ஒன்பது பிள்ளைகள் பெற்றுப் பிரசவித்தே செத்த மும்தாஜூக்கு ஆண்கள் சமாதிகட்டி தாஜ்மகாலாக - காதலின் (!) சின்னமாக - வழிபடத்தான் முடிகிறது.
இன்னும் பெண்ணின் கருப்பையும் பாலூட்டும் மார்ப கங்களும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆண்களுக்கு என்னவாக அர்த்தமாகி வருகிறது? மனித குலத்தை தழைக்கச் செய்யும் பெண் உடல் அவளது அங்கங்கள் என்னவிதமாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் தன் வரலாற்று ரீதியில் பேசத் துவங்கினால் எப்படி இருக்கும்?
அமீபாவாக இருந்து தலைப்பிரட்டைகளாக இருந்து மீன்களாகிப் பறவைகளாகி விலங்குகளாகிக் குரங்குகளாகி வளர்ந்த கோடானு கோடி ஆண்டுகளில் பெண் உறுப்புகள் சந்தித்திராத கொடுமைகளை விலங்குப் பெண்ணினம் சந்தித்திராத அவலங்களை ஆக்கிரமிப்புகளை வன்முறைகளை கேவலங்களை மனிதப் பெண் உறுப்புகள் சந்தித்த கதையை அவை பேசும். ஒரு ஆண் தவளை பெண் தவளையை சைட் அடித்ததுண்டா? ஒரு காளை மாடு ஒரு பசுமாட்டை ஈவ் டீசிங் செய்தததுண்டா? ஒரு ஆண் சிலந்தி ஒரு பெண் சிலந்தியிடம் வரதட்சணை கேட்டதாக சரித்திரம் உண்டா? அது அதுபாட்டுக்கு சேருது குட்டி போடுது போய்க்கிட்டே இருக்கு. மனிதரில்தான் இந்தக் கொடுமை.
அறிவியல் பூர்வமாகவும் உயிரியல் பூர்வமாகவும் பெண் குழந்தை பெறுவது நல்லது என்று இருக்கலாம். ஆனால், பண்பாட்டு ரீதியான வரலாற்று ரீதியான வன்முறைகளின் பின் னணியில் அவள் கருச்சுமந்து உயிரைப் பணயம் வைத்துப் பிள்ளையைப் பிரசவித்துத் தானே பாலூட்டி, தானே சோறூட்டி, தானே ஆய் கழுவி, தானே துணி துவைத்து, தானே வளர்ப்பதை மாட்டேன் என்று மறுப்பதற்கு அவ ளுக்குச் சகலவிதமான உரிமையும் உண்டு என்று ஆயிரம் மலைகளில் ஏறி நின்று உரக்கக் கூவலாம்.
ஆகவே, இது வரையிலான வாதங்களின் தொகுப்பாக, "பெண் பிறந்ததே குழந்தை பெற்றுத் தரத்தான். குழந்தை பெற்றால்தான் பெண் முழுமை யான பெண் ஆகிறாள் என்கிற நம் மூளைகளில் அழுத்தமாகப் படிந்து கிடக்கும் நாறக்கருத்தை மண்வெட்டி கொண்டு வழித் துப் போட வேண்டும்" என்று சொல்லி முடிக்கலாம். தந்தை பெரியார் "பெண்கள் தங்கள் கருப்பைகளை வெட்டி எறிய வேண்டும்" என்று ஆவேசத்துடன் கூறியதை இத்தகைய பண்பாட்டுத் தளத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, தாய்மைதான் பெண்மை என்று சுருக்குகிற பார்வை சரியல்ல என்று இப்போதைக்கு முடித்து அடுத்த ஒரு "பெண்மையின் லட்சணம்" பற்றி விவாதத்தை தொடர்வோம். அதற்கு முன் கிருத்திகாவின் கதை என்னாச்சு என்று பார்ப்போம்.
செம்மலரில் இக்கட்டுரை தொடராக வந்துகொண்டிருந்தபோது இதுபற்றி பத்துக்கு மேற்பட்ட கடிதங்கள் பத்துக்கு மேற்பட்ட தொலைபேசி விமர்சனங்கள் வந்துள்ளன. அந்த வாசகர் களுக்கு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். படித்துவிட்டுக் கடிதம் எழுதுகிற அளவுக்குக்கூட முடி யாத ஒரு செயலின்மை வாசகப் பரப்பில் பீடித்துள்ள இந்தக் காலத்தில் இவ்வளவு பேர் எதிர்வினையாற்றியது மகிழ்ச்சி தருகிறது.
பெரும்பாலான கடிதங்கள் கிருத்திகா குழந்தை பெற மறுப்பது தப்பு என்கிற தொனியில் வந்துள்ளன. தத்துக் குழந்தை என்பது பெத்த பிள்ளை போல ஆகுமா என்பதுதான் பரவலான கருத்தாகவும் உள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் சந்திரா அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தை இக்கட்டுரையின் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். அது ஒரு தெளிவைக் கொடுக்கிறது என வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
கிருத்திகாவின் கணவரிடம் நான் என்ன சொன்னேன் என்பதை அறிந்து கொள்வதில் சில வாசகர்கள் ஆர்வம் காட்டியுள் ளார்கள். நான் அவரிடம் வேறு ஒன்றும் சொல்லவில்லை. "இரண்டு நாள் எனக்கு அவகாசம் கொடுங்கள்" என்று மட்டும் சொன்னேன். அந்த அவ காசம் நான் கிருத்திகாவின் மனதை அறிந்து கொள்வதற்கா கக் கேட்டேன். அவள் கருத்தை அறியாமல் நான் என்ன பேச முடியும். ஆனால், இதுபோன்ற விஷயங்களை கணவர் தவிர்த்த வேறு ஆண்களுடன் பேச நம் பண்பாட்டில் பெண்களுக்கு உரிமையும் பழக்கமும் இல் லையே என்கிற தயக்கம் என்னை அன்று இரவு முழுவ தும் அலைக்கழித்தது.
ஆனால், கிருத்திகாவுடன் நான் இதுபற்றி லேசாகப் பேச்சை ஆரம்பித்த போது அவள் எந்தத் தயக்கவும் இன்றிப் படபட வென்று மடைதிறந்தது போலப் பேசி முடித்து விட்டாள். பண்பாட்டு ரீதியாக நான் எவ்வளவு பின் தங்கியிருக்கிறேன் என்பது புரிந்து வெட்கமாக இருந்தது. "அவரு உங்க கிட்ட பேசினாரா மாமா" என்று ஆரம்பித்து கிருத்திகா பேச ஆரம்பித்தாள்.
நான் கல்லூரியில் படித்த நாட்களில் அனாதைக் குழந்தைகளுடன் காப்பகத்துக்கு என்எஸ்எஸ் முகாமுடன் சென்றபோது மிகுந்த மனப்பாதிப்புக்கு உள் ளானேன். தாயின் அரவணைப்பையும் தந்தையின் கதகதப்பையும் அனுபவிக்காத அக்குழந்தைகளின் முகங்களில் அந்த ஏக்கம் ஒரு இருட்டுப்போல அப்பிக் கிடந்ததைப் பார்த்தேன். அப்போதே என் மார்பில் பால் சுரந்தது போல உணர்ந்தேன். இதைச்சொன்னபோது அவள் குரல் நடுங்கியது.எனக்குக் கண்களில் ஈரம் கசிந்தது.
அப்புறம் சுனாமியில் அனாதைகளான குழந்தைகளை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அனாதைக் குழந்தைகளைத்தான் தத்தெடுத்து நான் பெற்ற பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்தேன்.
இவரும் திருமணத்துக்கு முன்பே பேசி சம்மதித்த பிறகே திருமணம் நடந்தது. ஆனால், பின்னர் அவர் சொந்தக்குழந்தைதான் வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தத் தொடங்கிவிட்டார்.
கம்ப்யூட்டர் உலகில் என் இடம் நிலைக்க நானும் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக பிள்ளை பெற்று ஐந்தாறு ஆண்டுகளை இழந்து நான் பின் தங்க வேண்டுமா என்கிற கேள்வியும் எனக்குள் இருக்கிறது. தத்துக் குழந்தைகளுக்கும் பெற்ற குழந்தைக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் உணரவில்லை. சின்னக் குழந்தையாகத் தத்து எடுத்தால் அது நாம் பெற்ற குழந்தையாகவே மாறிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். இதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. மறுபரிசீலனை என்கிற பேச்சுக்கே இடமில்லை. எத்தனை லட்சம் அனாதைக்குழந்தைகள் நாட்டில் இருக்கிறார்கள்? கொஞ்சமாவது நமக்கு சூடு சுரணை வேண்டாமா?
கிருத்திகா பேசி முடித்த பிறகு அவளோடு பேச எந்த வார்த்தையும் அற்ற நிராயுதபாணியாக நான் உணர்ந் தேன். மீண்டும் அவளுடைய கணவரைச் சந்திப்பதைத் தவிர்த்து விட்டேன். அவர்களே ஒரு முடிவுக்கு வரட் டும் என்று மனசுக்குள் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். 4
உடலுக்குள் பூட்டி வைக்கப்பட்ட மனுஷி...
"ஒருநிறை வேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இருகண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன" ('முலைகள்' கவிதை - குட்டி ரேவதி)
என்று ஒரு பெண் தன் மார்பகங்களைப் பற்றிக் கருதுவதாகவும் இன்னும் இதுபோலத் தம் உடம்பின் உறுப்புகள் பற்றித் தமிழ் எழுத்துலகம் இதுவரை வாசித் தறியாத படிமங்களுடன் வலியுடன் கவிதைகளும் கதைகளும் இன்று வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எழுதும் படைப்பாளிகளாகப் பெண்களே இருக்கி றார்கள். பெண்ணின் உடல் உறுப்புகளை இஷ்டம் போல வர்ணித்து எழுதும் உரிமை இதுகாறும் ஆண்களுக்கே இருந்து வந்தது. வண்டி வண்டியாக எழுதியும் விட்டார் கள். அதையெல்லாம் வாசித்து வாசித்து ரகசியமாய் தனக்குள் ரசித்து வெளிப்பேச்சில் "ச்சீச்சீ இதென்ன இப்படி யெல்லாம் எழுதறார்..." என்று சொல்லி வந்த ஆண் வாசக மனம் இப்போது "துடைத்தகற்ற முடியாத கண் ணீர்த்துளிகள் தாம் என் இரு முலைகள்" என்று ஒரு பெண் கவி பேசும்போது உள்ளுக்குள் காயப்பட்டு வெளிப்பேச்சில் அதே வசனத்தை இன்னும் ஆவேசத் துடன்பேசத் துவங்குகிறது. அப்படி எழுதியது சரியா? அதுக்காக... இப்படி எழுதலாமா? என்றெல்லாம் இலக்கிய உலகில் விவாதங்கள் நடக்கின்றன.
நாம் இங்கு பேசப்போவது பெண்ணின் உடம்பு பற்றி நம் சமூகம் காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள், கருத்துக்கள் மற்றும் அதன் காரணமாகப் பாதிக்கப்படும் பெண்ணின் வாழ்வுரிமை பற்றியே. "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்று முதலில் நாம் அவர்களின் சோத்திலே மண்ணள்ளிப் போடுகிறோம். "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" என்று தயிரைப் பிசைந்தாலே சிவந்து போகும் விரல்கள் அவளுடையவை என்று 'ஏத்தி' விடுகிறோம். மண் மகள் அறியா வண்ணச் சீறடிகள் அவளுடையவை என்று வீட் டிலேயே அடைந்து கிடந்ததைப் போற்றுகிறோம். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று பெண் உடல் பற்றி விரித்து விரித்து எழுதி வைத்துள்ளோம்.
ஊரெல்லாம் கோவில்களில் சிற்பங்களாகப் பெண்களைச் சிறுத்த இடைகளோடும் பருத்த மார்புகளோடும் செதுக்கி வைத்திருக்கிறோம். அது போலவே சிற்றிடை உள்ள பெண்ணே சினிமாக்களில் கதாநாயகியாக வர முடியும். இடை பருத்த அச்சம் தவிர்த்த நாணம் தொலைத்த பெண்கள் படத்தில் காமெடி வேடம்தான் ஏற்று நடிக்க முடிகிறது.இரண்டாம் தரமான பெண்களாக அவர்கள் நம் மனங்களில் பதிவு பெறுகிறார்கள்.
இந்தப் பரந்த பின்புலமானது நம் வீடுகளில் பிறந்து வளரும் பெண்/ ஆண் குழந்தைகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன் உடல், தன் உடலின் தன்மை, தன் அழகு பற்றி ஒரு விதமான தகவமைப்பைச் செய்கிறது. இதில் நிறைவடையாதபோது மன உளைச் சலையும், மன அழுத்தத்தையும் கூட ஏற்படுத்துகிறது. நான் யோசித்துப் பார்க்கிறேன். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்...? என் ஒவ்வொரு உறுப்பும் எப்படி இருக்க வேண்டும் - எப்படி இருந்தால் அழகு - எப்படி இருந்தால்தான் அழகு என்று எழுதப்பட்டும் எழுதப் படாமலுமான விதிகள் என்னை வழிநடத்துகின்றன. இடுப்பு வரை நீண்டு தொங்கும் (கார்குழல்) தலைமுடி வேண்டும். மீன்களைப் போன்ற கண்கள் (கயல்விழி) வேண்டும். சங்கு போன்ற கழுத்து வேண்டும் என்று தொடங்கி பாதங்களின் நகங்கள் வரை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்று 'ரூல்ஸ்' உள்ளன. மார்பகங்கள் பற்றித்தான் எக்கச் சக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதே மார்பகம் ஆணுக்கு இருந்து விட்டால்? என்னோடு பள்ளியில் படித்த பால்சாமி என்கிற பையனுக்கு மார்பகம் மட்டும் பெண்களைப் போல வளர்ந்திருக்கும். அவன் எப்போதும் கைவைத்த பனியன் போட்டு முழுக் கைச் சட்டையுடன்தான் வருவான். விளையாட்டு மைதா னங்களில் அவன் பட்ட அவமானங்களை இப்போது நினைத்தாலும் என் மனம் மிகுந்த வேதனை கொள்ளும். அவன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது தற்கொலை செய்து கொண்டான். அது ஒரு பக்கம். (அதுபோன்ற ஆண்களின் மன உலகம் பற்றித் தனியாகப் பேச வேண் டும். ) இன்று ஃபேஷன் ஷோக்கள், பொருட்களின் விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் இதுதான் சரியான பெண் உடல் என ஒன்று தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. அதைப் பார்க்கிற ஆண் குழந்தைகளின் மன தில் சரியான பெண் பற்றிய சித்திரம் ஒன்று உருவாகிறது. அதைப்பார்க்கிற பெண் குழந்தையின் மனதில் இன் னொரு விதமான தாக்கம் ஏற்படுகிறது. இன்னும் அதையெல்லாம் தாண்டி இப்போது அழகிப்போட்டிகள் என்று வந்துவிட்டன. வேறு ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்யப் பயன்படும் கருவி யாகப் பெண் உடல் இருந்த நிலைமை போய் இங்கு பெண் உடலே அப்படியே ஒரு காட்சிப் பொருளாக உலகின் முன் வைக்கப்படுகிறது. மார்க் போடப்படுகிறது. அழகிகளாக அறிவிக்கப்படும் பெண்களின் மார்பளவு - இடுப்பளவு - தொடையளவு - எல்லாம் செ.மீ. கணக்கில் விளம்பரப் படுத்தப்படுகிறது. முன்பொரு காலத்தில் அடிமைச் சந்தையில் மேடையேற்றி விற்கப்பட்ட பெண்களின் சிறப்புகளை கூவிக்கூவி அறிவிப்பாளன் பேசியது போன்ற ஒன்றாகத்தான் அழ கிப் போட்டிகள் தோன்றுகின்றன. ஆனால் இவை நாகரிக உலகில் பார்க்கும் எல்லோரும் சமாதானம் ஆகும் வண்ணம் மிக நளினமாக நாசூக்காகச் செய்யப் படுகின்றன.( பள்ளிக்கூட ஆண்டுவிழாக்களில் கூட பெண் குழந்தைகள் கேட் வாக் நடை நடக்கிறார்கள்.
அன்று முதல் இன்று வரை பெண் உடல் எப்படி இருந்தால் அழகு என்று காலம்காலமாக இந்த ஆண் ஆதிக்க உலகம் ஒன்றை முன்வைத்து வருகிறது. அது ஆண்கள் மனதிலும் பெண் கள் மனதிலும் ஏற்றப்பட்டுள்ளது. நாம் இதுகாறும் 'மழை' பற்றி எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம். மழை தரும் குளிர்ச்சி பற்றி மழை வெள்ளிக்கம்பியாய்ப் பூமியில் இறங்கும் அழகு பற்றி வானமும், பூமியும் புணரும் காலமான மழை பற்றி என ஏராளமாக எழுதி விட்டோம். ஆனால் இப்போது ஒரு தலித் கவிஞன் கேட்கிறான்.
"மிஞ்சிப் போனால் என்ன சொல்லிற முடியும்
உன்னாலே இந்த மழையைப் பற்றி
ஓதமேறுன கொட்டாயிலே
கோணியிலே முடங்கியும்
குளிரிலே ஒடுங்கியும் இருக்கியா..."
என்று தொடங்கும் மழை பற்றிய அவரது கவிதை இப்படி முடிகிறது. "ஒண்ணு தெரிஞ்சுக்கோ மழை ஜன்னலுக்கு வெளியேதான்
பெய்யுது உனக்கு எங்களுக்கு எங்கள் பொழப்பு மேலேயே..."
(மழை - ஆதவன் தீட்சண்யா)
கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட முலைகள் கவிதைக்கும் இந்த மழை கவிதைக்கும் ஒற்றுமைகள் உண்டு. அறியப்பட்ட வரலாற்றின் மீது இவ்விரு கவிதைகளும் தாக்குதல் தொடுக்கின்றன. பெண் உடல் ஆணுக்கு என்னவாக இருக்கிறது? என்னவாக இருந்தது? என்றுதான் இதுவரை நாம் அறிந்திருக்கிறோம். ஒண்ணு தெரிஞ்சுக்கோ... என் உடல் ஒரு ரசிப்புக்குரிய காமப் பொருள் என்பதுதான் நீ அறிந்தது. எனக்கு என் உடல் கண்ணீரில் கரையும் ஒரு காயம் பட்ட உயிர்ப்பொருள் எனப் பெண்கள் இன்று நமக்குச் சொல்லத்துவங்கியிருக்கிறார்கள்.
ஒரு பத்துக் கவிஞர்கள் இன்று தங்கள் பெண்ணுடலை முன்வைத்து நம் மனசாட்சி களை உலுக்குகிறார்கள். அந்த அளவுக்குத்தான் ஒரு மாற்றம் நடந் திருக்கிறது. ஆனால் கோடான கோடிப் பெண்கள் இது பற்றி தன்னுணர்வு இன்றிக் காலந் தோறும் அவர்கள் மீது திணிக்கப்படும் படிமங்களையே தமதாகக் கருதித் தம் உடலைச் சகல சித்ரவதைகளுக்கும் இயல்பாக(!) இணக்கமாக்கி வாழ்ந்து வருகிறார்கள். இன்று மின்னணு ஊடகங்கள் நடத்தும் பாலியல் வியாபாரம் (-போர்னோகிராபி சேனல்கள்) பெண் உடலை அங்கம் அங்கமாகச் சிதைத்து விற்று வருகிறது. நடிகை த்ரிஷா குளிக்கும் காட்சி, பள்ளியில் பயிலும் சக மாணவியின் உடல் காட்சி எனப் பரபரப்பாகப் பத்திரிகைகளில் பேசப்பட்ட விஷயங்கள் மட்டுமே அல்ல. அந்தக் காலத்து சரோஜா தேவி புத்தகங்களைப்போல இன்று பாலியல் இணைய தளங்கள் லட்சக்கணக்கில் இயங்கி வருகின்றன.
1840-இல்தான் முதன்முதலாக நிர்வாணமாகப் பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டதாகக் கூறு வார்கள். இந்த 160 ஆண்டுகளில் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின் விகிதத்துக்கேற்ப பெண் உடல் பாலியல் வியாபாரப் பொருளாக மாறி வரும் வேகமும் அதிகரித்துள்ளது. பெண் உடல் இப்படிப் பயன்படுத்தப் படுவது என்பது பெண்ணை வெறும் உடம்பாக்கி நம் சக மனுஷியை ஒரு உடம்புக்குள் பூட்டி வைத்துச் சித்ரவதை செய்வதன்றி வேறென்ன?
தன் உடலையே தாண்டி வெளிவர முடியாத நிலையில் பெண்ணை இருத்தி வைத்து அவளுடைய சிந்தனை, அறிவாற்றல், படைப்பாற்றல், அரசியல் மதிநுட்பம், ஆளுமை என எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறோம். பெண் தன் உடலைத் தாண்டுவது எப்படி? ஆண்களாகிய நாம் பெண்ணை உடலுக்கு அப்பால் சென்று மனுஷியாகப் பார்ப்பது எப்படி? வரலாற்று ரீதியான வாய்ப்புகள் என்ன?இவையெல்லாம் ஆண்களும் பெண்களும் சேர்ந்த இச்சமூகம் ஆழமாக விவாதித்துச் செயலுக்கு முன்னகர்த்த வேண்டிய கேள்விகள்.
5
மனுஷிகளை 'அழகி'களாக இந்த ஆணாதிக்க சமூகம் வடிவமைக்கத் துவங்கிப் பல காலம் ஆகி விட்டது. கிளியோபாட்ரா, பாக்தாத் பேரழகி என்றெல்லாம் "நாட்டிலேயே பெரிய அழகி" என்று கதையை ஆரம்பித்து அந்த அழகிகளுக்காகப் போரிட்ட கதை களைக் காவியங்களாக்கிக் காலப்போக்கில் அந்த அழகியைப்போல ஒரு பெண்ணைத் தேடுகிற ஆண் மனம் உருவாகி அதன் மறுபக்கம் அந்த ஆண்மனம் விரும்பும்படியான உடலழகு தனக்கு அமைய வேண்டுமே எனத் தன் உடலை ஆணின் ரசனைக் கேற்ப தயாரிக்கிற நிலைக்குப் பெண் தள்ளப்பட்டாள் - சாதாரண குடும்பத்துப் பெண்களும்தான். காலச்சுழற்சியில் பெண் தன் உடலை மட்டுமின்றி, தன் ருசிகள், விருப்பு -வெறுப்புகள், கருத்துக்கள் என எல்லாவற்றையுமே ஆணின் - ஆணாதிக்கச் சமூகத்தின் விருப்பப்படி தகவமைக்கத் துவங்கினாள்.
உழைப்பாளி வர்க்கத்தில், விவசாயக் குடும்பங்களில் நல்ல உழைப்பாளிப் பெண்கள், திடகாத்திரமான பெண்கள், வீட்டில் எல்லோரையும் பேதமின்றிப் பராமரிக்கின்ற பெண்கள் மதிக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. ஆனால், மத்திய தர வர்க்கம் துவங்கி அதற்கு மேற்பட்ட வர்க்கங்களில் பெண்கள் பணிவிடை செய்தால் மட்டும் போதாது; தன்னை 'அழகி'யாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தம்மை அழகுபடுத்திக் கொள்வது ஒன்றும் தவறான காரியமல்ல. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான அளவில் ஆரோக்கியமான அளவில் இருக்கலாம்தான். ஆனால், நடப்பில் இந்த அழகு என்னவாகி நிற்கிறது? பெண் என்றால் அழகு. அழகு என்றால் பெண் என்று ஆகி, அப்புறம் அந்த அழகு என்பதன் விளக்கத்தையும் ஆணுலகம் சொல்லும். கவிதைகளிலும் பாடல்களிலும் ஓவியம் சிற்பங்களிலும் பெண் உடல் செதுக்கப் பட்டுள்ளது. அது ஆண்-பெண் இருவர் மனங்களிலும் பெண்ணின் உருவாகச் செதுக்கப்பட்டுவிடுகிறது. இன்றைக்கு அழகான பெண் - அழகில்லாத பெண் என்பதற்கான எழுதப்படாத, ஆனால் எல்லோரும்ஏற்றுக்கொண்டுவிட்ட, இலக்கணம் இருக்கிற தல்லவா? இந்த ஏற்பு ஒரு நாளில் ஏற்பட்டதல்ல. கால ஓட்டத்தில் வந்து சேர்ந்தது. தானாக உருவான ஒன்றும் அல்ல. கட்டமைக்கப்பட்டு நம் தலைகளில் ஏற்றப்பட்டது. அந்தக் காலத்துக் கிளியோபாட்ரா தன் சரும அழகைப் பேணுவதற்காகத் தினசரி கழுதைப் பாலில் குளிப்பாளாம். அப்படி ஒரு கதை உண்டு. அதே கழுதைப் பால்தான் இன்று ஆயிரம் பவுடர்களாக, சோப்புகளாக, கிரீம்களாக மாறி உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அழகுத் தொழிற்சாலை இன்று உலகின் மிகப்பெரிய தொழிலாக மாறியுள்ளது. அதன் மிகப் பெரிய இரையாகப் பெண்கள் பலியாகி வருவதைப் பார்க்கிறோம்.
"உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்று எவனோ ஒரு மடையன் அன்று தொடங்கி வைத்தான். அது வளர்ந்து பெருகி அழகான பெண்ணின் உருவம் சைஸ் வரை 28-22-34 என்று மார்க் போடு கிற எல்லை வரை போய் நிற்கிறது. பெண்கள் எப்படி உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்றாடம் தொலைக்காட்சிகளில் வகுப்பு நடக் கிறது. அதன்படி நடந்து அரைப்பட்டினி கிடந்து அழகிகளாகிவிட்ட பெண்கள் அடுத்த கட்டமாக மாடலிங் - விளம்பரப் பெண்களாக தங்கள் உடம்பை முதலீடு செய்யச் சொல்கிறார்கள். கார் விளம்பரத்திலிருந்து கழுதைத் தீவனம் வரை இந்த 'அழகிகள்'தான் வந்து நம்மோடு பேசுகிறார்கள். அட விடுங்க சார்... ஏதோ தொழில் - வியாபாரம் விளம் பரம் என்று இதை விட்டுவிட முடியுமா? தொடர்ந்து நம் ஆண் - பெண் குழந்தைகளின் தலையில் அவர் களின் உடல்பற்றி, அழகுபற்றி ஒரு கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கல்லூரியில் படிக்கும் 20 வயதுப் பெண்கள்கூட ஒரு சோப்பு டப்பா சைஸில் டிபன் பாக்ஸ் கொண்டு சென்று ‘சாப்பிடுகிறார்கள்'. இது ஆரோக்கியத் துக்குக் கேடல்லவா? இதற்குக் காரணம் என்ன? 'அழகு' பற்றிய பிரச்சாரம் ஆழமாகப் பாய்ந்து விட்டதுதானே? இன்னும் அடுத்த கட்டமாக பாலியல் சார்ந்த திரைப்படங்கள் மற்றும் இணையதளங்களின் பெருக்கம். போர்னோகிராபி என்று நாகரிகமாக அதை ஒரு 'கலை'போலச் சொல்லிக் கொண்டு வக்கிர அலைகளை ரகசியமாய் நம் பண்பாட்டு வேர் களில் பாய்ச்சுகிற வேலை நடக்கிறது. அழகாகக் 'காட்டிக்கொள்ள' வேண்டும் என்கிற ஆசையின் உச்சமாக - எதிர்மறைப் பக்கமாக இது வந்து சேர்ந்துள்ளது. எல்லாவற்றிலும் இரையாகப் பலியாவது பெண்கள்.
ஆகவே, எது அழகு என்று இன்று நம் மூளை களில் பதிவாகியிருக்கிறதோ அதைக் கேள்விக்குள்ளாக்குவது அவசியம்.. பெண்மை யின் பிரிக்க முடியாத அம்சமாக அழகை 'அட்டாச்' பண்ணி வைத்துள்ளார்கள். அதைப் பிச்சு எடுப்போம். அழகு எது என்பதற்கு, புதிய அர்த்தத்தை நாம் வடிவமைத்து நம் பண்பாட்டுத் தளத்தில் பரவ விட வேண்டும். "பொண்ணு சுமாராத்தான் இருக்கு. கூட ஒரு பத்துப் பவுன் நகை போட்டா பேசலாம்" என்பது போன்ற பேச்சுக்கள் நம் சமூகத்தில் சகஜமாக நடக்கிறது. "ரெண்டாவது பொண்ணு கிளி மாதிரி இருப்பா. எவனும் கொத்திக்கிட்டுப் போயிடுவான். மூத்தவளைத் தள்ளித்தான் விடணும்' என்று வீடுகளில் சாதாரணமாகப் பேசுவதைக் கேட்கலாம். அழகு 'குறைந்த' பெண்களின் மன உணர்வுகள் பற்றிப் போதிய அளவுக்கு நம் சமூகமனம் கவலை கொள்வதில்லை. தான் அவ்வளவு அழகாக இல்லை என்று ஒரு பெண் உணர வைக்கப்படுவது எத்தனை கொடுமை. குறிப்பாக இளம் வயதில் அப்படி உணரும் பெண்கள் மனதில் உருவாகும் தாழ்வுணர்ச்சி அவர்களின் குணாதிசயத்திலும் எதிர்பாராத தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
தான் ஒரு அழகி என்று பிறரால் வார்த்தைகளாலும் பார்வைகளாலும் போற்றப்படும் பெண்மனம் கொள்ளும் சிறு கர்வமும் பெருமிதமும்கூட ஒரு விதத்தில் வெட்டிப் பெருமைதானே. தன் அறிவின் மீது, தன் நடத்தை மீது, தன் திறன்கள் மீது, தன் உழைப்பின் மீது நம்பிக்கையும் கர்வமும் கொள்கிற திசையில் அப்பெண்மனம் செல்ல விடாமல் இது தடுக்குமல்லவா? ஆண்களின் பார்வையில் 'சொல்லப்பட்ட' இந்த அழகுகள் - பேரழகுகளைப் பொசுக்கிப் போடுவோம். இந்த ரசனையின் குரூர வடிவங்கள் ஈவ்டீசிங்கில் துவங்கி போர்னோகிராபி வரை பரவி நிற்பதை அன்றாடம் காண்கிறோம். தன்னைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும், மலர்ச்சியாக இருப்பதும், பிரியமுடன் பழகுவதும், புத்திக் கூர்மையுடன் சிந்திப்பதும் பேசுவதும், சமூக அக்கறையுடன் செயல்படுவதும் போன்றவற்றை அழகின் புதிய அர்த்தங்களாக நாம் முன்வைக்கலாம். தாழ்வுணர்ச்சியின்றி பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ள போதுமான அளவுக்கான பூச்சுகளும் வாசனையும்கூட இருக்கலாம். ஆயுதக் குவியல்களை விட அதிகமாக உலகெங்கும் தயாரித்துக் குவிக்கப் படும் கப்பல் கப்பலான பூச்சுப் பொடிகளையும் பசை களையும் நம் பிள்ளைகளின் மூளைகளிலிருந்து (நம் மூளையிலிருந்தும்தான்) வழித்தெடுக்க ஒரு பண் பாட்டுப் போரைத் துவக்கிடுவோம். அழகு பற்றி நமது கருத்துக்களின்மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள அழகுத் தொழிற்சாலைச் சாம்ராஜ்யங்கள் இடிந்து வீழும்படி யான புதிய அழகின் முழக்கங்களை நாம் விவாதித்து வடிவமைப்போம்.
பேரா. ஆர்.சந்திரா கடிதம்:
தாய்மை - தத்தெடுத்தல் சில மாயைகளும் உண்மைகளும்
குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் தருவது எளிதல்ல. தீவிரப் பெண்ணிய வாதிகள் 'தாய்மை' பெண்ணை அடிமையாக வைத்திருக்க உதவுகிறது என்ற கருத்தை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்ததன் பயனே அவள் தாய்மை அடைவதில்தான் உள்ளது என அழுத்தமாக, தலைமுறை, தலைமுறையாக சொல்லப்பட்டு வந்துள்ளது. பெண்ணாக பிறந்ததற்கு 25 மதிப்பெண்கள் + பூப்படைதல் 25 + திருமணம் 25 + தாய்மை 25 என தாயானால் 100 மதிப்பெண்கள் வழங்கும் சமுதாயம் இது. அதனால்தான் திருமணம் ஆகாத, அல்லது திருமணம் ஆனால் குழந்தை பெறாத பெண்களை இந்தச் சமூகம் வினோதமாகப் பார்க்கிறது. மீடியாவும் இதையே வலியுறுத்துகிறது. ஒரு உதாரணம் : தொலைக்காட்சியில் 14.2.2008 அன்று அஜய் தேவ்கன் - கஜோலுடன் பேட்டி. அதில் ஒரு கேள்வி -
அஜய் கொடுத்த பரிசுகளிலேயே சிறந்ததென எதை குறிப்பிடுவீர்கள்?
சந்தேகத்திற்கிடமின்றி என் மகள் தான் அஜய் அளித்த சிறந்த பரிசு என கஜோல் பதிலளித்தார். எத்தனை கோடி சம்பாதித்தாலும் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும், கொள்ளுப்பாட்டி சொல்லும் பதில்தான் இன்றும் வெளிப்படுகிறது. பல சினிமா பாடல்கள் கூட இதே கருத்தையே வெளிப்படுத்துகிறது. குழந்தையே இல்லையென்றாலும் தத்து எடுக்கக் கூடாது. யார் பெற்றதோ? எப்படிப் பெற்றதோ என்றெல்லாம் கேள்விகள் கேட்போர் தத்தெடுப்பதை விரும்பு வதில்லை. இந்திய சமுதாயத்தில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுத்து குழந்தைப் பெற்றுக் கொள்வ தில்லை,´Õ சில தம்பதிகளைத் தவிர. கணவன் காரணமாக இருந்தால் கூட, குழந்தை இல்லாவிட்டால், பெண்ணை மலடி என சாடும் சமூகம் இது.
இன்று ஆண் - பெண் இருவரும் வேலைக்கு போகும் போது, குழந்தை வேண்டாம் என பெண்கள் கூறுவதை கேட்கிறோம். அமெரிக்காவில் அறுபதுகளிலேயே குழந்தை வேண்டாம் என்றே பெண்கள் பதிலளித்தனர் என படித்ததுண்டு. வேலையில் பணி உயர்வு, பணி நிரந்தரம், ஓரளவு பொருளாதார வசதி முதன்மை படுத்தப்படுகிறது - கூட்டுக் குடும்பம் மறைந்து போன சூழலில், குழந்தையை யார் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வார்கள்? - கர்ப்ப காலத்திலேயே எவ்வளவு மன, உடல் உபாதைகள்? - நமது சமுதாயத்தில் தாய்மை - குழந்தை பராமரிப்பு ஒரு தனி நபரின் -தாயின் -பொறுப்பு - அது குழந்தை வேண்டாம் அல்லது மகப்பேறை தள்ளிபோட பிரதான காரணமாக உள்ளது. ஆணைப் போலவே அலுவலக வேலை. வீட்டிற்கு வந்தபின்னர் குழந்தை பராமரிப்பு என்ற சுமையை இன்றைய படித்த நல்ல வருமானம் கிட்டும் வேலையில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியுடன் சுமக்கத் தயாராக இல்லை. - இன்றைய பெண்கள் தங்கள் விருப்பங்களை செக்ஸ், குழந்தை உட்பட - வெளிப்படையாக பேசுகின்றனர். அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள தயாராக இல்லை. வேலைக்குô போகும் பெண் வேண்டும். ஆனால், தன் விருப்பங்களை வெளிப்படுத்தும் பெண்கள் ஆண்களுக்கு அச்சமூட்டுகின்றனர் என்பதே உண்மை.
தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தை நம்மை வயதான காலத்தில் பராமரிக்குமா? நம் வயிற்றில் பிறந்த குழந்தையே பாசமில்லாமல் உள்ளதே? - குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துதான் வளர்கின்றனர். நாம் நமது பெற்றோரை, நமது துணையின் பெற் றோரை எப்படி கவனித்துக் கொள்கிறோம் என்பதை குழந்தைகள் பார்த்து பதியவைத்துக் கொள்கின்றனர். நல்ல மதிப்பீடுகளைக் கொடுத்து வளர்த்தால், பெற்ற குழந்தையோ, தத்தெடுத்த குழந்தையோ, நாம் முதியோர் இல்லம் செல்ல வேண்டியிராது. –
இன்னொரு கருத்து -ஒரு பெண் குழந்தை பெற்று, பாலூட்டாவிடில் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. - குழந்தை பெற்று பாலூட்டின போதிலும் புற்று நோய் வர நிறைய வாய்ப்பு உள்ளது. 100ல் 8 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது என்பது சமீபத்திய கூற்று. சுற்றுச்சூழல் உணவிலுள்ள நச்சு என பல காரணங்கள் மார்பகப் புற்று நோய் வர ஏதுவாக உள்ளது. - தத்தெடுக்க விரும்புவோருக்கு: (கணவன் - மனைவி / சேர்ந்து வாழும் ஆண் - பெண்) - முதல் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது நல்லது. ஒரு வேளை பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், இரு குழந்தைகளும் இணைந்து ஒன்றாக வளரும் சூழல் ஏற்படுவது நல்லது. - சாதி மதம் பார்த்துத் தத்தெடுக்கத் தேவையில்லை. ஒரு குழந்தை திறமையாக, நல்ல பண்புகளுடன் வளர வளர குடும்பச் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. அளிக் கப்படும் வாய்ப்புகள் முக்கியம். பெண் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டால் அப்பா எப்படி நடந்து கொள்வார்? தவறாக நடந்து கொள்கின்ற சம்பவங்களை வைத்து மட்டும் பார்க்கக் கூடாது. தனது பெண்ணிடமே தவறாக நடப்பவர்கள் உள்ளனர். எல்லா ஆண்களும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. பெண்களை சக மனுஷியாக பார்க்கும், பெண்க ளை மதிக்கும் ஆண்கள் அப்படி செய்ய மாட்டார்கள். விதி விலக்கை பொதுமைப் படுத்தக் கூடாது. இந்தியா போன்ற மக்கட்தொகை அதிகமாக உள்ள நாட்டில், நிராதரவாக உள்ள குழந்தைகளுக்கு ஒரு நல்ல குடும்பச் சூழல் தேவை. அதை கொடுக்கலாமே. எந்தக் குழந்தையாக இருப்பினும் அதற்கு அன்பும், அரவணைப்பும், கவனிப்பும் தேவை என்பதை மனதில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதா? தத்தெடுப்பதா என முடிவு செய்ய வேண்டும்.
6
ஆள்பாதி ஆடைபாதி" என்றொரு பழமொழி நம்மிடம் உண்டு. அதாவது ஆள் எப்படி இருந்தாலும் நல்ல ஆடை அணிந்து டிப்-டாப் பாக மாற்றிவிடலாம். பெண்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சமூகம் தொடர்ந்து கவலைப்பட்டு வருகிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் ஆடை அணிந்தது பற்றி ஏராளமான கதைகள் உண்டு. எல்லோரும் அறிந்த கதை ஆதாம்-ஏவாள் கதைதான். ஆடையில்லாமல் - அது பற்றி ஒன்றும் அறியாதவர்களாக ஆதாமும் ஏவாளும் இருக்கையில் சாத்தானின் பேச்சைக்கேட்டு ஏவாள், விலக்கப்பட்ட கனியைக் கேட்டு ஆதாமை நச்சரித்து ஆப்பிளைக் கடிக்க - அதன் காரணமாக ஆடை பற்றிய வெட்க உணர்வு பிறந்து அதன்பிறகுதான் மனிதர்கள் ஆடை அணியத் துவங்கினார்கள் என்கிறது கதை.
பரிணாம வளர்ச்சியின் போக்கில் மனிதர்கள் தோன்றியதை விஞ்ஞானம் நிரூபித்த பிறகு ஆதாம் - ஏவாள் பெத்துப்போட்ட குட்டிகள்தான் உலகம் பூராவும் உள்ள மனிதர்கள் என்பது அன்றைய மனிதர்களின் வளமான கற்பனை என்றாகிவிட்டது. அந்தக் கட்டுக் கதையிலும்கூட மனிதனைக் கெடுத்தது பொம்பளை யான ஏவாள்தான் என்று ஆணாதிக்க சிந்தனை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
மனிதகுல வரலாற்றில் மனிதனுக்குப் பயனுள்ள பல பொருட்களைக் கண்டுபிடித்தது பெண்கள்தான் - விவசாயம், கூடை முடைதல், பானை செய்தல் என. அந்த வரிசையில் ஆடைகள் மற்றும் நெசவுக்கும் முன்னோடிகள் பெண்கள்தான். மாதவிலக்கு ஏற்பட்டு ரத்தப்போக்கு வரும்போது அன்றைய ஆதிப் பெண்கள் காடுகளில் கிடைத்த பஞ்சு, தோல் பொருட்களை பயன்படுத்தத் துவங்கிக் காலப் போக்கில் துணியைக் கண்டுபிடித்தனர் என்கிறது வரலாறு. விலக்கப்பட்ட கனி-வெட்கம் என்கிற வெங்காயம் ஒன்றும் காரணமல்ல. ரத்தப்போக்கு என்கிற உயிரியல் நிகழ்வை ஒட்டிய தேவையே ஆடைகளின் - துணிகளின் - கண்டுபிடிப்புக்கு இட்டுச் சென்றது. இன்றைக்கும் மலைவாழ் மக்களில் பல பிரிவினர் - பல நாட்டு மலைகளி லும் - ஆடையின்றியும் அரை உடம்புக்கு மட்டும் மறைப்போடும் வாழ்வதை நாம் பார்க்கிறோம். ஆகவே பெண்மையின் இலக்கணமாகக் கூறப்படும் வெட்கமோ கூச்சமோ துணிகளின் வருகைக்குக் காரணமல்ல. இயற்கைத் தேவையும் தட்பவெப்ப நிலைமையுமே காரணம். பனிப் பிரதேசங்களில் வாழும் எஸ்கிமோக்கள் என்றைக்குமே டவுசர், பனியனோடு லாந்த முடியாதல்லவா?
பெண்ணின் பாலுறவு சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தும் ஒரே நோக்குடன் அவள் மீது கற்பு என் கிற கோட்பாடு திணிக்கப்பட்ட சமயத்திலிருந்து தான் அவள் என்ன உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? என்கிற எழுதாச் சட்டங்களை யும் ஆணாதிக்கப் பண்பாடு உருவாக்கியிருக்க வேண்டும். ஆண் தன் மனதில் பெண் குறித்து சிறுகச் சிறுகக் கட்டி எழுப்பியுள்ள அழகியல் சூத்திரங்களும் கோட்பாடுகளும் அதீதமானவை. இயல்பானவையாக இல்லை. பெண் குழந்தைகளுக்கு விதம்விதமாய் ஆடை கட்டி அழகு பார்க்கும் - ஆழ்ந்து ரசிக்கும் ஆண் மனம் முதுமை தவிர்த்த பிற எல்லாப் பருவங்களிலும் பெண்ணைத் திரை விலக்கிப் பார்க்கவே பழகி யுள்ளது.
வீரச்செயல் புரிந்திட முடிவெடுத்த பெண்கள் பெண் உடை தவிர்த்து ஆண் உடை தரித்தே களம் இறங்கியுள்ளனர். மேற்குலகின் ஜோன் ஆப் ஆர்க், நமது கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவனின் மனைவி வெள்ளை யம்மாள், விவசாயத் தோழர்களை அணிதிரட்டிய தோழர் மணலூர் மணியம்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம். பெண் உடை என்பது வீரம், அறிவு போன்ற அம்சங்களோடு பொருந் தாது என்கிற கருத்து காலம் காலமாக இருந்து வருகிறது. அதனால்தான் தோழர் மாசேதுங் சீன நாடு முழுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பச்சை நிறப் பேன்ட்டும் முழுக்கைச் சட்டையும் தொப்பியும் கொடுத்து அணியச் செய்தார். சீனத்தில் நடந்த கலாச்சாரப் புரட்சியில் பல அதீத முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிற விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கலாம். ஆனால் ஆடைகளால் உண்டாகும் ஆண்-பெண் பேதம் மற்றும் ஆடையின் மீது தடவப்பட்ட இனக் கவர்ச்சி போன்றவற்றின் மீது அந்தக் கலாச்சாரப் புரட்சி வலுவான அடி கொடுத்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
ஆடை அணிகிற சமூகமாக மனிதகுலம் மாறிவிட்ட பிறகு அணிந்திருக்கும் ஆடையை அவிழ்ப்பது என்பது அவமதிப்பாக மாறுகிறது. அதிலும் சபை நடுவே வைத்துப் பிறர் பார்க்க ஆடை பறிப்பது என்பது பெரிய மானப் பிரச் சனை ஆகிறது. இந்த விஷயத்திலும்கூட பெரிதும் இலக்காவது பெண்களாகவே இருக்கிறார்கள்.
பாஞ்சாலியை சபை நடுவே துகிலுரிந்த கதை நமக்குத் தெரியும். ஒரு இனத்தை ஒரு சாதியை ஒரு மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று பிற இன, சாதி, மதத்தைச் சார்ந்தவர் நினைத்தால் அந்த இனத்துப் பெண்களை ஆடை பறித்து நிர்வாண மாக்குவதன் மூலமே அதைச் சாதிக்கின்றனர். அதன் மூலம் மாற்று இனத்தவரின் மானங் கெடுத்து மனம் குலையச் செய்து விட முடிகிறது. பெண்களின் ஆடை இவ்விதமாக ஒரு இனத்தின் மானம் காக்கும் ஆடையாக அடையாளமாக மாறிப்போகிறது. - அவளுக்கு அதில் சம்மதம் உண்டா இல்லையா என்பது பற்றி எந்தக் கவலை யும் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த போது இந்துக்களும் முஸ்லிம்களும் எதிர் தரப்புப் பெண்களை நிர்வாணப்படுத்தி சபையில் அணி வகுத்து நடக்கச் செய்த கொடுமைகள் ஏராளமாக நடந்தன.
குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேல்சாதியினர் வரும்போது மேலாடை விலக்கி நிற்க வேண்டும் என்று சட்டம் இருந்ததையும் அதை எதிர்த்துத் தோள் சீலைப் போராட்டம் நடந் ததையும் தமிழக வரலாறு நமக்குக் கூறுகிறது. அப் பகுதியில் இக்கொடுமை காரணமாக கிறிஸ்துவத் துக்கு மதம் மாறிய மக்கள் மேலாடை அதாவது 'குப்பாயம்' எனப்படும் சட்டை அணிந்திட அனுமதிக்கப்பட்டார்கள். "குப்பாயம் தந்த கர்த்தரே வாழி" என்று நாட்டுப்புறப் பாட்டு கர்த்தரை சட்டை கொடுத்த சாமியாகவே அடையாளப்படுத்துகிறது.
இவை ஒருபுறம் இருக்க, இன்று தமிழகத்தில் பல கல்லூரிகளில் பெண்களுக்கு மட்டும் னசநளள உடினந எனப்படும் ஆடை ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. சென்னையில் உள்ள பிரபல மான கல்லூரி ஒன்றில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்ட கவிஞரும் திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சுடிதார் அணிந்து - ஆனால் மேலே துப்பட்டா இல்லாமல் வந்த காரணத்தால் உள்ளே அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்துப் பரவலாக சர்ச்சைகள் நடைபெற்றன. அப்படின்னா பொம்பளைங்க எப்படி வேணுமானா டிரஸ் பண்ணிட்டு வரலாமா என்றும், ஆண்களின் மனதைக் கெடுத்துச் சீரழிப்பதே இன்று கல்லூரி மாணவிகள் அணிந்து வரும் உடைதான் என்றும் ஒரு கருத்து வலுவாக இருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் சீருடை இருப்பது பற்றிப் பெரிய ஆட்சேபம் நமக்கில்லை. ஏற்றத்தாழ்வின்றி சமமான உடை அணிதல் வரவேற்கத்தக்கதே. ஆனால் துப்பட்டா அணியாவிட்டால் ஆண்களின் மனம் கெட்டுக் குட்டிச் சுவராகிவிடும் என்று கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் உச்ச கட்டமாகும். பெண்களை முகம்பார்த்துப் பேசு வதற்கு முடியாமல் அவளைக் கழுத்துக்குக் கீழே பார்க்கும் பார்வைக்குப் பழகிவிட்ட ஆண் மனதை விமர்சிக்காமல் இங்கே மீண்டும் மீண்டும் பெண்ணே குற்றவாளி ஆக்கப்படுகிறாள்.
நன்கு போர்த்திக் கொண்டு - முக்காடு போட்டு - அல்லது முஸ்லிம் பெண்கள் போல் முழு உடலை யும் கறுப்பு அங்கியால் மறைத்துக் கொண்டு போனால்தான் பாதுகாப்பு என்கிற மனநிலை எப்படி வந்தது?ஈவ் டீசிங் கொடுமையால் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் - இளம்பெண்கள் - சரிகாஷா போல -யாருமே அரை குறை ஆடையோடு போகவில்லை. முழுக்கவும் போர்த்துக்கொண்டு போனவர்கள்தான். அப் போதும் அவர்கள் வக்கிரமாகப் பார்க்கப்பட்டார்கள். ஆகவே பிரச்சனை உடையில் இல்லை. ஆணின் "பார்வை"யில் அடங்கியிருக்கிறது.
பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசப்பழகாத ஆண் மனம்தான் திருத்தப்பட வேண்டுமே ஒழிய அதற்கும் பெண்ணையே பொறுப்பாக்கி டிரெஸ் கோட் கொண்டுவருவது ஆணாதிக்க சிந்தனைகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதேயாகும்.
7
அழைப்பு விடுக்க வேண்டிய பார்வை
அடங்கி அடங்கியே சமிக்ஞை மறந்து போச்சு
அழைக்கும்போது
இணங்கி இணங்கியே
காமமும் காதலும் மரத்துப்போச்சு
-உஷா சுப்பிரமணியன்
20ம் நூற்றாண்டை பெண்கள் பேசத் துவங்கிய நூற்றாண்டாகக் குறிப்பிடுவர் வரலாற்று ஆய்வாளர்கள் எனத் துவக்கத்தில் குறிப்பிட்டோம்.. அவர்கள் பேச்சு ஆண் மனதை குற்ற உணர்வு கொள்ளச் செய்கிறது. தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாகி யுள்ளேன் என்று போர்ப்பிரகடனம் செய்து அவர்கள் வருகிறார்கள்.
பார்த்தல், கேட்டல்
ருசித்தல், மணத்தல்
உணர்தல் இவற்றுடன்
பகுத்தறிதல் என்பனவும் எமக்குண்டு
-என்று சுல்பிகா பாடும்போது எனக்கு இன்குலாபின் மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னைப்போல அவனைப் போல எட்டுச்சாணு உசரமுள்ள மனுசங் கடா -என்கிற தலித் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆணுக்காகவே- ஆணின் துணைக்கிரகமாகவே வாழ நிர்பந்திக்கப் பட்டவள் பெண். அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்குரிய என்ப -என்றும் இப்பண்புகள் தலைவிக்கு மட்டுமல்ல தோழி, செவிலித்தாய், நற்றாய் ஆகியோருக்கும் பொருந்தும் என்பதாக உயிரும் நாணும் மடனும் என்றிவை செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய -என்றும் தொல்காப்பியம் வற்புறுத்துகிறது. விவசாயி படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல ஒரு காட்சி.
இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள
இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
- என்ற வரிகளோடு வரும்.
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காலம் காலமாகத் தொடர்ந்து ஆண்சமூகம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறது. இயல்பாக அவர்களை நாம் வாழவிடவில்லை. இன்று எவையெல்லாம் பெண் களுக்குப் பிடித்தவை என்று சொல்லப்படுகின்றனவோ அவையெல்லாம் உண்மையிலேயே அவர்களுக்குப் பிடித்தவையா-அவர்களுக்குப் பிடித்தவை இவைதான் என்று காலம் காலமாக ஆண்களால் சொல்லப்பட்டு வந்ததால் பெண்களின் மூளையில் அதுவே சரியென்பதாகப் படிந்துபோய் பிடிக்கிறதா என்று இப்போது நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
தோட்டமும் உன்னதல்ல
நிலமும் உன்னதல்ல
பண்படுத்திப் பசளை
இட்டவள் - நீ
காயும் உன்னதல்ல
கனியும் உன்னதல்ல
காவல் நின்று
கண்விழித்தவள் - நீ
கூலியும் உன்னதல்ல
கொடுப்பனவும் உன்னதல்ல
கொளுத்தும் வெயிலில்
களைத்து நின்றவள் - நீ
மலரும் உன்னதல்ல
மணமும் உன்னதல்ல
மடிதாங்கிக் கொடி
வளர்த்தவள் - நீ
-மாற வேண்டும் நீ கவிதையில் விஜயலெட்சுமி.
பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்தபிறகு பசலை படர்ந்து கை வளையெல்லாம் கழன்று விழ, தலைவி படும் துயரம் பற்றி ஏராளமான பாட்டுக்கள் நம் கைவசம் உண்டு. இன்றும் ஆண்கள் வெளியே பிழைக்கப் போகிறார்கள். துபாய்க்கும் சவுதிக்கும் போய்விடுகிற ஏரளாமான இஸ்லாமிய இளைஞர்களின் மனைவி மார்கள் இங்கே அப்படித் தனித்துக்கிடக்கும் துயரத் தை மீரான் மைதீனின் படைப்புகளிலும் ஜாஹீர் ராஜாவின் நாவல்களிலும் நாம் காண் கிறோம். பெரும்பாலான பெண்கள் ரத்தத்தில் ஹ்யூமோகுளோபின் குறைவால் அவதிப்படுகிறார் கள் என்பது சர்வே எதுவும் எடுக்காமலேயே நம்மால் சொல்ல முடியும் உண்மை யாகும். அதற்கு முக்கியமான காரணம்என்ன என்று பார்த்தால் தனிமைதான். அவர் இல்லாத போது நமக்குன்னு என்னத்தைப் பொங்கி என்னத்தைத் திங்க என்கிற சலிப்பில் ஏதோ இருக்கிற பழையதைக் கொஞ்சம் சாப்பிட்டுச் சாப்பிட்டு இப்படி ஆகி விடுகிறார்கள். சங்க காலத்தில் பசலை படர்ந்த பெண்க ளெல்லாம் இப்படி ஹ்யூமோகுளோபின் குறைவினால் அவதிப்பட்டிருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போன அப்பெண்களை செவ்வரி ஓடிய கண்கள் என்றும் அனீமிக்காக இருந்ததை பச்சை நரம்போடிய கைகள் என்றும் ஆண்கள் பாட்டெழுதிப் பரவசப்படுத்தி அப்படியே இருத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மெடிக்கல் செக்அப் செய்ய வேண்டிய பிரச்சனையை குஷியாகப் பாட்டெழுதிக் கொண்டு போன கொடுமையை நாம் என்னவென்பது?
அதேபோல அவர் இல்லாதபோது தன்னைப் பரா மரித்துக் கொள்ளவும் அழகுபடுத்திக் கொள்ளவும்கூட அவளுக்கு உரிமை இருந்ததில்லை. அதாவது தன் உடலைக் கொண்டாடும் உரிமையோ பாதுகாக்கும் உரிமையோ அவளுக்கிருந்த தில்லை. தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையும் அவளுக்குக் கிடையாது. புதிய மண்பானையில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீர் வெளிப்புறத்தில் திவலை களாகத் தெரிவதுபோல அவளது உடல்மொழியால் தான் அவள் தன் காதலையோ காமத்தையோ வெளிப் படுத்த முடியும்.
தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்நீர் போலும் உணர்விற்றென்ப -(தொல்காப்பியம்)
ஆண்டாள்தான் தமிழில் முதன்முதலாகத் தன் காமத்தை வெளிப்படையாகப் பேசியவள் என்பார்கள்.
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன்
திருமாலுக்கே தன் உடல் சொந்தம் என்று அவள் பாடியதால்தான் அவளை விட்டு வைத்தார்கள் போலும்.
இவையெல்லாம் தன் பண்பாட்டின் பெருமைக்குரிய விடயங்களாகக் காலம் காலமாக நம் சமூகம் பேசி வந்திருக்கிறது. உண்மையில் இவை கடுமையான மனித உரிமை மறுப்புப் பிரச்சனைகளாகும். மனித உரிமைகள் பற்றிய தன்னுணர்வு இல்லாத பழங்காலத்தில் இவை பாடு பொருட்களாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அவை கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவை.
மனிதரின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் ஆகிய மூன்றும் பெண்களைப் பொறுத்த வரை ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டவை யாகவே காலம்காலமாக இருந்து வருகின்றன.
நாம் ஏற்கெனவே பெண் உடை தொடர்பாகச் சில கருத்துக்களைப் பார்த்தோம். அவள் எப்படி உடுத்த வேண்டும் என்று சொல்வதே அராஜகம். ஆனால் அதையும் தாண்டி அவளே வெறும் அலங்காரம்தான் என்கிற எல்லை வரை நாம் சென்றிருக்கிறோம். கொலுசு, மிஞ்சி, துகில், மெட்டி, ஒட்டியாணம், சங்கிலி சரப்புளி என ஆண்கள் தயாரிக்கும் ஆபரணங்களோடு தொடர்புடைய ஒன்றாக- ஒரு சடப்பொருளாகப் பெண்ணை, பெண் உடலை நாம் ஆக்கி வைத்திருக்கிறோம்.
பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதமாக வர்ணிக்கவேண்டும் எவற்றை உவமையாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடுகெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருக்கி றோம். இதுபற்றி பேராசிரியர் அ.செல்வராசு உற்று நோக்கலும் இலக்கண உருவாக்கமும் என்கிற கட்டுரையில் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
பெண்ணின் மார்பகம் பற்றி (கொங்கைகள்) உவமைப்படுத்தத் தக்கன என இலக்கணம் கூறும் வெண்பா இது.
பாங்கரும்பு சூது கிண்ணம் பைங்குரும்பு செப்புமுடி
கோங்கரும்பு தாளங்குமிழி சிமிழ்-பூங்கமலம்
பம்பரம் வெற்பிளநீர் பந்து சகோரங் கலசம்
கும்பருப்பி யானை குடம்
உண்மையில் இது பெருமைக்குரியதா? இது நம் இலக்கிய மரபு - பாரம்பரியம் - புடலங் காய் என்று கொண்டாடுவதா? ஈவ் டீசிங்கில் இச்செய்யுளைத் தூக்கி உள்ளே போடுவதா?
(மூன்றாம் பகுதி நாளைய பதிவில்....)
4 comments:
ஐயா, முழு நூலையும் PDF கோப்பாக
வலையேற்றுங்கள்.அதுபடிக்க/பிரதி எடுக்க உகந்தது.நீண்ட கட்டுரைகளை
கணினி திரையில் படிப்பது எளிதல்ல.
அய்யா எனக்கு கணிணியில் நீங்கள் சொல்லும் வித்தை இன்னும் பழக்கத்துக்கு வரவில்லை.சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுகிறேன்.அதுவரை சிரமத்துக்கு மன்னிக்கவும்
//ஐயா, முழு நூலையும் PDF கோப்பாக
வலையேற்றுங்கள்.அதுபடிக்க/பிரதி எடுக்க உகந்தது.நீண்ட கட்டுரைகளை
கணினி திரையில் படிப்பது எளிதல்ல.//
வழிமொழிகின்றேன்..
எனது தளத்தில் கீழ்பக்கத்தில் அதற்கான லிங் கொடுத்துள்ளேன் முயன்று பாருங்கள்... மேலும் விக்கி நூல்களையும் பாவிக்கலாம்...
Post a Comment