Thursday, May 28, 2009

பெண்மை என்றொரு கற்பிதம்... (முதல் பகுதி)

என் மகன் த.வெ.சித்தார்த்-பிரதீபா திருமணத்தில் தாம்பூலத்துக்கு பதிலாக வழங்கப்பட்ட புத்தகத்தை தமிழ் வீதியில் தாம்பூலமாக சமர்ப்பிக்கிறேன்.

இது இன்னும் விரிவாக திருத்தி எழுதப்பட வேண்டும்.நண்பர்களின் விமர்சனங்கள்,ஆலோசனைகள்,கேள்விகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.   
-----------------------                                                                        


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பெண் பேசத் துவங்கினாள் - தனக்கான பேச்சை - அதற்குமுன் அவள் அவ்விதம் பேசுவது பெண்மைக்கழகல்ல என்கிற கருத்தே மனித சமூகத்தைப் பற்றிநின்றது. இரண்டு உலகப் போர்களுக்குப்பின் லட்சக்கணக்கான பெண்கள் உலகெங்கும் ஆண்கள் பார்த்த அதே தொழிற்சாலை களில் உடலுழைப்பைச் செலுத்த வந்தனர். பெண்களுக்கானது என்று வரையறுக்கப்பட்டிருந்த வெளிகளிலிருந்தும் வேலைகளிலிருந்தும் பெண்கள் எல்லை தாண்டி வந்தனர்.சொல்லப்போனால் படிதாண்டி வந்தனர் எனலாம். பெண்மையின் இலக்கணம் மறுதிருத்தம் செய்யப்பட்டது. இன்றைய கணினி யுகத்தில் பெண் இயங்கும்வெளியாக இப்புவிப்பந்து முழுவதுமே கைவந்து சேர்ந்துள்ளது. இணையத்தில் தமக்கான இணைகளைப் பெண்கள் தாமே தேடிக்கொள்கிறார்கள். அச்சம், மடம், நாணம் எல்லாம் ஒதுங்கி வாசலுக்கு வெளியே நிற்கின்றன. இன்றைய பெண்மை பழைய பெண்மையின் பல அம்சங்களைப் போகிறபோக்கில் கழட்டி விட்டுள்ளது. பலபுதிய அம்சங்களை சுவீகரித்துக்கொண்டுள்ளது. என்றாலும் என்றும் தொடரும் அடிமைத் தளைகளான அம்சங்கள் தொடரவே செய்கின்றன. அமெரிக்கா போய் ஏமாந்த பெண்களின் கதை இன்றும் தொடர்கிறது. இது ஏன்?பெண்மை என்கிற ஒன்று காலந்தோறும் அர்த்தம் மாறி வந்தாலும் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஆண் - பெண் சமத்துவமோ பெண் விடுதலையோ சாத்தியமில்லை.

ஆளுமைத்தன்மை உடையவன், ஆள்கிறவன் என்கிற பொருளில்தான் ஆண்மை அவனுக்குரியதாயிற்று. (பெடை, பெட்டை, பேணுகை, பாதுகாப்பு - அன்பு போன்ற பொருள் தரும்) பெட்பு என்ற சொல்லினடியாகத் தோன்றிய பெண்மை அவளுக் குரியதாயிற்று. சொற்களே இவ்விதம் பாலியல் பாகுபாட்டுடன் இலங்குகின்ற சூழலில் நாம் வாழ்கிறோம்.


ஆடவர் ஆளவும் பெண்கள் பேணவுமான இந்த ஆண்மை - பெண்மை பிறப்பிலேயே வருவதா? பெண் பெண்மையோடே பிறக்கிறாளா? பெண்மை என்பதுதான் என்ன? எது பெண்ணைப் பெண்ணென்று ஆக்குகிறதோ அதுதானே பெண்மையாக இருக்க முடியும்? அப்படியானால் பெண் என்றால் என்ன?
பெண் என்றால் கருப்பை என்று சொன்னவர் உண்டு. கருப்பையும் பாலூட்டும் மார்பகங்களும்தான் பெண் என்றவர் உண்டு. இயற்கையிலேயே குறைபாடுள்ள மனிதப் பிறப்பே மனுஷி என்று அரிஸ்டாட்டில் போன்ற அக்கால அறிஞர்கள் கூறிய துண்டு. உலகம் ஆண்களுடையது. அதில் பெண்களும் இருக்கிறார்கள். ஆணின் விலா எலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியைக் கொடுத்தார் என்பதாக ஏராளமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண் - பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்து - நம்பிக்கை சார்ந்து நிற்பவை. சில அறிவியலின் பெயரால் நிற்பவை.
இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களிலும் ஆண் - பெண் உண்டு. மறு உற்பத்தி என்பது ஆண் - பெண் என்கிற நேர் எதிரெதிரான இரு பால் அம்சங்களின் இணைப்பில்தான் உள்ளது என வாதிடுவோர் உண்டு. ஆனால், உண்மையில் அறிவியலின் படி பார்த்தால் ஒன்றுவிடாமல் சகல உயிர்களிலும் மறு உற்பத்திக்கு ஆண் - பெண் என்கிற எதிர்வு கள் இருப்பதாகக் கூறிவிட முடியாது. அமீபா போன்ற ஒரு செல் உயிரிகள் பிளவு மற்றும் சேர்க்கையினால் இனப் பெருக்க மாயின. அங்கே பெண் இருக்க வில்லை. அல்லது ஆண் இருக்க வில்லை.

நாம் மிக முக்கியமாக இவை எல்லா வற்றையும் சமூகவியல் நோக்கில் வர லாற்று நோக்கில் பார்க்க வேண்டி யுள்ளது. ஆண்/ பெண் என்கிற பேதம் இயற்கையின் படைப்பு. நாம் சமப்படுத்த முடியாது என்கிற கருத்து ஆழமாக நம்மிடம் உள்ளது. ஆண்கள் வெளி உலகுக்கு; பெண்கள் வீட்டுக்கு என்கிற கருத்து அடுப்படிப் புகையாய் நம் மனங்களில் படிந்து கிடக்கிறது. நம் மனக் குகைகளின் இருண்ட அடுக்குகளில் இயற்கையானது போல ஒளிந்து கிடக்கும் ஆணாதிக்கக் கருத்துக்களை வெளியே இழுத்துப்போட ஒரு விவாதத்தை நமக் குள்ளே துவக்கியாக வேண்டும். சில எளிய வாழ்வியல் நடப்புகள் வழியே நம் விவாதங்களைத் துவக்கலாம்.

ஒரு ராஜலட்சுமியின் கதை


இரவு பத்து மணி யிருக்கும். ராஜலட்சுமி வீட்டிலிருந்து பதட்ட மான போன்.
அவரு சாயந்திரம் ஆறு மணிக்கு பைக்கை எடுத்திட்டுப் போனாரு. இப்பவரைக்கும் திரும்பி வரலை. ஒரு போன் கூடப் பண்ணலை. இப்படியெல்லாம் இருக்கவே மாட்டாரு.

அடுத்த பத்து நிமிடத்தில் தோழர்கள் ஆளுக்கொரு வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தோம். திருநெல்வேலி நகரத்தைச் சலித்து எடுத்து விட்டோம். ஒரு தோழர் போலீஸ் அலுவலகம் சென்று நகரத்தில் ஏதாவது பைக் ஆக்சி டெண்ட் ஆகியிருக்கா என்று பொறுப்பாக விசாரித்து வந்தார். ஒரு துப்பும் துலங்கவில்லை. பன்னிரண்டு மணி வரை தேடிவிட்டு ராஜலட்சுமி வீட்டில் எல்லோரும் கூடினோம். ஒரு தகவலும் இல்லாமல் கணவருக்காகக் காத்திருக்கும் பெண்களின் துயரமும் குழப்பமும் ராஜலட்சுமியின் முகத்தில் எழுதியிருந்தது. குழந்தைகள் இருவரும் தூங்கியிருந்தார்கள்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கும் போது வெளியே பைக் சத்தம் கேட்டது. ராஜலட்சுமியின் கணவர்தான். அவரைக் கண்டதும் ராஜ லட்சுமி ஏங்கி ஏங்கி அழுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் கோபத்தோடு எங்கே போனீங்க இந்நேரம் வரைக்கும் என்று சத்தம் போட்டார். பதிலுக்கு அவர் குற்றஉணர்வான மொழியில் அதாவது... என்னாச்சுன்னா.. என்று ஆரம்பித்து ஏதாவது சமாளிப்பு வார்த்தைகள் சொல்வார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் பதிலுக்கு அதே வீறாப்புடன் எங்களை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொல்லிட்டுத்தானே போனேன். அதுக்குள்ளா தோழர்களை எல்லாம் கூட்டி ஏன் இப்படி ரகளை பண்ணி வச்சிருக்கே? என்று ஓங்கியடித்தார். எப்ப சொன்னீங்க? என்று ராஜ லட்சுமி கோபப்பட அவர் பதில் சொல்லாமல் எங்களிடம் திரும்பி சாரி சார் சொன்னதை மறந்துட்டு அவுங்க உங்களை எல்லாம் கஷ்டப்படுத்திட்டாங்க. சாரி. என்று கும்பிட்டு உடனடியாக எங்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார். ராஜலட்சுமி ஒரு வார்த்தை பேசாமல் கணவரை முறைத்துப் பார்த்தபடி இருந்தார். எங்களை வழியனுப்பக்கூட ஒரு வார்த்தையும் பேச வில்லை. கணவர்மீதே பார்வையைப் பதித்திருந்தார். வருத்தம் தொனிக்கும் வார்த்தை களை மீறி அவரது கணவரின் முகத்தில் ஒரு வெற்றிச் சிரிப்பு ஒளிந்திருப்பதை ராஜலட்சுமியைப் போலவே நானும் கண்டு கொண்டேன்.
ராஜலட்சுமி எங்களோடு அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றுபவர். தொழிற்சங்க இயக்கத்தில் ஆர்வமுள்ளவர். கூட்டங்களில் தவறாமல் பங்கேற்கும் ஒரே பெண் தோழர் அவர்தான். இன்று மார்ச் 8 என்பதால் மாலையில் சங்கத்தின் சார்பாக மகளிர் தினச் சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கு முன்பெல்லாம் சங்கம் தனியாக இப்படி நடத்தியதில்லை. பெண் ஊழியர்கள் எல்லோரும் அவர்களுக்குள் பேசி அன்றைக்கு ஒரே கலரில் புடவை கட்டி வருவார்கள். எல்லோரும் சேர்ந்து மாலையில் ஒரு ஓட்டலில் போய் சாப்பிடுவார்கள். குரூப் போட்டோகூட எடுப்பார்கள். சில சமயம் அலுவலகத்திலேயே மனமகிழ் மன்றத்தில் மகளிர் மட்டும் ஒரு சின்ன டீ பார்ட்டி நடத்திக் கொள்வார்கள். ஆண்கள் ம்... ம்... மகளிர்தின பார்ட்டியா நடக்கட்டும் நடக்கட்டும் என்று சொல்லிக் கடந்து போய்விடுவோம்.

இம்முறை அறிவு வந்து யூனியன் சார்பாகவே சிறப்புக் கூட்டம் போட்டு விட்டோம். சிறப்புரைக்கு வெளியிலிருந்து பேச்சாளரெல்லாம் அழைத்திருந்தோம். நாங்கள் பூங்கொடிகள் அல்ல. போர்க்கொடிகள் போன்ற பல நல்ல வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஆங்காங்கே கட்டித் தொங்க விட்டிருந்தோம். எல்லாப் பெண் தோழர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று சொல்லி விட்டோம். ஆண் தோழர்களும் நாங்க எதுக்கு என்று மறுத்தபடியே போனால் போகட்டும் என்று ஓரளவு எண்ணிக்கையில் பங்கேற்றனர். ஆண்- பெண் சமத்துவம் பற்றியும் மகளிர் தினத்தின் வரலாறு பற்றியும் சிறப்புரையாற்றிய நண்பர்கள் பேசினார்கள். ராஜலட்சுமி இறுதியில் நன்றியுரையாற்றி விட்டு இப்போது ஓட்டலில் ஆண்கள் சமைத்த இனிப்பும் காரமும் வழங்கப்படும் என்று எல்லோருடைய சிரிப்புக்கிடையே அறிவித்தார்.

அன்று கூட்டம் முடிந்து வீடு திரும்ப எல்லோருக்குமே ஏழு மணிக்குமேல் ஆகிவிட்டது. ராஜலட்சுமி வீட்டில் நுழைந்து அப்பாடா என்று ஈசிசேரில் சாயவும் கணவர் உள்ளறையிலிருந்து குமுதத்தோடு வெளியேறி இவ்வளவு நேரமா.. யப்பா.. முதல்ல சூடா ஒரு காப்பியைப் போடு மனுசனுக்குத்தலைய வலிக்கி என்று சலித்திருக்கிறார். கூட்ட உரைகளின் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபடாத ராஜ லட்சுமி தன்னையறிமல் காலம் பூராவும் உங்களுக்கு நாங்கதான் வந்து காப்பி போடணுமா இன்னைக்கு ஒரு நாளைக்கி நீங்க போட்டுக்கிட்டாத்தான் என்னா? என்று கேட்டுவிட்டார். கேட்டு விட்டு ஒரு சிரிப்பும் சிரித்து சொன்னதில் முதலில் சொன்ன வார்த்தைகளில் கொஞ்சம் ஒட்டியிருந்த காரத்தையும் கூட அழித்தும் விட்டார். உடனே எழுந்து போய் காப்பி கலக்க ஆரம்பித்தும் விட்டார். ஆனால், மனுஷன் சத்தமில்லாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்.

மறுநாள் ஆபிசில் பெண்கள் மத்தியில் இதே விவாதப் பொருளாகி விட்டது. நீங்க பேசினதில் தப்பொண்ணு மில்லே. மனுசருக்கு காப்பியை முதல்ல போட்டுக் கொடுத்துட்டு அப்புறமா அதே வார்த்தைகளைப் பேசியிருக்கணும். அப்படி யிருந்தா காப்பியின் சூட்டில் உங்க வார்த்தை களின் சூடு அவருக்கு உறைத்திருக்காது. அவர் கோச்சுட்டுப் போயிருக்க மாட்டார் என்று ஒரு சாரார். நம்மளாலதான் நம்ம வீட்டிலே இப்படி பேச முடியல, அவுங்களாச்சும் தைரியமா கேட்டாங்களே என்று சிலர். மீட்டிங்கிலே பேசறதுக்கு வேணா இதெல்லாம் நல்லா இருக்கும், நடைமுறை வாழ்க்கைக்குச் சரி வராதுங்க என்று ஒரு சாரார். நல்லா ஒத்துமையா இருந்த ஒரு குடும்பத்தை இப்படிக் கூட்டம் போட்டுக் கெடுத்துப் புட்டிங்க சார் என்று சிலர். இது உண்மையில்நடந்த ஒரு சம்பவம்தான். பெயர் களையும் இடத்தையும் மட்டும் மாற்றிச் சொல்லியிருக்கிறேன். அதன்பிறகு இரண்டொரு நாளில் இந்தச் சம்பவத்தை எல்லோருமே மறந்துவிட்டார்கள். நான் ராஜ லட்சுமியைச் சற்றே உற்றுக் கவனித்ததில் அவருக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது. அவர் பெண்ணாக இருந்ததால் எல்லாவற்றையும் அவரிடம் கேட்டுவிட முடியவில்லை. ஆண்களும் பெண்களும் மனம் விட்டு நட்பு ரீதியாகப் பேசிக் கொள்ள நம் சமூகத் தில் அதிக வாய்ப்பு இல்லாத நிலையில் எட்ட இருந்து அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் வெளித் தெரியும் சிறு மாற்றங்களை வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அச்சம்பவத்துக்குப் பிறகு அவருக்குள் ஒரு இறுக்கம் கூடியிருப்பதைக் காண முடிந்தது. முகத்திலும் அந்த இறுக்கம். உற்றுப் பார்த்தால் ஒரு கீற்றுப்போலத் தெரியும்படி இருந்தது. பிறர் முகத்தை (அதிலும் ஒரு ஆண் ஒரு பெண்ணை) உற்றுப் பார்க்கிற பழக்கம் நம்மிடம் இல்லாததால் மற்றவர்களுக்கு இது பிடிபடவில்லைபோலும். எழுத்தாளனைப் பொறுத்த வரை எமக்குத் தொழில் உற்றுப்பார்த்தல் என்பதால் மற்றவர்களுக்கு இருக்கும் விவஸ்தை நமக்குத் தேவையில்லை. அதற்குப் பிறகும் அவர் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றார் என்றாலும் வீடு திரும்புவதில் ஒரு அவசரம் அவருள் தொற்றியிருந்ததைப் பார்த்தேன். நாங்கள் யாரும் நுழைய முடியாத ஒரு பிரதேசமாக அந்த இறுக்கமும் அவசரமும் இருந்தது. ஏதும் செய்ய இயலாதவர்களாக நாங்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம் --என்னவென்று புரிந்தாலும் கூட.

இப்படி எத்தனை ராஜலட்சுமிகள்! எத்தனை இறுக் கங்கள்! எத்தனை அவசரங்கள்!
இந்தச் சம்பவத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

ஒன்று அந்த வீட்டில் நிலவிவந்த ஒரு ஒழுங்கை அந்த ஆண் தன்வெளி நடப்பால் மீண்டும் கட்டிக் காத்து நிலைநாட்டி விட்டான். இத்தனைக்கும் அந்த ஒழுங்கு வெறும் வாய் வார்த்தையால் மட்டுமே லேசாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஒரு வார்த்தைகூட அது பற்றிப் பேசாமல் அவனால் கொடியை நாட்ட முடிந்திருக்கிறது.
இன்னொன்று - மிகமுக்கியமாக நாம் பார்க்க வேண்டியது. அவளுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வசனங்கள் நம் சமூகத்தில் உண்டு. எந்த இடத்தில் நின்று என்ன மாதிரி தொனியில் முகத்தை எப்படி வைத்துக் கொண்டு அந்த வசனங்களைப் பேச வேண்டும் என்பது உள்பட எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட் டுள்ளது. கணவர் அப்படிக் காப்பி கேட்டதும் அவர் சொல்லியிருக்க வேண்டிய வசனம் இதோ இதோ ஒரு நிமிசம் அல்லது அச்சச்சோ நீங்க இன்னும் காப்பி குடிக்கலியா. தோ வந்துட்டேன் இதில் ஏதேனும் ஒரு வசனத்தைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை அவளுக் குண்டு. முக்கியமானது, அவ்வார்த்தைகளின் மீது பூசப்படவேண்டிய குற்ற உணர்வுத் தொனி.

இதற்கு மாறாக, அவள் நடந்து கொள்வது பெண்மைக்கு அழகல்ல. அதே போல அவ்விதமாக கடிந்து கொள்ளாமல், தானே காப்பி போட்டுக் குடித்துவிட்டு களைத்துவரும் துணைவிக்கும் காப்பி போட்டுக் கொடுப்பது ஆண்மைக்கு அழகல்ல. அப்படியெல்லாம் செய்தால் அவன் பொண்டுசெட்டிப்பயலாகி விடுவான்.
இது பெண்மையின் - ஆண்மையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

பெண்மை என்பதில் இன்னும் என்னென்னவோ அடங்கியிருக்கிறது - ஆண்மையிலும்தான். இதெல்லாம் மூத்தோர் வகுத்த வழியா? இயற்கையே படைத்தளித்த ஒன்றா? உயிரியல் ரீதியாகவே ஆணுக் கும் பெண்ணுக்கும் அமைந்ததா? சரித்திரம் என்ன சொல்கிறது? அறிவியல் என்ன சொல்கிறது?
 
                                                              2  

சென்ற அத்தியாயத்தை ஒரு சில தோழர்கள் தங்களுக்கிடையே வாசித்து விவாதித்திருக்கிறார்கள். அலுவலகத்தில் சாப்பாட்டு இடைவேளைகளில் கேண்டீனில் டீ சாப்பிடும் நேரத்தில் மற்றும் திட்டமிட்டு ஒரு பத்துப் பேரை உட்கார வைத்து என அப்படி இரண்டு விவாதங்களில் நானும் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒன்று ஆண்களும் பெண்களுமாகப் பங்கேற்ற ஒரு மத்திய தர வர்க்கத் தொழிற்சங்கக் கூட்டம். இன்னொன்று ஒரு ஆசிரியத்தோழர் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசித்துக்காட்டி விவாதித்த கூட்டம்.

மாணவர்கள் தயக்கமின்றியும் வெளிப்படையாகவும் பேசினார்கள். பெண்கள் உண்மையிலேயே பாவம் சார். ரொம்பக் கஷ்டப் படறாங்க. நாம எல்லோரும் சேர்ந்து அவுங்களுக்கு உதவி செய்யணும் சார். ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக ஆகவே முடியாது சார். ஏன்னா இயற்கையே அவங்களை அப்படிப் படைச்சிருக்கு சார். குழந்தைகள் பெற்று மனித குலத்தைத் தொடர்ந்து வாழ வைக்கத் தானே பெண்கள் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் எதிர்ப்பதம் தானே? இதிலே நாம என்ன பண்ண முடியும்?

தொழிற்சங்கக் கூட்டத்தில் விவாதம் சரியான தண்டவாளத்தில் ஏறுவதற்கே நீண்ட நேரமானது. பல தோழர்களுக்கு ஆண் - பெண் சமத்துவம் குறித்துச் சொந்தமாகச் சொல்வதற்குக் கருத்தே இல்லை. பத்திரிகைகளில் படித்த அல்லது புத்தகங்களில் படித்த கருத்துக்களே வசனங்களாக வந்து கொண்டிருந்தன. (தொழிலாளிகள் கருத்தே இல்லாமல் இருப்பதை நேரில் காண்பது எனக்கு மிகுந்த அச்ச மூட்டுவதாக இருந்தது). அக்கூட்டத்திலிருந்த திருமணமான ஒரு இளம் பெண்மணிதான் சரியான திசையில் விவாதத்தை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். எல்லோருடைய பேச்சுக்களையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் சந்தேகமற்ற ஓங்கிய குரலில் சொன்னார்; நீங்க சொல்றதெல்லாம் இப்படிக் கூட்டங் களில் பேசும்போதுநல்லா இருக்கும் சார். ஆனா பெண் என்பவள் அழகு. அவள் எதைச் செய்தாலும் அதில் அழகு இருக்கும். வாசலில் கோலம் போடுவதிலிருந்து வீட்டை அலங்கரிப்பது, குழந்தைகளை முறையாக வளர்ப்பது, முதியவர்களைப் பேணுவது என்று பெண்கள் செய்யும் பணிகள் எல்லாமே அழகும் அக்கறையும் மிக்கவை. அப்படி இருப்பது தான் பெண்மை. இந்த பூமியே அவுங்களாலேதான் அழகா இயங்குது. அதை ஏன் மாத்தணும்? இப்படியே இருப்பதுதான் இயற்கை. மாத்த நினைக்கிறது செயற்கை.

இந்தக் கேள்விகளை இன்னும் சரியாக நாம் செதுக்கிப்பார்த்தால் இவர் கள் இப்படியாக இருப்பதென்பது இயற்கையின் படைப்பு. நாம் அதைத் தொந்தரவு செய்யக்கூடாது... மாணவர் கள் இரக்கப்பட்டு பேசினார்கள் என்றால் அப்பெண்மணி அதைப் பெருமிதத் தோடு குறிப்பிடுகிறார். தொனிதான் வேறு வேறு. சாராம்சம் ஒன்றுதான். இனப்பெருக்கத்தோடு பெண்ணை இறுக்கமாக இணைக்கும் பார்வை இரு கேள்விகளிலும் இருக்கிறது.

பொதுவாகவே இந்தப் பார்வை சமூகத்தில் அழுத்தமாகப் பதிந்து கிடக் கிறது. இயற்கை சும்மாவா இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இரு பால் உயிரினங்களைப் படைத்துள்ளது? தலைமுறை தலைமுறையாக உயிரினங்கள் தழைத்து வளர வேண்டும் என்பதற் காகத்தான் எல்லா ஜீவாராசிகளிலும் ஆண் - பெண் என்று இரு பாலினங்கள் படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமன் சீர்குலையும் விதமாக நாம் ஏதும் செய்துவிடக்கூடாது என்று பரவலாகக் கருத்து உள்ளது.
மேற்சொன்ன இரு விவாதக் கூட்டங்களிலும் பாலியல், பாலினம், பால் உறவு, இனப்பெருக்கம் பற்றிய புரிதலின் போதாமை வெளிப்பட்டது.

அறிவியல் என்ன கூறுகிறது?

ஆரம்பகட்ட உயிரினங்களில் ஆண் - பெண் பாகு பாடு இல்லாமலேயே இனப்பெருக்கம் நடந்தது. அமீபா போன்ற ஒரு செல் உயிரிகளில் மிக எளிய செயல் பாடான செல் பிளவின் மூலமாக இனப்பெருக்கம் நடக்கிறது. இந்த நிகழ்வில் நூக்ளியஸ் எனப்படும் செல்லின் உட்கருவும் உட்கருவை உருவாக்கும் எல்லா குரோ மோசோம்களும் இரு பாதி களாகப் பிரிகின்றன. ஒரு செல் ஒரே மாதிரியான இரண்டாகப் பிரிகிறது. ஆணும் இல்லை. பெண் ணும் இல்லை. ஈஸ்ட்டுகள் போன்ற பல செல் உயிரினங் கள் மொட்டு விடுதல் முறை யில் அதாவது பல செல் உயிரினத்திலிருந்து செல் களின் ஒரு கூட்டமே விடுவித்துக் கொண்டு. ஒவ் வொன்றிலிருந்தும் ஒரு புதிய உயிரினம் தோன்றுகிறது. மலேரியா உண்டாகக் காரண மான பிளாஸ்மோடியா மனிதனின் ரத்தச் சிவப்பணுக்களில் ஒட்டுண்ணி போல வாழ்கிறது. சிவப்பணுவில் வாழும்போது அது ஒவ்வொன்றும் 12-24 என்று பிரிந்து பெருகுகிறது. 10 நாட் கள் இப்படிப் பாலுறவு ஏதுமின்றியே பெருகும் பிளாஸ்மோடியா 11ஆவது நாளில் ஆண் - பெண் பால் பேதம் கொண்ட இரு பரம்பரையைத் தோற்றுவித்து அதற்குப்பிறகு பாலுறவின் மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.

தவளைகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் முட்டையிடும் காலம் துவங்கி யவுடன் ஆண் தவளை ஒரு பெண் தவளையைக் கண்டுபிடித்து அதன் இடுப்பைத் தனது முன் கால்களால் இறுக்கிப் பிணைத்துக் கொண்டு அது முட்டையிடும் வரை அதை விடுவ தில்லை. சில வேளைகளில் வறண்ட நிலத்தில் ஆண் தவளையும் பெண் தவளையும் சந்தித்தால் பெண் தவளை ஆண் தவளையைத் தன் முதுகில் சுமந்து கொண்டு தண்ணீரை நோக்கிச் செல் கிறது. ஆண்  பெண்ணின் முதுகின் மீது அது முட்டை யிடும் வரை இருக்கிறது. பெண்ணின் கருச்செல்கள் தண்ணீரில் வெளிவந்ததும் அவற்றின் மீது ஆண் தவளை தன் கருச்செல்களை வெளிவிடுகிறது. தவளைகள் தண்ணீரில் பெருகுகின்றன. மனிதர்கள் போன்ற உயர்மட்ட விலங்கு களில் ஆணின் கருச்செல் கள் தாயின் உடலுக்குள் ளேயே பெண்ணின் கருச் செல்களை சந்திக்கின்றன. கருச்செல்கள் சந்திப்பதை உறுதி செய்ய ஆண் உயிரும் பெண் உயிரும் நெருக்கமாக இருப்பதையே புணர்ச்சி என்கிறோம். மான் போன்ற சில உயிரிகளில் வருடம் முழுவதும் ஆண் மானிடம் கருச்செல்கள் உற்பத்தியா வதில்லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் புணர்ச்சி நடைபெறும். இன்னும் சில உயிரினங்களில் சில குறிப்பிட்ட பருவகாலத்தில்தான் பெண்ணிடம் முதிர்ந்த கருச்செல்கள் காணப்படும். ஆகவே ஆண் பெண் புணரும் காலம் என்பது அந்தந்த விலங்கினத்துக்கே உரிய சிறப்புக் காலத்தில் மட்டுமே நடைபெறும். குஞ்சு களின் வளர்ச்சிக்குப் பாதகமான தட்பவெப்பநிலை இருக்கும்போது குட்டிகள் பிறந்தால் அவை இறந்து விடும் அல்லவா? மனைவிமார்களை ஆடி மாதம் தாய் வீட்டுக்கு அனுப்பும் நமது பழக்கத்தை இத்தோடு  சேர்த்து யோசிக்கலாம்.

நத்தையின் ஜனனத் துவாரம் அதன் தலையில் இருக்கிறது. எட்டுக்கால் நத்தையில் கருச்செல் அதன் கொடுக்குகளில் ஒன்றில் காணப்படுகிறது. புணர்வின் போது பெண்ணின் ஜனனத் துவாரத்தினுள் அந்தக் கொடுக்கைச் செலுத்துகிறது. அந்தக் கருச்செல் கொண்ட கொடுக்கு மட்டுமேகூட நத்தையின் உடலிலிருந்து பிரிந்து சுயேச்சையாக வாழ முடியும். அந்தக் காலத்தில் இந்தக் கொடுக்கை ஒரு தனி உயிர்ப்பிராணியாகவே கருதினர். எட்டுக்கால் நத்தையின் உடம்பின் ஒரு பகுதி என்ற சந்தேகம் கூட அன்றைய உயிரியலாளர்களுக்கு வரவில்லை. நத்தை இனத்தின் பெண்பால் உயிரினம் எதிர்ப்பட்டால் இந்தக் கொடுக்கு பெண்ணின் ஜனனப் பாதைக்குள் ஊர்ந்து சென்று கருச்செல்லைப் பிழிந்து வெளித்தள்ளுகிறது.
அட்டை போன்ற ஜீவராசி களின் பெண் உயிரிகளுக்கு ஜனனத்துவாரம் என்று தனி யாக இல்லை. ஆண் அட்டை தனது கூர்மையான புணர்ச்சி உறுப்பை பெண் உடலின் எந்த பாகத்தினுள்ளும் நுழைத்து கருச்செல்லை உந்தித் தள்ளும். கருச்செல் உட்குழிவுகள் வழியாகப் பயணம் செய்து எங்காவது ஒரு பெண் கருமுட்டையைக் கண்டுபிடித்துச் சேர்கிறது.

சில புழுக்களின் இனத் தில் ஆண்புழு தன் கருச் செல்லை பெண்ணின் வாய்க்குள் செலுத்துகிறது. பின் பெண் புழுவை துண்டு துண்டாகக் கிழித்துப் போடுகிறது. அதன் ஒரு உடல் துண்டிலிருந்து கிடைக்கும் கரு முட்டை யுடன் ஆண் கருச்செல் இணைகிறது. எட்டுக்கால் பூச்சி போன்ற இனங்களில் புணர்ச்சியின்போது பெண் பூச்சி ஆண் பூச்சியை தின்று விடுகிறது. புணர்ச்சி முடிவதற்குள் ஆண்பூச்சியின் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடும்.

ஆகவே இனப்பெருக்கம் என்பது ஆண் - பெண் பால் உறவு கொண்டும் நடக்கிறது. அது இல்லாமலும் நடக்கிறது என்பதுதான் இயற்கை. பால் உறவு இல்லாமல் செல் பிளவின் மூலம் பெருக்கமடையும் போது ஒரே மாதிரியான வித்தியாசமே இல்லாத உயிரிகளின் பெருக்கமே ஏற்படுகிறது. ஆண் - பெண் எனப் பால் பிரிவுப் பாரம்பரியம் இயற்கையாகத் தற்செயலாகத் தோன்றிய பிறகு பாலுறவு சார்ந்த பெருக்கத்தில் தாய் - தந்தை இருவரிடமிருந்தும் குணங்களைப் பெறுகிற குழந்தைகள், அட்டைகள், பூச்சிகள், தவளைகள், பன்முகப்பட்ட குணாம்சங்களுடன் மேலும் மேலும் பொலிவுடன் வளர்கின்றன. இது இயற்கையில் தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வுதான். ஆனால் அது குலப் பெருக்கத்தைத் திருத்தமாக்கிட உதவுகிறது. குளோனிங் முறையில் ஆண் - பெண் இணைவு இல்லாமல் படைப்புச் செயல் சாத்தியம் என்று கூறப்பட்டாலும் அது இயற்கை வழியில் வரும் குழந்தைகள் போல விதவித மான குணாம்சங்களுடனான உயிரிகளைத் தர முடியாது.
சரி. ஆகவே குழந்தை பெறத்தான் பெண் படைக்கப் பட்டார் என்று கூறிவிட முடியுமா? அது அவள் தலை எழுத்து என்று தள்ளிவிட முடியுமா? இந்த விவாதத்தை நாம் தொடரலாம். அதற்குமுன் ஒரு கதையைப் பார்க்க லாம்.

கிருத்திகாவின் கதை

கிருத்திகா ஒரு கணினி எஞ்சினீயர். சென்னையில் ஒரு கம்பெனியில் பணிபுரிகிறார். எங்க ஊர்ப் பொண்ணுதான். நல்லா அமெரிக்கன் இங்கிலீஷ் பேசக் கூடிய பெண் என்பதால் படித்த உடனே நல்ல வேலை கிடைத்துவிட்டது. வேலைக்குச் சேர்ந்த உடனே நம்ம ஊர் வழக்கப்படி கல்யாண ஏற்பாடுகளைப் பெற்றவர்கள் செய்தார்கள். அவள் பொறுங்க... பொறுங்க... நானே பாத்துச் சொல்றேன் என்று ஒரு கட்டையைப் போட்டாள். அவளா பாக்கிறது எப்படிங்க சரியா இருக் கும்? எவ்வளவோ செய்தி பாக்கிறோம். ஏமாந்திடக் கூடாதில்லே என்று கிருத்திகாவின் அம்மா பதட்ட மாகவே இருந்தார். கிருத்திகாவின் அப்பாவுக்கு இங்கிட்டும் இல்லாமல் அங்கிட்டும் இல்லாமல் குழப்பமாக இருந்தது. ஆனால் ரெண்டு வருடம் கடத்திவிட்டு கிருத்திகா ஐடி கலாச்சாரப்படி  ஒரு பையனுடைய புகைப்படத்தையும் விலாசத் தையும் இ-மெயிலில் வீட்டுக்கு அனுப்பினாள். போனார்கள். பேசினார்கள். கல்யாணம் முடிந்தது. பையனும் கம்ப்யூட்டர்தான். டாக்டருக்கு டாக்டர் மாதிரி இப் போது கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர்தான் பொருத்த மாக இருக்கிறது போலும்.
கல்யாணமாகி ரெண்டு மூணு வருடம் ஆகிவிட்டது. ஒரு நாள் தீபாவளியை ஒட்டி தம்பதிகள் லீவில் ஊருக்கு வந்தார்கள். கிருத்திகாவின் வாழ்க்கைத் துணைவரான அந்தப் பையன் என்னைப் பார்த்துப் பேசணும் என்று சொன்னார். சரி வாங்க என்று ஒரு வாக் போய்க்கொண்டே பேசலாம் என்று போக்குவரத்து இல்லாத ஒரு கிராமத்துச் சாலையில் நடந்தோம்.


ஒரு பிரச்சனை சார். இதை வெளிப்படையா யார் கிட்டேயாவது பேசணும்னு நினைச்சேன். நீங்க எழுத் தாளர். அதோடு கிருத்திகாவின் அம்மா, அப்பாவையும் அறிந்தவர். அதனால உங்க கிட்ட பேசலாம்னு நினைச் சேன் என்று ஒரு முன்னுரையை முதலில் கொடுத்தார்.

பிரச்சனை இதுதான். கிருத்திகா குழந்தை பெற்றுக் கொள்ள மறுக்கிறாள். வேலையிலும் மேற்படிப்பிலும் அவளுக்கு இருக்கும் ஆர்வமும் வேகமும்தான் காரணம். முதல்ல பத்து மாசம். அப்புறம் அது உருண்டு புரண்டு தவழ்ந்து, எழுந்து, நடந்து என்று ஒரு அஞ்சு வருஷம் நான் குழந்தைக்காகச் செலவழிக்கணுமே. அஞ்சு வருஷத்திலே நான் ஃபீல்டு அவுட் ஆயிடுவேனே
இப்படி சொல்றா சார். கல்யாணத்துக்கு முன்னாடியே இதுபற்றி சொன்னாள். ஆனால் கல்யாணத்துக்கப்புறம் பேசி சரி பண்ணிக்கலாம் என்று நான் நம்பினேன். ஆனால் அவள் மாறவில்லை. உனக்குக் குழந்தை வேணும்னா தத்து எடுத்துக்கலாம்னு சாதாரணமா சொல்றா சார். தத்து எடுக்கறது தப்புன்னு நான் சொல் லலை. என்ன இருந்தாலும் நம்ம குழந்தையாகுமா சார்?
நம்ம எதிர்காலத்துக்காக - நம்ம வாழ்க்கை அர்த்த முள்ளதா உயிரோட்டமா இருக்கறதுக்காக - ஒரு அஞ்சு வருசம் பொறுத்துக்கக்கூடாதா என்று கேட்டால் ஏன் அந்த அஞ்சு வருடத்தை நீ தியாகம் பண்ணலாமே? என்று பதில் சொல்கிறாள். ஒரு குழந்தையை தத்து எடுத்து நான் அஞ்சுவருடம் வீட்டில் இருந்து அதைப் பாத்துக் கணுமாம். அவள் சம்பாதித்துக் கொடுப்பாளாம். இதெல்லாம் சரியா இருக்குமா சார்? ஒரு தாய் - ஒரு   பெண் பாத்துக்கற மாதிரி குழந்தையை நாம பார்க்க முடியுமா சார்? தவிர நமக்கு என்ன குழந்தை பிறக்காத உடல் குறையா இருக்கு? ஏன் தத்து எடுக்கணும்?

தாம்பத்ய வாழ்க்கையை கிருத்திகா மறுக்கவில்லை. குழந்தை சுமந்து தாயாக மாட்டேன். தத்து எடுத்து வளர்க்கலாம் என்று சொல்கிறாள்.அந்த இளைஞனின் கண்கள் கலங்கியிருந்தன. நான் அவர் சொன்னதைப்பூராவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு ஐந்து நிமிடம் மென இடை வெளி தேவை என உணர்ந்து அமைதியாக இருந்தேன்.

(இரண்டாம் பகுதி நாளைய பதிவில்....)

12 comments:

rapp said...

மிக மிக அருமை.

ஆ.ஞானசேகரன் said...

பெருசா இருக்கே... அப்பறமா சொல்லுரேன் சார்...

Karthick said...

ஆண்களை முன்னிலை படுத்திய சமுதாயத்தை மாற்றாமல் எதுமே சாத்தியமில்லை

Deepa said...

//அவளுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வசனங்கள் நம் சமூகத்தில் உண்டு. எந்த இடத்தில் நின்று என்ன மாதிரி தொனியில் முகத்தை எப்படி வைத்துக் கொண்டு அந்த வசனங்களைப் பேச வேண்டும் என்பது உள்பட எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட் டுள்ளது. //

ஏன் இப்படி அழ வைக்கிறீர்கள்????

இரண்டாம் பகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

pavithrabalu said...

it is nice to have a discussion on the identity of woman in society.. it should continue in all spheres

வித்யாசாகரன் (vidyasakaran) said...

நன்றிகள் பல, இந்த மிக அவசியமான கட்டுரைத் தொடரைப் பதிவிடுவதற்காக.
தொடருங்கள்; காத்திருக்கிறேன், உடன் வர.

பாலராஜன்கீதா said...

எல்லா ஈயம் பித்தளைவாதிகளும் கட்டாயம் படிக்கவேண்டிய இடுகை.
இனி வர இருக்கும் இடுகைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

உமாஷக்தி said...

பல இடங்களில் பெண்களுக்கு எதிரி பெண்களேங்கறதை நான் கண்கூடா பாத்திருக்கேன். 'அவன் ஆம்பளை, அவன் தான் எப்போதும் குடும்பம்ங்கற அமைப்பிற்க்கு ஆணிவேர், மயன் தான் முக்கியம் கடைசிக் காலத்துல கஞ்சி ஊத்தாட்டிக்கூட பரவால்ல கொள்ளி போடுவாம்ல' என்று மகன்களுக்கு சாப்பாட்டுல, அக்கறையில அன்பிலே எல்லாத்துலயும் ஒருபடி அதிகமாத்தானே நம்ம தாய்மார்கள் இன்னிக்கும் நினைக்கறாங்க. அவங்களோட மூளையை அவ்விதமாய் காலம் காலமாய் சலவை செய்து வைத்திருப்பவன் புத்திசாலி ஆண். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலங்கட்டங்களில் ஆண் என்ன செய்தாலும் அதைக் குற்றம் சொல்லாமல் சகித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது கல்வி மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தினால் கேள்விகள் கேட்கிறாள். கேள்விகளுடைய பெண்களை யாருக்கும் பிடிப்பதில்லை. அவள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி மற்றவர்களுக்கு மோசமான முன் உதாரணமாய் ஆக்கி பயமுறுத்துவார்கள். 'அவளா வெட்டிட்டு வந்தவ, அறுத்துட்டு வந்தவ, வீட்டுக்கு அடங்காதவ' என்ற பட்டப் பெயர்களை சுமந்துகொண்டு வாழ்நாள் போராடிக் களைத்த பெண்களை நான் அறிவேன். ஆணாதிக்கம் பெண் சமத்துவம் இதெல்லாம் எங்க equalise ஆகும்னா ஒருத்தர் தேவையை மற்றொருவர் உணர்ந்து புரிதலோட அன்பும் அக்கறையும் மனப்பூர்வமா ஏற்பட்டுச்சுன்னா சரியாகிடும். ஒட்டு மொத்த ஆண் சமுதாயமே பெண்களோட உடல் மற்றும் மனோ ரீதியான வலிகளையும் பிரச்சனைகளையும் புரிஞ்சுக்கிட்டாத்தான் நிலைமை மாறும். ஆணுடன் போட்டிபோடுவதல்ல பெண் விடுதலை, தன்னைத் தான் கண்டுணர்தல், தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் உயர்த்தி விடுவதே எல்லா விடுதலையிலும் தலைசிறந்தது, சரியா தமிழ்?

வல்லிசிம்ஹன் said...

கேள்வி கேட்கக் கூடாதுதான்.
வயது கூடும்போது எதிர்ப்பு குறையும்.

அப்ப நம்ம கிட்ட எதிர்க்கணூம் என்கிற எண்ணமே போய்விடும்:(((

ச.தமிழ்ச்செல்வன் said...

வருகை புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.பெரிதான கட்டுரை என்பதால் நண்பர்கள் உடனே படித்து எதிர்வினை ஆற்றுவதில் சிரமம் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.இன்னும் என்னென்ன கேள்விகளுக்கான விடயங்கள் இச்சிறுநூலில் சேர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வரவேற்கிறேன்.மீண்டும் rework பண்ண எனக்கு அது உதவும்.

தீபா நாம் இன்னும் இந்த விசயத்தில் உணர்ச்சிகரமாக மட்டுமே இருப்பது போதாது.சின்னச் சின்ன மாற்றங்களை செயல்பூர்வமாக நம் அன்றாட வாழ்வில் எப்படிக் கொண்டுவரலாம் என concret ஆக முயற்சிக்க வெண்டும்.

உமாசக்தி முக்கியமான விசயங்களைத் தொட்டுப் பேசியுள்ளார்.ஆண்- பெண் இருவரும் சேர்ந்து உருவாக்கியதுதான் இன்றைய ஆணாதிக்க சமூகம்.இது பெண்களுக்கு 100 சதம் பாதகமாக இருப்பதை நாம் இப்போதுதான் உணரத் தலைப்பட்டிருக்கிறோம்.உடைத்து நொறுக்க வேண்டிய சமூக ஏற்பாடு இது.இந்தக் காற்றிலேயே ஆணாதிஉக்கம் கரந்திருக்கிறது. இக்காற்றைச் சுவாசிக்கும் ஆண்-பெண்-ஆடு மாடு கூட ஆணாதிக்கச் சிந்தனையோடுதான் இருக்கும். காற்றைச் சுத்தப்படுத்த வேண்டும்- ஆணும் பெண்ணும் சேர்ந்து.

அமுதா said...

அடுத்த இடுகையை எதிர்பார்த்திருக்கிறேன்

ஹரிகரன் said...

நீங்கள் எழுதிய அரசியல் எனக்குப் பிடிக்கும் புத்தகத்தைப் படித்தேன்,அறிய தகவல்களை அளித்துள்ளீர்கள்.

நன்றி