நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் வீதிக்கு வரும்படி ஆகி விட்டது.வருகை புரிந்து புதிய பதிவுகள் ஏதுமின்றித் திரும்பிய நண்பர்கள் பொறுத்தருள வேண்டும்.தேர்தல் பணிகள் மட்டும் காரணமல்ல.என்னுடைய மகன் த.வெ.சித்தார்த்தின் மணவிழா ஏற்பாடுகளும் ஒரு காரணம்.அழைப்பிதழ் கொடுக்கும் அலைச்சல்தான் நம் கல்யாணங்களில் பெரிய வேலையாக இருக்கிறது.மண முறைகள் இன்னும் எளிதாக்கப்பட வேண்டும்.சில மாற்றங்களை இத்திருமணத்தில் என் மகனும் மருமகளும் செய்திருக்கிறார்கள்.
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மணவிழாவைப் பெரிதாகக் கொண்டாடும் மனநிலையைத் தகர்க்கின்றன.புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் மரணம் என்று இலங்கை ராணுவம் படம் காட்டுகிறது.இல்லை என்கிற வலுவான தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன.சொந்த நாட்டு மக்களைக் கொல்லும் பாசிச அரசு வெளியிடும் செய்தி எதையும் நம்ப மனம் மறுக்கிறது.இன்றில்லாவிட்டால் நாளை இச்செய்தி வரும் வாய்ப்புத்தானே அதிகம் என்றும் மனதில் ஓடுகிறது.தமிழ் மக்களுக்காகப் பேச புலிகளைத் தவிர வேறு யாரும் இல்லை என்கிற நிலையை புலிகள் ஏற்படுத்தியிருந்தார்கள்.இப்போது புலிகளும் இல்லை வேறு சனநாயக் குரல் எழுப்பும் சக்திகளும் அங்கில்லை என்கிற நிலையில் நிற்கிறோம்.
தமிழகத்தில் இலங்கைத்தமிழர் பிரச்னைகள் எவராலும் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து கவனிக்கப்பட்டதில்லை.சரியாகப் புரிந்து கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை.அவரவர் அரசியல் நிலைபாடுகளில் நின்று வாதிட்டுக்கொண்டிருந்தோம். நடந்து முடிந்த தேர்தலில் அதை ஒரு மையப்பிரச்னையாக கட்சிகள் பிரச்சாரத்தில் பேசியபோதும் மக்கள் அப்படிக்கருதவில்லை என்றே தோன்றுகிறது.it was en emotional issue not an election issue என்று பல கட்சித்தலைவர்கள் கூறிவிட்டனர்.
தமிழகத்தில் துடிப்புள்ள சில வழக்கறிஞர்கள் சில அறிவுஜீவிகள் கொஞ்சம் பெரியாரிஸ்ட்டுகள் இவர்கள்தான் இலங்கைப்பிரச்னையில் உண்மையான உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டுடன் இருந்தனர்-இருக்கின்றனர்.அவர்களிடம் உணர்ச்சி இருந்த அளவுக்கு தந்திரம் இருந்ததுஇல்லை--புலிகளைப்போலவே.
என் அன்புக்குரிய சகோதரனும் இயக்குநருமான சீமான் பல நாள் சிறையில் கிடக்க நேரிட்டது.கோவைச்சிறையில் அவரைச் சந்தித்தபோதும் புதுவைச்சிறையிலிருந்து அவர் வெளியானபின் அவரைச் சந்தித்தபோதும் நான் அவரிடம் கேட்டுக்கொண்டது “ தந்திரம் வேண்டாமா? “ என்பதுதான்.அவர் அதை ஏற்கவில்லை.
இத்தேர்தலில் காங்கிரசைத் தோற்கடியுங்கள் என்கிற வேண்டுகோளுடன் சீமான்,பாரதிராஜா,மணிவண்ணன்,சுந்தர்ராஜன்,செல்வமணி,சத்யராஜ் போன்ற திரைக்கலைஞர்கள் களம் இறங்கியது தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நடவாத ஒன்று. சீமானுடைய உரைக்காக இளைஞர் படை எல்லா ஊர்களிலும் காத்துக்கிடந்தது. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அவர் பேசியது அவருடைய அன்பர்களுக்கே பிடிக்கவில்லை.எனக்கும் பிடிக்கவில்லை.
எனினும் திரைத்துறையினர் தங்கள் தந்தக் கோபுரங்களில் மட்டுமே அமர்ந்திராமல் மக்களிடம் செல்வதை நான் மகிழ்வுடன் வரவேற்கிறேன் .இது ஒரு உடைப்பு என்று கருதுகிறேன்.அவர்களின் நிலைபாடு எனக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம என்றாலும் ஒரு கொள்கைக்காக மக்களிடம் போக வேண்டும் என்கிற அவர்களின் முடிவு நாம் வரவேற்கத்தக்க ஒன்று.இன்னும் இதுபோன்ற சமூகப் பிரச்னைகளுக்காகவும் அவர்கள் களம் இறங்க சாத்தியம் உண்டு அல்லவா?
அப்புறம் பாராளுமன்றத்தேர்தல். மக்கள் இடதுசாரிகளுக்கு பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள்.மதவெறியை எதிர்ப்பது முக்கியம் என்பது மக்களிடம் போய்ச்சேர்ந்த அளவுக்கு நாட்டை அடமானம் வைப்பதும் ஆபத்து என்பதை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.அல்லது புரிந்து கொள்ளும் படி மக்களிடம் கொண்டு சேர்க்க வில்லை. நாடு நிலையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நம்பி ஒரு தேசத்துரோகியிடம் மக்கள் நாட்டை ஒப்படைத்துள்ளார்கள்-இவர்களை விட நம்பகமாக யாருமில்லை என்றெண்ணி. பெரிய சுய பரிசீலனை வேறு எவரையும் விட இடதுசாரிகளுக்குத் தேவை என்பதே தேர்தல் தந்துள்ள செய்தி என்று நான் கருதுகிறேன்.
கன்னியாகுமரித் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை விட சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்புத் தரவல்லவர் திமுக வேட்பாளர்தான் என அம்மாவட்ட மக்கள் கருதிவிட்டார்கள்.ஆகவே செம அடி மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு.தமிழகத்தில் பிஜேபிக்கு சைபர் என்பதும் வங்கத்தில் அது கணக்கைத் திறந்து விட்டதும் நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய முடிவுகள்.வங்கத்தில் நாயடி பேயடியாகிவிட்டது தனியாகக் கதைக்க வேண்டிய ஒன்று.
மதுரையில் அஞ்சாநெஞ்சரிடம் 2 கோடி வாங்கிக்கொண்டு மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆஸ்பத்திரியில் படுத்துவிட்டார் என்றெல்லாம் பிரச்சாரம்.நான் சந்தித்த அத்தொகுதி கிராம மனிதர்கள் சிலர் அதை நிசம் என்று நம்பி பாரம்பரியமாக மார்க்சிஸ்டுகளுக்கு ஓட்டுப்போட்ட தாங்கள் இம்முறை அண்ணனுக்குப் போடப்போவதாகக் கூறினார்கள். நக்கீரனில் கூட இதுமாதிரி ஒரு அவதூறான செய்தியைப் பிரசுரித்திருந்தார்கள் எனக் கேள்விப்பட்டேன்.நான் வாசிக்கவில்லை.
தேர்தல் நாள் முழுக்க நான் கட்டேறிப்பட்டி என்கிற கிராமத்தில் 204 ஆம் எண் வாக்குச்சாவடியில் இருந்தேன்.மக்களில் பெரும்பாலானோர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆதரவாளர்கள்.பாஜகவுக்கு குத்தோ குத்து என்று குத்திக்கொண்டிருந்தார்கல் என்ரு நினைக்கிறேன்.டாக்டர் கலைஞர் தோள்களிலும் அம்மா ஜெயலலிதா தோள்களிலும் ஏறித் தமிழ்நாட்டுக்குள் கால்பதித்த பாஜக இப்போது தோள் ஏதும் கிட்டாததால் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சுப்ரீம் ஸ்டார் மற்றும் நவரச நாயகன் முக்குலத்து சிங்கம் (!) கார்த்திக் தோள்களில் ஏறி வலம் வந்தது. சென்னை தி.நகரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் பகல் முழுக்க ஆளே இல்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்த காட்சியை நான் பலமுறை கண்டு மனம் மகிழ்ந்தேன்.நிற்க. தேர்தல் அனுபவங்கள் கொஞ்சம் தனியாக எழுதலாம்.
இத்தேர்தலில் வெறும் பணநாயகம் வென்றுவிட்டதாக மட்டும் நான் கூற மாட்டேன்.ஒரு லட்சம் ஓட்டு ஒண்ணரை லட்சம் ஓட்டு என்று வித்தியாசம் வருகிறதென்றால் மக்கள் முடிவு செய்தே வாக்களித்திருக்க வேண்டும்.மக்கள் நல்லவன் என்று நம்பி ஒரு அயோக்கியனுக்கு முழுமனதோடு வாக்களித்திருப்பதாகக் கருதுகிறேன்.மக்களைக் குற்றம் சொல்லவே முடியாது.அரசியல் கல்வி புகட்டும் பணி நடக்காதபோது என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்த்துவிட முடியும்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் பிரச்சாரப்பாடல்கள் எழுதித்தயாரிக்கும் போதும் எம் பாடல் வரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் வாய்பிளந்து நிற்கும் ஒரு பள்ளத்தாக்கின் இடைவெளியை நான் உணர்ந்து பல மணி நேரம் மௌனத்தில் கிடப்பது வழக்கம்.இம்முறை பல நாள் மௌனத்தில் கிடக்க நேர்ந்தது எனலாம்.
பின் இணைப்பு:
22 comments:
//இத்தேர்தலில் வெறும் பணநாயகம் வென்றுவிட்டதாக மட்டும் நான் கூற மாட்டேன்.ஒரு லட்சம் ஓட்டு ஒண்ணரை லட்சம் ஓட்டு என்று வித்தியாசம் வருகிறதென்றால் மக்கள் முடிவு செய்தே வாக்களித்திருக்க வேண்டும்.மக்கள் நல்லவன் என்று நம்பி ஒரு அயோக்கியனுக்கு முழுமனதோடு வாக்களித்திருப்பதாகக் கருதுகிறேன்.மக்களைக் குற்றம் சொல்லவே முடியாது.அரசியல் கல்வி புகட்டும் பணி நடக்காதபோது என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்த்துவிட முடியும்.//
இதை நானும் வழிமொழிகின்றேன்....
தமிழ்ச்செல்வன்
எதற்கெடுத்தாலும் "தந்திரம், தந்திரம்" என்று சொல்கிறீர்களே? அதுதானா உங்கள் தந்திரம்?
வெகு நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியே. இருந்தாலும் இப்போது சூழல் அவ்வாறு இல்லை.
மதுரையில் சிபிஎமின் தோல்வி எதிர்பார்த்ததே. தொண்டர் படையுடன் மோத் யாராலும் முடியாது. ஆனால் காங்கிரசின் வெற்றி அதிர்ச்சியாக இருந்தது.
நாட்டுப்புற கலைகளுக்கிடையில் நிகழவிருக்கும் தங்கள் இல்ல திருமணவிழாவிற்கு என் வாழ்த்துக்கள்.
Welcome back, Sir.
பல்வேறு விஷயங்களைத் தெளிவான நோக்கில் ஆராய்ந்து இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
// பெரிய சுய பரிசீலனை வேறு எவரையும் விட இடதுசாரிகளுக்குத் தேவை என்பதே தேர்தல் தந்துள்ள செய்தி என்று நான் கருதுகிறேன்.//
நிச்சயமாக.
மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களது மகன் திருமணத்தில் தாலி கட்டுவது உண்டா
நீண்ட இடைவெளியின் காரணம் உடல் நலக்குறைவோ என்ற கவலையும் இருந்தது. நல்லது.
முதலில் மண நிகழ்வு அழைப்பிதல் மிக அருமை மற்றும் எளிமை. மணமக்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
நீங்கள் குறிப்பிடும் தந்திரங்களில் கரைகண்டவர்கள்யெல்லாம் இன்றளவில் சுயலாபத்திற்க்காக ஈழ பிரச்சனையிலிருந்து விலகி
நிற்பவராகவோ அல்லது துணைபோவதை நாம் கண்கூடக பார்க்கலாம். சீமான் போன்றவர்களிடம் அந்த 'தந்திரம்' பற்றி கொள்ளாமல் இருப்பதே மேல்.
//இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அவர் பேசியது அவருடைய அன்பர்களுக்கே பிடிக்கவில்லை.// உண்மை தான் ஆனால், இதிலிருந்து அவரே தெளி ந் து தெரிந்து கொள்வார் என நம்புவோம்.
//திரைக்கலைஞர்கள் களம் இறங்கியது தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நடவாத ஒன்று//
வரவேற்க்க தகுந்தது மேலும் இயக்குனர்களிடமிரு ந் து ஆரம்பித்தது மகிழ்வான ஒன்று.
There is no doubt that money played a major role in this election. The impact of money was enormous and no elections in the past ever had such money floating around. But true that an introspection is very much needed.
ஆ.ஞானசேகரன் வருகைக்கு நன்றி.பெயரிலி நண்பரே நான் தந்திரம் என்ரு சொல்வது சீமான் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி மீண்டும் ‘உள்ளே’போய் விடாமல் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும் என்பதுதான்.உள்ளே உள்ளே போய் உட்கார்ந்துகொண்டால் வெளியே வேலை செய்யும் வாய்ப்புப் பறிபோய்விடும் அல்லவா?
புலிகளிடம் நான் காண விழைந்த தந்திரம் என்பது அரசியல் தந்திரம்தான்.மிகக் குறைந்த மக்கள் சேதாரத்துடன் போரை நடத்தியிருக்க வேண்டும் என்கிற தந்திரத்தைத்தான். நாம் இங்கே இருந்துகொண்டு கருத்துச் சொல்வது எளிது.அங்கே அவர்கள் சந்தித்த நிலைகள் என்னவாக இருந்ததோ அதைப்பொறுத்தே அவர்கல் தந்திரத்தை வகுத்திருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.ஆனாலும் இதை விடக் குறைவான மனித சேதாரத்துடன் அவர்கள் போராடியிருக்க முடியும் என்று மனதில் படுகிறது-தந்திரம் இருந்திருந்தால்.
ரசா , என் மகன் தன்னுடைய திருமனத்தின் போது தாலி கட்டமாட்டேன் என்றும் என் மருமகள் நான் தாலி கட்டிக்கொள்ள மாட்டேன் என்றும் பேச்சுத் துவங்கிய நாளிலேயே தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.நமக்கு வேலையே இல்லை.ஆகவே பழைய சடங்குகளும் இல்லை தாலியும் இல்லை நாதஸ்வரமும் இல்லை கெட்டி மேளம் கெட்டிமேளம் என்பதும் இல்லை. பறை முழக்கத்துக்கிடையே பரஸ்பரம் புத்தகங்கள் மாற்றி மாலை மாற்றி கரம் பற்றுகிறார்கள்.அவ்வளவே.
வாழ்த்துச்சொன்ன தீபா,மண்குதிரை,வேல்கண்ணன் அனைவருக்கும் எம் குடும்பத்தார் சார்பாக நன்றி
yes Raghu, this time it is said that even at the counting centre money played a decisive role-people say that P.Chidhambaram's victory was one such.the meaning of democracy is utterly mutilated this time.
மன்னிக்கவும்... உங்களது மகனது திருமணத்தில் உறுதிமொழி ஏற்பு உண்டா... அப்படி இருப்பின் அதில் தாங்கள் சமூக மாற்றத்திற்காக போராடுவதற்கு உதவும் வகையில் பொது வாழ்க்கைக்கு உட்பட்டு தங்களது சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உறுதிமொழி எடுப்பார்களா...
மற்றொன்று... அழைப்பிதழில் கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நிகழும் ஒரு இடைநிகழ்வு போல எளிமைப்படுத்தி விட்டு திருமணத்திற்கு அனைவரும் வர வேண்டும் என விரும்பி அழைப்பிதழ் வைப்பதற்காக சுற்றி விட்டு இணையத்தில் எழுதுவதை அதன் மூலம் தள்ளிப் போட்டது உங்களது முரண்பாட்டை உங்களுக்கே உணர்த்தவில்லையா....
mathipirkuriya thiru Tamilselvan avarkalukku vanakkam. thangal magan sithaarthaanin thirumanam inithe nadanthu mudiya yen manamaarntha vaazthukkal. azhaipithal varum yendru yethipaarthen.paravaayillai. nandri. anbudan Ushadeepan
//இத்தேர்தலில் வெறும் பணநாயகம் வென்றுவிட்டதாக மட்டும் நான் கூற மாட்டேன்.ஒரு லட்சம் ஓட்டு ஒண்ணரை லட்சம் ஓட்டு என்று வித்தியாசம் வருகிறதென்றால் மக்கள் முடிவு செய்தே வாக்களித்திருக்க வேண்டும்.மக்கள் நல்லவன் என்று நம்பி ஒரு அயோக்கியனுக்கு முழுமனதோடு வாக்களித்திருப்பதாகக் கருதுகிறேன்.மக்களைக் குற்றம் சொல்லவே முடியாது.அரசியல் கல்வி புகட்டும் பணி நடக்காதபோது என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்த்துவிட முடியும்.//
அப்போ இந்த லட்சம் ஒட்டு போட்டவங்க எமாந்தவங்களா...?
நம்பறா மாதிரி சொல்லுங்க....
பிரதிபா சித்தார்த் அவர்களை வாழ்த்துகிறோம் நேரில் வாழ்த்த முடியவில்லை மன்னிக்கவும்
மண மக்களுக்கு வாழ்த்துக்கள். மகிழ்சியும்,வளர்சியும் நிறைந்த வாழ்க்கை வசப்படட்டும்.
தேர்தலில் பணம் விளையாடியது பற்றி குறைத்து மதிப்பிடுகிறீர்கள் எனக் கருதுகிறேன்.இந்தத் தேர்தலின் highlight என்பது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.
தேர்தல் முடிவுகள் வந்த அன்று மாலை பொதிகை நிகழ்ச்சியில் நண்பர் GRஐ சந்தித்தேன். இலக்கியம்/இளைஞர்கள் குறித்த என் அக்கறை தொடர்பாக உங்களோடு விவாதிக்க எண்ணுவதை அவரிடம் சொன்னேன். நீங்கள் திருமண வேலைகளில் மும்மரமாக இருப்பதாக அவர் சொன்னார். அவகாசம் வாய்க்கும் போது தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி என் வசம் இல்லாததால் இங்கு எழுத வேண்டியதாயிற்று. இவை உங்கள் பார்வைக்கு. பிரசுரத்திற்கல்ல.
அன்புடன்
மாலன்
maalan@gmail.com
மணமக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !
no credibility on third front leaders such as deve gowda, chandra babu naidu and jayalalitha.At Kanyakumari electorate voted against BJP. Long live couples
வெறும் பணநாயகம் வென்று விட்டதாக நான் கூற மாட்டேன் என்று கூறியுள்ளீர்கள். எந்த ஒரு தனி விஷயமும் தேர்தல் முடிவுகளை நிர்ணயித்து விட முடியாது என்பது உண்மைதான். ஆனால் பணநாயகத்திற்கு "மட்டும்" என்ற வார்த்தையைப் போட்ட நீங்கள் மக்கள் முடிவு செய்தே வாக்களித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போகிறீர்கள்.
மக்கள் முடிவு, அரசு ஊழியர்கள் ஆதரவு, ஒரு ரூபாய் அரிசி என்பதெல்லாம் பந்தை மைதானத்தின் நடுவிலிருந்து பெனல்டி ஏரியாவுக்குதான் கொண்டு வந்தது. பெனல்டி ஏரியாவுக்குள் வந்து காலால் பந்தை உதைக்காமல் கையில் எடுத்து கோல் வலைக்குள் வீசி விட்டார்கள் திமுகவினர்.
பணம் தரும் மற்றும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் அபாயமான போக்கை இந்தத் தேர்தலில் கண்டோம். பக்கத்து வீட்டிற்கு தந்து விட்டார்கள். வாங்காதவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்றவுடன் வெறும் 500 ரூபாயை வாங்கி காரை எடுத்துக் கொண்டு போனவர்கள் இருக்கிறார்கள். பணத்தைக் கொடுத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டார்களே என்று வெம்பி வெடித்தவர்கள் இருக்கிறார்கள். இதில் பெரும்பான்மை யார் என்பது மதுரை, விருதுநகர் போன்ற தொகுதிகளில் நன்றாகத் தெரிந்தது.
பணம் மட்டும் காரணம் இல்லை என்று குறைத்து மதிப்பிட்டு விட்டு சென்று விட்டால் கட்டுப்படுத்த உதவும் தேர்தல் என்ற மூக்கணாங்கயிறு ஜனநாயகத்தைக் கட்டித் தொங்கவிடும் தூக்குக்கயிறாக மாறி விடும். பஸ்சில்... ரயிலில்... நடக்கும்போது... காத்திருக்கும்போது... என்று ஒவ்வொரு தருணத்திலும் அருகில் உள்ளவரிடம் இந்தக் கவலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் இந்தக்கவலை விரக்திக்கு இட்டுச்செல்லாமலும் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
தங்கள் மகன் திருமணம் குறித்த மாதவராஜின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
நண்பர்கல் மாலன் மற்றும் கணேஷ் இருவரின் கருத்துக்களில் எனக்கு மாறுபாடு ஏதுமில்லை.பணத்தின் விளையாட்டை மட்டும் சொல்லி நாம் கடந்து போய்விடக்கூடாதே என்கிற அச்சம் என் மனதில் இருக்கிறது.எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது .
rasa,
ஒரு முரண்பாடும் இல்லை.பையனும் பொண்ணும் கடந்த சில ஆண்டுகளாக மனம் ஒப்பிப் பழகி வருவதால் கல்யானம் என்பது அவர்களது காதல் வாழ்வில் ஒரு சிறு நிகழ்வென்று கருதுகிறார்கள்.ஆகவே அவர்கள் அடித்த பத்திரிகையில் அந்த அளவுக்கே இடம் தந்திருக்கிறார்கள்.அசலாக கல்யானமும் அப்படித்தான் நடந்தது.ஆனால் எமக்கோ ஒரே மகனின் திருமணம் என்கிபதால் எல்லோரும் வரவேண்டும் என்று நினைத்து பெரிசாக கற்பனை செய்தோம்.தலைமுறை இடைவெலிதான்.
உறுதிமொழி நாடகமெல்லாம் எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை.வாழ்ந்து காட்ட வேண்டும்.
உஷா தீபனுக்கு வணக்கம்.வாழ்த்துக்கு நன்றி.பல முக்கியமான நண்பர்களுக்கு அழைப்பிதழ் போய்ச் சேரவில்லை.பலருக்கு தர விட்டுப்போனது.வருந்துகிறேன்.
Post a Comment