நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன்.
தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பேரில் பெரும் குப்பைகள் –நீதிக்கதைகள்-மற்றும் புராணக்கதைகள் என்ற பேரில் கொட்டப்பட்டு வரும் இந்நாளில் இன்னும் நல்ல புத்தகங்களைத் தயாரித்து வழங்க கூட்டு முயற்சிகள் –விவாதங்கள்-கலந்துரையாடல்கள் தேவை.வந்துள்ள சில நல்ல முயற்சிகள் மீதும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தேவை.
சோவியத் யூனியன் இருந்த நாட்களில் ஏராளமான வண்ண வண்ணப் புத்தகங்கள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.உலகத்துக்கெல்லாம் கப்பல் கப்பலாக ஓசியில் புத்தகம் அனுப்பி ஓய்ந்துபோன தேசமல்லவா அது.
அதை விட்டால் தமிழில் அந்தக்காலத்தில் கண்ணன் வந்துகொண்டிருந்தது. எங்கள் ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியிலிருந்து 7 மைல் நடந்து சாத்தூருக்குப்போய் கண்ணன் வாங்கி வருவேன்.அப்படி இழுத்தது கண்ணன்.அதை நடத்திய எழுத்தாளர் ஆர்.வி சமீபத்தில்தான் காலமானார்.அம்புலிமாமாவும் பின்னர் வந்த சிவகாசிப் படக்கதை-காமிக்ஸ் புத்தகங்களும் மிகப்பெரிய ஈர்ப்புகளாக இருந்தன.
இன்று தமிழகத்தில் பதிப்பகங்கள் பெருத்துவிட்ட சூழலில் புத்தகக் கண்காட்சிகள் பத்து இருபது இடங்களில் பரவலாக நடத்துவது பழக்கமாகிவிட்ட ஒரு பின்னணியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்கிற பெரிய மார்க்கெட் பெரிய பதிப்பகங்களின் நாவில் நீர் சுரக்க வைப்பது சகஜம்.
பள்ளிக்கூடங்களுக்குப் போய் சில ஆசிரியர்களைப் பிடித்து நூலகத்துக்கு மொத்தமாக புத்தகங்களை வாங்கிப் போட வைத்துவிட முடிகிறது.இந்த ஏரியாவில் முடிசூடா மன்னனாக முன்னர் NCBH மட்டும் இருந்து வந்தது. இப்போது போட்டி அதிகமாகி விட்டது. நல்லது.அப்படிப் போட்டியினால் நிறையக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வந்தால் நமக்கு நல்லதுதானே?
ஆனால் மார்க்கெட்டை மட்டும் மனதில் கொண்டு புத்தகங்களை அடித்துத் தள்ளினால் குப்பைகூளம்தான் மறுபடியும் சேரும். அப்படிச் செய்துவிடாதீர்கள் என எல்லாப் பதிப்பகத்தாரையும் அன்போடு கேட்டுக்கொள்வோம்.
நல்ல புத்தகம் எது? யார் தீர்மானிப்பது?
இதில் பதிப்பகம் நடத்துவோரின் சார்பு- மற்றும் புத்தகம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் அவர்கள் கொண்டிருக்கும் புரிதல்தான் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்தக் கலந்துரையாடலில் கூட நீதிக்கதைகளை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று ஒரு பெரியவர் கேட்டார்.அந்தக்காலத்தில் நீதிக்கதைகளைப் படித்துத்தான் நாங்களெல்லாம் வளர்ந்தோம்.இப்போ பூராவும் டிவி சினிமான்னு ஆகிப்போச்சு என்று வருத்தப்பட்டார்.
நீதிக்கதைகள் படித்து வளர்ந்த இந்திய படித்த வர்க்கம் உருவாக்கியுள்ள இந்த சமூகம் நல்லா இல்லை அல்லவா? ஆகவே அவற்றை நாம் பெருக்கித்தள்ளியாக வேண்டும்.தவிர குழந்தைகளுக்கு நீதியும் அறிவுரையும் சொல்வதுபோல ஒரு அராஜகம் உலகத்தில் எதுவும் கிடையாது. குழந்தைகளுக்கு அது பிடிப்பதுமில்லை.
சரி. இப்போது நம்முடைய குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் பதிப்பகங்களிடமிருந்து நேரடியாகக் குழந்தைகளுக்குப் போய்ச்சேருவதில்லை.அவை ஒன்று பெற்றோர் மூலமாக அல்லது ஆசிரியர்/பள்ளிக்கூடம் மூலமாகத்தான் குழந்தைகளைச் சென்றடைகின்றன. இரா.நடராசன் அக்கூட்டத்தில் சொன்னதுபோல குழந்தைகளுக்கான புத்தகங்களை – நூலகத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியின் மூலம் – ஒருபோதும் குழந்தைகள் தேர்வு செய்வதில்லை.எல்லா வகுப்புகளிலிருந்தும் மாணவ மாணவியரை அழைத்துக்கொண்டு கூட்டமாக புத்தகக் கடைகளுக்குப் போய் அவர்களைத் தேர்வு செய்யச்சொல்லி புத்தகங்களை அள்ளி வருகிற ஒரு தலைமை ஆசிரியரை-ஒரு ஆசிரியரை நம் நாட்டில் காட்ட முடியுமா? அந்த ஆசிரியருடைய அறிவுக்கும் புரிதலுக்கும் ஏற்ப தேர்வு செய்து அடுக்கப்பட்ட புத்தகங்களே பள்ளிக்கூட நூலகங்களில் உள்ளன.அவற்றையும் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ள ஒரு நூலகரை நியமித்துள்ளது தனிக்கதை.நூலகர் பள்ளிக்கூடத்தின் மற்ற எழுத்தர் பணிகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்.பாவம்.
பெற்றோரின் புத்தக ரசனை-புத்தக்க் காதல் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இதே கல்விமுறையால் வளர்த்தெடுக்கப்பட்ட முன்னாள் குழந்தைகள்தானே? நம்முடைய கல்விச்சாலைகள் பன்னிரண்டு ஆண்டுகள் உழைத்து புத்தகக்காதலர்களாக வெளியே வரவேண்டிய நம் குழந்தைச் செல்வங்களை புத்தக விரோதிகளாக மாற்றக் கடுமையான பணியாற்றி வருகின்றன.இதியெல்லாம் தாண்டித்தான் பிள்ளைகள் சரியான புத்தகங்களைத் தற்செயலாகக் கண்டடைந்து படிக்கிறார்கள்.அது எல்லோருக்கும் வாய்க்காதல்லவா? முறைசார் கல்வியிலேயே இதற்கான ஏற்பாடு –புத்தக வாசிப்புக்கு ஆதரவான சூழல் இருந்தால் நாம் எல்லோருமே புத்தக் காதலர்களாக மாறியிருப்போம்.தலைமுறைகள் கடந்தும் நம் நாட்டில் இதுவிசயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அதுபற்றிய ஒரு தன்னுணர்வும் சமூகத்தில் உருவாகவில்லை.
ஆங்கிலக் கல்வி பயிலும் நகர்ப்புரக்குழந்தைகள் சிலர் தீவிரமான புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.தவிர வசதியுள்ள வீட்டுப்பிள்ளைகளுக்கு சொந்தமாக பாக்கெட் மணியும் உள்ளது.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று இன்று நாம் தயாரித்து வழங்குபவையெல்லாமே படித்த மத்திய தர வர்க்கத்துக்க் குழந்தைகளுக்காக மட்டுமேதான்.பல்வேறு பொருளாதார மற்றும் கலாச்சாரப் பினனணியில் வளரும் பல்வேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகள் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. அரைகுறைப்படிப்பாளிகளாக drop out ஆன குழந்தைகளாக நகரத்து வீதிகளிலும் கிராமத்து சிறு தொழில்களிலும் உழலும் குழந்தை உழைப்பாளிகளான வாசகர்கள் பற்றி எந்தப் பதிப்பகத்தாரும் எந்த எழுத்தாளரும் கவலை கொள்வதில்லை என்று சுயவிமர்சனமாக நாம் விவாதிக்க வேண்டும்.
வயது வாரியாக குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களுக்கான புத்த்கங்கள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.
பாரதி புத்தகாலயம்,தாரா பதிப்பகம்,NCBH, குழந்தைகளுக்கான நேஷனல் புக் ட்ரஸ்ட் ,ப்ராடிஜி என எல்லோரும் கூடிப் பேசி இன்னும் சரியான திசை நோக்கி நகர வேண்டும். எழுத்தாளர்கள் இதில்
மிக முக்கியப்பங்காற்றவேண்டியுள்ளது. அதுபற்றித் தனியே விரிவாகப் பேசலாம்.
தயாரிப்பிலிருந்து விநியோகம் வரை குழந்தைகளுக்கான புத்தகம் என்கிற துறையில் அவர்களின் பங்கு ஏதுமில்லாத ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும். நாம் என்பது இதுபற்றி அக்கறை உள்ள எல்லோரையும்.
20 comments:
தோழர்,
கிழக்குப் பதிப்பகத்தின் பட்டறையில் நீங்கள் கலந்துகொள்வது சரியா? முதலாளித்துவ சிந்தனையுடன் செயல்படும் பதிப்பகமே அவர்கள். காசு கிடைக்குமானால் பொதுவுடமை முதல் சோதிடம் வரை எல்லாம் பதிப்பிப்பார்கள். உங்களைப் போன்ற பொதுவுடமைவாதிகள் அவர்களோடு சேர்ந்து வேலை செய்வது சரியா? எனக்கு புரியவில்லை. எனவே கேட்கிறேன்... தவறாக நினைக்க வேண்டாம்.
குழந்தைகளுக்கான நூல்கள் பற்றிய என் ஒரு ஆதங்கம், அவற்றின் மொழி/நடை. 'அமர்ந்திருக்கின்றார்கள்' என்பது போன்ற நீளமான சொற்கள் எந்தக் கவலையும் இன்றி குழநதைகளுக்கான நூல்களில் காணப்படுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் நான் நேஷனல் புக் டிரஸ்ட் ஆலோசனைக் குழுவில் (advisory committee) இருந்த போது இது பற்றி விவாதிக்க ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். கி.ரா, வாசந்தி, நான் ஆகியோர் பேச்சுத் தமிழுக்கு அருகாக நடை அமைய வேண்டும் என வலியுறுத்தினோம். பள்ளி ஆசிரியர்கள் அந்தக் கருத்தைக் கடுமையாக் எதிர்த்தார்கள். குழந்தைகள் கொச்சையான வழக்கில் எழுதத் தலைப்படுவார்கள் என்பது அவர்கள் அபிப்பிராயம்.
இதற்கேனும் உங்கள் பயிலரங்கில் (பட்டறை வேண்டாம் தோழர்) பதில் கிடைக்குமா?
மாலன்
தோழர் சுப்பு,
யாரோடும் பழகாமல் எப்படி பொதுவுடமைக் கருத்தை வேறு ஆட்களிடம் கொண்டு செல்வீர்கள்? எத்தனை பிற்போக்கான கொள்கை உடையவராக இருந்தாலும் காலத்தின் கட்டளையை நிறைவேற்ற அரசியல் அரங்கில் நாம் அவர்களோடு சேர்ந்து இயங்கவில்லையா?
எங்கிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் இருந்தாலும் அங்கு போக நாம் தயங்கக் கூடாது.அப்படி ஒதுங்கினால் அல்லது ஒதுக்கினால் நஷ்டம் நமக்குத்தான்
பதிவுக்கும் கேள்விக்கும் நன்றி. வணக்கம்
மாலன் சார்,
வணக்கம்.
உங்கள் கருத்துத்தான் எனக்கும்.குழந்தைகளுக்கு எழுதப்படும் விஷயம் சீரியஸ்ஸானதாகவும் புதுசாகவும் அவர்கள் அறிவுக்குத் தீனியாகவும் அதே சமயம் நிச்சயமாக மிக இலகுவான வடிவத்திலும் மொழியிலும் இருக்க வேண்டும்.இலகுவான பேச்சு வழக்குக்குப் பக்கத்திலான மொழியில் அறிவுக்குத் தீனியிடாதா விசயங்கலை எழுதினாலும் குழந்தைகல் நிராகரிப்பார்கள் என்பது என் அனுபவம்.என்னுடைய ‘ இருட்டு எனக்குப் பிடிக்கும்’ என்கிற புத்தகத்தில் பாதிக்கு மேற்பட்ட கட்டுரைகள் தோல்விதான்.
அப்புறம் சார், ஒரு ஏழு அல்லது எட்டாம் வகுப்புப் படித்த குழந்தைகள் என்னிடம் கேட்ட கேள்வி இப்போதும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது “ என்னா சார் கட்டுரைன்னு சொல்றீங்க ஆனா ஒரு முன்னுரை இல்லை.உப தலைப்பு இல்லை.முடிவுரை எதுவுமில்லை...”
ஆம்.
ஏழு வருடத்தில் நம் பிள்ளைகளின் மனநிலையை பள்ளி தகவமைத்து விடுகிறது.அவர்களேகூட பேச்சுத் தமிழை வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.ஆகவே நாம் அதற்கும் முந்திய வயதுக் குழந்தைகலிடமே பேச்சுத் தமிழுக்கு அருகான மொழியிலான எழுத்தைக் கொண்டு சேர்த்துவிட வேண்டும்.
பள்ளி முழுமையாக அவர்களின் mindset ஐ தனக்கானதாக வடிவமைக்கும் முன்பாக..
தோழர்,
விளக்கத்திற்கு நன்றி. தற்போது புரிகிறது. நமக்கான வாய்ப்புகளாகவே இதுபோன்ற பட்டறைகளை நோக்க வேண்டும். காலப்போக்கில் இவர்களையும் நாம் வென்றெடுக்க வேண்டும். சரிதானே...
குழந்தைகளை நம்மைவிட புத்திசாலிகள். பல சமயங்களில் நம் அறிவுக்கண்ணைத் திறப்பவர்களே அவர்கள்தான். நான் திருவண்ணாமலையில் இரவு பாடசாலையில் பணிபுரிந்தபோது எட்டாவது படிக்கும் ஒரு கிராமத்து சிறுமி “வரலாறு பாடங்களில் ஏன் வரலாறு 1947ஆம் வருடத்தோடு நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு வரலாறு எதுவும் இல்லையா?“ என்று கேட்டாள்.
எனக்குப் பொட்டில் அடித்தாற் போலிருந்தது. பதில் சொல்லமுடியாமல் திணறினேன். பின்னர் அடுத்த அமர்வில் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்ததை சுருக்கமாக விவரித்தேன்.
வன்முறை என்பது சரியான வார்த்தை. முக்கியமான ஒரு விஷயத்தை விட்டுவிட்டீர்கள் - படங்கள். சோவியத் யூனியன் பதிப்பகங்களின் சிறுவர் நூல்கள் பல சமயங்களில் கடினமான நடையில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் அழகான சித்திரங்களும் உருவாக்கத் தரமும் ஈடுகட்டின.
இங்கு குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குப் படம் வரையும் மரபு இல்லை. வாண்டுமாமா புத்தகங்களுக்குச் செல்லம் வரைந்தவை தவிர நல்ல சித்திரங்கள் எதையும் நான் பார்த்ததில்லை. குழந்தைகளுக்குப் படங்களுடன் நல்ல புத்தகங்களைத் தர சோவியத் யூனியனிலிருந்து ராதுகா பதிப்பகம் வர வேண்டியிருந்தது. பத்திரிகைகள் இருந்தன, ஆனால் அவை ஒருபோதும் புத்தகங்களுக்கு ஈடாக முடியாது.
இப்போது தூளிகா போன்ற சில பதிப்பகங்கள் 'மாடர்ன் ஆர்ட்' பாணி குழப்பிய படங்களைப் போட்டு (படுசுமாரான மொழிபெயர்ப்பில்) அநியாய விலையில் சிறுவர் நூல்களை விற்கின்றன. தமிழில் அது கூட இல்லை. காரணம், படம் வரைய ஆள் இல்லை. இங்கே குழந்தைகள் புத்தகங்களுக்கு யார் வரைகிறார்கள்? ஜெயராஜ், ஸ்யாம் மற்றும் வேறு யாராவது. ஆமாம், நிலைமை அவ்வளவு மோசம்! இங்கே பெரியவர்களுக்காக வரையவே ஆளில்லை!
மொழிநடை பற்றி சொல்லவே வேண்டாம். குழந்தைகளுக்கு எளிய நடையில் எழுத வேண்டும் என்று சொல்பவர்களும் கடினமான நடையில்தான் எழுதுகிறார்கள். அதற்கு என்ன செய்வது? ராதுகா பதிப்பகப் புத்தகங்களின் எண்ட்பேப்பரில் வருவது போல 'இந்தப் புத்தகம் பற்றிக் கருத்து எழுதி அனுப்புங்கள்' என்று போடலாமா? சாரி, கருத்து நீண்டுவிட்டது!
அன்புள்ள தமிழ்
குழந்தைகளுக்கெதிரான வன்முறை பற்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறீர்கள். மேற்படி கலந்துரையாடல் உங்களுக்கு உற்சாகத்தைவிடவும் உறுத்தல்களையே அதிகப்படுத்தி அனுப்பிவைத்தது போல் தெரிகிறது. பெரியவர்களின் 'நலனுக்காக'க் குழந்தைகள் படும்பாட்டைக் காட்டிலும், 'அவர்களது நலனுக்காக'ச் செய்யப்படும் ஏற்பாடுகளால் அதிகம் காயப்பட்டு நிற்கிறார்கள் என்பது உண்மைதான். பள்ளியில் குழந்தைகளை நாயடி பேயடி அடிக்கிற ஆசிரியர்/ஆசிரியை கூட அந்த 'சத்திய பிரமாணம்' எடுத்து வந்துதான் அந்த சாத்து சாத்துகின்றனர்.
காய்கள், கனிகள் போன்றவற்றைவிட உதவாத பேக்கரி, பிட்சா, ஃபாஸ்டா வகையறாக்களை வெளுத்துக் கட்டத் தயாராக நிற்கிற இந்தக்கால நகரங்கள்வாழ் மத்தியதர, உயர் மத்தியதர வீட்டுப் பிள்ளைகள் விஷயத்தில் கூட நல்ல அம்சங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் விதத்தில் உள்ள கோளாறுதான் காரணம் என்று புலப்படுகிறது. 'வழங்கல்' முக்கியமானது. குழந்தைகளை அவர்தம் சுயமரியாதை ஊனப்படுத்தப்படாதவாறு அவர்களுக்குச் சிறந்த வாழ்வியல் அம்சங்களை அம்சமாக அறிமுகப்படுத்தமுடியும். குழந்தைகளுக்காக இலக்கியம் படைக்க விரும்புபவர்களுக்கு இதில் கவனம் வேண்டும்.
குழந்தைகளுக்கான படைப்புகளைப் படைக்கும்போது கூடுதலாக ஒரு சிரமம் உண்டு.
குழந்தைகள் திறந்த மனத்துக்காரர்கள்.
பிடிக்கவில்லை என்பதை நேரடியாக
முகத்திற்கு நேரே போட்டு உடைத்துவிடுவார்கள்......
ஆனால்,
அவர்கள் மனத்தைத் தீண்டிவிட முடிந்துவிட்டாலோ
உங்கள் மடியைவிட்டு
இறங்கவும் மாட்டார்கள்....
தங்களுக்கு விருப்பமான நேரங்களில்
விருப்பாமானவற்றைக்
கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள்
அதிலிருந்து இரண்டு விள்ளல்களை எடுத்து
தாமின்புறுவதைப்
பெற்றோருக்கும் ஊட்டி அவர்கள் இன்புறக்
கண்டு காமுற்றிருப்பார்கள்.
அந்தக் கிண்ணங்களில்
அப்படியான சுவையான
படைப்புகளை வழங்குவோம்
வாரியளா...........
எஸ் வி வேணுகோபாலன்
நீதிக்கதைகள் மற்றும் புராணக்கதைகள் வழியாக மதம் என்னும் விஷ விதைகளையும் விதைத்து கொண்டுருக்கிறார்கள்.
//ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும்//
நாம் என்ன செய்ய வேண்டும்?
நீதிக்கதைகள் மற்றும் புராணக்கதைகள் வழியாக மதம் என்னும் விஷ விதைகளையும் விதைத்து கொண்டுருக்கிறார்கள்.
//ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும்//
நாம் என்ன செய்ய வேண்டும்?
நான் உங்கள் வலைக்கு இன்று தான் வருகை புரிந்தேன்.. பல புதிய பின்னுட்டங்களை பார்த்தேன்....
”அது என்ன மாலன் சார்”........... எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு காலத்தில் கூரிய ரஜினி சாரின் ஞபகம் வருகிறது...
இயல்பாக இருப்போம் தோழர்...
மயில்சாமி,வேல்கண்ணன்,வேணுகோபாலன்,சாத்தான்,சுப்பு அனைவருக்கும் நன்றி.
ராமகிருஷ்ணன் ரஜினியை சார் என்றதால் நாம் யாரையும் சாரென்று அழைக்க்ப்படாதா என்ன? ஒரு மரியாதைக்காக சார் போடுவது தப்பில்லை.நெருன்க்கமாகப் பழகிவிட்டால் அப்புறம் சார் போய்விடும்.
குழந்தகளுக்கான புத்தகங்களை நாம் எல்லோருமே உருவாக்க முயற்சிக்க வேண்டும்.அதில் சக படைப்பாளிகளாக- Co-writers ஆக குழந்தைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.படங்கள் வரைய நாம் ஓவியர்களைத் தேடணும் என்பது எல்லா நேரமும் தேவையில்லை.குழந்தைகளிடமே வரையக்கேட்டு வாங்கலாம்.வம்சி புக்ஸ் வெளியிட்ட சகானாவின் மொழிபெயர்ப்பு நூலுக்கு 10 வயது வம்சிதான் ஓவியர்.அற்புதமாக வரைகிறார்.மாரீஸ்ஸின் பையன் சசி என்ன தீர்மானமான கோடுகளோடு வரைகிறான்.அடேயப்பா எல்லாக் குழந்தைகளும் ஓவியர்கள்தாம்.நாம்தான் அவர்கலைப் பொருட்படுத்துவதே இல்லையே -அவர்களுக்கான புத்தகம் என்கிரபோதுகூட.
Dear Comrade,
I cannot type tamil, that’s why I am responding in English.
I have always wondered why we (in Tamilnadu) are not able to publish good children’s literature like Kutti Ilavarasan, Alice-in Arputha Ulagam etc. In Kerela the situation is entirely different. In our Thulir magazine (published by Tamilnadu Science Forum), in recent times we have published more Malayalam translations (both fiction and science articles). Also through our “Science Publications”, we have published more number of Malayalam translations. Sivadas, K.K. Krishnakumar, Janu, Sumangala – how come they are able to write good stuff for children. The four writers I’ve mentioned are only samples. KSSP, DC books have got lot of writers like them.
I think the main reason for lack of good children’s literature here is, we have not understood our children better. The language, form, content etc. are all important, but the primary aspect to produce good books for children lies in understanding them better. We’ll have to speak with them, work with them and in the process we’ll have to decide what they want.
I remember you telling me once about one of your well written books, “Iruttu Enakku Pidikkum” is a failure. If “Iruttu…” itself is a failure, then what can one say about the rest of the books (kuppaigal as you’ve mentioned). In recent times, Era. Natarasan has written some good books for children. He being a teacher has a nice opportunity to move with children, which is a great advantage. Yuma has done some good translations. We also need translations.
While finishing, we had mentioned that Bharathi Puthagalayam, Tara Books, NCBH, NBT, Prodigy should all discuss among ourselves and go in a right direction. Please include “Science Publications” (Ariviyal Veliyeedugal) also in the list.
Best Wishes,
Harish
yes.. harish ..i am part of the science forum..without science publication which is the pioneer book publisher for children in TN what will be there?
Add to ur comments that we in TN donot care for our children
The objective of any book/literature (whether for adults or children) is to share life experiences and through them, knowledge and information. Children's literature in particular has to be careful to build from known levels of world exposure to unknown. For example, emotions of various kinds - life, love, death - etc. can not be experienced in our own lives most times - but we can go through such experiences from the words of the writer. I agree completely with your observations and also to Harish's that good children's literature comes from knowing the children closer, and apart from it, the writer re-living his or her childhood once he is in the process of creation. Raghu/Pondicherry.
மதிப்புற்குரிய பெரியோர்களுக்கு எனது வணக்கம்.
நம்மிடம் ஏற்கனவே அனேக நல்ல புத்தகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
உதாரணமாக ,தெனாலி ராமன், பரமார்த்த குரு, முல்லா நஸ்ருதீன், ஈசாப் குட்டி கதைகள் போன்ற கதைகள் காலம் காலமாக பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவராலும் விரும்பபடுகிற ஒன்று. மற்றும் இன்றைய சூழலில் வரும் புத்தகங்கள் தொலைகாட்சியில் வரும் பாத்திரங்களையே அடிப்படயாக வைத்து வருகிறது. குழந்தைகளுக்கும் அதில் வரும் பாத்திரங்கள் தங்களுக்கு ஏற்கனவே பரீட்சயம் ஆகி உள்ளதால் அதனை பற்றி கற்பனை செய்து கொள்ள எதுவாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. நம் குழந்தைகள் பேச்சு போட்டியில் வீர சிவாஜி தன் தாயாரிடம் கதை கேட்டு வளர்ந்தார் என பேசுவார்கள், நம் குழந்தைகளுக்கு இன்று தொலைக்காட்சியை அனைத்து விட்டு எத்தனை தாய்மார்கள் கதை சொல்லுவார்கள். நான் புதிய முயற்சியை வரவேற்கிறேன் ஆனால் பழைய கதைகள் பிரயோஜனம் இல்லை என ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.இன்று க்ரேயான்ஸ் என்ற மெழுகினால் ஆனா வர்ண பூச்சுக்கள் மற்றும் ஓவிய புத்தகங்களையும் பெற்றோர்கள் வாங்கி கொடுத்து விட்டு தங்கள் கடனை முடித்துகொள்கிறார்கள். ஆயிரம் புத்தகங்கள் வந்தாலும் பெற்றோர்களின் மூலமே அது குழந்தையை அடையும் அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வது சிறப்பு.
உங்கள் முயற்சிக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் கிண்டி சிவசங்கர்
Dear Tamiz and all thouse who have participated in the discussion. sorry i could not type Tamil and hance comments in English.
Another point that i would like to bring as regards children's literature is what narratives we prefer and offer. If you study the history of childrens literature we can see that initially it was catcesim the dominant style. That is in a simple way children were to know the RIGHT answers for questions posed by the adults.
But with the spread of radical movement, one sees emergence of a new grnre of writing- dialoges. But even in dialoges the children are treated as passive recipients.
In modern times people around the world have tried new forms/ genere. In fact the a new style being persued by Era Natarajan in Thulir - Manga madayan Pathilkal- is in fact to be noted with due care. It is indeed path breaking.
non-fiction; essays for children needs to be explored. new genres are to be tried out.. discussed. What about travel writing for children? Open up and make them look a the wrold as not 'monotonos' but multiple cultures- like a flower garden with flowers in various colour and shapes.
One thing i find bit unacceptable is to treat children as some one with less capacity. Poeple saying 'Oh this cannnot be understood by children'; i think is not tht correct. The logic of the reality; the dynamics of the nature could/ should be communicated and could be communicated.
Then a most important issue. Children? What children? Children of today - who come to know about many hushed things through the TV serials? These chidlrens are very much differnt from the childhood most of us had- be it in villagtes or cities. Are we addressing the issues that children face today. I have seen two books- one on divorce and other on people of same sex livign together. The books are for children! In the western world where these are everyday phenomena and children have to face it they have books on these issues. What about issues that our children face today in thier life? - working mothers; small family etc...I am not sure if the Malguids (though it is indeed such a fine piece) or Tamil Vanan could meet the current demands. Are we even exploring the world of today's child/ young?
Given the fact that Amar Chitrakatha etc popularise the dominat culture (Puran etc), most of us are not even aware of the local cultural folk tales... what about books for children on local history/ folk tales (i do not mean moral stories... but on Neduncheziyan etc.. stories/legends that connect to the Tamil culture)
easy to adcive... i know...
thaks
T V Venkateswaran
munnalam ambuli maama, thenali raman kathaigalin meel perithana oru iirpu kuzanthaigaluku irukum. ipa kovil vaasalil 10 ruvavirku thenali ramain puthi saathuryangal virkappadukindrana. venumnu sonna oru kuzanthaiyin azugaiyai oru thaai ...ithu venam.unaku remote vacha car vaangi thaarenu sonathai neradiyavee paarthen. maalan solvathu poola manasuku nerukamana mozhiyee intha idaivelaiyai nirapa mattum ila..video games,play stationu maariyirukum kuzanthaikalai vaasikavum thuundum
நீதிக்கதைகள் படித்து வளர்ந்த இந்திய படித்த வர்க்கம் உருவாக்கியுள்ள இந்த சமூகம் நல்லா இல்லை அல்லவா? ஆகவே அவற்றை நாம் பெருக்கித்தள்ளியாக வேண்டும் // ஹா ஹா அருமை.
"நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் அவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருங்கள்." - 'புதிய குழந்தை'யில் ஓஷோ சொன்னது ஞாபகம் வருகிறது.
படிப்பார்வம் உள்ள குழந்தைகளை கடினமான மொழிநடை பாதிக்காது என்றே நினைக்கிறேன். ராதுகா பதிப்பகத்தின் அப்பாவின் கடிதம் என்று நினைக்கிறேன் புத்தகத்தை அவர்களுடைய பெயர் வாழிடம் போன்ற எதுவும் புரியாமலேயே சிறுவயதில் பலமுறை வாசித்திருக்கிறேன். எனவே கடின மொழிநடை அவர்களை உயர்த்துமே தவிர தோய்வடையச்செய்யாது என்றே நினைக்கிறேன். கருத்தாழத்தைப்பொறுத்தவரை உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து இல்லை.
anbulla thoazar sa.thamizh selvan ippothuthaan naan ungal matter padiththen... niingal solvathu mikavum sariye... balaji.k
Post a Comment