Monday, April 20, 2009

கலை மனதின் எழுச்சியும் வீழ்ச்சியும்

balusir2 balusir

 

2008க்கான சிறந்த தமிழ்த்திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழாவை நேற்று முன்தினம் சென்னையில் நடத்தினோம்.இயக்குநர் பாலுமகேந்திரா பேசும்போது குறிப்பிட்ட சில விஷயங்கள் முக்கியமானவை.

இயக்குநர் பாலச்சந்தர் ஒரு நேர்காணலில் Directors are born.You cannot teach direction என்று சொன்னாராம்.

No personality is Born. என்பது பாலுசாரின் எதிர்வினையாக இருந்தது.நான் எப்போதும்போல் பாலு மகேந்திராவின் பக்கம்தான்.

A dancer is born .A singer is born

A writer is born என்றெல்லாம் இப்படியே விரித்துச்செல்ல முடியுமா? என்று யோசிப்போம்.

ஒருவர் சிறந்த நாட்டியக்கலைஞராகப் பரிணமிக்க பயிற்சி தேவை.தாளம்,அடவுகள் இவையெல்லாம் முறையாகக் கற்றுக்கொண்ட பிறகுதான் ஆட முடியும்.அப்புறம் அவர் ஆடுவதெல்லாம் கலை ஆகிவிடாது.ஆடி ஆடிக் கலையின் மையத்தைத்தொட முயற்சிப்பார்.ஒரு மணிநேர ஆட்டத்தில் சில நிமிடங்கள்தான் கலையாக மிளிரும்.பாப்பம்பாடி ஜமாவில் பத்துப்பேர் தப்பு அடித்து ஆடினாலும் ஆட்டம் துவங்கி பத்து நிமிடத்தில் முனுசாமியின் அசைவுகளில் மட்டும் கலை துள்ளி எழுவதை நாம் பார்க்கிறோம்.பரதம் பார்த்துப்பழகியவர்களும் பத்மாவின் நடன அசைவுகள் முத்திரைகள் ஒரு கட்டத்தில் கலையாக உயர்வதைப் பார்ப்பார்கள். அந்த நிமிடத்துக்காகக் காத்திருப்பதுதான் நம் கடமை.

பாடகர் சாதகம் செய்வதும் தாளம் சுதி இவற்றுக்குள் நின்று பயிற்சி கொள்வதும் அடிப்படையான தேவைகள்.நாட்டுப்புறப் பாடகர்களுக்கும்கூடப் பாடப்பாட ராகம் என்கிற அளவிலேனும் பயிற்சி உண்டு.

ஒரு எழுத்தாளனுக்கு மொழியின் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும்.கி.ரா, மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற பள்ளிக்கல்வி கிட்டாத எழுத்தாளர்களுக்கும் கூட பேச்சுமொழியின் நுட்பங்களேனும் தெரிந்திருக்கும். கலைப் படைப்பின் உருவாக்கத்தின்போது in the process of creating நாம் பெற்ற பயிற்சி உதவும் –கை கொடுக்கும்.

நாங்கள் எங்கள் அமைப்பின் சார்பாக கவிதைப்பயிலரங்குகள்,சிறுகதைப்பட்டறைகள் நடத்தும்போதெல்லாம் அப்படியே தட்டி நெளிச்சு கவிஞனாக ஆக்கிடுவீங்களா என்று நக்கல் செய்தவர் உண்டு. நமக்கு எழுத வராது என்பதை அறிந்து கொள்ளவேனும் அத்தகு பட்டறைகள் பலருக்கு உதவியிருக்கின்றன.

அதேபோல எழுதிய எழுத்தெல்லாம் இலக்கியமாக ஆகிவிடுவதில்லை.ஒரு நீண்ட கவிதையில் ஓரிரு வரிகள்தானே கவிதை.அந்த வரிகளைக் கண்டடைவதற்காக நாம் முழுக்கவிதையையும் (இதர வரிகளை மன்னித்து) வாசிக்கிறோம்.அந்த ஒரு வரியின் வெளிச்சத்தில் மற்ற வரிகளும் மினுங்க வாய்ப்புண்டு.இன்னும் வேறு மாதிரி சொன்னால் எல்லா வரிகளுமே அந்த ஒருவரிக்காக –அந்த வரியைக் கண்டடைவதற்காக கவிஞன் எழுதி முயற்சித்த வரிகள் எனலாம்.

எனவே கருவிலேயே திருவுடையவன் என எவனும் இப்பூமியில் இருக்க முடியாது-கலையையும் இலக்கியத்தையும் பொறுத்தவரை.

பாலுமகேந்திரா சொன்ன இன்னொரு முக்கியமான விசயம் – ஒரு கலைஞனின் கலை வாழ்வில் துவக்கம் –பயணம்- உச்சம்- சரிவு- வீழ்ச்சி- என ஒரு தன்மை உண்டு.பாரதியைப்போல புதுமைப்பித்தனைப்போல அவர்களின் கலை உச்சத்தில் இருக்கும்போதே மரணம் கிட்டியவர்கள் பாக்கியவான்கள். தன் சரிவை உணர்ந்தபின்பு செத்துவிட முடியாதவர்கள் மௌனம் காப்பது சிறந்தது.சத்யஜித்ரேயின் இறுதிக்காலத்தில் அவர் எடுத்த படங்களில் அவரின் வீழ்ச்சியைத் தான் கண்டதாகக் குறிப்பிட்டார் பாலுசார்.

ரேயின் கடைசிப்படமான Agantuk நான் பார்க்கவில்லை.ஆனால் அதற்கு முந்தைய இரு படங்களான கணசத்ரு வும் ஷாகா ப்ரஷாகா வும் பார்த்தேன். ரேயின் கலை மேதமை மிளிரும் இடங்கள் இருபடங்களிலுமே உண்டு என்பது என் கருத்து.

ஒரு கலைஞனை அவனுடைய உச்சபட்ச காலத்துப் படைப்புகளை மட்டும் வைத்தே கணிக்க வேண்டும் .அவனுடைய low ebb இல் வந்த படைப்புகளை வைத்து எடை போடக்கூடாது என்பது பாலுமகேந்திராவின் கருத்து.ஒரு நுட்பமான கலைஞனின் ஆழ்மனதில் படரும் ஒருவித அச்சத்தின் சாயையாக இக்குரல் எனக்குப்பட்டது.

இதுவும்கூட விவாதத்துக்கு உரியதுதான். எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும்.மோசமாகி வந்த படைப்புகளை பெரிதாக நாம் எடுத்துக்கொண்டு அதையே போட்டுத் தாக்கப் பயன்படுத்திவிடக்கூடாது. நல்லதோ கெட்டதோ எல்லாம் அந்தக் கலைமனதிலிருந்து வந்ததுதானே.

திறந்த மனதோடு படைப்புகளையும் படைப்பாளியையும் அணுகும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டால் கலைஞர்களுக்கு இத்தகைய அச்சம் வராது என்று படுகிறது.

தவிர உச்சம் /சரிவு /வீழ்ச்சி என்பதெல்லாம் கூட ஒரு ஒழுங்கில் வருவதில்லை மாறி மாறித்தான் வருகின்றன. ஒரு படைப்புக்குள்ளேயே கூட எழுச்சியும் வீழ்ச்சியும் இருப்பதில்லையா?

இப்படித்தொடர்ந்து பேசுவதற்கும் விவாதிப்பதற்குமான தூண்டுதலை பாலுமகேந்திராவின் பேச்சு தந்துள்ளது. தமிழின் மிகச்சிறந்த கலைஞனல்லவா?

பி.கு

எங்கள் மாநில மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக பாலு மகேந்திரா அவர்கள் பணியாற்றினார்கள்.இலங்கைப்பிரச்னையில் எம்மோடு எம் நிலைபாட்டோடு நேர் எதிரான நிலையில் நிற்கும் அவர் ஒவ்வொரு நாளும் தன் எதிர்ப்பை வெளிப்படையாக தனிப்பட்ட முறையிலும் எல்லாக் கூட்டங்களிலும் அழுத்தமாகப் பதிவு செய்துகொண்டே எங்களோடு சேர்ந்து பணியாற்றினார். என்ன ஒரு ஜனநாயகவாதி அவர் என்கிற வியப்பு இன்னும் எமக்குத் தீரவில்லை.கருத்து வேறுபாடுகளோடு கூட , சேரும் புள்ளிகளில் சேர்ந்து பணியாற்ற முடியும் என்பதற்கு அவரைவிட மிகச்சிறந்த உதாரணம் வேறு யாருமில்லை. அவரை அவருடைய கருத்து வேறுபாட்டோடு சேர்த்தே அங்கீகரித்துக் கொண்டாடும் மனநிலை எமக்கும் இருக்கிறது.

19 comments:

Suresh said...

arumaiyana pahtivu :-) நிறைய உழைத்து பதிவு போட்டுறிக்ங்க

ச.தமிழ்ச்செல்வன் said...

nandri suresh

ஆ.ஞானசேகரன் said...

//அதேபோல எழுதிய எழுத்தெல்லாம் இலக்கியமாக ஆகிவிடுவதில்லை.ஒரு நீண்ட கவிதையில் ஓரிரு வரிகள்தானே கவிதை.அந்த வரிகளைக் கண்டடைவதற்காக நாம் முழுக்கவிதையையும் (இதர வரிகளை மன்னித்து) வாசிக்கிறோம்.//

எதார்த்தமான உண்மை..

மாதவராஜ் said...

ஆஹா!.. மிகச் சரியான விஷயத்தை முன்வைத்து இருக்கிறீர்கள். பல கேளிவ்களுக்கான தெளிவு இருக்கிறது உங்கள் பதிவில். நன்றி.

Anonymous said...

பாலுமகேந்திராவோடு இணைந்த்து உங்களுக்கு புரட்சித்தலைவியோடு இணைந்த்தை ஞாபகப்படுத்தி இருக்குமே...தனி ஈழத்தை ஆதரிக்கும் பாமக மற்றும் மதிமுக வேடு சேர்ந்த்தையும் ஞாபகப்படுத்தி இருக்குமே

Anonymous said...

ஒருவன் பிறப்பால் கலைஞன் ஆகின்றானா இல்லை பயிற்சியால் கலைஞன் ஆகின்றானா என்பதை நீங்கள் அந்தரத்தில் விட்டுவிட்டீர்கள்....
ஒரு கலைஞனுக்கு உச்சம் சரிவு வீழ்ச்சி என்பதை அளவிட அவரது சமூக கண்ணோட்டமும் அதில் தோய்ந்த அவரது வேலையும் அளவுகோலா அல்லது கலை சம்பந்தப்பட்ட விசயங்கள்தான் அளவுகோலா....
உச்ச‌க‌ட்ட‌ம் என்ற‌ பொழுதில் ஒருவ‌ர் ச‌மூக‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌ங்க‌ளை எழுதிவிட்டு பிற‌கு ப‌ல‌ பிற்போக்கு அம்ச‌ங்க‌ளை அல்ல‌து த‌னிந‌ப‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌ங்க‌ளை எழுதுவார்க‌ள்.. க‌ன்னா பின்னா என்று பித‌ற்றி அமெரிக்காதான் சோச‌லிச‌ ச‌மூக‌ம் என்றெல்லாம் பித‌ற்றுகின்றார்க‌ளே.. இவ‌ர்க‌ளை க‌ட‌ந்த‌ கால‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் என்ற‌ முறையில் வைத்தா அள‌விட‌ வேண்டும்...

க‌விதை ப‌ற்றிய‌ உங்க‌ள‌து க‌ண்ணோட்ட‌த்தை புரிய‌முடிய‌வில்லை. சில‌வ‌ரிக‌ள்தான் க‌விதையாக‌ இருக்க‌ம் எனில் அத‌னை புரோஸ் என்றுதானே கூற‌முடியும். அத‌ற்கென்ன‌ த‌னியாக‌ க‌விதை என‌த்த‌குதி... க‌விஞ‌ன் அடைத்த‌ மையில் எழுதிய‌து என்ப‌தாலா

Anonymous said...

பாரதி கடைசில் எழுத முனைந்த்து எட்டப்பனது வரலாறுதான். புதுமைப்பித்தன் எழுதியது சரஸ்வதி சபதம் திரைக்கதைதான்...

Anonymous said...

//"எனவே கருவிலேயே திருவுடையவன் என எவனும் இப்பூமியில் இருக்க முடியாது-கலையையும் இலக்கியத்தையும் பொறுத்தவரை"..//

அது ஏன் தோழர் "கலையையும்-இலக்கியத்தையும் பொறூத்தவரை"- என்று குறுப்பிடுகிறீர்கள்?இந்த மூன்று வார்த்தைகளை நீக்கி இருக்களாமே..
"எனவே கருவிலேயே திருவுடையவன் என எவனும் இப்பூமியில் இருக்க முடியாது" தானே?

அன்புடன்
-மயில் ராவணன்..

Joe said...

//
அவரை அவருடைய கருத்து வேறுபாட்டோடு சேர்த்தே அங்கீகரித்துக் கொண்டாடும் மனநிலை எமக்கும் இருக்கிறது.
//
இப்படியொரு மனநிலை எல்லோருக்கும் இருந்தால் பல இடங்களில் வெட்டு, குத்துகளுக்கு இடமிருக்காது.

Deepa said...

//எனவே கருவிலேயே திருவுடையவன் என எவனும் இப்பூமியில் இருக்க முடியாது-கலையையும் இலக்கியத்தையும் பொறுத்தவரை.//

வணங்குகிறேன்.

//நமக்கு எழுத வராது என்பதை அறிந்து கொள்ளவேனும் அத்தகு பட்டறைகள் பலருக்கு உதவியிருக்கின்றன.//

நான் கூட அதைத் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளத் தான் பதிவுலகத்துக்கு வந்தேன். :-)

வெற்றி-[க்]-கதிரவன் said...

பாலுமகேந்திரா = நேர்மையான கலைஞன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//கருவிலேயே திருவுடையவன் என எவனும் இப்பூமியில் இருக்க முடியாது-கலையையும் இலக்கியத்தையும் பொறுத்தவரை.//

100 சதவிதம் ஏற்றுக்கொள்ள கூடியதும், உண்மையும் கூட

//தமிழின் மிகச்சிறந்த கலைஞனல்லவா?//

எள்ளளவும் மாற்றுக்கருத்து கிடையாது.

ச.தமிழ்ச்செல்வன் said...

தோழர் மயில் ராவணனுக்கு,

சில குழந்தைகள் ஆறு ஏழு வயதிலேயே கணிணித்துறையில் ஒரு பொறியாளருக்கு இணையாக இயங்குவது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம் அல்லவா.அதில் சிறு தெளிவு இன்னும் எனக்குத் தேவைப்படுகிறது.அத்தகு விதி விலக்குகளுக்கு இடம் இருக்கட்டும் என்றுதான் கலை இலக்கியத்தோடு நான் நிறுத்தினேன்.

வருகைக்கு நன்றி.

psycho said...

//உச்சம் /சரிவு /வீழ்ச்சி என்பதெல்லாம் கூட ஒரு ஒழுங்கில் வருவதில்லை மாறி மாறித்தான் வருகின்றன//

உண்மை.

வாழ்க்கை என்பது வாய்ப்பாடு(formula) அல்ல வறையறுக்க,அது மர்மமான புதிர்.

rvelkannan said...

'சித்திரமும் கை பழக்கம் செந்தமிழ் நா பழக்கம்' என்ற ஓளவையின் வாக்கு, 'முன் ஜென்மத்து வினை அல்லது பயன்' என்ற ஆதிக்கவர்க்கத்தின் எண்ணத்திற்க்கு எதிர் வினையானதும் உண்மையும் கூட.
பாலுமகேந்திரா போன்றவர்களிடம் நாமும் நம் இனமும் கற்று கொள்ளவும் பெருமைபட வேண்டிய விஷயங்களும் நிறைய உள்ள என்று தெரிகிறது.

rvelkannan said...

'சித்திரமும் கை பழக்கம் செந்தமிழ் நா பழக்கம்' என்ற ஓளவையின் வாக்கு, 'முன் ஜென்மத்து வினை அல்லது பயன்' என்ற ஆதிக்கவர்க்கத்தின் எண்ணத்திற்க்கு எதிர் வினையானதும் உண்மையும் கூட.
இன்றளவிலும் சங்கிதம் என்பது தன்னுடைய இனத்துக்குரிய திறமை என்று கருதிக் கொண்டிருபவர்களும் உண்டு.
பாலுமகேந்திரா போன்றவர்களிடம் நாமும் நம் இனமும் கற்று கொள்ளவும் பெருமைபட வேண்டிய விஷயங்களும் நிறைய உள்ள என்று தெரிகிறது.

மக்கள்தாசன் said...

பிறப்பொக்கும் எல்லோர்க்கும் என்பது வள்ளுவன் மொழி சமுகம் தான்
பண்முகங்களோடு நம்மை உருவாக்குகிறது திரை இயக்குனர் சொன்னது முழுவதும் உண்மை

Unknown said...

"nothing is heredity other than death " என்பது நிதர்சனமான கருத்து....ஆயினும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும்(பாலு சாருக்கு ஒளிப்பதிவு போல) அதனை அவனை அன்றி வேறு யாரும் சிறப்பாக வெளிக்கொண்டு வர முடியாது என்ற கோணத்தில் பாலு சார் சொல்லியிருப்பார் என நினைக்கிறன்......

காதர் அலி said...

உங்கள் மாற்றுக் கருத்தை மதிக்கும் குணம் வாழ்க.