Friday, April 17, 2009

பூக்களின் மீது கந்தகம் வீசுகிறவர்கள்...

nanmaran

மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக ( கடந்த இருமுறையாக )ப் பணியாற்றிவரும் திரு நன்மாறன் அவர்களை எளிமையின் சின்னமாக – எவரும் பழகுதற்கு இனிய நண்பராக- ஏழை எளிய மக்கள் யாரும் எளிதில் தொடர்பு கொள்ளத்தக்க ஒரு மார்க்சிஸ்ட் தோழராக மட்டுமே வெளி உலகம் அறியும்.

அவர் ஒரு கவிஞர்.குழந்தைகளுக்குப் பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்.சங்க இலக்கியங்களின்பால் அளவற்ற ஈடுபாடு கொண்டவர்.தமிழின் மீது தீராக்காதல் கொண்டவர்.

சிறுவர் முதல் பெரியவர் வரை எவரிடத்தும் மிகுந்த மரியாதையுடன் பழகுபவர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர்.கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவரோடு நான் நெருங்கிப் பழகிவருகிறேன்.இவ்வளவு எளிமையும் அடக்கமும் உள்ள மனிதர் இருக்க முடியுமா என்று ஒவ்வொரு முரையும் ஆச்சரியப்படுத்துபவராகவே இருக்கிறார்.அவருடைய வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது இவ்வளவு சிறிய வீட்டில் எப்படி இவ்வளவு பெரிய குடும்பத்துடன் வாழ்கிறார் என்கிற வியப்பும் வருத்தமும் ஒருசேர என்னைத் தாக்கியது.அவரது வறுமை பற்றி எந்தப் பிரஸ்தாபமோ வாழ்க்கையின் மீது புகாரோ ஏதுமில்லாத மனிதராக காற்றைப்போல காலத்தின் கரைகளைக் கடந்துகொண்டிருக்கும் மனிதர் அவர்.

நேற்று அவர்மீது கொலை முயற்சி நடந்துள்ளது மதுரையில். ஒரு பூப்போன்ற மனிதரைக்கூட ஆயுதம் கொண்டு தாக்கிட எந்த ரவுடிக்கும் மனம் வருமா ?

வரும் என்று மதுரையின் அஞ்சாநெஞ்சர்கள் நேற்று காட்டியிருக்கிறார்கள்.நாம் என்னாமாதிரியான ஓர் உலகத்தில் எப்படியான இறுகிய மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது நினைக்க மனம் பாதைக்கிறது.வரும் நம் தலை முறைக்கு இப்படியான உலகத்தைத்தான் நாம் விட்டுச்செல்லப்போகிறோமா?

மதுரையில் பச்சைக்குழந்தை மாதிரியான என் மகன் அழகிரியை மார்க்சிஸ்ட்டுகள் என்ன செய்யப்போகிறார்களோ என அஞ்சுகிறேன் என்று போன வாரம் டாக்டர் கலைஞர் தமிழினத்தலைவர் செம்மொழி கொண்டான் எழுதிய கடிதம் எதற்காக என்பது இப்போது செயல்விளக்கம் பெறத்துவங்கியுளது. அப்போதே நான் நினைத்தேன் கருணாநிதி தன் பிள்ளைப்பாசத்துக்காக இதை எழுதவில்லை.தன் கட்சித்தொண்டர்களான ( லீலாவதியைப் பட்டப்பகலில் பெண் என்றும் பாராமல் படுகொலை செய்த ) தன் உடன்பிறப்புகளை உசுப்பிவிடத்தான் இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் என்று. அது நிசமாகிவிட்டது. அழகிரி வீட்டின் மீது அவர்களே நாலு கல் எறிந்துவிட்டு ஆ மார்க்சிஸ்ட்டுகள் வன்முறை என்றும் நாடகமாடுவார்கள் என்றும் இப்போது சந்தேகப்படுகிறேன். இவையெல்லாம்தான் பாசிஸ்ட்டு நடைமுறைகள்.

இந்திராகாந்தியும் பி.ராமமூர்த்தியும் ஒரே விமானத்தில் ஒருமுறை பறக்க நேரிட்டபோது இந்திரா கேட்டாராம் ‘ எப்ப பார்த்தாலும் என் பிள்ளை சஞ்சய் காந்தியை கரிச்சுக்கொட்டறீங்களே உங்ககிட்ட இருந்து என் பிள்ளையை எப்படிக் காப்பத்த்ரதுன்னே தெரியலியே ‘ என்று .அதற்கு ராமமூர்த்தி பதில் சொன்னாராம் ‘ உங்க கவலை அப்படி இருக்கு.என் கவலை இந்தப் பிள்ளையிடமிருந்து இந்தியாவை எப்படிக் காப்பாத்தறதுன்னு இருக்கு’

இன்று தோழர் ராமமூர்த்தி இல்லை.இருந்திருந்தால் இந்தப்பிள்ளையிடமிருந்து மதுரையையும் தமிழ்நாட்டையும் எப்படிக்காப்பாத்தறதுன்னு செம்மொழி கொண்டானிடம் நேரடியாகவே கேட்டிருப்பார். அதெல்லாம் உறைக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

13 comments:

Karthikeyan G said...

//நாம் என்னாமாதிரியான ஓர் உலகத்தில் எப்படியான இறுகிய மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது நினைக்க மனம் பதைக்கிறது.//

Yes Sir :(
I was more shocked to see no media reporting this today.

நாம் எப்படியான சுயநலம்மிக்க மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். :(

Anonymous said...

பாலதண்டாயுதம் தனது நண்பரைக் கொன்றார் என கலைஞர் சொன்னதுக்கு எந்த பதிலும் சொல்லவில்லையே ஏன் அது மெய்யாலுமே நடந்துச்சா...

விடுதலை said...

கருனாநிதியின் தோல்விபயம் வெறியாக மாறி புத்திரபாசம் புத்தியை கெடுத்துவிட்டதால் தனது உத்தரவுகளை கவிதை மூலம் தெரிவித்துவிட்டார் அப்பா.

அப்பாவின் ஆசைக்கு தீனிபோட ரவடித்தனத்தையும் அராஜகத்தையும் அரம்பித்து இருக்கிறார் ரவுடி அழகிரி.

தனது கொள்கைக்காவும் தாம் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக எத்தகைய எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மார்க்சிஸ்ட்டுகளிடம் அதிகம் உண்டு. தேர்தல் களத்தில் என்ன விளைகொடுத்தாவது ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று செயல்படும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் மேடைகலைவானர் என்று மக்களால் அழைக்கப்படும் மெல்லி தேகமும்,எளிமையின் அடையாளமாக வாழ்வும் அருமைதோழர் தாக்கப்பட்டது கண்டிக்க தக்கது.

விடுதலை said...

அனானிக்கு நிங்கள் கேட்ட கேள்வி தோழர் நல்லகண்ணு அவர்களின் அறிக்கை.

தமிழக முதல்வர் புதனன்று வெளியான முரசொலியில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதையில் மறைந்த தலைவர் பாலதண்டாயுதம் குறித்து அவதூறான கருத்தை வெளியிட்டுள்ளார். அந்தக்கவிதையில் அவர் கூறியுள்ளதாவது:

... தலை மறைவு வாழ்க்கையின் தபோதனராய் மாறி நின்று தன் நண்பனுக்குத் தாரமாய் வாய்த்தவளைத்தா பத்துக்குப் பலியாக்கி தடுத்துநின்ற தோழனைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்து ஆயுள் தண்டனை பெற்றுச்சிறைப்பட்ட தண்டாயுதத்தின் பேரால் அமைத்தீர்கள் கட்சி இல்லம் ... அழைத்தீர்கள் பரோலில் அவரைஅருணாசலேஸ்வரர் நகரில் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு!...

இவ்வாறு பாலதண்டாயுதம் மீது அருவருக்கத்தக்க, அபாண்டமான குற்றச்சாட்டைத் தமிழகத்தின் மூத்த முதுபெரும் தலைவராகத் தம்மைக் கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அதில் சின்ன துரும்பெடுத்து அதைத் தூணாகச் சித்தரித்து என்று ஒரு வரியெழுதிக் கம்யூனிஸ்ட் கட்சியினரை வசைபாடியுள்ளார். என்னைப் பொறுத்தவரை தூணும் இல்லை, துரும்பும் இல்லை. அவர் கூறுவதில் உண்மையும் இல்லை.

கருணாநிதி குற்றம் சாட்டியுள்ள பாலதண்டாயுதம் 1936 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்து வந்தார். அப்போது நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அப்போது வெடித்துக் கிளம்பிய நாட்டு விடுதலைப் போராட்டத்திலும்முழுமை
யாகப் பங்கு கொண்டார். பிறகு 1940ல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது கம்யூனிஸ்ட் என்பதற்காகப் பாலதண்டாயுதம் கைது செய்யப்பட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ராஜாஜி, கல்கி ஆகியோரும் அவருடன் சிறையில் இருந்துள்ளனர்.

சிறையிலிருந்து வெளிவந்த கல்கி அப்போது சிறைச்சாலையில் இருந்த நிலைமை குறித்து 3 மாதக்கடுங்காவல் என்று ஒரு நூலே எழுதினார். அதில் அவருடன் சிறையில் இருந்த பல தலைவர்கள் அனுபவித்த சிறைக்கொடுமைகள்குறித்துஎழுதியுள்ளார். பாலதண்டாயுதம் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கச் சோக நாடகம் என்ற தனிக் கட்டுரையே எழுதியுள்ளார்.

திருச்சி சிறையிலிருந்து பாலதண்டாயுதம் வெளியே வந்தபோது நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி சிறையிலிருந்து வேலூர் சிறைக்குச் சென்ற போது ராஜாஜியும் அவரைப் பாராட்டி வழியனுப்பினார்.

அவர் மீதான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பில், “பாலதண்டாயுதத்தின் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் குற்றமே தவிரச் சொந்த நலனுக்குச் செய்தது அல்ல. கொள்கை அடிப்படையில் செய்த குற்றமே தவிர வேறு எந்தத் தவறும் அதில் இல்லை. அவர் செயலில் மனிதாபிமானமே மேலோங்கி இருந்தது” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட தன்னலம் கருதாத ஒருவரை அவதூறாகஎழுதியுள்ளதோடு 1963ல் அவர் இதே வழக்கில் பரோலில் வெளிவந்ததாகவும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததாகவும் மற்றொரு உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் பிழையையும் இதன் மூலம் கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார்.

1953 நவம்பர் 2ல் நெல்லைச்சதிவழக்கில் பாலதண்டாயு
தத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அவர் ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவித்ததாகக் கூறி 1962 ஏப்ரலில் விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்பதுதான் உண்மை. ஆனால் திருவண்ணாமலையிலோ 1963ம் ஆண்டு மே மாதம்தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. 1962ல் விடுதலையான பாலதண்டாயுதம் ஏன் 1963 மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய மீண்டும் பரோலில் வெளிவர வேண்டும்?

இதே குற்றச்சாட்டை 15 ஆண்டுகளுக்கு முன்பும் கருணாநிதி சொன்னார் அப்போதும் இதை நான் உடனே மறுத்துள்ளேன். ஆனால் மீண்டும் தமிழக முதல்வர் தவறான அதே குற்றச்சாட்டை இப்போதும் கூறியுள்ளார். இப்படித் தவறான ஒரு தகவலை, குற்றச்சாட்டைச் சொன்ன

தோடு, “கொலைக்குற்றச்சாட்டில் கைதான பாலதண்டாயுதம் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்யப் பரோலில் வந்தார்” என்று எழுதியதன் மூலம் அன்றைய முதல்வர் காமராஜரையும் மறைமுக

மாகக் குற்றம் சாட்டிக் கேவ லப்படுத்தியுள்ளார்.1963ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தைத் திரித்து 57 ஆண்டுகள் கழித்து, பாலதண்டாயுதம் மறைந்து 36 ஆண்டுகள் கழித்து இப்படி அவதூறாக அவரைப் பற்றி எழுதியுள்ளது தவறாகும்.

கருணாநிதி மிகப்பெரிய அரசியல்வாதி, அவர் ஒரு மூத்த தலைவரும் கூட. அவர் தன் மகன் அழகிரியைப் பற்றி உண்மையைச் சொல்லி விட்டதற்காக ஆவேசமடைந்து, அரசியல் பண்பாட்டை இழந்து இப்படிஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தேர்தல் அரசியல் என்பது அரசியலாக இருக்க வேண்டும். அவதூறாக வரலாற்றைத் திரித்துப் பிரச்சாரம் செய்யக் கூடாது. மூத்த அரசியல்

வாதியான அவருக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? ஏன் நிதானம் தவற வேண்டும்?

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

ramgopal said...

சரியாதான் எழுதி இருக்கீங்க. மனுஷன் உடம்புல வெறும் எலும்பும் தோலும் தான் இருக்கு. ஆனா அஞ்சா நெஞ்சனும் அவங்க அப்பன் கலைஞரும் அறியாத விஷயம் அவர் நெஞ்சு முழுவதும் வீரம், கம்யூனிஸ்ட் என்கிற மகத்தான உணர்வு. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் கலைஞர் என்கிற பாசிஸ்ட்டிடமிருந்து நியாயத்தையும் மனித உனர்வையும் மீட்டெடுப்பொம்.

Deepa said...

மனம் பதைக்கிறது...கண்மண் தெரியாமல் கோபமும் வருகிறது.
ஒரு நல்ல மனிதரை இந்த நிலையில் அறிமுகம் கொள்ள நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.

பதிவுக்கு நன்றி ஐயா.

Anonymous said...

I hate to hear the word

"மதுரையில் பச்சைக்குழந்தை மாதிரியான என் மகன் .."

about that rowdy
any how a goons son is a goon.
they are showing their money & might which they are increasing to five folds when they came to power.
see the property value of all MP and MLAs in the below link.originaly declared to EC which it self too high ...how they have earned this much????
http://www.empoweringindia.org/new/AssetReport.aspx?lblheading=mcompCandidate

this goons they suck the blood of the people and showing themselves as high profile leaders

ஆதவன் said...

nallavargal arasiyalil eppadi irukka mudiyum.. adhuvum idhiyaavil?

ஹரிகரன் said...

"மதுரையில் பச்சைக்குழந்தை மாதிரியான என் மகன் .."

இப்படி சொல்லும்போது கலைஞரே உள்ளுக்குள் சிரித்திருப்பார்.

ச.தமிழ்ச்செல்வன் said...

நண்பர் விடுதலைக்கு நன்றி.

கதிர் said...

திரு.நன்மாறன் அவர்களை எங்கள் அரிமா சங்க கூட்டத்திற்கு கடந்த ஆண்டு அழைத்திருந்தோம். அவருடைய எளிமை என்னை அதிரவைத்தது. கூட்டத்திற்கு அவரை அழைத்தபோது வந்து செல்வதற்கான பயண ஏற்பாடுகளை கேட்டபோது தானே வந்து விடுவதாகவும், திரும்பி செல்லும் பொழுது சென்னை செல்ல வேண்டியிருக்கிறது எனவே பேருந்தில் சென்று விடுவதாகவும் கூறினார், ஆனால் நாங்கள் வற்புறுத்தி தொடர் வண்டிக்கான பயணசீட்டை பதிவு செய்து தருவதாக கூறியபோது, தூங்கும் வசதியுள்ள படுக்கை மட்டும் போதும், குளிர் சாதன வசதியுடன் கூடிய படுக்கை கட்டாயம் வேண்டாம் என மறுத்தவர்.

எங்கள் பகுதியில் கரை வேட்டி பளபளக்க பத்து‍, இருபது அடிப்பொடிகளின் படை சூழ வரும் சட்ட மன்ற உறுப்பினர்களை பார்த்த எங்களுக்கு, பகட்டு மிகுந்த அரசியல் வாதிகள் மிகுந்த தமிழகத்தில் இன்னும் 200 சதுர அடிக்குள் வீடு, பழைய டிவிஎஸ் 50, வேலை தேடும் மகன் என வாழும் இரண்டாவது முறையாக‌ சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவரை சந்தித்த போது ஆச்சரியம் மிகுந்த அதிர்வுகள் மனது முழுவதும்.

இவருடைய நேர்மையும், எளிமையும் சரிவர வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பது என் கருத்து.

ந‌ன்மாற‌ன் போன்ற‌ நல்ல‌வ‌ர்களை எப்ப‌டி காப்பாற்ற‌ போகிறோம், வ‌ளரும் தலை‌முறையிடம் எப்படி அவரை அழுத்தமாக அடையாளம் காட்டப்போகிறோம்...

க‌டைசியாக‌ ஒரு கேள்வி........

கந்தகம் வீசியவர்களாக நீங்கள் கோடிடும் நபர்களிடம், அடுத்த தேர்தலில் கரம் கோர்க்க மாட்டீர்கள் என என்ன நிச்சயம்...

மக்கள்தாசன் said...

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல் என்பார்கள்
பிள்ளை மனம் கொண்ட கவிஞர் சட்ட மன்ற உறுப்பினர்
அவர்களை தாக்குவதற்கு எப்பிடி மனம் வந்ததோ
மக்கள் மன்றம் மன்னிக்காது

மரியதாசன் said...

அரிமா சங்கத்துக்காரக்கள் கூட நன்மாறனனை பார்த்து இத்தனை அக்கறையுடன் எழுதுவது சந்தோசம் அளிக்கிறது, ஆனால் நம் தோழர்கள் பலர் நன்மாறனின் முதுகுக்கு பின் அவரை அப்பட்டமாக கேளி செய்வது மனதுக்கு வேதனையாக உள்ளது. நம் இயக்கத்தில் இப்பொழுது நுழைந்துள்ள பல இளைஞர்கள், மத்திய வர்கத்தினர் அவர்களின் ஆடம்பரத்துடன் நடத்தும் நாடகங்கள் மனதை கனக்கச் செய்கிறது.நன்மாறனிடம் நாமே முறையாக எளிமைசார் பாடங்கள் கற்க வேண்டும்