Wednesday, March 25, 2009

நான் பேச விரும்புகிறேன்...

 

 naan pesa

 

ஒவ்வொரு எழுத்தாளனும் தான் எழுதும் ஒவ்வொரு புத்தகத்தை வெளியிடும்போதும்
அது நாட்டையே உலுக்கப்போகும் புத்தகம் என்று நினைத்தே வெளியிடுகிறான்.
அப்புறம் அது எக்கதி அடைந்தாலும் மீண்டும் நாட்டை உலுக்கும் அடுத்த புத்தகத்தை
உருவாக்கும் பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுகிறான்.பல சமயங்களில் எனக்கு
எழுத்தாளனும் விவசாயியும் ஒன்றென்று படும். எந்த நம்பிக்கையில் விவசாயி தொடர்ந்து
விவசாயம் பண்ணுகிறான்? எப்படியும்  மழை வரும். எப்படியும் விளைந்து விடும் என்றுதானே?

வி வசாயி நிலத்தைப் பண்படுத்துகிறான்.எழுத்தாளன் மனதைப் பண்படுத்துகிறான்.
விவசாயத்தைத் தவிர வேறு ஏதும் தெரியாது விவசாயிக்கு.
நம்ம கதையும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

அப்படி நாட்டை உலுக்க நான் எழுதிய புத்தகம் ஒன்று- வந்த சுவடே தெரியாமல்
போனது.அதுதான் இந்த ‘ நான் பேச விரும்புகிறேன்’.
அது பற்றி இங்கே கொஞ்சம் பேச விரும்புகிறேன்.

உலகப்புகழ் பெற்ற திரைக்கலைஞர்களான லிவ் உல்மன்,இங்ரிட் பெர்க்மன்,
ஓவியர்களான பால் காகின்,இகான் செலீ ,மெக்சிகோவின் செல்ல மகள் ஓவியர்
ஃரைடா காஃலோ ஆகியோரின் வாழ்வை நான் வாசித்த படிக்கு அறிமுகம் செய்து
நான் புதுவிசையில் எழுதிய (ஆதிலட்சுமி என்கிற புனை பெயரில்)
ஐந்து நெடுங்கட்டுரைகளின் தொகுப்பு இது.

இது அந்தப்படைப்பாளிகளின் வாழ்க்கைச் சரித்திரங்களின் அப்பட்டமான
மொழிபெயர்ப்பல்ல.என் மனம் அவர்களின் வாழ்வுக்கூடாக வாசிக்க நினைத்த
வரிகளின் தொகுப்பு.இந்த ஐந்து பேரும் நம்ம ‘இந்தியப் பண்பாட்டின்’படி
ஒழுக்கமாக -ஒரு கணவனுக்கு ஒரு மனைவி- என்று வாழாதவர்கள்.
அற ஒழுக்கங்களைத் தம் வாழ்வில் சிதத்தவர்கள்.

ஆகவே இவர்களின் வாழ்க்கை எனக்கு முக்கியமாகப்பட்டது.குறிப்பாக
ஆண்-பெண் உறவு குறித்த பல ஆழமான கேள்விகளை
இக்கலை ஆளுமைகளின் வாழ்வு நம்முன் வைக்கிறதாக நான் உணர்ந்தேன்.

“ எங்கள் இருவருக்கிடையிலும் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என விரும்பி
இருவருமே ஏங்கினோம்.ஒருவர் மற்றவரிடம் சரணாகதி அடையும் தைரியம் வர
வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.ஆனால் கடைசியாய் இந்த இரண்டும்
உண்மையிலேயே நடந்தேறியபோது நாங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்த காலம்
முடிந்து போயிருந்தது.அப்படி முடிந்து போனதற்குக் காரணமாகவும் கூட அந்த
இரண்டுமே இருந்திருக்கலாம்.” என்று லிவ் உல்மன் எழுதுவதும்

“ பீட்டர் சொன்னான் -  தவறா ? நானா? நோ.. நெவர்.. எதைச்செய்தாலும்
முன்கூட்டியே பலமுறை யோசித்துத் திட்டமிட்டு சீர்தூக்கிப்
பார்த்து இறுதி முடிவு எடுப்பவன் நான். நான் தவறு செய்ய வாய்ப்பே இல்லை-
அந்த நிமிடம் எனக்குத் தோன்றிவிட்டது.இனி இந்த மனிதருடன் வாழ முடியாது.
தான் தவறே செய்ய மாட்டேன் என்று உறுதியாக நம்புகிற ஒரு மனிதருடன்
எப்படி வாழ முடியும்?” என்று இங்ரிட் பெர்க்மன் எழுதியதும் வாசித்தபோது எனக்குள்
பல கேள்விகள் எழுந்தன.

என் சொந்த வாழ்வின் பல பக்கங்களைப்
புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.எத்தனை பெரிய தவறுகளை வெகு இயல்பாகச்
செய்தபடி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிற குற்ற உணர்வுக்கும்
அவமான உணர்வுக்கும் ஆளானேன்.கடந்த காலத்தின்
என் செயல்பாடுகளைத் திருத்த முடியாதே- கடந்த காலத்தின் என் சொற்களைத்
திரும்பப் பெற முடியாதே திருத்தியமைக்க முடியாதே
என்கிற சோகம் எனக்குள் கவிந்தது.

இன்றும் அந்த சோகமும் வலியும்
அதற்கப்புறம் இன்னும் கொட்டிய வார்த்தைகளும்
சுமையை அதிகப்படுத்திச் செல்கின்றன.வெளி உலகுக்குச் சொல்லத்
தெரியாத- எழுத்துலகோடு எந்த அறிமுகமும் அற்ற- என் துணைவியாருக்கு
மட்டுமே தெரிந்த அந்த என் சொற்கள் -அந்த என் அசைவுகள் நின்று என்னைக்
கொல்கின்றன.இப்புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலம் அகவயமாக என்னை
நானே கூண்டில் நிறுத்திக் கேள்விகள் கேட்ட காலத்தின் துவக்கமாக அமைந்தது.

ஆணாதிக்கம் என்றால் என்ன என்பதை ஒவ்வொரு ஆணும் தன் கடந்த
காலப்பக்கங்களைப் புரட்டுவதன் மூலம் புரிந்து கொள்ள முடிவதைப்போல
எந்த எழுத்திலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.இக்கலை ஆளுமைகளைப்
போலத் திறந்த மனதுடன் எழுதப்பட்ட வாழ்க்கைகள்
எந்த இலக்கியத்தைவிடவும் நுட்பமாக நம் மனங்களைப்
பண்படுத்திவிட முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு.

பெருக்கிச் சுத்தம் செய்து சாணம் தெளித்துக் கோலமிட்டு அழகு செய்த
நம் ஒவ்வொருவரின் முன் வாசல்களைவிட நமது பின் வாசல் புழக்கடைச்
சாக்கடைகளே  அதிகம் பாடம் கற்றுத்தர வல்லவை.ஆகவேதான் ஜி.நாகராஜனின்
எழுத்துக்கள் நமக்கு முக்கியமானவையாகின்றன.

தமிழில் அவ்வகைப் படைப்புகள் அரிது.

சரி.இது எழுதித்தீராத பக்கம்தான்.எல்லாத்தையும் எழுதிவிடவும் முடியாது.
ஆகவே மீண்டும் லிவ் உல்மனின் வரிகளைச் சொல்லி
அதே ஏக்கத்துடன் முடிக்கிறேன்.

“ எனக்குள்ளே
  ஒரு சின்னஞ்சிறு பெண்
  எப்போதும் இருந்துகொண்டு
  ஒரு போதும் மூப்படையவோ-சாகவோ
  மறுத்தபடி வாழ்கிறாள்.என் எந்த வெற்றியும் அவளைத் திருப்தி செய்வதில்லை.
  என் எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிளுகிளுப்பூட்டுவதில்லை.
  பல அதிகாலை நேரங்களில்   விழிப்பு வந்ததும் 
  இனிமேல் “ அவளுடைய” வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டியதுதான்
  என்று தீர்மானம் உருவெடுக்கும்.படுக்கையில் பக்கத்தில் படுத்திருக்கும்
  என் செல்ல மகள்  லின் மூலமாக எனக்குள் வாழும் அந்தச் சிறுமியின்
  வாழ்வை வாழ்ந்துவிட ஆசை மிகக் கொள்வேன்.அவளைச் சேர்த்து
  அணைத்துக்கொண்டு அவளுடைய உடம்பின் கதகதப்பையும் அவள்
  மூச்சுக் காற்றின்  வெதுவெதுப்பையும்  அப்பபடியே உள்வாங்கிச்
  சில நிமிடங்கள்  அவளாகவே ஆகிக் கண்மயங்கிப் படுத்திருப்பேன்.”

7 comments:

Anonymous said...

நானே என் மனைவியின் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு வேளை அதுவே உண்மையாகவும் இருக்கலாம். உங்களது கட்டுரைகள் சிலவற்றைப் படித்தபின்னர் நான் செய்வது தவறு என்று தோன்றி மாற்றிக்கொள்ள முயல்கிறேன். ஆனால் எவ்வாறோ அந்த எண்ணங்கள் காணாமல்போய்விடுகின்றன. பின்னர் கணவனாக இல்லாமல் ஓர் ஆணாக மாறிவிடுகிறேன். என்ன செய்ய..? ஆண் தவறு செய்பவனாகவே வளர்க்கப்பட்டுவிடுகிறான்.

Unknown said...

'நான் பேச நினைப்பதெல்லாம்' புத்தகத்தை என் தோழி எனக்கு பரிசளித்திருக்கிறாள். அட்டைப் படம் மிகவும் பிடித்தது. புதுப் புத்தகக்தின் வாசனை எனக்கு மிகப் பிடிக்கும். வாசிக்கத் தொடங்கும் முன் முடிந்தவரை அதை உள்வாங்கிக் கொள்வேன். இன்னும் வாசனை தீராமல் அப்புத்தகம் என் அலமாரியில் அழகான ஓவியமாய் இருக்கிறது. உடனே வாசிக்க ஆவலாய் உள்ளது.

// எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறு பெண்
எப்போதும் இருந்துகொண்டு
ஒரு போதும் மூப்படையவோ-சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்.என் எந்த வெற்றியும்
அவளைத் திருப்தி செய்வதில்லை. //

அருமையான கவிதை. பதிவு. நன்றி தோழர்.

சந்தனமுல்லை said...

புதுவிசையில் படித்திருக்கிறேன்...ஃரைடா காஃலோ பற்றி! பலமாதங்களானது..ஃரைடா காஃலோ நினைவுகளிலிருந்து நான் வெளியே வர! மிக அற்புதமானபடைப்பு! ஆனால் எழுதியவர் யாரென்றெல்லாம் கவனிக்கும் வழக்கம் அந்த வயதில் இருந்ததில்லை...புதுவிசை வாங்குவது சிறிது நாட்களில் தடைப்பட்டுபோயினும்..பழைய இதழ்கள் இன்னும் இருக்கின்றன! உங்களைப் பற்றி அறிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி!

Joe said...

அற்புதமான பதிவு!

Anonymous said...

அது சரி தோழர், வம்சி புக்ஸ் அதற்கு இட்ட விலை அதிகம். ஏன் தோழர், பாரதி புத்தகாலயம் மூலம் போட்டிருந்தால் விலை குறைந்திருக்குமோ? புத்தகத்தின் விலையும் வாசகனின் மனநிலையில் ஒரு சஞ்சலத்தினை ஏற்படுத்தும் தானே?
தோழர், தயவு செய்து கல்விச்சூழல், கற்பித்தல் மற்றும் பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுகளை செய்யுங்களேன்.

ச.தமிழ்ச்செல்வன் said...

வம்சி புக்ஸ் அந்தப் புத்தகத்தை கேட்ட விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் நட்டம்தான்.சில சமயம் இப்படி ஆகி விடும். காஞ்சி கோபி கேட்ட்படி பதிவுகள் தொடர்ந்து வரலாம்.
சுப்பு வின் திறந்த மனம் எனக்குப் பிடித்திருக்கிறது.ஒரு ஆண் நடத்தியாகவேண்டிய முதல் போராட்டம் தன் மனதோடுதான். உமாஷக்தி சீக்கிரம் படிச்சிட்டு உங்க கருத்தைப் பதிவு செய்யுங்க

vimalavidya said...

A true article with self INFRACTION.
-R.Selvapriyan-Chalakudy