Friday, March 20, 2009

தெருநாய்களோடு படுத்துறங்கிய காலம்

சின்ன வயதில் எங்கள் ஊரிலும் எங்கள் ஊரைச்சுற்றிய பல கிராமங்களிலும் கூத்து நாடகம் என்று கோவில் திருவிழாக்களை ஒட்டி தெருக்களில் நிறைய நடக்கும். வீட்டு வீட்டுக்கு கலை நிகழ்ச்சிகளை டோர் டெலிவரி செய்யும் தொலைக்காட்சிகள் இந்தியாவுக்கு இன்னும் வந்து சேர்ந்திருக்காத காலம்.

1965 இல் நான் ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது அப்படி ஒரு கூத்துப் பார்க்க பக்கத்து ஊரான நென்மேனிக்குப் போன ராத்திரி என் வாழ்வில் மறக்க முடியாத இரவாகும்.அன்று நடந்தது வள்ளி திருமணம். இப்போது யோசித்துப் பார்த்தால் அது கூத்தா நாடகமா என்று குழப்பமாக இருக்கிறது. அதில் மறக்க முடியாத காட்சி முருகன் அரங்கத்தில் entry ஆகும் காட்சி.

கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்து முருகன் மயில் மீது அமர்ந்த படி நெற்றி நிறையப் பட்டையுடன் கையில் வேலுடன் வந்து நின்றார். மக்கள் கரகோஷமும் விசிலும் விண்ணைப்பிளந்தது.அந்த வரவேற்பு நாடகத்தின் கதாநாயகன் வந்துவிட்டார் என்பதற்காக அல்ல.அந்தக் கூலிங் கிளாசுக்காகத்தான் அத்தனை வரவேற்பு.அந்த நாட்களில் புதுசாக அறிமுகமாகிக் கொண்டிருந்த கூலிங் கிளாஸ் மீது அப்படி ஒரு ‘கிரேஸ்’ -வசீகரம் எங்களுக்கு இருந்தது. அன்றைய சினிமாக்களில் கதாநாயகன் ஒரு பாடல் காட்சியிலாவது கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்து வந்து விடுவது வழக்கம்.எனக்கு அப்போது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெமினி கணேசன் இருவர் மீதும் அளப்பரிய ஈடுபாடு இருந்ததற்கு முக்கியமான காரணம் இருவருமே பல காட்சிகளில் கூலிங் கிளாஸ் அதுவும் கறுப்புக் கூலிங் கிளாஸ் அணிந்து வந்து என் மனம் குளிரச்செய்வார்கள் என்பதுதான்.

சிவாஜி கணேசனுக்கு அந்தக் கூறுபாடு கிடையாது. மாறுவேடமே போடாமல் ஒரே ஒரு கூலிங் கிளாசை மட்டும் அணிந்து கொண்டாலே கதாநாயகனை அடையாளம் தெரியாமல் தப்பிக்க விடும் அப்பாவிகளாக தமிழ்ச் சினிமா வில்லன்கள் வாழ்ந்த ஒரு பொற்காலம் அது. சரி.கதைக்கு வருவோம்.முருகன் வள்ளியைத்தேடி - மானைத்தேடி வருவதுபோல- வந்த வரைக்கும்தான் நினைவிருக்கிறது.பிறகு கண் விழித்துப் பார்க்கையில் நாடகமெல்லாம் முடிந்து மக்களெல்லாம் போய்விட்டிருந்தார்கள். பளபளா விளக்குகளுடன் ஜெகஜோதியாக இருந்த தெருவில் மங்கலான ஒரு தெருவிளக்கு மட்டுமே கடமைக்கு அழுது கொண்டிருந்தது. மேடை காலியாக இருந்தது.அவ்வளவு பெரிய தெருவில் தனியாக நான் மட்டும் கொண்டுபோயிருந்த துண்டைப் போர்த்திப் படுத்திருந்தேன். என்னைப்போல ஒன்றிரண்டு சிறுவர்கள் தெருவில் உறங்கிக் கிடந்தார்கள்.

அப்போதெல்லாம் பிள்ளைகளைக் காணோமே என்று தேடுகிற பதட்டம் பெற்றோர்களுக்கு இருந்ததில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை எல்லோருக்கும் இருந்துகொண்டிருக்கும். நான்கைந்து தெரு நாய்கள் குளிருக்கு இதமாக என்னை அண்டிப் படுத்திருந்தார்கள்.நாலு நாய்களுக்கு நடுவே தெருப்புழுதியில் நானும் படுத்திருந்தது பற்றிய தன்னுணர்வு வந்ததும் எனக்கு நாக்கு வறண்டு பயம் உடம்பு முழுக்கப் பற்றிப் படர்ந்தது. ஏற்கனவே நாய்களை deal பண்ணுவது எப்படி என்று ஐந்தாம் வகுப்புப் படித்த காலத்தில் செல்லையா நாய்க்கர் வீட்டு நாயை முன் வைத்து எனக்கு தம்பி நடத்திய பாடம் சிறு தைரியத்தைக் கொடுத்தாலும் deal பண்ண வேண்டிய நாய்களின் எண்ணிக்கை நாலு என்பதாலும் படுத்துக்கிடந்து அயலூர் என்பதாலும் ஒரு பயம் வந்தது.என்ன செய்ய முடியும். தப்பிக்கும் வேகத்தில் எழுந்தேன்.ஆனால் பாதித் துண்டுதான் என் வசம் இருந்தது. மீதித்துண்டின் மீது இரண்டு நாய்கள் படுத்திருந்தார்கள்.

தம்பியின் பாடத்தின் படி நான் முதலில் பேச்சு வார்த்தையைத் துவகினேன்.அடுத்த கட்டத்துக்காகக் கல் ஏதும் பக்கத்தில் கிடக்கிறதா என்று பார்த்தேன்.தெருவெங்கும் புழுதிதான் கிடந்தது. சரி.என் துண்டை விடுங்க நான் ஊருக்குப் போகணும் என்று சத்தமாகப் பேசியபடி பிடித்து இழுத்தேன்.துண்டு என் கைக்கு வந்து விட்டது. ஆனால் நாய்கள் இரண்டும் பாவம் தூக்கம் கலைந்து எழுந்து விட்டன.ஆனால் நான் பயந்தது போல தூக்கம் கலைக்கப்பட்ட மனிதர்களைப்போல அந்த இரண்டு நாய்களும் என் மீது கோபப்படவில்லை.ஊ ஊ என்று என்னிடம் அழுவது போல முறையிட்டன.எனக்கு பயம் போய் இரக்கம் வந்து விட்டது.சரி .படுத்துக்குங்க என்று மீண்டும் துண்டை தரையில் விரித்தேன். உடனே ஞாபகம் வந்தவனாக துண்டை மறுபடி எடுத்து “ துண்டை எங்கேன்னு தாத்தா கேட்டா என்ன சொல்றது” என்று சத்தமாக அவர்களிடம் கேட்டேன்.அந்த நாய்கள் பரிதாபமாக என்னைப் பார்த்தபடி இருந்தன.சரி.நான் போய்ட்டு வாரேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டேன்.சரி என்பதாக அந்த நாய்கள் உடனே சுருண்டு புழுதியில் படுத்துக்கொண்டன.விரிப்பில்லாமல் புழுதியில் கிடக்கும் அந்த நாய்கள் மீதான பச்சாதாபத்துடன் திக் திக்கென்ற பயத்துடன் இருட்டில் ரெண்டு மைல் நடந்து விடிய ஊர் வந்து படுத்தேன். நாய்கள் பற்றிய என் கருத்து அடியோடு அன்று மாறிவிட்டது. அதற்குப்பிறகு பல பக்கத்து ஊர்த்தெருக்களில் இதுபோலநாடகமோ கூத்தோ அப்புறம் வந்த ரிக்கார்டு டான்சோ பார்த்து விட்டு நாய்களுடன் படுத்துறங்கி வந்திருக்கிறேன்.அந்த இரவுகளெல்லாம் பாதி மறந்தும் போய்விட்டன.அந்த நென்மேனி இரவு மட்டும் அப்படியே மனசில் நிற்கிறது. இப்பப்போய் ஏன் இந்த ஞாபகம் வந்தது என்று கேட்கிறீர்களா? மனித மூளை எதை எப்போ மீட்டு அசை போட வைக்கும் என்று ஒன்றும் கணிக்க முடியவில்லை.2008க்கான கலை மாமணி விருதுகள் பட்டியலைப்பார்த்த அன்று உடனடியாக இந்த நென்மேனி இரவில் கூத்துப்போட்ட அந்தக் கூலிங் கிளாஸ் கலைஞன் நினைவுக்கு வந்து அதை ஒட்டி இந்த நாய்களும் ஊ ஊ என்று என் நினைவுத் தெருக்களில் வந்து விட்டார்கள். 72 பேருக்கு கலைமாமணி விருதுகலை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் நாட்டுப்புறக்கலைஞர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் கூட இல்லை. ஒயிலாட்டக்கலைஞர் கைலாசமூர்த்திக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொலைபேசியில் வாழ்த்தும் சொல்லிவிட்டேன். என்றாலும் அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.வாழ்விழந்து நலிந்து கிடக்கும் எத்தனையோ அற்புதமான நாட்டுப்புறக்கலைஞர்கள் அரசின் பட்டியலுக்கு வருவது எப்போது? அசினுக்கும் நயனதாராவுக்கும் திரிஷாவுக்கும் கலைமாமணி கொடுத்தது பற்றி எனக்குப் புகார் ஏதுமில்லை. 72 பேரில் ஒரு 20 பேராவது நாட்டுப்புறக்கலைஞர்கள் இடம் பெற்றிருக்க வேண்டாமா? நாகை கலை இரவில் நேரில் கவிஞர் கனிமொழி அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். இளையபாரதியிடம் பலமுறை பேசினேன். பல மேடைகளிலும் பேசினோம்.தீர்மானங்கள் போட்டோம். அரண்மனைகளும் ஆடல் அரங்குகளும் புறக்கணித்த நாட்டுபுறக்கலைகளை விவசாயிகளும் விவசாயக்கூலிகளும்தான் தெருக்களில் ஆட வைத்துக் காலம் காலமாக போஷித்தார்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் வந்தாலும் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கவுரவித்துப் பாராட்ட அந்த பாட்டாளிகளை விட்டால் நாதியில்லை என்கிற நிலைதான் தொடர்கிறது.வாழ்க தமிழ்.

4 comments:

திருமாவளவன் said...

தங்கள் முன்னிரண்டு பதிவுகள் பார்த்தபோது
வேண்டாம் இந்த வெறுப்பின் அரசியல். நாய்களைப்பற்றி இன்னும் பேசலாம். என கருத்துச் சொல்லத் தோண்றியது. விவாதங்கள் ஆரோக்கியமானதுதான். முன்முடிபுகளுடன் நடக்கும் வாதங்களால் யாருக்கு என்ன பிரியோசனம்.
இப் பதிவில் நாய்களினுடனான அனுபவங்களின் தொடர்ச்சி நெகிழவைத்தந்தது. நான் ஊரிலிருந்த போது நாய் பற்றிய படிமம் வேறு. இப் பனிப்புலத்தில் வேறு. என் பிள்ளையைப் போல என் படுக்கையிலேயே என்னோடு தூங்கி எழுகிறது. துணைவி பிளைகள் நான் எல்லோருமே இரவு பகல் பேதமின்றி அலைவுறும் சூழலில் பல சமையங்களில் என் வெறுமையைப் போக்குவது நாய்தான் யாரோ ஒருவர் எனக்கு துணையாயிருக்கிற பலம் இருக்கும் (நாய் என்று சொல்லவே மனசு தயங்குகிறது) ‘தெரு நாய்களோடு’ என்று தொடங்கும் போது மனம் சலனப்படுகிறது.
உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்
திருமாவளவன்

ஆ.ஞானசேகரன் said...

திருமாவளவன் கருத்தை நானும் ஏற்கின்றேன்...

ச.தமிழ்ச்செல்வன் said...

நண்பர்கள் திருமாவளவன் மற்றும் ஞானசேகரன் கருத்துக்களையும் உணர்வுகளையும் நான் மிகவும் மதிக்கிறேன்.ஒரு வருத்தத்தை உண்டாக்கிவிட்டேனே என்கிற குற்ற உணர்வும் வருகிறது.பெயர் இல்லாத தெருவில் சுற்றும் நம் நண்பர்களை நாய் என்கிற சொல்லைத்தவிர்த்து வேறு எப்படிக் குறிப்பிடலாம் என்று மூளையைக் கசக்குகிறேன்.

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்