Tuesday, March 17, 2009

வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக

வலைத்தள அரசியல்

எஸ்.ராமகிருஷ்ணனின் தீராநதி கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையை வாசித்துக்
கருத்துக்கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.
நண்பர் புண்ணியா எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயமோகன் இதே தீராநதியில் எம்மைப் பற்றி மோசமாக எழுதியபோதெல்லாம் கோபப்படாத நீங்கள்
இப்போது எஸ்ரா எழுதியதற்கு மட்டும் ஏன் கோபப்படுகிறீர்கள் ? என்பது கேள்வி.
முதலில் எஸ்ரா கட்டுரையைப் படித்து நான் கோபப்படவில்லை.
அதிர்ச்சியும் வேதனையும்தான் அடைந்தேன் என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

காகம் கா..கா.. என்றுதான் கரையும்.கிளி கீ.. கீ.. என்றுதான் கத்தும்.
காகத்தின் கரைச்சலுக்கு நாம் கோபப்பட முடியாது.
அது பிறந்ததே அதற்காகத்தான்.பிறப்பிலிருந்தே அது அப்படித்தான் கத்திக்கொண்டிருக்கிறது.

கிளி கீ..கீ.. என்று கத்தாமல் கா..கா என்று கத்தும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.
அதுதான் வேதனை.
எஸ்.ராமகிருஷ்ணனும் சு.வெங்கடேசனும் பத்தாண்டுகளுக்கு மேலாக நெருக்கமான
நண்பர்கள்.தன்னுடைய கருத்தை எஸ்ரா இன்னும் எத்தனையோ வழிகளில்
வெளியிட்டிருக்க முடியும்.இந்த வழியும் இந்த மொழியும்தான் வேதனை தருகிறது.
அவர் வைக்கும் விமர்சனம் எதுவாக இருந்தாலும்
நாம் வரவேற்கத்தான் செய்வோம்.உரிய பதிலும் அளிப்போம்.

நிற்க.

பாரதியை பார்ப்பனச் சிமிழுக்குள் அடைக்க நடக்கும் முயற்சிகளுக்கு எதிராக
நாங்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறோம்.படைப்பையும் படைப்பாளியையும்
அவர்கள் பிறந்த-வாழ்ந்த- காலத்தில் - காலச்சூழலில் வைத்துப் பார்க்கத்
தவறுவதால் வரும் பார்வைக்கோளாறுதான் இது.

இன்னும் சிலபேர் வம்படியாக இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்.
தூங்குவதுபோல் நடிப்பவர்கள் அவர்கள்.அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
வினவு வலைத்தளம் நான் பார்த்ததில்லை. இனி பார்க்கிறேன்.

பாரதி எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறான்.இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
’விசையுறு பந்தினைப்போல் உள்ளம்  வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் ’என்கிற ஒரு
வரி - இயக்கம் சார்ந்து செயல்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை எழுச்சி தருகிறது.

சண்டாளச் சாமி சொல்ல வருவது எனக்குப் பிடிபடவில்லை.

தீராநதியில் இரண்டு இதழ்களுக்கு முன்னால்
நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்.பா.செயப்பிரகாசம்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாதமி
விருது கிடைத்ததைப் பாராட்ட வந்தது போன்ற ஒரு ஹோதாவில் எமது
இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார்.

நாங்கள் ஏதோ சில பிரச்னைகளில் மௌனம் சாதிப்பதாக
எழுதிக் கோபப்பட்டிருந்தார்.நாங்கள் எந்தப் பிரச்னையிலும் மௌனம் சாதித்ததாக
சரித்திரம் இல்லை.எங்கள் நிலைபாடு  பிறருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.
முல்லைப்பெரியாறு, நந்திகிராம் முதல் இலங்கைப்பிரச்னை வரை எங்கள் கருத்தை
தொடர்ந்து  உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.பிரசுரங்களாக வெளியிட்டு மக்களிடம்
விநியோகிக்கிறோம்.பா.செயப்பிரகாசம் தன்னுடைய நக்சல் நிலைபாட்டில் நின்று
நாங்கள் ஏன் பேசவில்லை என்றுதான் கோபப்படுகிறோர்.

என்ன சார் செய்யிறது? எங்களுக்கென்று சொந்த மேளமும் தாளமும் இருப்பதால்
உங்கள் இசைக்கு ஆட வேண்டிய அவசியம் எங்களுக்கு வரவில்லையே?
அது சாத்தியமானதும் இல்லையே?எங்கள் தாளத்துக்கு நீங்கள் ஆடுவீர்களா?

பொருட்படுத்தத்தக்க விமர்சனங்களுக்கு நிச்சயம் நாம் பதில் சொல்லுவோம்.
அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்.

தமிழ் வீதிக்கு வந்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

ச.தமிழ்ச்செல்வன்

14 comments:

நாமக்கல் சிபி said...

/பொருட்படுத்தத்தக்க விமர்சனங்களுக்கு நிச்சயம் நாம் பதில் சொல்லுவோம்.
அவதூறுகளைப் புறம்தள்ளுவோம். //

நன்று!

- யெஸ்.பாலபாரதி said...

வலை உலகில் வரவேற்கிறேன் தோழர்..
-தோழன்
பாலபாரதி

தமிழன்-கறுப்பி... said...

வலை உலகுக்கு வரவேற்கிறேன் நானும்...

முரளிகண்ணன் said...

தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.


வரவேற்கிறோம்.

Anonymous said...

பாரதி அன்பர்களே எனக்கு சில சந்தேகங்கள்

1. பாரதி ஏன் எட்டப்பனிடம் குல வம்ச வரலாறு எழுத அனுமதி கேட்டார்... அது மறுக்கப்பட்ட போது அதற்கு அவர் குழைந்து எழுதிய கடிதம் ஆரா வெங்கடாசலபதியால் வெளியிடப்பட்டதே... மறுக்கப்படாமல் இருந்திருந்தால் அவரது கூற்றான படித்தவன் பாதகம் செய்தால்.... போல நமக்கு ஒரு தேசபக்த எட்டப்பனும் துரோகி கட்டபொம்மனும் அல்லவா கிடைத்து இருப்பார்கள்.. என்ன சொல்கின்றீர்கள்

2. பிரஞ்சு இந்தியாவில் இருந்து மன்னிப்பு கடிதம் எழுதித் தந்து தமிழகம் வந்த பாரதி ஈடுபட்ட புரட்சிகர பணிகள் என்ன

3. பாரதி பாரட்டியது 1917 பிப்ரவரியில் நடந்த முதலாளிய புரட்சியை... ஆனால் சோசலிச புரட்சியை திட்டி உள்ளான்.
போல்ஷவிசம் ஆபத்து என்றும் கூறியுள்ளான்.




4. அன்று தலையெடுத்து வந்த பார்ப்பனர்ல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சி பற்றி பாரதியின் ஏளனத்தை எப்படி உங்களால் மென்று மூடி மறைக்க முடிகின்றது.

5. பூணூல் சாதி ஆதிக்கத்தின் சின்னம்தான். அதாவது பூணூல் அணிவதன் மூலம் பூணூல் அணியாதவர்களின் தாயின் பாலியல் ஒழுக்கம் கேள்விக்குள்ளாகின்றது. இந்த சூழலில் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தது எப்படி முற்போக்கு

6. சாவதற்கு முன்னால் பிராமணர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டாரே பாரதி அதனை எப்படி முற்போக்காகப் புரிந்து கொள்வது


7. இல. கணேசனும், எஸ்வி சேகரும் தங்களது அரசியல் செயல்பாடுகளில் இவரைப் பயன்படுத்த காரண்ம் என்ன


8. பாரதி அன்பர்களே பூணூல் மாட்டி தலித் ஐ பிராமணன் ஆக்கினான் பாரதி. ஒரு வேளை உத்தபுரத்தில் நீங்கள் இருந்தால் எதை மாட்டி தலித் ஐ பிள்ளைமார் ஆக்குவீர்கள்



9. அது ஏன் மக்களைப் பற்றி குறை சொல்கின்ற மனோபாவமும், அரசியல் ஒரு சாக்கடை என்ற நடுத்தர வர்க்க மனோபாவமும் பாரதி அன்பர்களிடம் நிரவிக் கிடக்கின்றது.



குறிப்பாக பிறந்த வளர்ந்த வரலாற்று சூழலில் பாரதியை நீங்கள் ஒப்பிடும்போது அன்றைய பொதுவான அரசியல் சமூக சூழலையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வீர்களா? அப்படி எனில் அன்றைய இளைஞர் இயக்கங்கள் பாரதியை விட எங்கோ முற்போக்காக சென்றுவிட்டு இருந்தனரே

இலங்கை பிரச்சினையில் ஒன்றுபட்ட இலங்கையை ஆதரிக்கின்றீர்கள். அதாவது தனி ஈழத்தை எதிர்க்கின்றீர்கள். ஒரு மார்க்சிய கட்சியின் இலக்கிய அமைப்பு எனச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் லெனின் கூறிய சுயநிர்ணய உரிமை பற்றி அதாவது பாரதி போலவே காலம் வைத்துதான் பரிசீலிக்கின்றீர்களா ? அல்லது அம்மூலவர்களுக்கு எதிர்காலம் பற்றி மா லெனிய முறையில் கணிக்க தெரியவில்லை எனக் கொள்ளலாமா ?

இதனை மக்களிடம் பிரச்சாரம் செயவது வரவேற்பை பெற்றது என கண்ணை மூடிக் கனவு காணப் போகின்றீர்களா ?

நந்திகிராமோ அல்லது சிங்கூரோ எவரும் நியாயப் படுத்த முடியாது. மாறாக மக்கள் எப்போதெல்லாம் குமுறி எழுகின்றார்களோ அப்போதெல்லாம் நக்சல் மம்தா எனச் சொல்லி அரசின் ஒடுக்குமுறையை ஜெயா போல மட்டுமின்றி கட்சி சார் ரவுடிகளையும் இறக்கி விட்டதை நாளேடுகள் வெளிச்சமிட்டு விட்டதே... இதனை எப்படி எவருக்கு நியாயப்படுத்த போகின்றீர்கள்...வேண்டுமானால் ஆளும் வர்க்க கட்சிகளுக்கு உங்களது யோக்யதையை நிரூபிக்கத்தான் இது உதவும்

கட்டுப்படுத்தப்பட்ட தாராளமயத்தை ஆதரிப்பதாக காரத் மற்றும் உங்களது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்றீர்களே ... இந்த தாராளமயம்தானே விதர்பா விவசாயிகளை லட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளியது... தஞ்சை விவசாயிகளை எலிக்கறி தின்ன வைத்தது. நெசவாளர்களை கஞ்சித் தொட்டி திறக்க வைத்து போலீசிடம் அடிவாங்க வைத்தது. ... மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், வேலையிழந்த தொழிலாளிக்ள் ... இந்த கண்ணீரெல்லாம் உங்களது இதயத்தை அறுக்கவில்லையா... இந்த கொள்கையில் காங்கிரசும் ஊர்த்தாலியைத்தான் அறுத்தது... நீங்களும் அதைத்தானே செய்கின்றீர்கள் ... அப்புறம் எப்படி நீங்க கம்யூனிஸ்டு கட்சி.... இதை வரலாற்று கட்டத்தில் வைத்துதான் பேசியுள்ளேன் என்பதை ஞாபகத்தில் வைத்து பதில் தரவும்.

உங்களுக்கு தனியாக மேளம் - மண்ணுக்கேற்ற மார்க்சியம். இதனை நான் தனியாக விமர்சிக்க வேண்டியதில்லை. இதுபற்றி மூலவர்களின் ஏராளமான மேற்கோள்களையும் அணுகிய விதங்களையும் குறிப்பிட முடியும்.. தாளம் அன்று காங்கிரசு இன்று ஜெயா... என்ன சொல்லித்தான் மக்களிடம் போகின்றீர்களோ.... முழு உண்மையை உண்மையாக மக்களிடம் சொல்லிட்டுப் போங்க....

பாரதி உதிர்ந்து கொண்டிருக்கும் இந்திய நிலபிரபுத்துவ சமூகத்தின் பிரதிநிதி என்ற வரையறை ஏன் தவறு...


அன்புடன்...
மணி

Anonymous said...

என் போலவே வலை உலகிற்குப் புதிதாக வந்துள்ள உங்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சி தோழரே!

நேரம் வாய்க்கும்போது என்னுடய வலைத்தளத்திலும் உங்கள் கருத்துக்களைப் பரிமாறிச் செல்லுங்கள்!

கோவை சிபி said...

அனானியின் கேள்விகள் அர்த்தம் நிறைந்தவை.இக்கேள்விக்கான நியாயமான் பதில்கள் கம்யூனிஸ்டுகளிடம் இல்லை.குறிப்பாக
மார்க்சிஸ்டுகளிடம் இருக்காது.

ச.தமிழ்ச்செல்வன் said...

அனானியின் கேள்விகள் அர்த்தம் நிறைந்தவை என்று கோவை சிபி எழுதியிருக்கிறார்.அவர் கேள்விகளுக்கு மார்க்சிஸ்ட்டுகளிடம் பதில் இருக்காது என்றும் பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கேள்விகள் எல்லாம் அறுதப் பழைய கேள்விகள்தான்.புதுசா ஒண்ணுமில்லை.ஏற்கனவே மதிமாறன் எழுதிய புத்தகத்துக்கு பார்த்திபராஜா உள்ளிட்ட பலபேர் பதில் எழுதிப்புத்தகமாகவும் போட்டு விட்டார்கள்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியை துரையென்ற காலமும் போச்சே என்ற பாரதி எங்களுக்கு அன்பராக இருந்துவிட்டுப்போகிறான். சிக்கரி கலவாத ப்யூர் மார்க்சியத்தை அனானி வைத்து வளர்க்கட்டும்.அதில் நமக்கொன்றும் ஆட்சேஎபம் இல்லை.

மாவோயிஸ்ட்கள் மம்தா தலைமையில் சர்வதேச உலக முதலாளித்துவ மீடியாக்கள் பின்னணி இசைக்க வங்கத்தில் நடத்தி வரும் நரவேட்டை களையும் நாம் அறிந்துதான் இருக்கிறோம்.கிடைக்கிற இடத்திலெல்லாம் பழைய பொய்களை பதிந்து வைக்கலாமே என்று வலைத்தளத்திலும் எழுதுகிறார்கள்.

ரெட்டணையுலும் கடலூர் ஹுண்டாய் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்திலும் என துப்பாக்கிச் சூடுகளையும் காவல்துறைத்தாக்குதல்களையும் சந்தித்தபடிதான் மார்க்சிஸ்ட்டுகள்வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இலவச மார்சிய அலோசகர்களாக ம்மாறிவிட்ட நக்சல்பாரிகள் மார்க்சிஸ்ட்டுகளுக்கு வகுப்பு எடுக்கும் வேலையை விட்டு விட்டு மம்தா தலைமையையும் உதறிவிட்டு மக்களிடம் போய் வேலை செய்தால் நன்மை பயக்கும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு. ரகுநாதனின் பாரதியும் புரட்சி இயக்கங்களும் கட்டுரையை வாசித்துப் பார்த்துவிட்டு அதையும் திட்டலாமே.

கோவை சிபி said...

கேள்விகள் பழையதாக இருக்கலாம்.பதில்கள் நியாயமானதாக இருப்பதில்லை என்பதை உணர்ந்துதான் எழுதியிருக்கிருக்கிறேன்.
சேலம் கோட்டம் பிரிப்பு,முல்லைப்பெரியாறு,ஈழம் பிரச்சினைகளில் எப்படி இந்திய இறையான்மையை காப்பாற்றுவதற்காக
மார்க்சிஸ்டுகளின் முயற்சி எப்படி பாராட்டத்தக்கதோ அதே அளவு முயற்சி பார்ப்பன் இறையான்மையை காப்பதில் இருப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.
பாரட்டுகளும்,வாழ்த்துகளும்.

ச.தமிழ்ச்செல்வன் said...

நன்றி.கோவை சிபி அவர்களே.நியாயம் என்பது எப்போது ஒருதரப்பாக இருக்க முடியாது.என் வலைத்தளத்துக்கு வந்தமைக்கு நன்றி.

Anonymous said...

Bharathi is Really "progressive "than the MA.KA.EE.KA .CPI.ML(SOC).
-R.SELVAPRIYAN-CHALAKUDY

Anonymous said...

S.Ramakrishnan has derailed in that(Su.Venkatesan Book) article.
Going very fast will stop very early--R.Se;vapriyan-Chalakudy

Anonymous said...

எனக்குத் தெரிய கேள்விகள் பழையவை என்றாலும் பதில் சொல்லி இன்னும் சிறப்பாக உதாரணத்துடன் கம்யூனிஸ்டுகள் விளக்குவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மாயையை கலைத்த மார்கசிஸடுகள் எனத் தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு மிக்க நன்றி.

இணையத்தில் விவாதிக்க வருகிறோமே தவிர உங்களது கட்சியை வளர்க்க‍ ஆலோசனை சொல்ல எங்களால் எப்படி முடியும். அதற்கு நாங்கள் கொள்கை என ஒன்று வைத்துக் கொண்டு இருக்க்க் கூடாது அல்லவா?

சிக்கரி கலந்த மார்க்சியம் எனத் தாங்கள் ஏற்றுக் கொண்ட மார்க்சியம் என்ன எனச் சொல்ல முடியுமா?

பாரதி ம•க•இ.க வை விட புராக்ரசிவ் என ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார். புராக்ரசிவ் னா எதுவும் டிக்சனரில அர்த்தம் மாத்தி விட்டாங்களா?

மேற்கு வ‌ங்க‌த்தில் ச‌லீம் குழும‌த்திற்காக‌வும், டாடா வின் நேனோ காருக்காக‌வும் ஆத‌ர‌வாக‌, போராடிய‌ விவ‌சாய்க‌ கூலிப் பெண்க‌ளைப் பாலிய‌ல் வ‌ன்முறை செய்த‌ க‌ட்சி ந‌க்ச‌ல்பாரி க‌ட்சி அல்ல•.. உண்மை என்ப‌து என்ன‌ என‌ ஒரு பாம‌ர‌ப் புரித‌லின் மகீழ் கேட்கிறேன். அர‌சு உங்க‌ள் கையில் இருக்கிற‌து.. போலீசு உங்க‌ள் கையில் உள்ள‌து. உங்க‌ளை எப்ப‌டி ஒரு க‌ட்சி ம‌க்க‌ள‌ ஆத‌ர‌வு இல்லாம‌ல் ந‌ர‌வேட்டை ஆடிய‌து. இது பொய்யா..

எங்களை மாத்திரம் திட்டினால் எப்படி ரகுநாதனையும் திட்டுங்கள் பாரதிக்காக என்ற உங்களது ஆதங்கம் புரிகின்றது. முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாச்சியர்மட சமாச்சாரங்களுக்காக இங்கு விவாதிக்க விரும்பவில்லை. பாரதியிலிருந்து நாங்கள் தோன்றவில்லை. லட்சோப லட்சம் இளைசஞர்கள் சுயநலம் மறந்து பொதுநலத்திற்காக போராடிய காலத்தில் பிறந்த கவிசஞன் என்பதற்கு மேல் அவனுக்கு சிவப்பு சாயம் பூசி அழகுபார்த்துதான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் எமது பாட்டாளி வர்க்க நலனுக்கு உகந்த்து அல்ல என்றும் பாரதி இந்திய உதிர்ந்து கொண்டிருக்கும் நிலபிரபுத்துவ சமூகத்தின் எச்ச சொச்சம் என்றும் எமக்குத் தெரியும். இவற்றை அவனுது பாடல்கள் கட்டுரைகள் போன்றவற்றை காலவரிசைப்படி கற்று உணரும் எவரும் அறிந்து கொள்ள முடியும்.

ஹூண்டாய் போராட்டமும், சிங்கூர் போராட்டத்தையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். வேறு என்ன சொல்லி உங்களுக்கே புரிய வைப்பது. மக்களிடம் போவது பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள். ஈழப்பிரச்சினை இன்று நிகழ்ச்சி நிரலுக்கு வந்துள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு அதவாது தனிஈழம் சாத்தியதமில்லை இதுதானே உங்களது நிலைப்பாடு .. இதனை எத்தனை பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் கொண்டு சென்றிருக்கின்றீர்கள். கொஞ்சம் சொல்வதற்கும் செய்வதற்கும் நேர்மையாக இருக்கப் பாருங்கள். இல்லாவிட்டால் பாரதிக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.

உங்களுக்கு வகுப்பு எடுக்க முடியாது என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் அதிமுக காரனுக்கு எப்படி ஜனநாயகத்தைக் கற்றுத் தரமுடியாதோ அதேபோல மார்க்சிஸ்டுகளுக்கு எந்தக் கொள்கையையும் லாஜிக் ஆகப் பேசுவதையும் கற்றுத்தர முடியாது என எங்களுக்குத் தெரியும். மக்களை அரசியல்படுத்த தனது அணிகளை அரசியல்படுத்துவது ஒரு கம்யூனிஸடு கட்சிக்கு அவசியம். ஆனால் உங்களது அணிகளை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

நாங்கள் ம்ம்தா தலைமையில் அணிசேரவில்லை. நாடாளுமன்றத்தின் மூலம் புரட்சிவரும் என மக்களிடம் பசப்பு வேலைகள் நடத்தி, போத்திஸ் ஸ்பான்சரில் கலை இரவுகள் நடத்தி, ஆயுதபூசை கொண்டாடி தொழிற்சங்கம் நடத்தி, நாம்ம் போட்டு போராட்டம், கழுதைக்கு மனுக்கொடுக்கும் போராட்டம் என மக்களது கோபத்தை யயும் அரசின் மோதலுக்கான சூழலையும் தணிக்கும போராட்டம், அவ்வப்போது பெண்ணீயம், பாரதீயம், தலித்தியம், அப்படியே பின்நவீனத்துவம் வரை போவதற்கான நட்புக்ள•.. என எதைபச் சொல்லி உங்களை விமர்சிப்பது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற புரட்சிகர அமைப்புகள் இந்த தேர்தல்பாதை என்பது திருடர் பாதை என்று சரியாகத்தான் மக்களிடம் ஒவ்வோரு தேர்தலிலும் பிரச்சாரம் செய்கின்றது. அதனை நிரூபித்த்து பிரகாஷ் காரத்தின் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு.. தேர்தலுக்குப் பின் காங்கிரசை நிபந்தனையின் கீழ் ஆதரிக்கவும் செய்வார்களாம்.. கொஞ்சம் 123 ஒப்பந்த்த்தை எதிர்த்து ஆதரவு விலக்கிய தருணம் அல்லது அந்த ஒப்பந்தம் இன்னும் வாபஸ் ஆகல அப்பிடிங்கறத ஞாபகப்படுத்திக்கோங்க•

mani

noteகடைசியாக ஒன்று

த‌யவுசெய்து உங்களது முப்பெரும் தலைவனான பாரதி பற்றி சில கேள்விகளை முன்பின்னூட்டதில் கேட்டுள்ளேன். ஜனநாயத்தில் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் இதற்காவது பதில் சொல்லுங்கள்.

அ.பிரபாகரன் said...

அய்யா வணக்கம். உங்களை வலையுலகில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. உங்கள் எழுத்துக்கும் பேச்சுக்கும் நான் ரசிகன்.

//பாரதியை பார்ப்பனச் சிமிழுக்குள் அடைக்க நடக்கும் முயற்சிகளுக்கு எதிராக
நாங்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறோம்.படைப்பையும் படைப்பாளியையும்
அவர்கள் பிறந்த-வாழ்ந்த- காலத்தில் - காலச்சூழலில் வைத்துப் பார்க்கத்
தவறுவதால் வரும் பார்வைக்கோளாறுதான் இது//

பாரதி வாழ்ந்த காலச்சூழலை வைத்து அவரை பார்க்க வேண்டுமா .. என்ன சார் சொல்ரீங்க .. தன் சமகாலத்தில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து மாற்றத்திற்காக போராடுபவன் தானே புரட்சிகாரன் .. நீங்க என்னன்னா பாரதி வாழ்ந்தகாலம் சரியில்ல அதனாலத்தான் அவரு அப்படியிருந்தாரு .. அப்படின்னு சமாளிக்கிரிங்க .. சரி பாரதி எப்படியிருந்தார் அப்படிங்கிறது எனக்கு கவலையில்ல .. ஆனா அவரை அளவுக்கதிகமா தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதேன்? ... பாரதியைப் பற்றி நீங்கள் (சி.பி.எம் / த.மு.எ.ச) பேசுவதில் பத்தில் ஒரு பங்காவது பெரியாரை பற்றி பேசி நான் அறிந்ததில்லை.
---------
//நாங்கள் ஏதோ சில பிரச்னைகளில் மௌனம் சாதிப்பதாக
எழுதிக் கோபப்பட்டிருந்தார்.நாங்கள் எந்தப் பிரச்னையிலும் மௌனம் சாதித்ததாக
சரித்திரம் இல்லை.எங்கள் நிலைபாடு பிறருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.
முல்லைப்பெரியாறு, நந்திகிராம் முதல் இலங்கைப்பிரச்னை வரை எங்கள் கருத்தை
தொடர்ந்து உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.பிரசுரங்களாக வெளியிட்டு மக்களிடம்
விநியோகிக்கிறோம்.//

சரி ஈழத்தமிழர் பிரச்சனையில் உங்களுடைய நிலை என்ன, அதற்காக உங்கள் இயக்கம் இதுவரை செய்த பணிகள் என்னென்ன .. இதை விளக்கி ஒரு தனி பதிவிடுமாறு தாழ்மையுடன் வேண்டுறேன்...
----------
வலையுலகில் பெரியாரும், ஈழமும் எப்போதும் ஹாட் டாபிக் .. இவை தொடர்பான உங்கள் கருத்துகளை தெரிந்துகொள்ள பலரும் என்னைப் போலவே ஆர்வமுடன் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.