Wednesday, March 7, 2012

ஒவ்வொரு வரியும் வரலாறாக.... சேகுவேரா இருந்த வீடு- யோ.கர்ணனின் சிறுகதைகள்

tamils2 யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்புக்குப் பின் வந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.இக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.13 கதைகளை ஒரே மூச்சில் யாரும் வாசித்துவிட முடியாது.ஒரு கதையை வாசித்துவிட்டு அடுத்த கதைக்குப் போவதற்கு முன் இடைவெளியும் ஒருவித மௌனமும் வாசிப்பைத்தொடர்வதற்கான ஒரு மனத்தயாரிப்பும் தேவைப்பட்டது எனக்கு.ஆகவே இரண்டு மூன்று தினங்களாயின வாசித்து முடிக்க.

நேரடியாக வாசகரோடு பேசும் கதைகள் இவை.வாசகர் என்கிற ஹோதாவை சும்மா ஒரு இதுக்கு வைத்துக்கொண்டு இந்த உலகத்தோடு பேசும் கதைகள் இவை.உலகத்தோடு மட்டுமல்ல இக்கதைகள் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் தனி மொழிகளாகவும் பாவ மன்னிப்புக்கோரும் மன்றாட்டுக் குரலாகவும் வரலாற்றைப் பகடி செய்யும் உக்கிரமான பேச்சாகவும் பன்முகப் பரிமாணம் கொண்டு அமைந்துள்ளன. இயக்கங்கள் ,லட்சியங்கள்,கொள்கைகள், பிரச்சாரங்கள், கருத்தாக்கங்கள் என்கிற எல்லாவற்றையும் டவுசரைக் கழற்றிப்போட்டு நம்முன் அம்மணமாக நிற்கவைத்துக் கேள்வி கேட்கின்றன. நமக்குள் கேள்விகளை எழுப்புகின்றன.ஈழத்தில் நடந்துள்ள- இன்னும் தொடர்கின்ற – மானுட அவலத்தை முன் வைத்து வாழ்வின் சகலத்தின் முகத்தின் மீதும் தண்ணீரை வாரி வாரி இறைக்கின்றன.ஒவ்வொரு முறையும் நாம் சில்லிட்டுச் சிலிர்க்க நேர்கிறது.

திரும்பி வந்தவன் என்கிற கதையை இங்கு தமிழ் மானம் பேசுவோர் வாசித்தால் என்ன கதிக்கு ஆளாவார்களோ தெரியாது. இதை ஒரு குறிப்பிட்ட இயக்கத்து ஆள் பற்றிய கதை என்று பாராமல் பரத்தமை பற்றிய இன்னும் குறிப்பாகத் தமிழ்ப்பரத்தமை பற்றிய வரலாற்றுப் பார்வையுடன் இக்கதையை வாசித்தால் “ தமிழ் நளினங்களுடனும் தமிழ்ப்பவ்வியங்களுடனும் தமிழ் வெட்கத்துடனும் வரப்போறவள்...” என்கிற வார்த்தைகளில் புதைந்திருக்கும் பகடியின் வீச்சு நம்மைத் தமிழ் மூர்க்கத்துடன் தாக்கும். “ இப்படி இந்த வேலை செய்யிறாவெண்டு எங்கட அம்மாவை நீங்கள்தான் சுட்டனீங்கள்.... “என்கிற கடைசி வரி மரண தண்டனைக்கு எதிராக ஆவேசமான குரல் உலகெங்கும் எழும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத்தில் விடுதலைக்கான இயக்கங்களின் கைகளால் நிறைவேற்றப்பட்ட கொலைத்தண்டனைகள் பற்றிய ஞாபகத்தை வரலாற்றிலிருந்து உருவிப்போடுகிறது.

பசியின் நெருப்பில் பொசிந்துபோகும் விழுமியங்களை தமிழ்க்கதை பேசுகிறது என்று ஒருவரி சம்பிரதாயமாக தமிழ்க்கதை பற்றி எழுதிவிட முடியவில்லை.வாழ்வும் வரலாறும் புனைவும் பிரித்தரிய முடியாதபடி பின்னிக்கிடக்கும் கதை இது. இடப்பெயர்வுகளுக்கூடான அன்றாட வாழ்க்கையில் மலசலம் கழிக்கப் பெண்கள் பட்ட பாட்டைப் பற்றிய வரிகளை வாசித்தபோது செயலற்றுக் கைகால் விளங்காமல் போனதுபோல என் உடம்பே தளர்ந்து போனது.என்ன மாதிரியான நாட்களை நம் பெண்கள் கடந்து வந்திருக்கிறார்கள்.சிறு வயதில் வாசித்த கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைக்குப் பிறகு உடல் ரீதியாக என்னைத் தாக்கிய கதை.

கு.அழகிரிசாமி இரண்டு ஆண்கள் என்று ஒரு கதையும் தொடர்ந்து இரண்டு பெண்கள் என்றொரு கதையும் எழுதினார்.யோ.கர்ணன் திரும்பி வந்தவன் கதையை அடுத்து திரும்பி வந்தவள் என்றொரு கதை எழுதியிருக்கிறார்.ஈழத்தில் இந்த இரு வார்த்தைகளுக்கும் பல அர்த்தங்கள் உண்டு.வலி பொதிந்த அர்த்தங்கள்.போர்க்காலம் முழுக்க வெளி நாட்டிலிருந்துவிட்டு திரும்பி வந்தவர்.இடையிலே போய் இப்போது திரும்பி வந்தவர்,இயக்கத்துக்குப் போய் திரும்பி வந்தவர்,சிங்கள ராணுவத்தால் பிடிக்கப்பட்டு நீண்ட நாட்களின் பின் திரும்பி வந்தவர், செத்துப்போனதாகக் கருதப்பட்டு இப்போது திரும்பி வந்தவர் என எத்தனையோ திரும்பி வந்தவர்கள்.உடலால் திரும்பி வந்தவர்கள்.மனதால் திரும்பி வந்தவர்கள்.இந்தக் கதை போராளியாக இயக்கத்துக்குப் போய் போரில் ராணுவத்திடம் பிடிபட்டுப் பின்னர் திரும்பி வந்தவளான பவித்ரா அக்காவைப்பற்றிய கதை.தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுபோன்ற பாத்திரங்களை இதுபோன்ற தருணங்களை நாம் வாசித்த்தே இல்லை - அப்படியான வாழ்க்கையை நாம் கண்டதில்லை என்பதால்.ராஜபக்சேக்கு எதிராக்க் கையில் புலிக்கொடியோடு லண்டன் ஆர்ப்பாட்ட்த்தில் நிற்கும் அண்ணன் தான் ஒரு காலத்தில் காதலித்த பவித்ரா அக்காவை அவள் இயக்கத்திலிருந்தாள் என்பதற்காகவும் ஒன்றரை வருடம் ராணுவத்தடுப்பு முகாமிலிருந்தாள் என்பதற்காகவும் நிராகரிக்கிறான்.அவன் அப்படி நிராகரிப்பான் என்பதை பவித்ரா அக்காவும் அறிந்தே இருக்கிறாள்.சமூக நிகழ்வுகள் எப்படி மனித மனநிலைகளைத் தாறுமாறாகப் புரட்டிப்போடுகின்றன!இக்கதைக்கு இணையான சம்பவங்களை நாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது காணாமல்போய் திரும்பி வந்த பெண்கள் சந்தித்ததை வாசித்திருக்கிறோம். பவித்ரா அக்காவின் கண்ணீரில் பேப்பரில் இருந்த புலிக்கொடி கரைந்து போனது என்று இக்கதை முடிகிறது.உடனே இக்கதை புலிக்கொடியை அவமதிப்பதாக நாம் கருதிக் கொள்ளக் கூடாது.இத்தகைய பின்னணியில் உழலும் ஆண் மனம் அடையும் மாற்றங்கள் பற்றியதான universal truth ஒன்றைப் பேசும் கதையாகவே பார்க்க வேண்டும்.

அரிசி கதையை வாசித்துவிட்டு பேதலித்த மனதோடு நீண்ட நேரம் மௌனத்தில் அமிழ்ந்திருக்க நேர்ந்தது.செல்லடித்துத் தாய் சாக அவளைப் புதைத்த கையோடு அம்மாவின் ரத்தம் படிந்த அரிசியைக் களைந்து சமைக்கத்தயாராகும் அக்கா பற்றியதல்ல அந்தப் பாதிப்பு.அதுபோல எத்தனையோ குடும்பங்கள் ஈழப்போராட்ட்த்தில் அனுபவித்துத்தான் விட்டன.இக்கதையில் கோழி களவாண்டு ஒரு வாய் ருசியான சோத்துக்காக அண்ணனும் அக்கா தங்கைகளும் படும் பாடு,குளிக்க ஆசைப்பட்ட சகோதரிகளை அழைத்துச்செல்லும் மகன்ன - பிள்ளைகள் திரும்பி வரும் வரை டார்ப்பாலினுக்குள் கந்த சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருக்கும் அம்மா என விரியும் காட்சிகளே மனதைப் பேதலிக்கச் செய்தன.எழுத்து மறைந்து அந்த அவல வாழ்க்கைக்குள் நாம் போய் விடுகிறோம்.செல்லடியின்போது செல்கள் விழும் டைமிங்கை கணக்கிட்டு இடைவெளிகுள் அம்மாவைத்தேடுவதும் சத்தத்தை வைத்து அது என்னவகையான செல் என்னவகையான குண்டுவீச்சு எனச் சொல்லப்பழகிவிட்ட தமிழ் வாழ்க்கை-அதுதான் நம்மை உலுக்குவதாயிருக்கிறது.

சீட்டாட்டம் கதையும் சோசலிசம் கதையும் முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து இயக்கத்தின் லட்சணத்தைத் தோலுறித்துக் காட்டுகின்றன.சரியான கிண்டலும் பகடியுமாய்ப் போகும் இக்கதைகள் நமக்கு நகையுணர்வை ஊட்டவில்லை.மாறாகப் பல உண்மைகளைப் போட்டு உடைத்து நகர்கின்றன.அதிர்ச்சியும் துயரமுமே நமக்கு மிஞ்சுகின்றன.பவுணன்ணையின் மனைவி சொல்லும் “ ச்சா.. எல்லாம் என்ன மாதிரி மரிட்டுது.எல்லாமே சோசலிசமாய் போச்சுது...” என்கிற வசனம் நம் கண்களில் நீர் துளிர்க்க வைக்கின்றன.பேதமின்றி அவரவருக்கான அப்பத்தைக் காலம் வழங்கிச்சென்றுவிட்ட குரூரத்தை நாம் உணர்கிறோம்.

முள்வேலி முகாமுக்குள்ளிருந்து வெளியேற சிங்கள ராணுவத்தினரோடு சினேகமாக்க் கதைச்சு ஒரு ஜோக்கரைப்போல நடிச்சு ஒரு வழியாக விடுதலை பெறும் இளைஞன் வெளியே வந்த்தும் ஆகாயத்தைப் பார்த்து கண்களை மூடியபடி இன்னும் கூடிய செனேக பாவத்துடன் சொன்னான் “தமிழீழம் கிடைச்ச மாதிரியிருக்குது” என்று முடியும் பாலையடிச்சித்தர் கதை இன்றைய முள்வேலி வாழ்க்கைக்குள்ளாக நம்மை அழைத்துச்சென்று காட்டுகிறது.கடைசிவரி ஏதேதோ வரலாற்றுக் காலங்களை நினைவு படுத்தி சுதந்திரத்தின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்தெல்லாம் யோசிக்க வைத்துவிடுகின்றது.முகாமுக்குள் பெரும்பாலான பொடியளைப்போலவே இவனும் முகாம் வாசலைப்பார்த்தபடியே நெடுநேரம் குந்தியிருப்பான் என்கிற வரியை எளிதில் வாசித்துக் கடந்துவிட முடியவில்லை. மூர்த்தி மாஸ்ர்ர் மீது நமக்குப் பரிதாபமும் பச்சாதாபமும் ஏற்படுகின்றன.புலிக்கொடியின் வரலாறு அதன் வர்ணங்கள் பற்றிய விளக்கங்கள் என்று படியளுக்குப் பாடம் நட்த்திய அவரும் முள்ளிவாய்க்காலில் பெண்டு பிள்ளைகளோடு இயக்கத்திடமிருந்து தப்பி ராணுவத்தை நோக்கி ஓடுகிறார்.என்ன ஒரு காட்சி அது.

இத்தொகுப்பில் மிகுந்த வலியுடன் வாசித்த கதை என்று பாவமன்னிப்பு கதையைச் சொல்லுவேன்.முற்றிலும் உளவியல்ரீதியான இக்கதை பெரும் மன உளைச்சலைத் தந்த்து.ஆபாத்தில் நண்பனுக்கு உதவாமல் ஓடிவந்த குற்றம் மனதை அரிக்க பவமன்னிப்புக் கிட்டாமல் தவிக்கும் இளைஞனின் கதையாக இக்கதை நம் மனதுக்குள் இறங்குகிறது.இத்தொகுப்பின் அட்டைப்படம் இக்கதைக்காகப் போடப்பட்ட்தோ என்று தோன்றியது.

சேகுவேரா இருந்த வீடு கதை ஒரு வரலாறு.வெவ்வேறு இயக்கங்களும் இந்தியன் ஆமியும் பின்னர் சிங்கள ராணுவமும் என மாறி மாறிக் கையகப்படுத்திக்கொள்ளும் அவ்வீடு ஈழப்போராட்ட வரலாற்றின் கண் கண்ட சாட்சியாக கதையில் நின்று எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்கிறது.வீட்டின் உரிமையாளரோ வீட்டை மீட்க முடியாமல் மனம் பிறழ்ந்து இந்தியாவில் போய்ச் செத்துப்போகிறார்.

’நான் பிறந்தது இந்தியன் ஆமி நேரம்’ என்கிற ஐயனின் எஸ்.எல்.ஆர் கதையில் வரும் வரி நம்மை ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறது.நம் மக்களின் நினைவுகளுக்குள் இந்தக் கொடுமையான வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் ஏறி உட்கார்ந்துவிட்டனவே. வந்தேமாதரம் பாட்டுப்பாடி அமைதிப்படையை வரவேற்ற பெரியவர் ராத்திரி ஒண்ணுக்குப்போக வெளியே வந்தபோது இருட்டில் அதே இந்தியன் ஆமியால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இத்தொகுப்பு முழுவதுமே சிங்கள ராணுவமும் புலிகள் இயக்கமும் இந்திய ராணுவமும் ஈழத்தமிழ் மக்களைப் படுத்திய பாடுகள் ரத்தமும் சதையுமாக விரிந்து கிடக்கின்றன.இக்கதைகளை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான கதைகள் என்று எவரும் சொல்லிவிட முடியாது.மாறாக இவை யாவும் ஒவ்வொரு வரியும் ஈழத் தமிழ் மக்களின் சார்பாக நின்று பேசப்பட்ட கதைகள்.மக்களின் பார்வையில் எல்லா இயக்கங்களையும் ராணுவங்களையும் எந்தப்பக்கமும் சார்பின்றி கேள்விக்குட்படுத்துகின்றன.இதுதான் இதுதான் இன்று ஈழபோராட்டம் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவுபெறப்போகும் இத்தருணத்தில் எல்லோருக்கும் வந்து சேர வேண்டிய மனநிலை.வரலாற்றிலிருந்து பாடம் கற்பதற்கான ஆவணமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.தமிழ் சினிமாக்காட்சிகளும் வசன்ங்களும் பாடல்களும் கதைகள் நெடுகிலும் விரவிப் பகடிக்குள்ளாக்கப்படுவது நாம் பண்பாடென்று கட்டியழுதுகொண்டிருக்கும் பலவற்றின் முகத்தில் அறைவதாக இருக்கிறது.

LRRC அல்லது பான்கீ மூன் அனுப்பிய மூவர் குழு அறிக்கை அல்லது இனி நடக்கப்போகும் விசாரணைகள் எல்லாவற்றையும் பார்க்க இக்கதைகளே உண்மையான முழுமையான யுத்த சாட்சியமாக ஒரு கலைஞனின் அசலான பொய்களற்ற வாழ்க்கைப் பதிவுகளாக நம் கைவந்து சேர்ந்துள்ளன.தவிர இவை ஈழத்து வாழ்வைப்பற்றிய கதைகளாக மட்டுமில்லை.மனித குல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இக்கதைகள் வெடிக்கின்றன.

மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனும் இன்று வாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது.

பி.கு:

இக்கதைகளை வாசிக்கும் போதெல்லாம் என் மனதில் யோ.கர்ணனையும் அவர் வயதை ஒத்த ஈழத்து இளைஞர்களையும் என் மடியில் கிடத்தித் தலை கோதி ஆற்றுப்படுத்துவது போலவும் அவர்களை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்வதுபோலவும் கரங்கள் குலுக்கி ஆறுதலாகப் பேசிக்கொண்டிருப்பது போலவும் அட்டைப்பட்த்தில் உள்ளதுபோல என் தலையை நான் பிடித்துக் கதறுவதுபோலவுமான பலப்பலகாட்சிகள் சித்திரமாக தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

நாம வேற என்னத்துக்குத்தான் ஆகப்போறோம்?

சே குவேரா இருந்த வீடு

சிறுகதைகள்-யோ.கர்ணன்

வடலி வெளியீடு,

டி 2/5, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,தெற்கு சிவன்கோவில் தெரு,

கோடம்பாக்கம்,சென்னை-600024

தமிழ்நாடு-+919789234295

கனடா- +16478963036

மின்ன்ஞ்சல்- salesvadaly@gmail.com

விலை ரூ. 80/-பக்கம் 128

-ச.தமிழ்ச்செல்வன்

1 comment:

suryajeeva said...

படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுவதை அடக்க முடியவில்லை தோழரே