Thursday, February 16, 2012

தெற்கத்திக் காதல்கள்

(என் விகடன் இதழில் இவ்வாரம் வந்த கட்டுரை)

maduraiveeran

காதல் என்றாலே தாஜ்மகால் அல்லது லைலா-மஜ்னு கதைகள்தான் எல்லோருடைய நினைவுக்கும் வந்துவிடுவது வழக்கம்..ராஜா வீட்டுக்காதல்கள் என்பதால் பேச்சு எப்போதுமே ஓவராகத்தான் எழுந்து விடும்.பேசிப்பேசிபேசி அது நாடறிந்த காவியமாகவே ஆகிவிட்டது.அல்லது சினிமா நட்சத்திரங்களின் காதல்கள் ஊடகங்களின் கிருபையால் உலகெங்கும் பேசவைக்கப்படுவதுண்டு.ஆனால் எளிய மக்களின் எத்தனையோ காதல்கள் யாராலும் பேசப்படாமல் எந்த நினைவுச்சின்னமும் இல்லாமல் காலத்தினூடே கடந்து போய்க்கொண்டிருக்கும்.

எங்கள் தென் மாவட்டங்களில் காதல் பற்றி யோசிக்கும்போது எனக்கு நினைவுக்கு வரும் இரண்டு காதல் மன்னர்கள் மதுரை வீரனும் முத்துப்பட்டனும் தாம்..கி.பி.1634 ஐ ஒட்டிய ஒரு காலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் அவர்கள்.மதுரை வீரன் கதை நமக்கு எம்.ஜி.ஆர். – பானுமதி –பத்மினி நடித்த மதுரைவீரன் படத்தின் மூலம் பரவலாகத் தெரியும்.திருமலை நாயக்கரின் ஆட்சிப்பகுதியில் இருந்த ஒரு பாளையக்காரரான பொம்மண நாயக்கரின் மகள் பொம்மியைக் காதலித்து-அதாவது ஒரு நாயக்க மன்னனின் மகளை சக்கிலியரான மதுரைவீரன் காதலித்து- அவளைச் சிறையெடுத்து காந்தர்வ மணம் புரிந்து திருச்சிக்கு ‘ஓடிப்போய்’ திருச்சிப் பாளையக்காரர் விசயரங்க சொக்கலிங்க நாயக்கரின் படைத்தளபதியாகி -வாழ்க்கை நட்த்தினார்கள்.

என்றாலும் காதலுக்கு எதிராகச் சாதியும் அந்தஸ்த்தும் செய்த சதியால் மதுரைவீரன் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டுக் கொலையுண்டான்.சாதி மீறிய காதலுக்காகக் கொல்லப்பட்ட அவனையும் அவனது காதலிகள் பொம்மி மற்றும் வெள்ளையம்மாளையும் சேர்த்துச் சிலையாக்கி மதுரை வட்டார மக்கள் சாமியாக்கி வணங்கினார்கள்.இன்றளவும் மதுரைவீரன்,வெள்ளையம்மா,பொம்மி என்கிற பேர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.மதுரைவீரன் கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியே(கிழக்குக் கோபுரச் சுவரை ஒட்டி) இப்பொதும் இருக்கிறது.ஒருகாலத்தில் இந்த மதுரைவீரன் சிலை மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளேதான் இருந்திருக்க வேண்டும்.சாதிதான் பின்னர் அதைத்தூக்கி வெளியே போட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர் அருணன் குறிப்பிடுவார்.எப்படியானாலும் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சாதி மீறிக் காதலித்ததும் அக்காதலர்களை ஆதிக்கவாதிகள் கொன்றாலும் மக்கள் சாமியாக வழிபடுவதும் எனத் தென் மாவட்ட மக்கள் காதலுக்கு மரியாதை செய்கிறவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.

எங்கள் திருநெல்வேலி மாவட்ட்த்தின் புகழ்பெற்ற நாட்டார் தெய்வம் சொரிமுத்தையன்.சிங்கம்பட்டி ஜமீந்தாரின் ஆளுகைகையின் கீழ் உள்ள கோவில்.பாபநாசத்திற்கு மேலே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாத்த்தில் லட்சகணக்கான மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.அக்கோவில் வளாகத்தில் உள்ள பல நாட்டார் தெய்வங்களையும் வழிபட்டு அந்தந்தச் சாமிக்கு உரிய படையல்களையும் நேர்த்திக்கடன்களையும் மக்கள் செலுத்தி வருகிறார்கள்.அதில் உள்ள ஒரு தெய்வம்தான் நமது காதல் மன்னன் முத்துப்பட்டன்.இவனும் மதுரைவீரன் காலத்தை ஒட்டி வாழ்ந்த ஒரு மனிதன்தான்.

கேரளத்துப் பிராமணர்களான பட்டர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன் முத்துப்பட்டன்.இளம் வயதிலேயே வர்ணாசிரம எதிர்ப்புக் கொண்டிருந்த அவன் பெற்றோரோடும் உடன்பிறந்த அண்ணன்மாரோடும் சண்டையிட்டு “வஸ்து வகை தானிழந்து” வீட்டை விட்டு வெளியேறியவன்.ஆரியங்காவு ,கொட்டாரக்கரா தாண்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பாதையில் இப்பக்கம் வந்தவன் வழியில் இரு பெண்களைக் கண்டு மயங்கிக் காதல் கொள்கிறான்.அப்பெண்கள் அக்கா தங்கையான பொம்மக்காவும் திம்மக்காவும் ஆவர்.அவர்கள் பாடிய பாடலொன்றால் ஈர்க்கப்பட்டு பாட்டு வந்த அத்திசை தேடிச் சென்றான்.

“ பாவையர் பாடு ஓசை இனந்தெரியாமல் கேட்டு ஏங்கியே முத்துப்பட்டன்

வனந்தனில் சுத்தி ஓடி மறித்திட்டான் பெண்கள் தன்னை”

கண்டதும் காதல் போல ஆனது கதை.ஆனாலும் அப்பெண்கள் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த வாலப்பகடை என்பாரின் புத்திரிகள் ஆனபடியால்,

“சாம்பசிவ நாதர் போலிருக்கிறீர் சுவாமி

சக்கிலிச்சி நாங்கள் தீண்டப்பொறுக்குமோ பூமி” என்று மருகி நிற்கிறார்கள்.ஆனாலும் முத்துப்பட்டனின் காதல் அவர்களோடு பேசப்பேச அதிகமாகிப் பித்த நிலைக்குச் செல்கிறது.

ஆண்டவன் செயலினால் உன்னைப்பெற்றாளே மாமி

அல்லாமல் வேறில்லை தாகம் தணிந்திடு நேமி “

என்றும்

ஒப்புடன் கூடியிருக்கலாம் சக்கிலிப் பெண்களே

ஓடிப்போனால் என் தோஷம் விடாதடி உங்களை” என்றும் பலவாறாகப் பேசிச் சமாதானப்படுத்திச் சாதியைத் தூரத்தள்ளுங்க பெண்களே காதல் பெரிதென்று நிறுவுகிறான்.

காதலர்கள் மூவரும் பெண்களைப் பெற்ற வாலப்பகடையிடம் போகிறார்கள்.

வாலப்பகடை பிராமணப்பையனுக்கு எப்படி நான் பெண் கொடுக்க முடியும் என்று மறுக்கிறார்.காதலுக்காக எதையும் செய்யத் தயார் என்கிறார் முத்துப்பட்டன்.

“நாற்பது நாளைக்குள் முப்புரிநூலும் குடுமியும்

மெய்யுடன் அறுத்தெறிந்து எங்களைப்போல்

ஒப்புடன் நீர் செருப்புக் கட்டி வந்தாக்கால்

எப்படியாகிலும் மக்களைக் கைப்பிடித்துத் தாரேன்” என்று ஒருவழியாக்க் ‘கண்டிஷன்’ போட்டு ஒப்புக்கொள்கிறார்.காதலுக்காக அய்யரான முத்துப்பட்டன் பூணூலை அறுத்தெறிந்து செருப்புத் தைக்கும் வேலையும் செய்து ஆட்டுக்கறி மாட்டுக்கறியெல்லாம் சாப்பிட்டுப் பழகி காதலிகளின் தகப்பன் மனம் மகிழ ஒரு சக்கிலியனாகவே மாறி “இப்ப என்ன சொல்றீங்க “ என்று நாப்பது நாளில் வந்து நிற்கிறான்.( ஜெயம் ரவி ,த்ரிஷா,பிரபு நடித்த உனக்கும் எனக்கும் –சம்திங் சம்திங் படம் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல).வாலப்பகடை தன் மக்களை இப்போது மனநிறைவோடு கட்டுக்கொடுக்கிறான்.அதன் பிறகு வாலப்பகடை பார்த்து வந்த ஊரார் மாடுகளை மேய்ப்பது மாடுகளுக்குக் காவல் காப்பது போன்ற அன்றாடப்பணிகளை முத்துப்பட்டன் பார்த்தபடி தன் காதல் வாழ்வைத் தொடங்குகிறார்.ஆனால் ஆதிக்க சாதியினர் இத்தகாத திருமணத்தை ஏற்கவில்லை.. அவர் பொறுப்பில் காவல் காக்கும் மாடுகளைத் திருடிச் செல்கிறார்கள். அதைத் தடுக்கப்போன இடத்தில் கத்தியால் குத்தி முத்துப்பட்டனைக் கொலை செய்கிறார்கள்.சாதி மீறிக் காதலித்த குற்றத்துக்காக்க் கொல்லப்பட்ட முத்துப்பட்டனை நெல்லைச் சீமையின் எளிய மக்கள் சாமியாக்கி வழிபட்டு வருகிறார்கள்.அவர் வேட்டைக்குப் போகும்போது முள் தைக்காமல் இருக்க அவருக்கு செருப்பும் மாடு களவாட வந்த சாதிக்கார்ர்களோடு சண்டை போட வல்லயம் என்னும் ஆயுதமும் செய்து போடுவதாக வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனாக செருப்பும் வல்லயமும் செய்து போடுகிறார்கள்.பாபநாசத்தில் அவருடைய கோவிலுக்கு வெளியே குவிந்து கிடக்கும் செருப்புகளும் வல்லயமும் நெல்லைச் சீமை மக்கள் காதலுக்குச் செய்த மரியாதை அல்லவா?

தாஜ்மகால் மாதிரி கோடிகளைக்கொட்டி காதலைப் போற்ற எளிய மக்களுக்கு வசதி இல்லை.ஆனால் செருப்பு செய்து போட முடியும்.ஒவ்வொரு செருப்பும் ஒரு தாஜ்மகால்தானே?9 குழந்தைகள் பெற்ற எம் அன்புத்தாய் மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகலை நாம் வணங்குவோம்.அதே சமயம் எங்கள் ஏழை மக்களின் காதல் சின்னங்களையும் போற்றிப்பாடவும் இக்காதலர் தினத்தில் உறுதி ஏற்போம்.

பி.கு

பழைய காலத்துக் கதையைச் சொல்லிவிட்ட்தற்காக வருத்தப்பட வேண்டாம்.இத்தகைய கதைகளையெல்லாம் அறிந்த்தால் நானும் நான் சார்ந்துள்ள முற்போக்கு எழுத்தாலர் சங்கமும் பல காதலர்களை இணைத்து வைத்துள்ளோம்.அவர்களில் ஒரு ஜோடி வள்ளியூரில் வெற்றிகரமாக வாழ்கிறார்கள்.மாயகிருஷ்ணன் என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இளைஞருக்கும் இசக்கியம்மா என்கிற மறவர் சமூகத்துப் பெண்ணுக்குமிடையிலான காதலை பதட்டமும் பரபரப்பும் நிறைந்த போராட்டத்துக்குப் பின் கல்யாணத்தில் கொண்டு சேர்த்தோம்.சொர்ணமல்லிகா ,லீலாவதி (மதுரையில் கொல்லப்பட்ட மக்கள் தலைவர் நினைவாக வைக்கப்பட்ட பெயர்)) என்கிற இரண்டு பிள்ளைச் செல்வங்களோடு வாழ்ந்து வருகிறார்கள்.பெண் வீட்டார் இன்னும் மனம் இறங்கி வரவில்லை.ஆனாலும் அவர்கள் படித்த பண்புள்ள குடும்பத்தார் என்பதால் இத்திருமணத்துக்குப் பிறகு இடையூறு ஏதும் செய்யாமல் அமைதி காத்து உதவியுள்ளனர்.இப்படி 50 கல்யாணமாவது செய்து வைத்திருப்போம் இதுவரை.

வள்ளியூர் மாயகிருஷ்ணன் தொலைபேசி- 94436 13700

3 comments:

ரைட்டர் நட்சத்திரா said...

Interesting

DANIEL JAMES said...

காதல் செய்யும் செல்வங்களைச் சேர்த்து, அவர்கள் அழகு குழ்ந்தைச் செல்வங்களையும் பாதுகாக்க உதவிய தா மு எ க ச தலைமை செல்வத்தை வாழ்த்துகிறேன் ஐம்பது காதல் குழுக்களை(குடும்பமாக) சேர்த்து சாதித்தற்கு.

சித்திரவீதிக்காரன் said...

காதல் மன்னர்களில் முதலாமவரை சித்திரை வீதியில் சுற்றும் போதெல்லாம் கும்பிட்டு செல்வேன். மதுரைவீரனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். முத்துப்பட்டன் கதையையும், வில்லுப்பாட்டையும் நா.வானமாமலை எழுதிய புத்தகத்தில் வாசித்து வியந்தேன். முத்துப்பட்டனும் அற்புதமான காதலன். காதல்தான் சாதி, மதங்களை அழிக்கும் அற்புத சக்தி. பகிர்விற்கு நன்றி.