Wednesday, November 23, 2011

உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு

 

  •  

    annaa library1
  • நூலக நிதியில் உருவான நூலகத்தை அரசு தன்னிச்சையாக மாற்ற முடியுமா? உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு சென்னை, நவ.22- மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமாக அமைக்கப்பட உள்ள அறிவு சார் பூங்கா வளாகத்திற்குள், அனைத்துத் தரப்பினருக்குமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது பொருத்தமான முடிவல்ல என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. நூலகத்திற்கென்றே மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரியில் கட்டப்பட்ட நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்திருப்பது தெரிந்ததே. அந்த வளாகத்தில் புதிதாக அறிவு சார் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கே இந்த நூலகம் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது. அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் சார்பில், வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். புதனன்று (நவ.23) இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாற்ற முடியுமா? மாநகர நூலக ஆணைக்குழு நிதியில்தான் இந்த நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தைப் பராமரிக்க இயலவில்லை என்று ஆணைக்குழு முடிவெடுத்துச் சொன்னால்தான் அரசு வேறு முடிவு எடுக்க வேண்டுமேயன்றி, தானே நேரடியாக இந்த முடிவை எடுக்க இயலாது. மேலும், மக்களிடம் வசூலிக்கப்பட்ட நூலக வரியிலிருந்து கட்டப்பட்ட நூலகக்கட்டடம் ஆணைக்குழுவுக்கே சொந்தமானது. அதை அரசு வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியாது என்று சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது நூலகம் அமைந்துள்ள பகுதியில் அதனால் எவ்விதமான இடையூறும் ஏற்படுவதாக எந்தத் தரப்பிலிருந்தும் புகார் வரவில்லை. இந்நிலையில் அரசு தன்னிச்சையாகவே இந்த முடிவை எடுத்துள்ளது. நிதிநிலை உரையில் சொல்லப்பட்டதா? அரசுத் தரப்பில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை உரையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், சட்டமன்ற உரையில், ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்கா அமைப்பது குறித்துதான் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி, அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கே நிறுவப்படும் என்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அறிவு சார் பூங்கா மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவுமே அமைக்கப்பட உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகமோ அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படுவது. அதை அந்த பூங்காவுக்கு மாற்றுவது பொருத்தமல்ல என்று சங்கத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு எவ்விதமான கலந்தாலோசனையும் நடத்தவில்லை. பொதுமக்கள் கருத்துக்கூற வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போதைய நூலகக் கட்டடம் மருத்துவமனைக்குப் பயன்படுமா என்பது குறித்து, மருத்துவக் கட்டட வல்லுநர்களின் கருத்தையும் பெறவில்லை. ஆகவே அரசின் இந்த முடிவு நிதிநிலை அறிக்கைக்குப் பின்னர் எடுக்கப்பட்டதே என்பது தெளிவாகிறது என்றும் சங்கம் கூறியுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வேறு நவீன வசதிகள், ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவித்துள்ள தமுஎகச, இந்த வசதிகள் அனைத்தையும் புதிய இடத்திற்கு மாற்றுவது நடைமுறை சாத்தியமல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளது. தமுஎகச வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே உள்ள வழக்குகளோடு இணைக்க ஆணையிட்டனர். மூன்று வார காலத்தில் இது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    annaa library 2

annaa lib 3

5 comments:

kashyapan said...

வழக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்---காஸ்யபன்

கார்த்தி said...

தங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
(நண்பரே..ஒரு வேண்டுகோள்..
எழுத்து அளவு சற்று பெரிதாக இருந்தால் எல்லோரும் படிக்க வசதியாக இருக்கும்)

சித்திரவீதிக்காரன் said...

நூலகத்தை இடம் மாற்றுவது தேவையில்லாத வேலை. இவ்வளவு பெரிய நூலகத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே நல்ல அரசு முயலும். நூலகத்தை ஊருக்கு ஊர் திறப்போம்! அணுஉலைகளை இழுத்து மூடுவோம்! பகிர்விற்கு நன்றி.

மணிச்சுடர் said...

சமச்சீர் கல்வியில் குட்டுப் பட்டது போல இந்த அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற முயற்சியிலும் ஜெ. அரசு குட்டுப் படத்தான் போகிறது. பாவலர் பொன்.க. புதுக்கோட்டை.

புதுச்சேரி அன்பழகன் said...

அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற முடிவை எதிர்த்த உங்கள் வழக்கு வெற்றிபெற்றே ஆகவேண்டும்.அதற்கு கலை இலக்கிய அன்பர்கள் தோழர்கள் துணை நிற்பார்கள்.