Saturday, January 1, 2011

இரவுகள் … என் இரவுகள்

எழுத்தாளர் மதுமிதா தொகுக்கும் இரவுகள் பற்றிய புத்தககத்தில் சேர்ப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை.அந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது

_______________

 

பெரும்பாலும் பேருந்துகளிலும் ரயில்களிலுமாக என் இரவுகள் கழிந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சில இரவுகள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளவும் அதன் வழி மீண்டும் அந்த நினைவுகளில் நானே அமிழ்ந்தும் மிதந்தும் பயணிக்கவும் (வாழ்வின் அர்த்தமுள்ள கணங்களே அவைதானே) கிடைத்த ஒரு நல்வாய்ப்பாக இந்தக்கட்டுரையை நான் கருதுகிறேன்.

1

என் அப்பாவுக்கு அடிக்கடி மாற்றலாகும் பணி என்பதாலோ - பிள்ளைகள் படிப்புக் கெட்டுப்போகும் என்பதாலோ - அல்லது என் தாத்தாவும் பாட்டியும் விரும்பியதாலோ - நான் ரொம்பச் சின்ன வயதில் -4 வயதாக இருக்கலாம் –மேட்டுப்பட்டியில் என் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தேன்.அப்பாவும் அம்மாவும் ரொம்ப தூரத்தில் போடி நாயக்கனூரில் இருந்தார்கள். காலாண்டு/அரையாண்டு/முழு ஆண்டு விடுமுறைக் காலங்களில் மட்டுமே அங்கு நான் அழைத்துச் செல்லப்படுவேன். அதிகாலையில் மேட்டுப்பட்டியில் கிளம்பினால் சாத்தூர் போய் ரயில் பிடித்து மதுரை சேர்ந்து அங்கிருந்து ரயில் பிடித்துப் போடி சென்று சேர இரவாகி விடும்.இப்போதானால் நாலு மணி நேரத்தில் போய்விடுகிறோம்.நான் சொல்வது 1960களின் காலத்தை.

ஆகவே பால்யகால இரவுகள் முழுக்கவுமே அப்பா அம்மாவை நினைத்து அழுதபடி படுக்கைக்குச் சென்ற இரவுகளாகவே எனக்கு அமைந்திருந்தன.விடுமுறைக்குச் சென்று அப்பா அம்மாவுடன் இருக்கும் நாட்களில் ”என் உடம்புதான் இங்கே இருக்கு என் மனசெல்லாம் அங்கேதான் இருக்கு ” என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்.அந்த வார்த்தைகளை இழுத்துப் போர்த்திக்கொண்டு போர்வைக்குள் அழுதபடி கழிந்த இரவுகளே எனக்கு வாய்த்தன.எப்போது என் பள்ளி வாழ்க்கை பற்றி நினைத்தாலும் ஒரு சோகமான உணர்வே என்னைப் பீடித்து வாட்டம் மிகக் கொள்வது என் மனநிலையாகிவிட்டது.சில ஆண்டுகள் கழித்து எனக்கு அடுத்தவனான தம்பி இளங்கோ(கோணங்கி)வும் என் போர்வைக்குள் வந்து படுத்துக்கொண்டான்.

எங்களை வளர்த்தது என் அத்தை சுப்புத்தாய்.அப்பாவின் தமக்கையார்.திருமணமாகி காடல்குடியில் வாழப்போனவள்.கணவர் பஞ்சகாலத்தில் தஞ்சாவூருக்கு அறுவடைக்கூலியாகப் போய் வாந்திபேதி வந்து வரும் வழியில் மானாமதுரை ரயிலடியிலேயே காலமாகி அங்கேயே அடக்கமாகிவிட –விதவைக்கோலத்துடன் எஞ்சிய சொத்தான தன் ஒரு மகளோடு ஊர் திரும்பி எங்களோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்.

எங்களுக்குக் கதை சொல்லும் பெரும் கடமை அவளிடம் சென்று சேர்ந்தது.என் நினைவுகளின் ஆழத்தில் சென்று தேடினாலும் அவள் சந்தோஷமான கதை ஒன்றைக்கூட எங்களுக்குச் சொன்னதாக நினைவில்லை. அவளுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து ஒரு வயதுக்குள்ளேயே அது இறந்து விட்டது.இரண்டாவது பெண் குழந்தை கைக்குழந்தையாக இருந்தபோதே கணவர் எங்கோ ஒரு ரயிலடியில் இறந்துபோனார்.அத்தையின் வாழ்க்கை துவங்கும்போதே இத்தனை பெரிய இழப்புகளோடும் வலியோடும் துவங்கி, சீக்கிரமே பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள்.அவள் சொன்ன அத்தனை கதையிலும் இப்போதும் நின்று என் நெஞ்சை அறுப்பது அவள் தன் முதல் மகள் செத்த காட்சியை வர்ணித்த கதைதான்.குழந்தைக்கு அமுதூட்டித் தொட்டிலில் இட்டுத் தூங்க வைத்து விட்டு வயலுக்குப் போய்விட்டாள் அத்தை.சீக்கிரமாகத் திரும்பி வந்து பார்த்தால் இன்னும் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கிறது. சரி.தூங்கட்டும் என்று வீட்டு வேலைகளைப் பார்க்கத் துவங்குகிறாள்.வேலையெல்லாம் முடிந்த பிறகு என்னடா பிள்ளைக்குப் பசிக்கவே இல்லையா இப்படித் தூங்குதே என்று எண்ணித் தொட்டில் பக்கம் செல்கிறாள்.தொட்டில் முழுக்க எறும்புகள்.பதறிப்போய்க் குழந்தையைத் தூக்குகிறாள்.குழந்தையின் உடம்பு முழுக்க மொய்க்கும் எறும்புகள்.அய்யோ அம்மா என்று அலறியபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடுகிறாள்.அக்கம் பக்கமுள்ளவரெல்லாம் கூடுகிறார்கள்.ஆனால் குழந்தை இறந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது.எறும்புகளை உதறிவிட்டுப் பார்த்தால் குழந்தையின் உடம்பெல்லாம் பச்சை நிறமாகியிருந்தது.

பால்யகாலத்தின் எத்தனையோ இரவுகளின் தூக்கத்தைக் கலைத்த காட்சியாக கனவெங்கும் மொய்த்துக்கிடக்கும் எறும்புகளோடு பீதியில் உளறி எழும் இரவுகளாகக் கழிந்த அந்த இரவுகள்....

எங்கள் கண்ணீர்ப்போர்வைக்குள் ஒரு கட்டத்தில் சில நாட்கள் மட்டும் மூன்றாவது தம்பி மணியும் வந்து நுழைந்தான்..அவன் ரொம்பச் சின்னவன்.அவனை எப்போதும் என் முதுகில் உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு திரிவது எனக்கு ரொம்பப் பிரியமான சந்தோஷமான வேலையாக இருக்கும்.ஒருநாள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தேன்.கல் தடுக்கிக் கீழே விழுந்தேன்.உப்புமூட்டையும் கீழே எனக்கு முன்னால் போய் விழுந்து தம்பியின் நெற்றியில் சிராய்ப்பு.பச்சைக் குழந்தையான அவன் ஒரு கணம் அதிர்ந்து பின் ஓங்கிக் குரலெடுத்து அழுதான்.அநதக்காட்சியை என்னால் தாங்கவே முடியவில்லை.அவன் அழுவதைப்பார்த்து நானும் ஏங்கி அழ ஆரம்பித்தேன்.எனக்குத் தலையில் ஆழமான வெட்டு ஏற்பட்டு ரத்தம் வழிந்ததை ரொம்ப நேரத்துக்கப்புறம்தான் கவனித்தோம்.

அன்று இரவு சாப்பிடவில்லை.தூங்கவில்லை.அழுதபடியே கழிந்த இரவாக அமைந்தது.

ஒரு சாதாரணமான விஷயம் அது என்று நினைக்கிற அளவுக்கு நாமெல்லாம் பெரியவர்கள் ஆகிவிட்டோம்.ஆனால் அது எவ்வளவு பெரிய விஷயம் குழந்தைப்பருவத்தில்? அதைச் சாதாரணம் என்றுகூற நமக்கு என்ன உரிமை இருக்கிறது.இதே போல போடிநாயக்கனூருக்கு விடுமுறைக்காகச் சென்றபோது அப்போதுதான் எங்கள் தங்கை பிறந்து ஓரிரு மாதங்களாகியிருந்தது.அவள் துணிகளோடு துணியாகத் தரையில் தூங்கிக்கொண்டிருந்தது தெரியாமல் துணி என்று நினைத்து அவள் வயிற்றில் மிதித்து விட்டேன்.அவள் அலறிய அலறலில் என் சர்வமும் ஒடுங்கிவிட்டது.அன்று இரவும் அம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் சாப்பிடாமல் தூங்காமல் அழுதுகொண்டே இருந்தேன். இப்போது எங்கள் ஒரே தங்கையான அவள் சீக்கிரமே அகாலத்தில் இறந்துவிட்டாள்.அவள் பற்றிய கண்ணீரால் மேலும் மேலும் அவளோடான சின்னச்சின்ன நிகழ்வுகளும் நினைவுகளும் கழுவி விட்டதுபோல சுத்தமாகவும் துல்லியமாகவும் மேலெழும்பி வருவது வழக்கமாகிவிட்டது.

குற்றத்தில் கழிந்த இந்த இரு இரவுகளும் மறக்க முடியாதவை.

2

ராணுவத்திலிருந்து திரும்பி வந்த நாட்களில் வீட்டில் அரிக்கேன் விளக்கேற்றி விடிய விடியப் படிக்கும் பழக்கம் வைத்திருந்தேன்.இரவு 9 மணிக்கு உட்கார்ந்தால் அதிகாலை 5 மணி வரைக்கும் படித்துக்கொண்டே இருப்பது- ஐந்து மணிக்குப் படுத்து 9 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் செல்வது என்கிற நடைமுறை.

கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்திலிருந்து மனம் தொந்திரவுக்குள்ளாகும் இரவுகளில் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பி ஆளற்ற கோவில்பட்டி நகர வீதிகளில் நடந்துதிரிவதும் சமயங்களில் பஸ்ஸ்டாண்டில் கடைசி பஸ்ஸைத் தவறவிட்ட ஒரு பயணியைப்போல படுத்துக்கிடந்துவிட்டுக் காலையில் வீடு திரும்புவதுமான ஒரு பழக்கம் என்னிடம் இருந்தது.

லாலா ஹர்தயாள் என்பவர் எழுதிய PERSONAL CULTURE என்கிற புத்தகத்தைப் படித்து முடித்த இரவு என் அறிவுக்கதவுகள் அகலத்திறந்த பேரானந்தத்தில் தூக்கமே வரவில்லை.இரவு 2 மணிக்கெல்லாம் அதைப் படித்து முடித்து விட்டேன்.ஆனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை.அந்நள்ளிரவில் அப்படியே எழுந்து கோவில்பட்டி நகர வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன்.மார்க்சியம் உள்ளிட்ட எல்லாவற்றையும் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டிய அளவுக்கு அறிமுகம் அந்நூலில் இருந்தது.மார்க்சியத்தின்பால் பெரிய அறிவான ஈர்ப்பு இப்புத்தகத்தால்தான் எனக்கு ஏற்பட்டது என்பேன்.அன்று இரவு முழுக்கச் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு அப்படியே கதிரேசன்கோவில் மலைமீது ஏறி நின்றபோது கிழக்கே சூரியன் உதித்தது. அப்புத்தகத்தை எழுதிய லாலா ஹர்தயாள் யார் எவர் என்று தெரியவில்லை.அப்புத்தகமும் இப்போது கானாமல் போய்விட்டது.சுதந்திரப்போராட்ட காலத்தில் கத்தர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் பல புத்தகங்கள் எழுதிய லாலா ஹர் தயாள் தானா இவர் என்கிற சந்தேகம் இன்னும் தீராமல் அலைந்து கொண்டிருக்கிறேன்.

வெண்ணிற இரவுகள் படித்து முடித்த இரவிலும் காதல் வயப்பட்ட ஒரு சோக மனநிலையோடு இரவு நகரத்தின் அமைதிக்கு ஊடாக நடந்தபடி இருந்தேன்.ஒரு கைலியோடும் சட்டையோடும்தான் நான் செருப்புக்கால்களோடு நடந்து கொண்டிருந்தேன். ஆனால் என் மீது ஒரு பெரிய பனிக்கோட்டும் தலையில் ஒரு பனிக்குல்லாவும் இருந்ததான உணர்வோடு அவ்வப்போது கோட் காலரைத்தூக்கி விட்டபடிக்குக் கோவில்பட்டியின் வெக்கையான தெருக்களில் ஷூக்கள் தரையில் உரசிச் சப்தமிட நடந்து கொண்டிருந்தேன்.

வண்ணநிலவனின் கம்பா நதிக்காகவும் கடல்புரத்தின் பிலோமிக்குட்டிக்காகவும் ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கில் வரும் அந்த மேன்மைமிக்க பெண்ணுக்காகவும் ஜமீலாவுக்காகவும் என நடந்து திரிந்த இரவுகள் என் புத்தக இரவுகள்.

இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினாலும் கல்லூரி நாட்களில் நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலைப் படித்த முடித்த அந்த இரவு அவள் (பூரணி என்று நினைவு) கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் தருணத்தில் மேற்கொண்டு வாசிக்க முடியாமல் நானே அந்த அரவிந்தனாகி வெடித்து அழுதேன்.அது நிஜமென்று நம்பினேன்.

அதற்கு நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஊர்வசி புட்டாலியாவின் தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ் (THE OTHER SIDE OF SILENCE) புத்தகத்தைப் படித்து முடித்த இரவு.1947இல் தேசப்பிரிவினையின்போது பாலியல் வன்முறையின் விதவிதமான கோர வடிவங்களில் சிக்கிச் சிதைந்த பல பெண்களின் நேர்காணல் வார்த்தைகளால் மனம் சிதறி, தாள முடியாமல் உண்மையாகவே தரையில் புரண்டு புரண்டு அழுத இரவாக அது நீண்டது.புத்தகம் –எழுத்து-பழைய நிகழ்வுகளின் பதிவு என்பதெல்லாம் மறந்துபோய் புத்தகம் சொன்ன நிகழ்வுகளுக்குள் நான் போய் இருந்து துயரத்தில் அமிழ்ந்து போன தருணங்கள் அவை.

3

அப்போது எங்கள் அமைப்பின் திருநெல்வேலிக்குழுவின் சார்பாக உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களையெல்லாம் மக்கள் மத்தியில் திரையிட்டுக்கொண்டிருந்தோம்.தெரு சினிமா இயக்கம் என்ற ஒரு சொற்சேர்க்கை அன்று என்மனதில் தீயாகக் கனன்று கொண்டிருந்தது.மக்கள் குப்பைகளைத் திரையிடும் திரையரங்குகளைப் புறக்கணித்து எங்கள் தெரு சினிமா அரங்குக்கு அணி அணியாக வருவதான பெரும் கனவில் அலைந்து கொண்டிருந்தேன்.முதல் முதலாக வள்ளியூரில் ஒரு பள்ளி மைதானத்தில் சத்யஜித் ரேயின் பதேர்பாஞ்சாலியைத் திரையிட்டோம்.அப்போதெல்லாம் (1984) இந்த குறுந்தகடுகள்/அடர்தகடுகள் வந்திருக்கவில்லை.16 எம்.எம் ப்ரொஜெக்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு படப்பெட்டியை பெங்களூரு திரைப்படக்காப்பகத்திலிருந்து ரயில்வே பார்சலில் வரவழைத்து இரண்டையும் தூக்கிகொண்டு (தனித்தனி லக்கேஜ் தந்திரணும் சார்..)ஊர் ஊராகப் போவோம்.

முதலில் கொஞ்சம் மாற்றுத் திரைப்பட இயக்கத்தின் தேவை பற்றி உரையாற்றிவிட்டு(சரி சரி படத்தைப்போடுங்க சார்..) படத்தைத் திரையிட்டோம்.நல்ல கூட்டம்.படம் ஓடிக்கொண்டிருந்தது.சினிமான்னு சொன்னா எப்படி நம்ம ஜனங்க கூடிர்றாங்க பாருங்க என்று பேசியபடி நாங்கள் பக்கத்தில் டீக்குடிக்கப் போனோம்.திரும்பி வந்து பார்த்தால் மைதானம் கிட்டத்தட்டக் காலியாக இருந்தது. ஏழெட்டுப்பேர் –அது நம் இயக்கத்தோழர்கள் மட்டுமே- படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.ஒண்ணும் புரியலேன்னு சொல்லிக்கிட்டே சனங்க போயிடுச்சு சார் என்று ஆப்பரேட்டர் சொன்னார்.ஆங்கிலத்தில் சப்-டைட்டில் இருந்தது.ஆங்கிலம் தெரியாத மக்கள் மற்றும் சப்டைட்டிலையும் பார்த்து படத்தியும் பார்க்கிற வித்தைக்கு சற்றும் அறிமுகமில்லாத மக்கள் போய்விட்டார்கள்.இருந்த ஏழெட்டுப்பேரும் சப் டைட்டிலோடு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

பஸ்ஸில் கண்டக்டரோடு போராடி லக்கேஜ்களை (பதேர் பாஞ்சாலியும் ஒரு லக்கேஜ் ஆகிவிட்ட கவலையுடன்) ஏற்றிக்கொண்டு வீடு திரும்பும்போது தோற்றுப்போன –அதிலும் முதல் நாளிலேயே தோற்றுப்போன –ஒரு போராளியின் மனநிலையோடு வீழ்ந்துகொண்டிருந்தேன்.நிறையப் பெருமூச்சுகள் மற்றும் மனதிற்குள் புலம்பல்கள் என அந்த நள்ளிரவின் பஸ் பயணம் துயர்மிகுந்ததாக இருந்தது.

ஆனாலும் ஒரு கம்யூனிஸ்ட்டுக்குத் தோற்பதற்கு உரிமை இல்லை என்று எனக்கு நானே சொல்லிச் சொல்லி சில நாட்களில் மீண்டும் போராடும் உறுதியைத் தகவமைத்துக்கொண்டேன். அம்பாசமுத்திரத்தில் சீரணி அரங்கத்தின் முன்னால் இரவு 7 மணிக்கெல்லாம் 500 பேருக்குமேல் கூடிவிட்டார்கள்.முதலில் ஹேப்பி அனிவர்சரி,வெட்டிங் போன்ற மௌனக் குறும்ப்படங்களைத் திரையிட்டோம்.மக்கள் சிரித்துக் கைதட்டி வரவேற்றார்கள்.மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டோம்.அடுத்ததாக விட்டோரியா-டி-சிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் திரையிட்டோம்.படத்தின் சத்தத்தைச் சற்றே குறைத்து மைக்கில் நான் படத்தின் கூடவே சப்டைட்டில் எழுத்துக்களைத் தமிழில் வாசித்துக்கொண்டு வந்தேன்.பெரும் வரவேற்பைப் படம் பெற்றதுடன்.கூட்டம் அப்படியே அமர்ந்திருந்தது.அது முடிந்ததும் ஐசன்ஸ்டீனின் போர்க்கப்பல் பொடெம்கின் திரையிட்டோம்.மிகுந்த மரியாதை மிக்க அமைதியுடன் மக்கள் அதைப் பார்த்தார்கள்.இரவு 3 மணிக்குத்தான் திரையிடல்களை நிறைவு செய்தோம்.நிறையப்பேர் வந்து எனக்குக் கை குலுக்கி-ஏதோ நான் தான் இப்படங்களை இயக்கியவன் என்பதுபோல- பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்கள்.அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரியின் முதல்வராக அப்போது இருந்த சிதம்பர சுப்பிரமணியன் வந்து என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார்.உலகத்தையே எங்களுக்குக் கொண்டு வந்துட்டீங்க..ரொம்ப நன்றி..நன்றி என்று கைகளை விடாமல் குலுக்கிக்கொண்டே இருந்தார்.

அன்று லக்கேஜ்களுடன் அதிகாலை பஸ் பிடித்துத் திரும்பும்போது சுத்தமாகத் தூக்கமே வரவில்லை.அன்றலர்ந்த மலர்போல மனம் புதுசாக இருந்தது.திரையரங்கச் சுவர்களை உடைத்துக்கொண்டு மக்கள் தப்பி வெளியேறி எங்கள் திரைகளுக்கு முன்னால் வந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள்.என்ன உற்சாகமான இரவாகவும் வாழ்விலே மிகுந்த மகிழ்ச்சிக்குரிய அதிகாலையாகவும் மேலும் மேலும் முதிர்ச்சியற்ற கனவுகள் விரிந்துகொண்டே பஸ்ஸை வழிநடத்திச்சென்ற காலையாகவும் அது இப்போதும் கூடவே தங்கியிருக்கிறது.

அறிவொளி இயக்கம் முடிந்த பிறகு நாங்கள் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் தலைமையில் மதுரையில் மையம் கொண்டு மக்கள் வாசிப்பு இயக்கத்தை நடத்தினோம்.அதன் பகுதியாக புதிய கற்றோருக்கான (neo-literates) கதைப் புத்தகங்களை எழுதுவதும் தயாரிப்பதும் அவற்றை ஊர் ஊராகக் கொண்டுசென்று மக்களிடம் விற்பனை செய்வதும் என்று ஒரு பெரிய இயக்கமாகப் பத்து மாவட்டங்களில் செய்து வந்தோம். ஒவ்வொரு புத்தகத்தையும் மக்களிடம் அறிமுகம் செய்ய ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு பாடல் மற்றும் அதன் உள்ளடக்கத்தைச் சொல்லும் சிறு நாடகம் (பேராசிரியர் காளீஸ்வரன் முயற்சியில்) இவையும் தயாரித்துக்கொண்டு கலைக்குழுவுடன் புத்தகங்களைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகப் போய்க்கொண்டிருந்தோம். தென்காசிப் பக்கம் மத்தளம்பாறை என்ற கிராமத்துக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தபோது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.அந்த ஊர்த் தொண்டர்கள் என்ன சார் இவ்வளவு லேட்டாக வர்ரீங்க என்று சலித்தாலும் சரி சரி வாங்க தெருத்தெருவாப் போய் மக்களைக் கூப்பிடுவோம் என்று அழைத்துச்சென்றார்கள். மேளம் அடித்துக்கொண்டும் கைகளைத் தட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமாக நாங்கள் தெருக்களில் நுழைந்தபோது மின்சாரம் தடைப்பட்டு இருட்டாகி விட்டது.இனி என்ன நாடகம் போட என்று நான் உடனே மனம் சோர்ந்தேன்.ஆனால் தொண்டார்கள் அடாது கரண்ட் கட்டானாலும் விடாது நாடகம் நடக்கும் என்று சொல்லி மக்கலை அழைத்தார்கள்.ஊர் மந்தையில் கூட்டம் கூடிவிட்டது.மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அரிக்கேன் விளக்குகள் எடுத்து வந்து எங்கள் குழுவுக்கு உதவினர்.நிலா ஒளியும் கை கொடுத்தது.இரண்டு மணி நேரம் நாடகமும் பாட்டுமாக நடத்திவிட்டு 200 ரூபாய்க்கு அந்நேரத்திலும் புத்தகம் விற்றுவிட்டுப் புறப்பட்டபோது மின்விளக்குகள் எரிந்தன.

மக்கள் இயக்கம் மக்கள் இயக்கம் என்று சொல்கிறோமே அது இதுதான் போலும் என்கிற புதிய புரிதலை அவ்வூர் மக்கள் அன்று எமக்கு வழங்கினார்கள்.அந்த இரவும் இருட்டும் எனக்குள் ஏற்படுத்திய வெளிச்சம் இன்றைக்கும் உள்ளே பிரகாசித்து என்னைத் தூங்க விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது.

4

குடும்பவாழ்க்கை கலை வாழ்க்கை அரசியல் பொதுவாழ்க்கை என ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒருகால் அந்தரத்திலே ஒருகால் என்று அலைவதாக இந்த வாழ்க்கை ஆனதில் அதிகமும் பாதிக்கப்பட்டிருப்பது என் வாழ்க்கைத்துணைவர்தான்.என்னோடு சேர்ந்து வாழ என்று வந்தவரைக் காலம் முழுவதும் எனக்காகக் காத்திருக்கும்படியாக வைத்துவிட்டேன்.என் இரவுகளைப் பார்க்கிலும் எனக்காகக் காத்திருந்து காத்திருந்து தூக்கமும் மன நிம்மதியும் இழக்கும் அவருடைய இரவுகளின் தனிமையையும் கனத்தையும் சேர்த்துச் சுமப்பனவாகவே பெரும்பாலான என்னுடைய இரவுகள் இப்போது அமைந்திருக்கின்றன.எங்கள் இருவரையுமே சமயங்களில் மனப்பிறழ்வுக்காளாக்கும் இரவுகளாக அமைந்துவிடுகின்றன.என் மகனின் பால்யகாலத்துப் பேச்சுக்களைக் கேட்காமலே கழிந்த நாட்களின் சுமையைவிட காத்திருக்கும் என் அன்புத் துணையின் என் மீதான அவநம்பிக்கை ததும்பும் இரவுகளின் அழுத்தத்தில் பிதுங்குகின்றன என் பயண இரவுகள் . வார்த்தைகளாலோ கொஞ்சம் கண்ணீராலோ ஈடு செய்துவிட முடியாத அவருடைய இழப்புகள் என் அருகாமையால் மட்டுமே சரியாகும் என்பதறிந்தும் நாடு அழைக்கின்ற குரலுக்குச் செவி மடுத்து அலைந்து கொண்டிருக்கிறது என் காலம்.இத்தனைக்கும் நான் ஒருசில நாட்களுக்கும் மேல் சிறை சென்றதில்லை.தடியடி பட்டதில்லை.கலாச்சாரத்தளத்தில் கல்வித்தளத்தில்தான் இயங்குகிறேன்.

போன தலைமுறைக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கூட்டுக்குடும்ப வாழ்முறை ஒருவேளை கைகொடுத்திருக்கலாம்.அல்லது அந்தத் தலைமுறைப் பெண்கள் தங்களுக்கென சொந்த விருப்பு வெறுப்பு ஆசை-கனவுகள் ஏதும் இல்லாதவர்களாக கணவரே கண்கண்ட தெய்வமாக வாழ வசங்கியிருக்கலாம்.அப்படியான ஒரு வாழ்க்கைமுரை பொதுவாழ்வில் ஈடுபட்ட அன்றைய ஆண்களுக்குச் சாதகமாக அமைந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.படிப்பும் வெளி உலகப் பரிச்சயமும் ஏற்பட்டுவிட்ட இன்றைய ஜனநாயக யுகத்தில் வாழும் என் துணைவரைப்போன்ற பெண்களுக்குச் சுதந்திரம் என்றால் என்ன என்பது தெரிந்திருப்பதால் துரம் கூடுதலாகி வருத்துகிறது.இதெல்லாம் புரிந்துகொள்ளும் மனநிலையுள்ள என்போன்ற ஆண்களிடம் கூட பெண்கள் அடிமைப்ப்ட்டுத்தான் கிடக்க வேண்டியிருக்கிறது என்பது இன்னும் குற்ற மனதைக் கனமாக்குகிறது.

எல்லா வேலைகளும் முடிந்த்தும் மறுகணமே அவரது தனிமை வந்து தாக்கி வருத்துவதாக இன்றைய என் இரவுகள் கழிகின்றன.

5

மேஜர் ஜெய்பால் சிங் இறந்த செய்தி கேள்விப்பட்ட அந்த இரவு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்திய விமானப்படை அதிகாரியாக இருந்து 1948இல் கப்பற்படையில் எழுச்சி ஏற்பட்டபோது அந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்பதற்காக விமானப்படையிலிருந்து தப்பி பம்பாய் வந்து சேர்ந்தவர்.ராணுவச் சட்டங்களின் படி தப்பிச்சென்ற-தேடப்பட்டு வருபவர் பட்டியலில் இடம்பெற்றவர்.மீண்டும் 1956இல் சுதந்திர இந்தியாவில்தான் அவர் பிடிபடுகிறார். ராணுவக்கோர்ட்டில், ஒரு அதிகாரியான நீங்கள் எப்படி சட்டத்தை மீறித் தப்பிச் செல்லலாம் என்று நீதிபதி கேட்டபோது “ நாடு அழைத்தது.அதனால் போனேன் “ என்று நெஞ்சை நிமிர்த்திப் பதில் சொன்னார்.மார்க்சிய இயக்கத்தில் இனைந்து பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகக் கடைசிநாள் வரை மக்களுக்காக உழைத்தார்.

அவர் இறந்த செய்தி தமிழ் நாட்டில் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை.ஒரு சாதிச் சண்டியர் செத்தால் கூட பஸ்கள் ஓடாமல் நிற்க-கடைகள் அடைத்துக்கிடக்க-அஞ்சலி செய்யும் என் தேசமே எத்தனை மகத்தான தியாகிகலை அறியாமலே நீ இருக்கிறாய்? என்கிற கேள்வியோடு அந்த இரவில் தூக்கமின்றி தெருக்களில் அலைந்துகொண்டிருந்தேன்.பரிணாமனின் பாடல் வரிகள் மட்டும் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது.கொஞ்ச நேர்த்துக்குப் பின் அவ்வரிகளை உரக்கப்படியபடி நடந்து போய்க்கொண்டிருந்தேன்...

எங்களைத் தெரியலையா

எங்களைத் தெரியலையா

திங்கள் ஒளியினில் துயில்வோரே

தினம் சூரியத் தீயினில் உழைப்போரே......

2 comments:

வண்ணதாசன் said...

அன்புமிக்க தமிழ், மதுமிதா என்னிடமும் இந்தத் தொகுப்புக்குக் கேட்டார்கள். நல்ல வேளை நான் எழுதவில்லை. இப்படியான ஒரு இரவும் எனக்கில்லை. இதை வாசித்த இந்தத் தருணத்தில், உங்கள் எல்லா இரவுகளையும் நான் வாழ்ந்துவிட்டேன்

CLASSBIAS said...

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த அல்லது கனவுகள் இல்லாத இரண்டு வகை பெண்களை மட்டுமே குறிப்பிட்ருக்கிறீர்கள். புரட்சியை இலக்காகவும், மார்க்சியத்தைத் தத்துவமாகவும் ஏற்றுக் கொண்டு ஒரு முழு நேர ஊழியரின் மனைவியாக இருந்து, வாழ்க்கைப் போராட்டம் நடத்திய பெண்களும் இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்திருந்தால் உங்களின் அற்புதமான் எழுத்து இன்னும் ஆழப்பட்டிருக்கும்.