எவ்வளவோ பேசுகிறோம்.எவ்வளவோ எழுதுகிறோம்.வாசிக்கிறோம்.எல்லாமே வார்த்தை வடிவம் பெற்ற நம் சிந்தனைகள்..கருத்துக்கள்..உணர்வுகள் தாம்.எல்லா வார்த்தைகளும் நம்மை ஏதாவது செய்வதில்லை.கூரை ஓட்டின் மீது விழுந்த மழை நீராக அப்படியே ஓடிவிடுபவைதான் எல்லா வார்த்தைகளும்.சில வார்த்தைகள் மட்டுமே அப்படியே நிலத்தில் விழுந்து விதைக்கு உணவாகி செடியாக மரமாகி காற்றில் ஆடி அசைந்து- பேயாட்டம் போட்டு- நம்மை சதா ஏதாவது செய்து கொண்டே இருக்கின்றன.துன்புறுத்துகின்றன.வதைக்கின்றன.களிப்புண்டாக்குகின்றன.சிரிக்க வைக்கின்றன.அழ வைக்கின்றன.பெருமூச்செரிய வைக்கின்றன.குற்ற உணர்வு கொள்ளச்செய்கின்றன.கோபம் கொள்ள வைக்கின்றன.என்னதான் செய்வதில்லை.நாவினாற் சுட்ட வடு என்றான் வள்ளுவன்.
ஆனால் அதே வார்த்தைகள் –அதை விடக் கூர்மையான வார்த்தைகள் கூட- ஏதும் செய்யாமல் கடந்து போகின்றன பிறிதொரு நாளில்-பிறிதொரு தருணத்தில்.அந்த வார்த்தை வந்து விழுகின்ற நிலமாகிய மனம் அப்போதிருக்கும் உணர்வு நிலையும் எங்கிருந்து அந்த வார்த்தைகள் வருகின்றன என்பதும் முக்கியமாகின்றன.
சரி.மேட்டருக்கு வருவோம்.
சமீபத்தில் வெளிவந்துள்ள எழுத்தாளர் க.வை.பழனிச்சாமியின் நாவலான ’ஆதிரை ‘ யில் ஒரு வாக்கியம் என் மனதில் கிடந்த ஒரு விதைக்கு உணவாக விழுந்து அது வளர்ந்து மரமாகி காற்றடிக்கும் போதெல்லாம் அசைந்து மருட்டிக்கொண்டிருக்கிறது.
கதையின் நாயகி ஆதிரை தன் இணையான ஆதியை விட்டு விலக முடிவு செய்கிறாள்.இனிச் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என இருவருக்கும் தோன்றிவிடுகிறது.பிரியும் நிமிடட்ர்ஹ்தில் ஆதி சொல்லும் வார்த்தைகள் இவை:
“ என்னைப் பார்க்கும் அந்தக் கண்கள் மரித்து விட்டன.இனி எனக்கானது எதுவும் உன்னிடம் இல்லை ”
வார்த்தைகளைவிடப் பார்வைகள் இன்னும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை.மனதின் போக்கை வெளிப்படுத்தும் ரேகைகளைக் கண்களில் வாசித்துவிட முடியும். அநேகமாக எல்லாத் தம்பதிகளுமே தங்கள் வாழ்வில் ஓரிரு முறையேனும் (குறிப்பாக எல்லாப் பெண்களுமே ஒரு முறையேனும்) இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்கிற புள்ளியைக் கடந்துதான் வந்திருப்பார்கள்.எனக்கான கண்கள் மரித்து விட்டன என்பது போலவோ எனக்கான வார்த்தைகள் உன்னிடம் வற்றிவிட்டன என்றோ உனக்கான வார்த்தைகள் ஏதும் இனி என்னிடம் மிச்சமில்லை என்றோ சொல்லியிருப்பார்கள் அல்லது சொல்லணும் என்று நினைத்திருப்பார்கள்.
எனக்கு இவ்வரிகளை வாசித்ததும் என்ன தோன்றியது என்றால் ஒருமுறை எங்களுக்கிடையே நடந்த பேச்சின்போது என் இணையர் சொன்ன வார்த்தைகள்தான். ‘ நீ எல்லோர் மீதும் அன்பாக இருக்கிறாய்.என்மீதும் அன்பாக இருக்கிறாய்.இதில் எனக்கானது என்று பிரித்தறிய ஏதுமிருப்பதாகத் தெரியல்லையே..’
உண்மையில் பொதுவாழ்க்கை எனப்படும் பேராற்றில் குதித்தவர்கள் எல்லாக்காலங்களிலும் கேட்டிருக்கக்கூடிய வார்த்தைகளாக இவை எனக்குப்பட்டன.ஐந்து பேரிடம்-ஐம்பது பேரிடம்-ஐநூறு பேரிடம்-கலை இரவுகளில் ஐயாயிரம் பேரிடம் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசும் வாழ்க்கை லபிக்கப்பட்ட எனக்கு எந்நேரமும் தமிழ்ச்சமூகத்தை நோக்கிப் பேசிப்பேசி மனநிலையே ஒரு கூட்டத்தைப் பார்த்துப் பேசுவதற்கு மட்டுமானதாகத் தகவமைந்து போனதோ என்று அவ்வப்போது சந்தேகம் வருகிறது. ஒரு நண்பனுக்கான என் கண்கள் மரித்து விட்டனவோ.என் இணைக்கான என் கண்கள் மரித்துவிட்டனவோ.குறிப்பிட்ட ஒருவருக்கான வார்த்தைகளை கூட்டத்துக்கான வார்த்தைக்காரனாகிவிட்டதால் இழந்து விட்டேனோ என்றெல்லாம் மனம் குழம்புகிறது.ஒரு நண்பர் ஒருமுறை என் புத்தகம் ஒன்றை வாசித்துவிட்டுச் சொன்ன வார்த்தைகள் “ ஊரு உலகத்துல இருக்கிற மனுச மக்களுக்கு வராத சந்தேகங்களும் குழப்பங்களும் உங்களுக்குத் தான்ய்யா வருது..இதெல்லாம் ஒரு பிரச்னையா..” அவர் சொன்னதில் இதெல்லாம் ஒரு பிரச்னையா என்கிற வார்த்தைகள் மட்டும் எதை எழுதினாலும் ஒரு போலீஸ்காரன் மாதிரி என் மனசில் ஓரத்தில் ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்து நக்கலாகச் சிரித்துக்கொண்டிருக்கிறது.
அந்தக் காவக்கார வார்த்தைகளையும் மீறி ஒருவருக்கான என் வார்த்தைகள் மரித்துவிட்ட சோகம் இப்போதைக்கு என்னை ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. என்ன செய்வது?
2 comments:
ஆம்.
சில வார்த்தகள் நம்மை
வாழவைப்பது போல்
சில வார்த்தைகள் நம்மை
சாகடிக்கின்றன.
பொது வாழ்க்கை எனும் பேராற்றில் குதித்தவர்கள் யாரும் இதுபோல் கவலைப்படுவதில்லை. கைதட்டும் ஓசையில்தான் கவனமெல்லாம். நீங்கள் தான் வேண்டாத கவலைப்படுகிறீர்கள்.
Post a Comment