Wednesday, June 2, 2010

குறைந்த ஒளியில் வாழ்ந்து மறைந்த கலைஞன்

DSC_0284

 

ஒவ்வொரு முறையும் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் வீதிக்கு எழுத வரும்போது ஒரு மரணச்செய்தியோடே வர நேர்கிறது.நேற்று ஓவியர் இசக்கி அண்ணாச்சி நெல்லையில் காலமாகிவிட்டார்.1927இல் பிறந்து 2010 ஜூன் 1 இல் மறைந்த இந்த 83 ஆண்டு வாழ்க்கையில் சுமார் 65 வருடங்களை ஓவியம்-புகைப்படம் என்றே வாழ்ந்து முடித்தவர் இசக்கி.ராய் சௌத்திரி போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியர்களிடம் பாடம் கற்கும் வாய்ப்புப் பெற்ற இசக்கி அண்ணாச்சி திருவனந்தபுரம் ஓவியக்கல்லூரியில் படித்த காலத்தில் புதுமைப்பித்தனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது பற்றி அவ்வப்போது நெகிழ்ச்சியுடன் பேசுவார்.

என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்புக்கு (வெயிலோடு போய்..) அட்டைப்படமாக அவர் எடுத்த புகைப்படம் ஒன்றைக்கேட்டு வாத்தியார் ராமகிருஷ்ணன் சிபாரிசுடன் நடையாக நடந்துகொண்டிருந்த அந்த 1985இல் அவரோடு நெருக்கம் கிடைத்தது.லேசில் யாருக்கும் படம் தர மாட்டார்.பொத்திப் பொத்தி வைத்துக் கொள்வார்.அவருடைய அறையே ஒரு வினோதமான முறையில் அலங்கோலமாகக் கிடக்கும் . எங்கும் பிலிம் நெகடிவ்கள் தரையில் சிதறிக்கிடக்கும்.கால் வைக்க முடியாது.அவரைத்தவிர யாரும் அவர் அறையில் எதையும் தேடி எடுக்க முடியாது. இழுத்தடித்து என் முதல் தொகுப்புக்கு இந்தப்படத்தைக்கொடுத்தார்.

Photo43

என் தொகுப்பை விட இப்படம் பேசப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.தொகுப்பைப்படித்த பிறகு கதைகள் ரொம்ப நல்லா இருக்கு. இந்தத்தொகுப்புக்குப் படம் கொடுக நான் அவ்வளவு தயங்கியிருக்க வேண்டியதில்லை என்று பின்னாளில் கூறினார்.அப்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

நெல்லை வட்டாரத்தில் அந்த நாட்களில் ஸ்டூடியோ வைத்து கேமிரா,பிரஷ் என்று தொழில் ஆரம்பித்த ஒவ்வொருவரும் இசக்கி அண்ணாச்சியின் சிஷ்யர்களாகவே இருந்தனர்.எல்லோருமே பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருந்தனர்.இசக்கி அண்ணாச்சி உண்மையில் அவருடைய ஒதுங்கி வாழும் குணத்தின் காரணமாகவும் வெளிச்சத்தை விரும்பாத அவரது மனநிலை காரணமாகவும் குடத்திலிட்ட விளக்கு என்கிற அவர் காலத்து உவமானத்துக்கு ஏற்றவராகவே வாழ்ந்து முடித்து விட்டார்.தான் எடுத்த ஒவ்வொரு புகைப்படத்தையும் அவர் உயிர் போல நேசித்தார்.தன் நெஞ்சோடு அவற்றை அனணத்துக்கொண்டு உலகத்துக்குத் தரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தையாகவே கடைசி நிமிடம் வரை வாழ்ந்தார்.

அவர் 1940 களில் முதல் தலைமுறைக் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.திருநெல்வேலியின் முதல் கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவரான சிந்துபூந்துறை சண்முகம்பிள்ளை அண்ணாச்சி நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் ஆரம்பித்து சோவியத் இலக்கியங்களையெல்லாம் மொழியாக்கம் செய்து பதிப்பித்தபோது அந்நூல்களுக்கெல்லாம் இசக்கி அண்ணாச்சிதான் அட்டைப்படம் வரைந்து கொடுத்தார். அண்ணாச்சி என்ற சொல் இன்று பரவலாக பலசரக்குக்கடை வைத்திருக்கும் நெல்லைப்பகுதி நாடார்களைக் குறிக்கும் சொல்லாக அறியப்பட்டு விட்டது.அன்று நெல்லைச்சீமையில் தூத்துக்குடி சண்முகம் அண்ணாச்சி,பாப்பாங்குளம் சொக்கலிங்கம் அண்ணாச்சி,சிந்துபூந்துறை சண்முகம்பிள்ளை அண்ணாச்சி ஆகியோர்தான் முப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களாக வாழ்ந்தார்கள்.அவர்களோடு பழகிய ஓவியர் இசக்கி , ‘இசக்கி அண்ணாச்சி’ ஆனார்.

நெல்லையில் யார் என்ன கலை முயற்சியில் இறங்கினாலும் இசக்கி அண்ணாச்சியின் பங்களிப்பு அதில் இருக்கும்.காஞ்சனை திரைப்பட இயக்கம்,விரல்கள் ஓவிய இயக்கம்,யாதுமாகி ,இப்போது ஓவியர் கதிர் எடுக்கும் முயற்சிகள் இவற்றோடு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் நிகழ்வுகளிலும் அவர் ஓரமாகவேனும் இருப்பார்.நாங்கள் நடத்திய பல புகைப்பட, போஸ்டர்- ஓவியக்கண்காட்சிகளில் அவர் முழுமையாகத் தன் உழைப்பையும் படைப்புகளையும் மகிழ்வுடன் தந்தார்.அவருடைய புகைப்படக் கண்காட்சியை தமிழகம் முழுவதும் 90-91 இல் கொண்டு சென்றோம். 1990 மற்றும் 2008 இல் நடைபெற்ற எங்கள் மாநில மாநாடுகளில் அவரது புகைப்படக்கண்காட்சிகள் இடம்பெற்றன. 2008 அக் 1,2,3  ஆகிய நாட்களில் நெல்லையில் 3 நாட்கள் அவரது புகைப்படக்காட்சியை தமுஎகச  நடத்தியது. சென்னையில் கண்காட்சியைப்பார்த்து விட்டு இசக்கி அண்ணாச்சி என் அப்பாவின் நண்பர்.இந்தக் கண்காட்சிக்கு என் எளிய காணிக்கையாக இதை வழங்குகிறேன் என்று ஒரு பத்தாயிரம் ரூபாய்க் காசோலையை திருமதி.கமீலா நாசர் அளித்தார்.

திருநெல்வேலி நகரம் கடந்த 60 ஆண்டுகளில் அடைந்துள்ள மாற்றங்களை அவருடைய புகைப்படங்களில் அவர் ஆவணமாக விட்டுச்சென்றுள்ளார்.நெல்லை வட்டார விவசாய வாழ்வின் கோலங்களாக அவருடைய பெரும்பகுதிப் புகைப்படங்கள் அமைந்துள்ளன.தன் தோள்களில் கிடந்த பறையை கடைசிவரை அடித்து முழக்காமலே மௌனத்திலும் குறைந்த ஒளியிலுமாக வாழ்ந்து மறைந்த அக்கலைஞனுக்கு மௌனமாக என் அஞ்சலியைப் படைக்கிறேன்.

126

116

108

25

இப்படங்களைப் பிரதி எடுத்துக்கொடுத்த அவரது மகன் அருண் மற்றும் வாத்தியார் ராமகிருஷ்ணனின் மகன் கணேஷ்  இருவருக்கும் நன்றி.இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் கிருஷியின் முயற்சியில் நிரந்தர கண்காட்சியாக  வைக்கப்பட்டுள்ளன.வாய்ப்புள்ள நண்பர்கள்  சென்று பார்க்கலாம்.கிருஷி- 9442946999

10 comments:

காமராஜ் said...

காலத்தின் மீது தூரிகையாலும்,நிழபடத்தாலும் தன் தடத்தை வைத்துவிட்டுப்போன அந்த மகா கலைஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

நேசமித்ரன் said...

இந்த ஒளிக் காதலருக்கு என் அஞ்சலிகள்

Madumitha said...

புகைபடக் கலைஞருக்கே
குறைந்த ஒளியா?

மாதவராஜ் said...

நேற்று, கவிஞர் கிருஷி அவர்கள் தொலைபேசியில் தெரிவித்த பிறகு தெரிந்து கொண்ர்டேன்.உங்களுடைய ’வெயிலோடு போய்’ அட்டைப்படத்திலிருந்து அவரது ஓவியங்கள் தெரியும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்லையில் நடந்த அவரது, ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சிக்கு சென்ற போதுதான் அவரை நேரில் பார்த்தேன்.அவரை கைகளைப் பற்றி, நெகிழ்ந்து நின்றேன்.

அங்குள்ள குறிப்புப் புத்தகத்தில் ஓவியர் மருது அவர்கள், அவரைப்பற்றியும், ஓவியங்களையும், புகைப்படங்களையும் பற்றி பிரமித்துப் போய் எழுதி வைத்திருந்தார்.


பெரிய ஆலமரத்தடியில், புழுதி பறக்கும் தெருவில், மாடுகள் செல்லும் காட்சிக்குள் ஒரு மகத்தான கலைஞனின் கண்களும், இருதயமும் இருந்தன.

அவருக்கு என் அஞ்சலி!

veligalukkuappaal said...

மூத்த தகப்பனைப்போல் வாழ்ந்து மறைந்த அண்ணாச்சிக்கு என் மரியாதையுடன் ஆன அஞ்சலி. 2008 டிசம்பர் சென்னை தமுஎச மாநில மாநாட்டில் அவரது படைப்புக்கள் பார்த்து பிரமித்தேன். தென்காசிக்காரன் என்பதால் இன்னும் நெருங்கியே பார்த்துக்கொண்டிருந்தேன், உண்மைதான்... அவரது ஓவியமோ புகைப்படமோ ... பார்த்துக்கொண்டிரும்போதே நெல்லைசீமையின் புழுதி நம் முகமெங்கும் அப்பிக்கொள்ளும்...புழுதியின் ஆடுமாடுகளின் உழைப்பாளி ஆண்கள் பெண்களின் வேர்வை வாசம் இதயத்தை நிரப்பும்... மகத்தான எல்லாக் கலைஞர்களைப் போலவே தன் படைப்புக்களால் அண்ணாச்சி என்றும் வாழ்கின்றார்...
இக்பால்

புதுவை ஞானகுமாரன் said...

சென்னை மாநாட்டில் பார்த்த ஓவியங்களின் நினைவுகள் மறைவதற்குள் பெரியவர் இசக்கி மறைவுச் செய்தி அறிந்து மனவருத்தமடைந்தேன் படைப்பாளிகள் என்றென்றும் தங்கள் படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.

எஸ்.கருணா said...

isakki annachiyai engal thiruvannamaliyin therukkal ellam ariyum.pallavanin viralpattu isakkiyin padangal marupiravi eduthana.veyilodu pooi attai pada oviyathai parthu prammithu nintra makkal innum irukkirargal isakkiyin padangalai polave.avarukku eanadhu anjali.

விழியன் said...

ரம்மியமான ஓவியங்கள்.

அஞ்சலி.

Unknown said...

நெல்லையில் இருந்த நான்கு ஆண்டுகளிலும் இசக்கி அண்ணாச்சியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவரது முக்கிய படைப்புகள் - புகைப்படங்கள், பென்சில் கோட்டோவியங்கள் - ஐம்பதுகளில் அவர் வரைந்தது- காணக் கிடைக்கின்ற - அண்ணாச்சியின் நம்பிக்கை வட்டத்தி...னுள் செல்லும் வாய்ப்பு - அமைந்திருந்தது.
நெல்லையின் ஒரு காலகட்டத்தையே உயிர் தளும்பும் புகைப்படங்களிலும் , ஓவியங்களிலும் பிரதி எடுத்த கலைஞன் அவர் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
ஆழ்ந்த அஞ்சலிகள்
.

suresh said...

இசக்கி அண்ணாச்சியிடம் சிறிது காலங்கள் பழகிய அறிய வாய்ப்புகள் எனக்கும் கிடைத்தன. அவரின் புகைப்பட ஓவியம் ஒன்று (குறத்தி பெண்) என் ஆசிரியரின் (திரு. கிருஷி) அலுவலகம் செல்லும் போதெல்லாம் என்னில் பிரமிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். ஆனால் இது ஒரு துளி அளவே என்று அவருடைய புகைப்பட கண்காட்சியை பார்க்கும் வரை எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்த பொழுது, பிரமிப்பில் எழுந்த என் கண்ணீரில் தான் அவரை காண முடிந்தது. எந்த கருத்து பதிவுகளும், வார்த்தைகளும் அவரின் படைப்புகளுக்கு நிகர் செய்யாது என்பதால் அமைதியாய் வந்து விட்டேன்.