உலகளாவிய அளவில் பெரும் உளவியல் நெருக்கடிக்கும் முற்றுகைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகம் பற்றிய பிற சமூகத்தவரின் புரிதல்கள் கவலையளிக்கும் அளவுக்குக் குறைவாக உள்ளது.'மூடுண்ட சமூகம் ‘என்கிற இந்துத்வா வாதிகளின் பொய்ப்பிரச்சாரமே வெற்றிபெற்றுள்ளது இன்று.
இஸ்லாமிய சமூகம் பற்றி அறிந்து கொள்ளும் அக்கறை பிற சமூகத்தவரிடம் இல்லாததும் அச்சமூகத்திலிருந்து தம்மைப்பற்றிய வரலாற்றுப்பூர்வமான படைப்புகள் வெளிவராததும்கூட இதற்குக் காரணமாக அமைகிறது.'மேலப்பாளையம் முஸ்லீம்கள்' என்கிற சாந்தி எழுதிய புத்தகமும் குமரிமாவட்ட முஸ்லீம்கள் பற்றிய பெட்டகம் என்கிற தொகுதியும் இவ்வகையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள்.
இது ஒரு புறம் இருக்க, இதுகாறும் வரலாறென்று அறியப்பட்டதெல்லாமே ஆள்பவர்களால் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்த எழுதப்பட்ட வரலாறுகளே. ஆகவே அது தேசிய வரலாறானாலும் பிராந்திய வரலாறானாலும் வென்றவர்களின் வரலாறாகவே அமைந்துபோகிறது.பிரதான சாலைகள் மட்டுமே மக்க்ளின் வழித்தடங்களாக அமைந்துபோவதில்லையே? சிறு சிறு தெருக்களும் சந்துகளும் இல்லாமல் ஊரின் பெருவீதிகளும் ராஜபாட்டைகளும் இருந்தென்ன பயன்?அதுபோல நாட்டின் வரலாறு மட்டுமே ஒரு மக்கள் குழுவின் முழு வரலாறு ஆகிவிடாது.ஆகவேதான் சமீப காலமாக உள்ளூர் வரலாறுகள் குறித்த தன்னுணர்வும் அக்கறையும் அறிவுத்துரையில் அதிகரித்து வருகிறது.
மேற்கூறிய இரு செய்திகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான நூலாக சமீபத்தில் வந்திருப்பது “கடையநல்லூர் முஸ்லீம்கள் வரலாறு” என்னும் நூலாகும்.கடையநல்லூரைச்சேர்ந்த சிராஜும் முனீர் நற்பணி மன்றமும் மத்ரஸா சிராஜும் முனீரும் வெளியிட்டுள்ள 924 பக்கம் கொண்ட இப்பெருநூலை திரு.எஸ்.ஏ.முகம்மது இபுறாகிம் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ஒரு ஆசிரியர் குழு எழுதியுள்ளது.
தங்கள் ஊரின் பெருமையை தங்கள் இனத்தாரின் பெருமையைத் தமக்கே சொல்லித் தம் உளவியல் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய வரலாற்று நெருக்கடியின் பின்னணியில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.வசதி வாய்ப்புகள் மிக்க பெருமக்கள் ஆதரவு இந்நூலுக்கு இருந்திருக்க வேண்டும்.
கடையநல்லூரின் இஸ்லாமியப் பகுதி மக்களின் வரலாற்றைச் சொல்லவே இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும் வியக்கத்தக்க அளவுக்கு மதச்சார்பற்ற மனநிலையோடும் உள்ளூரில் வாழும் மற்றும் வாழ்ந்த பிற இனத்தவரின் பெருமைகளையும் மனந்திறந்து பாராட்டும் பகுதிகளோடு இந்நூல் வந்திருப்பது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. முன் எப்போதையும்விட இப்போதுதான் சிறுபான்மை சமூகத்தினர் அழுத்தமான மதச்சார்பற்றவர்களாகத் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி வரலாற்றாய்வாளர் கே.என்.பணிக்கர் கூறுவது நினைவுக்கு வருகிறது.
கடையநல்லூர் என்கிற பெயர்க்காரணத்தில் நூல் துவங்குகிறது.நகரின் ஜமாஅத்துகளைப் பற்றியும் சங்கங்களைப்பற்றியும் முக்கிய பிரமுகர்கள் பற்றியும் விரிவாகப்பதிவு செய்துள்ள இந்நூலின் மிக முக்கியமான பகுதியாக எனக்குப்பட்டது குடும்பங்களின் வரலாறு என்னும் பகுதி.சொன்னி,மூப்பர் மாப்பிள்ளை,பெருந்தரகன்,சேயன்,புலவன் என்கிற ஐந்து குடும்பங்களே கடையநல்லூரின் ஆதி இஸ்லாமியக்குடும்பங்களாக இருந்துள்ளன.அவை எவ்விதம் இன்று நூறுக்கும் மேற்பட்ட பெயர்களுடனான குடும்பங்களாகப் பல்கிப் பெருகியுள்ளன என்பதை சுவாரசியமான குறிப்புகளோடு இப்பகுதி விளக்குகிறது.எந்த ஓர் உள்ளூர் வரலாற்றிலும் இத்தகைய குலவிளக்கம் அல்லது வம்சாவழி வரலாறு என்பது மிக மிக அவசியமானதாகும்.
இந்நூலின் இன்னொரு மிக முக்கியமான அம்சம் கடையநல்லூர் மக்களின் கூட்டு மனதில் அழியா இடம்பெற்ற நிகழ்வுகளைப்பற்றிய சரித்திரக்குறிப்புகள் மக்களின் வாய்வழி வரலாறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகும்.பள்ளிவாசல் யானை களவு போன கதை, மறக்குடிக்கலவரம்,1952-53களின் கோதுமைக்காடிப்பஞ்சம் போன்ற சில நிகழ்வுகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சில குறிப்புகளுக்கான ஆவணங்களும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டிருப்பது ஆசிரியர்குழுவின் ஆய்வுமனப்பான்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.40களில் அச்சிடப்பட்ட நிக்காஹ்(திருமண) அழைப்பிதழ்களில் மணப்பெண்ணின் பெயரே அச்சிடப்படவில்லை என்பதும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்க பெண்களுக்கு அன்றும் சரி இன்றும் சரி அனுமதி கிடையாது என்கிற குறிப்பும் வாசக மனதில் அதிர்வினை ஏற்படுத்துகிறது.இத்தகு செய்திகளையெல்லாம் வெளிப்படையாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
1952 பஞ்சத்தை ஒட்டி கடையநல்லூரில் செயல்பட்டு வந்த கமாலியா முஸ்லீம் சங்கம் 4-2-53இல் நிரைவேற்றிய தீர்மானம் நம் மனங்களை சலனப்படுத்தி கண்களில் ஈரம் கசியச்செய்கிறது.அது :-
“ கடையநல்லூர் கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி வைத்துக் கஞ்சி வாங்குவோருக்கு கார்டு வழங்கி கார்டு மூலம் கஞ்சி ஊற்றி வந்த முறையை திடீரென்று ஸ்தல அதிகாரிகள் மாற்றி கஞ்சி வாங்கும் இடத்தில்தான் வைத்து சாப்பிட வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி பிச்சைக்காரர்கள் போல வீதியில் உட்காரவைத்துக் கஞ்சி ஊற்றி வேடிக்கை பார்ப்பதை உடனே தடுத்து முதலில் நடந்து வந்த முறை போல நடந்துவர ஸ்தல அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டுமென்று ஜில்லா கலெக்டர் அவர்களைக் கமிட்டி கேட்டுக்கொள்கிறது.”
கஞ்சித்தொட்டிகளோடு பின்னிப் பிணைந்த தமிழக நெசவாளர்களின் வாழ்வின் ஒரு கண்ணீர்த்துளி போல இந்தத் தீர்மானம் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
ஒரு மதச்சார்பற்ற மனநிலையோடும் நல்ல தமிழ் உணர்வோடும் செயல்பட்டுள்ள இவ்வாசிரியர்குழு மறக்காமல் கடையநல்லூர் மக்களிடையே புழங்கும் நாட்டார் வழக்காறுகளில் ஒரு பகுதியை-பாடல்களை,பழமொழி-சொலவடைகளையும் வழக்குச் சொற்களையும்கூடத் தொகுத்து வழங்கியுள்ளது மிகுந்த ஆச்சர்யத்தையும் மனநிறைவையும் தருகிறது.
கடையநல்லூர் இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்றை தமிழக வரலாற்றோடும் இந்திய வரலாற்றோடும் இணைக்கும் முயற்சியும் இந்நூலின் பல பக்கங்களில் காணக்கிடைக்கிறது.சமீபகாலத்தில் வந்த மிக முக்கியமான ஓர் உள்ளூர் வரலாற்று நூல் இது.
பக்கம் 924
விலை ரூ.300
கிடைக்குமிடம்:சிராஜ் புக் டிப்போ,ஜூமா பள்ளிவாசல் அருகில்,பரசுராமபுரம் தெரு,கடையநல்லூர்-627751,செல்-9965458887
-ச.தமிழ்ச்செல்வன்
1 comment:
அண்ணா, எங்கள் மாவட்ட இஸ்லாமியர்கள் பிரமலைக் கள்ளர்,கந்தர்வகோட்டைக் கள்ளர் என்ற குற்றப்பரம்பரை சாதிகளில் இருந்து குற்றப்பரம்பரைச் சட்டத்தின் இரும்புப் பிடியில் இருந்து விடுபட்டு அமைதியாக வாழ விரும்பி மதம் மாறியவர்கள். அதை ஒரு ஆய்வாக எழுத விரும்புகின்றேன். படிக்கத் தெரிந்த அளவிற்கு எனக்கு எழுதத் தெரியாதது பெரும் மனவருத்தத்தை அளிக்கின்றது.
Post a Comment