Thursday, March 4, 2010

துரத்தும் மரணம்

மரணத்துக்கு வழி தெரிந்து விட்டால் அது சூறாவளிக்காற்றைப்போல ஒரு வீட்டையே சுற்றிச்சுற்றிச் சுழன்றடிக்கும்போலிருக்கிறது.தோழர் உ.ரா.வ வை இழந்து நிற்கும் இயக்கம் இன்னும் மூன்று முக்கியமான ஆளுமைகளை இந்தப் பத்து நாட்களில் இழந்திருப்பது பற்றிச் சில வார்த்தைகளேனும் இங்கே பேசுவது அவசியம்.

தோழர் செல்வப்பெருமாள்

selva perumal

வடசென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியராகக் களப்பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் செல்வப்பெருமாள் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கணிணி இயக்கத்தெரிந்த ஒருவர் தேவை என்பதற்காக கட்சியின் வேண்டுகோளை ஏற்று அலுவலகப்பணிக்கு வந்தார்.பரந்த வாசிப்பு அனுபவம் மிக்க தோழர் அவர்.நவீன இலக்கியங்கள்,தத்துவார்த்த நூல்கள்,வரலாறு,பண்பாடு என்று அவர் பல துறைகளில் தன் வாசிப்பை விரித்திருந்தார்.அலுவலகத்துக்குச் செல்லும் போதெல்லாம் எனக்கான வார்த்தைகள்,தகவல்கள்,சில சமயம் விமர்சனங்கள் என வைத்திருப்பார்.நல்ல வளர்த்தியான அவருடைய உருவம் பெரிய கண்கள் பிரியம் குழைந்த குரல் என அப்படியே கண்ணுக்குள் நிற்கிறார்.

என்னுடைய எழுத்துக்கள் மீது கூர்மையான விமர்சனங்களை அன்பான வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்.கணிணியை ஒரு டைப்-ரைட்டர் அளவுக்கு மேல் பயன்படுத்தத் தெரியாத எனக்குப் பல சமயங்களில் அவருடைய வேலைப்பளுவுக்கு நடுவே மனம் கோணாமல் வேலை செய்து கொடுத்திருக்கிறார்.சந்திப்பு என்கிற பெயரில் வலைப்பக்கம் ஒன்றை விடாமல் நடத்தி வந்தார்.தான் களத்தில் வேலை செய்கிற ஆள் என்கிற தன்னுணர்வே அவரிடம் எப்போதும் இருந்து வந்தது.அறிவாளியாகத் தன்னை ஒருபோதும் முன்னிறுத்தாத அடக்கம் பல சமயம் என்னைக் கூச வைக்கும்.

களப்பணிக்குத்தான் போக வேண்டும் என்று தொடர்ந்து அவர் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டாலும் கட்சியின் தேவை கருதி அலுவலகத்திலேயே பணி செய்து வந்தார்.மானுட சமுத்திரம் அவரை வா வா என அழைத்துக்கொண்டே இருந்ததாக சதா உனர்ந்து கொண்டிருந்த அவர் ஒரு இடத்தில் இருப்பாக இருந்து பணியாற்றியதே ஒரு தியாகம்தான்.புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றிருந்த அவரை வீட்டில்போய் பார்த்து வர வேண்டும் என்கிற என் நினைப்பு நினைப்பாகவே இருக்க எதிர்பாராத நாளில்(40 வயது) அவர் மறைந்து விட்டார்.மூன்று பெண் குழந்தைகளும் அப்பா இல்லாத பிள்ளைகள் ஆகி நிற்கின்றன.கட்சி அவருடைய குடும்ப நிதிக்கான அறைகூவலை விடுத்துள்ளது.இதுவரை 2 லட்சத்துக்கு மேல் தோழர்கள் வழங்கியுள்ளனர்.இதை வாசிக்கும் நீங்களும் உங்கள் பங்களிப்பை (50 ரூபாய் கூட ) அனுப்பலாம்.நிதி அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),தமிழ்நாடு மாநிலக்குழு,27,வைத்தியராமன் தெரு,தி.நகர்,சென்னை-600017.

அகரம் கண்ணன்

akaram

மதுரை தீக்கதிரில் ஊழியராகப் பணியாற்றி வந்த 36-37 வயதுக்காரரான தோழர் அகரம் கண்ணன் எதிர்பாராமல் வீட்டார் தூங்கி எழுது பார்த்தபோது இறந்து கிடந்திருக்கிறார்.ஏற்கனவே இதயநோய் இருந்ததாக அறிகிறேன்.எப்போதும் சிரித்த முகத்தோடு இனிப்பான வார்த்தைகள் பேசும் கண்ணன் திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியில் வசித்து வந்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்ங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக்குழு உறுப்பினர்.கொஞ்சம் கவிப்பழக்கமும் உண்டு.

கோணங்கியின் எழுத்துக்களை எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நூற்றுக்கணக்கான பக்கங்கள் தட்டச்சு செய்து கொடுத்தவர்.அவர் இறந்து விட்ட செய்தியை ஓவியர் வெண்புறா தொலைபேசியில் சொன்னபோது அதிர்ச்சியடைந்த என் மனதில் உடனே அவரது சிரரித்த முகமே நினைவிலாடியது.திருப்பரங்குன்றம் தமுஎகச கிலையில் பூத்த மலர்கள் மூன்று நான்குபேர் – முற்றிலும் இளைஞர்கள் - வரிசையாக காலமாகி விட்டனர். அது யோசிக்கையில் இன்னும் வருத்தம் தருகிறது.தற்செயல் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஒரே இடத்தில் நடக்கும்போது தெளிவான மன்மும்கூட சற்று ஆடித்தான் போகிறது.

பா.இராமச்சந்திரன்

P[1].RAMACHANDRAN

என் மனதுக்கு நெருக்கமான மனிதர்களில் ஒருவராக- நீண்டகால நண்பராக- வளர்ந்து வரும் நல்ல சிறுகதைப்படைப்பாளியாக தோழர்.பா.இராமச்சந்திரன் நம்பிக்கையின் சின்னமாக வாழ்ந்து வந்தார். சதா துன்புறுத்தும் இதயநோயுடன் போராடியபடியே எனக்குத்தெரிய கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தவர்.அவருடைய நம்பிக்கை ( அப்பா! )மிரட்சியளிக்கக்கூடியது. இதயநோய் காரணமாக எப்போதும் விழுந்துவிடும் அபாயத்தை மடியில் கட்டிக்கொண்டே –அதற்கு முன் இதை முடித்து விடுகிறேன்ன -அதற்கு முன் இதை எழுதி விடுகிறேன் என்று பரபரப்பாக இயங்கினார்.அவரது ஒவ்வொரு படைப்பு முயற்சி குறித்தும் தொடர்ந்து என்னோடு பேசியபடி இருந்தார்.எனக்கு அவர் மனதில் முக்கியமான இடம் வைத்திருந்தார்.அந்த அன்புக்கு ஈடான அளவுக்குப் போதிய நேரத்தையோ அன்பையோ அவருக்காக நான் தந்துவிடவில்லை என்கிற குற்ற உணர்வு இப்போதும் எனக்கிருக்கிறது.

அவருடைய அப்பாவின் கைப்பெருவிரல் என்கிற சிறுகதைத்தொகுப்பு பல குறிப்பிடத்தகுந்த கதைகளைக்கொண்டது.வண்ணதாசன் மிகவும் சிலாகிட்துப் பாராட்டிய படைப்பாளியாக பா.ரா.இருக்கிறார்.சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றிய அவர் அங்கேயும் துரைமுகத்தமிழ்ச்சங்கத்தில் பல முக்கியமான காரியங்கலைச் செய்துள்ளார்.பல புதிய மரபுகளை அங்கே உருவாக்கப்பாடுபட்டிருக்கிறார்.துரைமுகத் தொழிற்சங்க வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு மூன்று தலைமுறை நாவல் ஒன்றை எழுதத்துவங்கியிருந்தார்.அது பாதியிலேயே நிற்கிறது.

வடசென்னை மாவட்டத்தில் தமுஎகச சார்பில் தேநீர் என்கிற ஒரு தொடர் நிகழ்வை நடத்த்தி வருகிறார்கள்.அதன் முதல் நிகழ்வு அவரது வீட்டில்தான் நடந்தது.ஒவ்வொரு தேநீரும் ஒரு தோழர் வீட்டில் நடைபெறும்.அன்று அந்த வீட்டுப்பெண்களுக்கு முழு ஓய்வு கொடுத்து ஆண்கள் கூடிச் சமைத்து அதை உண்டு கருத்துரை,கலந்துரை, பெண்களின் படைப்புகளை வாசிப்பது இதுபோல அந்தத் தேநீர் நிகழ்ச்சி.அப்படியே தமுஎகச மாநில மாநாடு முடிவான தமுஎகசவில் உள்ள ஆண்கள் எல்லோரும் சட்டி பானை கழுவுவது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும் அன்ராடம் பங்கேற்க வேண்டும் என்பதை வீடுகளில் நடைமுறைப்படுத்தும் துவக்கமாகவும் அந்தத் தேநீர் அமைய வேண்டும் என்பது திட்டம்.தோழர்.பா.ரா. தன் வீட்டில் அதற்கான ஏற்பாட்டை மிகக்கச்சிதமாகவும் அழகாகவும் இயல்பாகவும் செய்திருந்தார்.அந்த அப்பார்ட்மெண்ட்டில் இருந்த எல்லா வீட்டுப்பெண்களையும் அவருடைய துணைவியாரும் மக்களும் அழைத்து வந்து அமரவைத்திருந்தனர்.அவருடைய பிள்ளைகள் இந்த விளையாட்டை ரொம்பவே ரசித்தார்கள்.

அவர் கடைசியாக மருத்துவமனைக்குப் போவதற்கு முன்னதாக தன்னுடைய முதல் ஆவணப்படத்தை முடித்துவிட்டுத்தான் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.21 பிப்ரவரி இரவில் அவர் மரணமடைந்திருக்கிறார்.17ஆம் தேதி எனக்கு அவர் இயக்கிய முதல் ஆவணப்படமான தூரத்துக்கனவு சிடியை அனுப்பியிருந்தார்.கல்வி முறையின் மீது சீரியஸ்ஸான விவாதத்தை முன்வைத்த ஒரு அக்கறையான படம் அது.அவர் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது படம் ரொம்ப அற்புதமாக வந்திருப்பதுபற்றி அவரோடு பேசினேன்.இறப்பதற்கு ஒருநாள் முன்னதாகக்கூட சென்னை வந்துவிட்டீர்களா என்று காலையில் பேசினார்.சும்மாதான் பேசினேன்.செய்தி ஒன்றுமில்லை என்றார்.ஆனால் வேறு சில நண்பர்களை பார்க்கணும்போல இருக்கிறது வீட்டுக்கு வாங்களேன் என்று அழைத்திருக்கிறார்.என்னையும் அப்படி அழைக்க நினைத்தே பேசியிருக்கிரார் என்பதை பின்னரே உணர்ந்தேன்.மரணத்தை முன்னுணர்ந்து விட்ட மனதின் அந்த அழைப்பை நான் தவற விட்டுவிட்ட வருத்தம் என்னுள் அப்படியே தங்கி நிற்கிறது.

இரண்டு தினங்களுக்கு முன் அவருடைய செல்போனிலிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது .அவர் பெயரை செல்லில் பார்த்ததும் ஒருகணம் அதிர்ந்துதான் போனது மனது.செய்தியை விரித்தேன்.எங்க அப்பாவின் நினைவாக வீட்டில் ஒரு சின்ன நிகழ்ச்சி- நீங்க அவசியம் வரணும் என்று அவருடைய பிள்ளைகள் அனுப்பிய செய்தி அது.வாசித்ததும் அப்படியே உடைந்து அழுதுவிட்டேன். தேநீர் நிகழ்ச்சியின் போது அவருடைய மகனும் மகளும் முகத்தில் சிரிப்புடன் ஓடியாடித்திரிந்த காட்சி மனதில் தோன்றி என் கண்ணீர் பெருகியது. அந்தக்கண்ணீர்த்துளியின் ஈரம் இன்னும் என் விழி ஓரங்களில் உறைந்து நிற்கிறது.அந்தப் பிள்ளைகளின் முகத்தை எப்படி நான் எதிர்கொள்வேன்?

இந்த மூன்று தோழர்களுமே தங்கள் மரணத்தை முன்னுணர்ந்து வாழ நேர்ந்திருப்பது பற்றி நினைக்கப் பெரும் துயரமாக இருக்கிறது.

* இவை போதாதென்று திருநெல்வேலியில் நூற்றாண்டு கண்ட ஹிலால் பிரஸ் அதிபர் நண்பர் சாதிக் அதே 21ஆம் தேதி மரணமடைந்தார். மிகப்பெரிய நூலகத்தைத் தன் வீட்டில் வைத்திருக்கும் சாதிக் மிகப்பெரிய கலா ரசிகரும் ஆழ்ந்த வாசகரும் எளிய இலக்கிய முயற்சிகளுக்குக் கை கொடுப்பவருமாக வாழ்ந்தவர்.பழகுதற்கு இனிய அந்த நண்பரையும் இழந்தோம்.

* நேற்று தஞ்சையிலிருந்து கோணங்கியின் தொலைபேசி ‘ நம்ம கனகசபை இறந்திட்டாண்ணே..’ என்று. என்னாடா வாழ்க்கை இது என்று ஆகிவிட்டது.40 வயதுகூட நிரம்பாத திருமணமாகாத கனகசபை திருபுவனத்தில் குடும்பத்தொழிலான பட்டு நெசவு பார்த்துக்கொண்டிராமல் இலக்கியவாழ்வு வாழும் கனவுகளுடன் சென்னைக்குப்போனவன். சென்னை கற்றுக்கொடுத்த எந்தப் பாடத்தையும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளாமல் உடம்பைக்கெடுத்துக்கொண்டவன்.கடைசியாக திருவண்ணாமலையில் பவா வீட்டில் சில காலம் தங்கியிருந்த போது தான் வீட்டுக்கு எவ்வகையிலும் பயன்படாமல் போனவன் என வருந்தியிருக்கிறான்.வீட்டுக்கு என்னால் திரும்ப முடியுமா –தம்பிக்கு ஒரு சுமையாகத்தான் இருப்பேன் என்று வருந்தியிருக்கிறான்.பவா உடனே கனகசபையின் தம்பிக்கு தொலைபேசியிருக்கிறார். கனகசபையின் தம்பியோ அவர் எனக்கு அண்ணனாக வந்து என்கூட வீட்டில் இருந்தால் போதும்.எந்த வேலையும் அவர் செய்ய வேண்டாம்.அவர் பாட்டுக்கு படிக்கட்டும்.எழுதட்டும்.நல்லா நான் ராஜா மாதிரி வச்சிக்கிறேன் அவரை.உடனே அவரை ஊருக்கு அனுப்பி விடுங்க என்று சொல்லியிருக்கிறான்.ஆனாலும் கனகசபை ஊர் திரும்பவில்லை. காய்ச்சல் வந்து கவனிக்க ஆளின்றிச் சென்னையில் இறந்து விட்டான்.என் மீதும் எங்கள் குடும்பத்தார் மீதும் அளவற்ற அன்பு கொண்டு வாழ்ந்த என் தம்பி ஒருவனை நான் இழந்து விட்டேன்.

இலக்கியக் கிறுக்கு நம்மில் பலரை நம்மைச்சுற்றியுள்ள நம்மீது அளவற்ற அன்பு கொண்ட குடும்பத்தாரைக்கூடக் கணக்கில் கொள்ளாமல் அன்பைத் தேடி வேறு எங்கெங்கோ அலைய வைத்து விடுகிறது.

காலத்தின் நகைச்சுவை என்பது இதுதான் போலும்.

7 comments:

Sindhan R said...

தோழர்கள் மரணிப்பது இயல்பானது தான் என்றாலும் ... இளம் கீற்றுக்கள் சட்டென ஒளியிழந்திருப்பதுதான் மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது ...

சந்திப்பு - செல்வப்பெருமாள் இணைய தளத்தில் முகம் தெரியாத பலருக்கு அரசியல் வழிகாட்டியாய், இடதுசாரிகளின் முகமாய் இருந்தார் .. இன்றும் அவரது பதிவுகள் பல சூழல்களில் உதாரணம் காட்டத் தக்கதாய் அமைந்துள்ளன. அவரது வலைப்பூவை தொடர்ந்து எழுத வேண்டும் தோழரே ...

ramalingam said...

இலக்கியக் கிறுக்கு மட்டுமல்ல, கட்சிக் கிறுக்கும்தான்.

Anonymous said...

தமக்கான பொறுப்புக்கள் அதிகரித்து வரும் காலம் இது என்பதை உணர்ந்து தமது நோயையும் குடும்பத்தையும் அடுத்த இடத்தில் வைத்து விட்டு படைப்புலகிலும் இயக்க வாழ்விலும் வாழ்ந்து மகிழ்ந்த படைப்பாளிகள். இத்தனை அகாலத்தில் மரணமடைந்திருக்க வேண்டுமா? நெஞ்சு வெடிக்கின்றது. அத்தனை தோழர்களின் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் என் துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
*******************
குறிப்பாக தோழர் பாரா என நாங்கள் அழைக்கின்ற ப.ராமச்சந்திரன். 1993 முதல் இயக்க ரீதியான தொடர்பாக தொடங்கி பின் உளப்பூர்வமான நண்பர்களாக ஆனோம். சிறுகதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர், மேடைப்பேச்சாளி...என அறியப்பட்ட அவர், அற்புதமான கவிஞர், தீக்கதிரில் விளையாட்டு தொடர்பான செய்திகளை எழுதி வந்தார் என்பதையும் நினைவு கூர்கின்றேன்.
******************
தான் பணியாற்றிய சென்னை துறைமுகத்தின் தொழிலாளர்கள், கடற்கரையோர மக்கள், மீனவ மக்கள் தொடர்பான வாழ்க்கையையும் அவர்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர்களது சொந்த பண்பாட்டு மொழியிலேயே தமது கதைகளில் எழுதி எங்களை ஆச்சரியப்பட வைத்தவர். 'அப்பாவின் கைப்பெருவிரலில்' வெளிப்படும் அவரது படைப்புலகமும் மொழியும் அற்புதமானவை. அவரது நட்பு வட்டாரமும் ஆச்சரியப்பட வைப்பது. மிகப்பெரும் படிப்பாளிகள் ஆளுமைகள் முதல் அன்றாடம் காலையில் மதுவை அருந்திய பின்னரே தொழிலுக்கு செல்லும் கீழ்க்கோடி மனிதர்கள் வரை அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். ஒரு இலக்கியவாதியாகவும் கூடவே மிகப்பெரும் துறைமுகத்தின் தொழிற்சங்க செயலாளராகவும் இருந்த மிகப்பெரும் அனுபவம், வாழ்க்கையை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை தோழருக்கு கற்றுத் தந்திருந்ததை நன்றாகவே என்னால் உணர முடிந்தது. அன்பான வார்த்தைகளால் மிகக்கறாரான விமர்சனங்களை அவர் எப்போதும் முன்வைத்தார் என்பது இயக்கவாதிகள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது. இதனால் அவரை கசப்பாக பார்த்தவர்களும் இருக்கின்றார்கள், அது குறித்து என்றும் அவர் கவலைப் பட்டதில்லை.
******************
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மேலாண்மை பொன்னுசாமி+கல்வி குறித்த ஆவணப்பட தயாரிப்பில் தன்னை கரைத்து உடல் நோவையும் பொருட்படுத்தாமல் இயங்கினார் (நாங்களெல்லாம் பயப்படும் அளவுக்கு). மேலாண்மையின் வாழ்க்கையோடு இன்றைய கல்வி முறையை அதன் சீர்கேட்டை இணைத்து ஆவணப்படம் தயாரிக்கப் போவதாக அவர் சொன்னபோது "ஆஹா! இப்படி ஒரு சிந்தனையா!" என நான் வியந்தேன். இறுதியாக இந்த பிப்ரவரி ஐந்தாம் தேதிதான் வெளியீட்டு விழா துறைமுக தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்டது. அதன் பின்னரே பேஸ் மேக்கர் பொருத்துவதற்கான ஏற்பாட்டுக்கு செல்லப்போவதாக சொன்னது அவர் மனவுறுதியை அன்றி வேறு எதைக் காட்டுகின்றது? அவரது குடும்பத்தாரோடும் பழகியவன் என்ற முறையில் அவரது மனைவி தோழர் மங்களாவின், அவரது இரண்டு பிள்ளைகளின் மனவுறுதியை இந்த நேரத்தில் வியக்கின்றேன்.
********************
இறுதியாக வெளியான அவரது இரண்டு கதைகள் "நெத்திக்காசு" (புதுவிசை),
"பதினாறாம் நாள் நினைவாஞ்சலி" (செம்மலர்) (இக்கதை வேறொரு முடிவோடு உயிரெழுத்திலும் வந்தது)
...தற்செயலாக இவை இரண்டுமே மரணம் தொடர்பான சிறுகதைகளாக அமைந்து விட்டதை எண்ணி தோழர்கள் அருள், எஸ்விவி, பாலுசத்யா, வேல்முருகன், ஜெயராமன்... போன்றோருடன் சொல்லி சொல்லி எனது ஆற்றாமையை இன்றும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றேன்....
இக்பால்

பிரேம பிரபா. பிரேம் குமார் said...

i am regularly following thamizh veedhi. when i was discussing the nityaanandhaa issue on your angle i was simply ridiculed by me friends. the moment i saw your article i was deeply impressed and high lighted to my friends with the note of attestation by a great writer like you. thanks.

உடன்பிறப்பு said...

தோழர் "சந்திப்பு" செல்வம் உடன் இமெயில் தொடர்பு சிறிது காலம் இருந்தது. அவர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டமானது. அவரது மற்றும் மறைந்த தோழர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

நட்புடன் ரமேஷ் said...

தமிழ் இந்த பதிவை நான் படித்துக்கொண்டிருந்த போது, பள்ளிபாளையத்தில் வேலு என்ற (அக்ரகாரம் கிளை செயலர் சி.பி.எம் ) தோழர் கட்டபஞ்சாயத்தை எதிர்த்ததற்காக வெட்டிக்கொள்ளப்பட்ட செய்தி வந்தது. அந்த தோழனுக்கு வயது 38. மீண்டும் ஒரு இழப்பு

எஸ்.கருணா said...

kanagasabai irantha seithi intruthan arinthen.avanodu thirintha naatkal marakka mudiyathavai anna