Monday, March 1, 2010

எங்கள் தோழர் உ.ரா.வரதராஜன்

எங்கள் தோழர் உ.ரா.வரதராசன்

wrv பிப்ரவரி 21 அன்று விழுப்புரத்தில் தோழர் இ.எம்.எஸ் நூற்றாண்டுக் கருத்தரங்கில் கலை இலக்கியமும் கம்யூனிஸ்ட்டுகளும் என்கிற தலைப்பில் நானும் அரசியல் அரங்கில் இ.எம்.எஸ் என்னும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணனும் பேசுவதான ஏற்பாட்டில் அம்மேடையில் இருந்தபோதுதான் –நான் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது தோழர் ஜி.ஆர். அடிக்கடி எழுந்து பின்னால் சென்று தொலைபேசிவிட்டு வந்து கொண்டிருந்தார். நான் பேசிவிட்டு அமர்ந்ததும் போரூர் ஏரியில் கிடைத்த உடல் பற்றி தொலைக்காட்சிச் செய்தி ஓடுவதாகச் சொன்னார்கள்.அடுத்து தோழர் ஜி.ஆர் பேச வேண்டும்.பேசும் மனநிலை அவருக்கு அப்போது இல்லை.அவர் உள்ளம் நடுங்குவதை அவரது கைகளில் நான் பார்த்தேன்.உடனே சென்னை கிளம்புகிறேன் என்றார்.திரண்டிருந்த 600க்கு மேற்பட்ட தோழர்களை மதித்து சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன் என்று மைக்கின் முன்னால் நின்றார்.அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.கண்களில் கண்ணீர்.அவ்விதம் அவரை நான் பார்த்ததில்லை.அவர் மீளச் சில நிமிடங்கள் ஆனது.

அன்று முதல் இந்த நிமிடம்வரை தோழர் உ.ரா.வரதராஜன் அவர்களின் நினைவாகத்தான் இருக்கிறது.முதல் மூன்று தினங்கள் எண்ணற்ற எங்கள் இயக்கத்தோழர்கள் பலரையும் போல நான் தூக்கமின்றிப் பெரும் மனக்குழப்பத்தில் கிடந்து தவித்தேன் நான் கட்சியில் சேர்ந்து 31 ஆண்டுகள் ஆகிறது.இந்த 31 ஆண்டுகளில் கட்சி சந்தித்திராத ஒரு துயரச்சம்பவம் இது.ஒரு மத்தியக்குழு உறுப்பினர் தற்கொலை செய்து கொள்வது என்பது.தவிர, அவர் என்ன ஒரு பன்முகப்பட்ட பரிமாணங்கள் கொண்ட ஆளுமை?எத்தனை பிரியமும் அக்கறையும் மிக தோழர்.சொந்த வாழ்வைத் தொடர்ந்து சத்திய சோதனைக்கு உள்ளாக்கி வாழ்ந்த மகத்தான மனிதர்.

அழுது அழுது கண்கள் கெட்டன.எங்கே தவறிழைத்தோம் நாம் - அவரை இழக்கும்படியாக ? என்று சம்பவம் சம்பவமாக எழுத்து எழுத்தாக யோசித்து யோசித்து மூளை சோர்ந்தது?குற்ற உணர்வு கழுத்தை நெறிக்கப் படுக்கையில் விழுந்து கிடந்தேன். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர் ஐயாயிரம் பேர் என்றால் மாநிலம் முழுக்க எண்ணற்ற தோழர்கள் இம்மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் மனப்பிறழ்வுக்கு ஆளானதுபோல ஏதேதோ பேசித்திரிகிறோம். பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறோம். கோபப்பட்டுக்கொள்கிறோம்.கட்சித்தலைமையை வெளியிலிருப்பவர்களைப் போலவே நாங்களும் கடுமையாகக் கண்டனம் செய்து பேசிக்கொள்கிறோம்.ஒரு பேதலித்த கூட்டு மனநிலையில் உழன்று கிடந்தோம்.

வேலை செய்தால் மட்டுமே இக்கொடிய உணர்வுகளிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரைக்குச் செம்மலர் வேலைக்குப் போய் பகலும் இரவுமாகத் தோழர்களோடு சேர்ந்து வேலை செய்துவிட்டு அப்படியே தூங்காமல் ரயிலில் ஏறி நின்றபடி பயணம் செய்த கணத்தில் .. ..

(2)

எப்படி இறந்தீர்கள் தோழர்? இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தீர்கள்- நொடிப்பொழுதில் எங்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முகம் திருப்பி மரணத்துக்கு முகம் கொடுக்க எப்படி மனம் வந்தது என்று மீண்டும் மீண்டும் மானசீகமாக அவரிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.வாழ்நாள் முழுக்க மார்க்சிஸ்ட்டாக ஒரு கம்யூனிஸ்ட் பண்பாட்டில் வாழ்ந்து எமக்கெல்லாம் வழிகாட்டிய நீங்கள் இறுதி நாட்களில் ஏன் தன் வசம் இழந்தீர்கள்? சில மாதங்களுக்கு முன் நீங்கள் பொறுப்பு வகித்த ஒரு மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முழுநேர ஊழியராகப் பணியாற்றிய ஒரு தோழர் பாலியல் பிரச்னையில் சிக்கியபோது நீங்கள்தான் விசாரணை நடத்தி அவரைக் கட்சியிலிருந்து நீக்கும் முடிவை கட்சியில் முன்வைத்தீர்கள்.அவருடைய குடும்பம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அத்தோழரின் துணைவியாரை கட்சி அலுவலகத்தில் பணியாளராகச் சேர்த்து ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தீர்கள்.எத்தனை தோழர்கள் மீது எத்தனையோ நடவடிக்கைகள் –அவற்றையெல்லாம் நம் கட்சிக்குள் ’தண்டனை’ என்றா புரிந்து வைத்திருக்கிறோம்? வெளியிலிருப்பவர்களுக்கு நமக்கான இந்தப் பண்பாடு புரியாமல் இருக்கலாம்..தன் பலவீனத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் கட்சிப்பணியில் முன்னைப்போலப் பணியாற்றத் தரப்பட்ட வாய்ப்பாகத்தானே நடவடிக்கைகளை நாம் பார்த்து வந்துள்ளோம்.இதுதானே நம் கட்சிக்குள் நாம் பின்பற்றும் பண்பாடு?

கட்சி நடவடிக்கையால் தோழர் டெங் ஷியோ பிங் பத்தாண்டுகளுக்கு மேலாக கூட்டுப்பண்ணையில் விவசாயம் பார்க்கப் போகவில்லையா? மீண்டும் அவர் சீனதேசத்தின் தலைவராகவே வந்துவிடவில்லையா? தோழர்கள் பி.டி.ரணதிவே,சுந்தரய்யா, போன்ற தலைவர்களே கட்சி நடவடிக்கைக்கு ஆட்பட்டவர்கள்தானே? மீண்டும் அவர்கள் தலைமைக்குழுவுக்கே தேர்வு செய்யப்பட்டுத்தானே வந்தார்கள். தோழர் பி.ராமமூர்த்தி அரசியல்; தலைமைக்குழுவிலிருந்து சென்னை மாவட்டத்தில் வந்து வேலை செய்யவில்லையா?இந்த வரலாற்றையெல்லாம் எங்களுக்குக் கற்றுத்தந்த நீங்களா தற்கொலை என்னும் முடிவுக்குப் போனீர்கள்? மனம் ஏற்க மறுக்கிறது தோழர்..

மத்திய கமிட்டி எடுக்கும் நடவடிக்கைதான் கட்சியில் இறுதியா? அதற்குமேல் கண்ட்ரோல் கமிஷன் ஒன்று இருக்கிறதே? கடந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் கூட இந்த நடவடிக்கையை ஒரு கம்யூனிஸ்ட்டாக –கமிட்டியின் முடிவு என்பதால்-ஏற்கிறேன்- ஆனால் கண்ட்ரோல் கமிஷனுக்கு மேல்முறையீடு செய்யும் என் உரிமையைப் பயன்படுத்துவேன் என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டுத்தானே வந்தீர்களாம்?அதற்குப்பிறகு ஏன் இந்த முடிவு?எத்தனையோ மத்திய கமிட்டி/மாநிலக்கமிட்டி நடவடிக்கைகள் கண்ட்ரோல் கமிசன் விசாரணையில் மாற்றப்பட்டுள்ள வரலாறு தாங்கள் அறியாததா?

அதிகாரம் செலுத்துவது என்பதோ பதவி என்பதோ நம் கட்சிக்குள் ஒரு வேலைப்பிரிவினை மட்டும்தான் என்று எத்தனை கட்சி வகுப்புகளில் எங்களுக்குப் பாடம் எடுத்தீர்கள் தோழர்?இந்த நடவடிக்கைக்காகவா மனம் உடைந்து போனீர்கள் ? பெண் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் அவமானமாக உணர்ந்து விட்டீர்களா?எத்தனையோ போராட்டங்களில் வெற்றி பெற்றேன் ஆனால் உள் போராட்டத்தில் தோற்றுவிட்டேன் என்று கடைசிக்கடிதத்தில் எழுதிய உங்கள் வரிகளுக்கு என்ன பொருள் என்று இன்னும் விளங்கவில்லை தோழா. .குடும்பத்தாருடனான மன இடைவெளியைச் சொன்னீர்களா?உங்களுக்குள்ளேயே நடந்த அகப்போராட்டத்தைச் சொன்னீர்களா ?

மயிர் நீப்பின் வாழாக் கவரிமானாக உங்களை ஏன் உணர்ந்தீர்கள்?மானம் அவமானம் என்பது குறித்த நிலப்பிரபுத்துவ/முதலாளித்துவக் கருத்தியல்களுக்கு நீங்களா இரையாவது?அன்றாடம் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் அவமானத்துக்கும் ஆளாகும் வறிய நம் வர்க்கத்துப் பெண்கள் ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதா?

கட்சி மாநிலக்குழுவின் விசாரணை சரியில்லை என உணர்வீர்களானால்- உங்கள் வாழ்க்கையையே பணயமாக வைத்து நீங்கள் அம்முடிவை எதிர்த்திருப்பதாகக் கொள்ள இடமிருப்பதால் இந்த இடத்தில் நான் கட்சி முடிவு தவறு என்றே ஏற்று – அப்படியானாலும் அதை எதிர்த்துக் கண்ட்ரோல் கமிசனுக்குப் போகலாம் – நின்று போராடலாம்- வாழ்க்கையில் எதுதான் இறுதி? தற்கொலை நமது பாதையாக எப்போதுமே இருந்ததில்லையே?என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

(3)

எல்லா நிலைபாடுகள்,கொள்கைகள்,கருத்துக்கள் எல்லாவற்றையும் விட மனித உயிர் மகத்தானது.முக்கியமானது.அதிலும் தோழர்.உ.ரா.வ போன்றவர்கள் கட்சியின் தமிழக/இந்திய அரசியல் அரங்கின் - மாணிக்கங்கள்.அவர்களை இழக்க ஒரு கட்சி தானே முன்வருமா? ஆனால் டபிள்யூ.ஆர்.வி.யின் மரணத்தை முன்வைத்து எப்படியெல்லாம் எதிர்வினைகள்?

உலகம் சுற்றி வந்த தலைவர் தா.பாண்டியன் தர்ம அட்வைஸ் வழங்குகிறார்.படகேறி மீன் பிடிக்கப் போகும் தா.பா. கடலில் வலை வீசாமல் யாரோ பிடித்துப் படகில் போட்ட மீன்களுக்கே தூண்டில் போடுபவர்.இன்று மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தற்காலிகக் கலக்கத்தில் ஏதாச்சும் மீன் கிடைக்குமா என்று பார்ப்பார். ஆயிரம் உண்டிங்கு பிரச்னை எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?என்று கேட்போம் தோழரே.

அப்படின்னா உங்ககட்சி என்ன தனியார் கம்பெனியா கார்ப்பரேட் நிறுவனமா?பலபேர் உழைத்துச் செத்து மடிந்துதான் இக்கட்சியை வளர்த்தார்கள் என்று நமக்கு ஹிஸ்டரி ஜியாகிரபி பாடம் எடுப்பவர்கள் சிலபேர்.

பின் தொடரும் நெழலின்ட குரல் என்கிற முழுநீள நகைச்சுவை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் பாத்திங்களா நான் அப்பவே என் நாவலில் கம்யூனிஸ்ட்டுகள் இப்படித்தான் ஆவாங்க சாவாங்கன்னு எழுதிட்டேன் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவுரையை பிரகாஷ் காரத் எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் காரத் கட்சிக்கு ஒரு சுமை என்றும் அவர் சீனாவால் செயலாளராக நியமிக்கப்பட்டவர் என்றும் கட்சியை தலைமையிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றும் இந்து என்.ராமின் சதி வேலைதான் இவ்வளவும் என்றும் தன் சதி வலைப்பின்னலில் எழுதியிருக்கிறார்.

இன்னும் ஒரு தோழர்- மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ளவர் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்க என்றும் இந்தக் கலாச்சாரப் பாசிசத்துக்கு எதிராக ஏதாச்சும் செய்யுங்க என்று ஊர் பூராவும் எஸ் எம் எஸ் அனுப்பினார்.

மாநிலச்செயலாளர் பதவிக்கான அதிகாரச்சண்டையில் உ.ரா.வரதராஜன் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்று ஒரு பகுதியில் குறுஞ்செய்திகளும் குசுகுசுப்புகளும் பரப்பப்பட்டது.

பரபரப்பு நக்கீரன் இம்மரணத்தைகத் தொடர்ந்து கொண்டாடுகிறது.

எல்லோருடைய இலக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைதான்.தலைமையையும் கட்சி அணிகளையும் வேறு வேறாக நிறுத்திப்பேசும் தொனி இந்த எல்லா எதிர்வினைகளிலும் பார்க்க முடிகிறது.

(4)

கட்சி வேறு நான் வேறு என்று பிரித்து வாழத்தெரியாத எம் போன்ற பல்லாயிரம் பல்லாயிரம் கட்சித்தொண்டர்கள் எங்கள் தோழரைப் பிரிந்து கண்ணீரில் நிற்கும் ஒரு துயரமான தருணத்தில் எம்மீது வீசப்படும் கணைகளாகவே இவற்றையெல்லாம் வேதனையுடன் பார்க்கிறோம்.ஒருபுறம் எங்களை விட்டுப்பிரிந்த தலைவரின் பேருக்கும் புகழுக்கும் களங்கம் வந்துவிடாமலும் அதே சமயம் எம் உயிரினும் மேலான எங்கள் சுவாசக்காற்றான ஆயிரம் ஆயிரம் தோழர்களின் குருதியிலும் தியாகத்திலும் எழுந்து நிற்கும் எம் கட்சியின் மீது அள்ளி எறியப்படும் (இவற்றில் சில எம் நெருங்கிய நண்பர்களிடமிருந்தே வருவதையும் புரிந்து கொள்கிறோம்) கேள்விகளை, குற்றச்சாட்டுகளை, ஏராளமான அவதூறுகளை,அற்பத்திலும் அற்பமான வார்த்தைகளை நிதானமாகவும் தைரியமாகவும் உண்மையின் மீது அழுத்தமாகக் காலூன்றி நின்று எம் செங்கொடியை இறுகப்பற்றியபடி எதிர்கொள்ளத்தயாராகிறோம்-மெல்ல மெல்ல.

தோழர் உ.ரா.வ அவர்களின் இறுதி உயில் போல இன்று மீடியாவினால் தூக்கி நிறுத்தப்பபட்டுள்ள அவரது கடிதத்தில் அவர் கட்சித்தலைமைக்கு முன்வைத்த புகார் இரண்டுதான் அப்படியே அவரது வார்த்தைகளில்.. .. ..

Thereafter, the receipt of a notice in August 2009 from Small Cause Court in connection with an accident compensation claim against my elder son who owned the car, which met with an accident on November 12, 2008, triggered the flashpoint. (I was driving the car at the time of the accident.) My wife was in extreme rage... and shot off a letter to the Party State Secretary by mid-August 2009 referring to the accident and intimating that she was going to file for divorce against me. There was no mention of Pramila issue or anything else about me in that letter.... Long after, three letters — 1) from Jhansi Rani dated 22 Sep. 2009, 2) from U Vasuki dated 23 Sep. 2009 and 3) from my wife D Saraswathi dated 25/28 Sep. 2009 — were received by the Party State Secretary. My explanation was called for and subsequently the enquiry was instituted.

இன்னும் ...

Between August middle and September third week, my wife Saraswathi had prevailed upon Ms Sudha Ramalingam to finalise the petition for consent divorce and was in an agitated temperament... When my wife Saraswathi fixed up the date for filing the petition for consent divorce as October 6, 2009, I reported the matter to the State Party Centre. The Party Centre decided to request U Vasuki to talk to Saraswathi, in an effort to postpone the filing of the petition and avert an awkward Press publicity... She in turn talked to Saraswathi. ...But in the process Vasuki assured Saraswathi that the Party would take action on complaints against me. Saraswathi conveyed this to me as well as to Ms Sudha Ramalingam as reason for postponing the filing of the divorce petition. The very next day after the meeting of the Party State Secretariat i.e. on November 22, 2009, Jhansi Rani during a 20-minute talk over telephone assured Saraswathi that the Party would take stern action against me; she also enquired whether she (Saraswathi) would be content with that and drop the proposal of divorce petition. These moves clearly indicate that both Vasuki and Jhansi Rani were keen on assuaging the agitated feelings of Saraswathi and in the process attempting “a barter deal” of dropping of divorce proposal with the disciplinary action against me.

அவர் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள்

‘COMPLAINT NOT IN WRITING, ONLY TELEPHONE EVIDENCE TAKEN’

‘PROBE PANEL FINALISED REPORT WITHOUT HOLDING ANY SITTING’

‘MOTIVE WAS ONLY TO ASSUAGE AGITATED FEELINGS OF MY WIFE’

தன்னுடைய ஆத்திரமடைந்த துணைவியாரை சாந்தப்படுத்துவதற்காக கட்சி தனது தரப்பு வாதத்தை முழுமையாகவும் முறையாகவும் கேட்கவில்லை என்பதுதான் அவரது வேதனையாக அவரது இறுதிக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவரே எழுத்துப்பூர்வமாக இப்படி எழுதிவிட்டபிறகும் கட்சிக்குள் அதிகாரப்போட்டி என்றும் என்.ராமின் சதி என்றும் இன்னும் கிளப்பப்படும் எண்ணற்ற வாதங்களுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? அவதூறு என்கிற ஒற்றைச்சொல்லைத்தவிர. இவற்றையெல்லாம் அவதூறு என்று சொன்னால் உடனே இந்த ஒற்றைச் சொல்லால் எங்கள் வாயை அடைக்காதீர்கள் என்று கிளம்பி விடுகிறது கோபம் . அவரே குறிப்பிடாத குற்றங்களை கட்சியின் மீது சுமத்துவது அவதூறு அல்லாமல் வேறு என்ன?

தவிர இக்கடிதத்துக்குப் பிறகுதான் அவர் மத்தியக்குழுக் கூட்டத்துக்குப் போகிறார்.அங்கு எல்லா அரசியல் அஜெண்டாக்களின் மீதும் தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறார்.கடைசி அஜெண்டாவான தன் மீதான நடவடிக்கையை ஏற்று மேல்முறையீட்டுக்குச் செல்வதாகக் கம்பீரமாகக் கூறிக் கீழே இறங்குகிறார்.

(5)

· எனக்கு எங்கள் தவறென்று படுவதை வெளிப்படையாகச் சொல்கிறேன். நடவடிக்கைக்கு ஆளான ஒரு தோழரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தும் அவரோடு அரவணைக்கும் மனதோடு சில தோழர்கள் தொடர்ந்து பேசிட ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். குற்ற மனநிலை குறித்து ஆயிரம் இலக்கியங்கள் படித்த நாங்கள் இதில் தவறிவிட்டோம் என்று எனக்குப் படுகிறது.அப்படியான ஏற்பாடு உலகின் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.(பூர்ஷ்வா கட்சிகள் பற்றி நாம் இங்கு பேச வேண்டியதில்லை)

· பலவீனங்களிலிருந்து மீண்டு வருவதற்குத்தான் நடவடிக்கை என்னும்போது அத்தகைய தோழர்களோடு தோழமையோடு தொடர்ந்து உறவு கொண்டு கவுன்செல்லிங் செய்வது யார் என்று அதே நடவடிக்கையின் பகுதியாகவே முடிவு செய்யப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

· நடவடிக்கைக்கு உள்ளான தோழர்களோடு பகை முகம் காட்டும் இந்து தர்ம சிந்தனை இன்னும் பல பேரிடம் நீடிக்கிறது.அது களையப்பட வேண்டும்.

ஆண்பெண் உறவு குறித்து பலரும் இன்று எமக்கு பாடம் எடுக்கிறார்கள்.எல்லாம் நாங்களும் அறிந்ததுதான்.நாம் வாழ்வது ஐரோப்பிய நாகரிகத்தில் இல்லை.தமிழர்களைத்தான் நாம் கட்சியை நோக்கி அணி திரட்ட வேண்டியிருக்கிறது.ஆகவே இந்தப் பண்பாட்டின் அசைவுகளைப் புரிந்து கொண்டு நமக்கு உடன்பாடு இல்லாதபோதும் (ஒரு தந்திரமாகவேனும்) அதன்படி வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.

· பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து அல்லது சம்பந்தப்பட்ட ஆணின் துணைவியாரிடமிருந்து புகார் வராத பட்சத்தில் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படாத அளவுக்குள் இருக்கும் பட்சத்தில் –கட்சியின் கவனத்திற்கு முறையாக வராத பட்சத்தில் தோழர்களின் சொந்த வாழ்வில் கட்சி தலையிடுவதில்லை

இதெல்லாம் ஒருபுறமிருக்க ,ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அப்படி வாழ்வதற்கான போராட்டத்தை நடத்துகிறோம் என்று ஒப்புக்கொடுத்துத்தான் கட்சிக்குள் வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.ஆகவே மார்க்சிஸ்ட்டுகள் தனி வார்ப்புகளாகத்தான் இருக்க முடியும்.இதில் யாருக்கும் விதி விலக்கை நாங்கள் ஒருபோதும் கோரியதில்லை.

கட்சிக்கு வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை அவை கோபமான வார்த்தைகளில் இருந்தாலும் நிதானத்துடன் பரிசீலித்து தவறுகள் இருப்பின் எம்மைத் திருத்திக்கொள்வோம் .தோழர் என்.வரதராஜன் அடிக்கடி கூறுவதுபோல விமர்சனங்களை பெரும் சொத்தாகவே நாங்கள் பாவிக்கிறோம்.அதுதான் எப்போதும் எங்கள் பாதை.

இப்பதிவை எழுதியதன் நோக்கம் எங்கள் தலைமையின் பக்கம் நின்று நியாயத்தைப் பேசுவது மட்டுமல்ல. கடந்த இருபது நாட்களுக்கு மேலாக எந்த இயக்கமுமின்றி முடங்கிக்கிடக்கும் என் சொந்த மனதை விடுவித்து அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான –பாரத்தை இறக்கி வைக்கும் முயற்சியும்தான்.

நெருக்கடியான இந்த நேரத்தில் தற்கொலையைப் புனிதப்படுத்துவதையும் அதை முன்னிட்டு ஒட்டு மொத்தமாகக் கட்சியை –கட்சித்தலைமையை-வேரோடு சாய்க்கும் வார்த்தைகளை வீசுவதையும் பரப்புவதையும் ஒரு தொண்டனாக நின்று எம் உதிரச்செங்கொடியை உயர்த்திப்பிடித்து எதிர்ப்பேன்.

வாழ்க தோழர் உ.ரா.வ.வின் புகழ்!

ரெட் சல்யூட் டு மார்க்சிஸ்ட் பார்ட்டி!!

16 comments:

pavithrabalu said...

கட்சியின் உண்மையான ஊழியராக உங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளீர்கள்... இந்த சம்பவம் குறித்த பல பதிவுகளை படித்தபின்பு உங்கள் பதிவைப் படிப்பது தெளிவைக் கொடுக்கிறது..

......பலவீனங்களிலிருந்து மீண்டு வருவதற்குத்தான் நடவடிக்கை என்னும்போது அத்தகைய தோழர்களோடு தோழமையோடு தொடர்ந்து உறவு கொண்டு கவுன்செல்லிங் செய்வது யார் என்று அதே நடவடிக்கையின் பகுதியாகவே முடிவு செய்யப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

· நடவடிக்கைக்கு உள்ளான தோழர்களோடு பகை முகம் காட்டும் இந்து தர்ம சிந்தனை இன்னும் பல பேரிடம் நீடிக்கிறது.அது களையப்பட வேண்டும்........
எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை சரியாக சுட்டியிருக்கிறீர்கள்,,



மிகவும் அவசியமான பதிவு..

Anonymous said...

We understand Mr. Tamilselvan. You are one of the State committee members who shamelessly passed judgement on Varadarajan without questioning the procedure adopted to condemn him. We understand your compulsions. But we realise now that you can also shed crododile tears like other communist leaders who shamelessly spoke in praise of him after finishing him off politically.
You are not able to question a decision that was based purely on
SMS, emails and "cell phone' inquiry (CPI(M's contribution to moder criminal justice system). We understand. You also have a poliltical career ahead. But stop preaching shamelessly about family and relationships in future. I am criticissing you anonymously because I do not want to be subjected an inner-party inquiry where i will be "punished" for "anti-party" activities on the basis of this posting. Long live inner-party democracy! Long live Cpi(m). Long live Tamil selvan (I want to praise you because may be elected to the State secretarait soon for this service to the party)

silviya said...

மாற்றுப்பண்பாடு குறித்து கொஞ்சம் பொறுப்போடு யோசிப்பவர் நீங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தோழர் வரதராஜன் காணாமல் போனதற்கு பிறகு கிடைத்த கடிதத்தை படித்து விட்டு கீற்று வலைத்தளத்தில் தற்கொலை செய்ய விரும்பியவருக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் நான் என் உணர்வுகளை பதிவு செய்திருந்தேன். அதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
'நடவடிக்கைக்கு ஆளான ஒரு தோழரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தும் அவரோடு அரவணைக்கும் மனதோடு சில தோழர்கள் தொடர்ந்து பேசிட ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். குற்ற மனநிலை குறித்து ஆயிரம் இலக்கியங்கள் படித்த நாங்கள் இதில் தவறிவிட்டோம் என்று எனக்குப் படுகிறது.அப்படியான ஏற்பாடு உலகின் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.(பூர்ஷ்வா கட்சிகள் பற்றி நாம் இங்கு பேச வேண்டியதில்லை) பலவீனங்களிலிருந்து மீண்டு வருவதற்குத்தான் நடவடிக்கை என்னும்போது அத்தகைய தோழர்களோடு தோழமையோடு தொடர்ந்து உறவு கொண்டு கவுன்செல்லிங் செய்வது யார் என்று அதே நடவடிக்கையின் பகுதியாகவே முடிவு செய்யப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. நடவடிக்கைக்கு உள்ளான தோழர்களோடு பகை முகம் காட்டும் இந்து தர்ம சிந்தனை இன்னும் பல பேரிடம் நீடிக்கிறது. அது களையப்பட வேண்டும்.'
இந்த உங்களது கருத்தை உங்களது கட்சிக்குள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்து தர்ம சிந்தனை. எத்தனை பெரிய சாட்டையடி.
தனக்கே எல்லாம் வேண்டும் என்ற தனிஉடமைச் சிந்தனை (அது பதவியாகக் கூட இருக்கலாம்), உயர் ஜாதிச் சிந்தனை, ஆணாதிக்க சிந்தனை, கடவுள் எனும் பயம், கற்பு பயம் போன்ற பல்வேறு சிந்தனை தொடர்பாக ஏற்படும் அனைத்துக் குற்றங்களையும் விசாரிக்கவும், அந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடும் கட்சித் தோழர்களை நெறிப்படுத்தவுமான பொறுப்பை கட்சி தனது பண்பாட்டு அமைப்பிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது எனது கருத்து.
அந்தப்பண்பாட்டு அமைப்பு எந்திரம் போன்று இருக்காமல் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இதயம் போல இருந்தால் நல்லது. அந்த அமைப்பில் புரட்சிகர உளவியலாளர்கள் கூட இடம்பெறுவது அவசியம்.
ஒரு பண்பாட்டு அமைப்பின் தலைவர் என்ற முறையில் இதை நீங்கள் சரி என்றே எடுத்துக்கொள்வீர்கள் எனவும் உங்களது கட்சியில் அத்தகைய அமைப்பை உருவாக்க முயற்சிப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

தோழமையுடன்
சில்வியா

Dr.Rudhran said...

உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் இந்த நிகழ்வு பொதுவுடைமை குறித்து அதிகாரவர்க்கத்தின் அடிவருடிகள் ஆடுகிறார்களே, அதற்கு என்ன செய்யலாம்?

Anonymous said...

Thalaivargale katchiyai saayththuvittanar, enindha naadagam thamizhselvare!
Rambam vaiththu marathai aruthu, mele kayiru katti izhuappvargalil oruvaraaga irundha neengal, makklain madhippilirundhu veezhndhuvitta maraththaik kattik kondu azhathathaan mudium

Anonymous said...

Avare kurippidum moondru kuttrachaatugalaip pattri ungal karuththai sollamal thappiththu vitteergal. Vaazha ungal panbum nermaiyum!
Ennudaiya irandu pinnuuttangal idhuvarai varavillai. Vaazhaga ungal jananaayagam!
Poraaduvom poraaduvom, karuththu sudandhthiraththirkaaga poraaduvom endru ungal thozhargal ezhuppum goshangal ninaivirku varugindrana!

Anonymous said...

Katchiyin seyalgal edhayum vimarsikkap pazhagaadadhal, adhu seyym edhaiyum etrukkondu poraada marandavar endru oru variyaiyum ungal arimugathil serthukkondaal nalladdhu

Anonymous said...

It is now clear that counselling is needed for your party leaders, including you, who have betrayed a fine comrade with their insensitivity and silence.

Anonymous said...

என்னைச் சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்து போய் பார்க்க, வாய் விட்டு அழுதுகொண்டே இந்தப் பதிவை வாசித்தேன். ஆனால்
கட்டுரையின் இறுதிப்பகுதி நெருங்க நெருங்க கண்ணீர் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாறியது. உங்கள் எஸ்.எம்.எஸ். படித்தபோதே நீங்கள் நிதானமிழந்தது தெரிந்தது. நீங்களுமா? You too Tamil Selvan?

Anonymous said...

What u said in the article is correct com. I agree the below mentioned points.

.....பலவீனங்களிலிருந்து மீண்டு வருவதற்குத்தான் நடவடிக்கை என்னும்போது அத்தகைய தோழர்களோடு தோழமையோடு தொடர்ந்து உறவு கொண்டு கவுன்செல்லிங் செய்வது யார் என்று அதே நடவடிக்கையின் பகுதியாகவே முடிவு செய்யப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

· நடவடிக்கைக்கு உள்ளான தோழர்களோடு பகை முகம் காட்டும் இந்து தர்ம சிந்தனை இன்னும் பல பேரிடம் நீடிக்கிறது.அது களையப்பட வேண்டும்........
எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை சரியாக சுட்டியிருக்கிறீர்கள்,,

Anonymous said...

முதல் பாதி வரை உங்களது பதிவு ஓரளவிற்கு நேர்மையாகவும், பிற்பாதியில் கட்சியின் தவறை மறைக்க நீங்கள் எடுக்கும் முயற்சியும் நன்றாக தெரிகிறது..
விசாரணை ஒழுங்காக நடத்தாமல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் பலரது குற்றச்சாட்டு.
விசாரணையை ஒழுங்காக நடத்தாமல் தண்டனை குடுக்க இது என்ன சின்னபிள்ளைகள் விளையாட்டா.
விசாரணை ஒழுங்காக நடக்காமல் போனதற்கு உட்கட்சி பூசலோ, கோஷ்டித்தகராரோ, இல்லை வேறு ஏதோ ஒன்றோ, அதைபற்றி எங்களுக்கு கவலை இல்லை..
1. ஒரு எஸ்.எம்.எஸ். ஆதாரத்தை வைத்து எப்படி அவரு தவறு செய்தார் என்று முடிவு செய்யலாம்.
2. மாநிலக்குழுவில் இந்த விசாரணை எப்படி நடந்தது என்றும் ஆதாரங்களை காட்டுங்கள் என்றும் ஒருவர் கூட (நீங்கள் உள்பட) கேட்கவில்லையா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் (மாநிலகுழுவோ, மத்தியக்குழுவோ) தவறான முடிவுதான் உ. ரா. வின் தற்கொலைக்கு காரணம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டு என்பதை ஆராயுங்கள்.

--- பதில் தருவீர்கள் என்கிற நம்பிக்கையில்,ஒரு CPIM அனுதாபி

Anonymous said...

katchi tharkolaiyai eatrukkolla mudiyathu endru sollivittathu. Indhak kuttraththirkkum oru visaaranai kuzhu amaiththu, avarai katchiyilirundhu neekividap pogiraargalaa. Abathththirkku oru alavae ilaiyaa.

நட்புடன் ரமேஷ் said...

நன்றி தமிழ்

hariharan said...

மனச் சுமையை இறக்கிய பதிவாகவே கருதுகிறேன். தோழர். W.R.V. காணாமல் போனதாக செய்தி அறியப்பட்டதிலிருந்து அவர் பிணமாக ஏரியில் கண்டெடுத்த நாள் வரை சலனமாகவே இருந்தது. தற்கொலை செய்திருப்பாரோ என்று ஒரு மகத்தான கம்யூனிஸ்ட் தலைவரை எண்ணிப் பார்க்க இயலவில்லை.

இந்திய ஊடகங்கள் கம்யூனிச இயக்கத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் எதிர்வினை யாற்றவும் மக்களிடமிருந்து இயக்கத்தை அன்னியப்படுத்தும் வேலைகளைத் தான் செய்கிறது. அதில் புதிதாக வந்த மக்கள் தொலைக்காட்சிக்கு என்ன புலனாய்வு வெங்காயமோ மத்திய அரசு போட்ட பட்ஜெட்டால் விலைவாசி உயர்வு போன்றவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு மார்க்சிஸ்ட்டுகளை தூற்ற ஒவ்வொரு தலைப்புசெய்திலும் W.R.V கொலையா? மர்மம் நீடிப்பு என்று நாள்முழுவ்தும் அது தான் அஜெண்டா?

அதற்கு எதிராக மார்க்சிஸ்ட்டுகள் சம்பத்தப்பட்ட டிவி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ந்டத்தியது ஆனால் கல்வீச்சில் முடிந்தது துரதிஷ்டவசமானது. அதற்கு பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் மீது பாமகவினர் தாகுதலில் நடத்தியது எல்லாம் அவர்கள் சேனலில் செய்தியில்லை.

வன்முறையை ஏவி சாதீய அரசியல் ந்டத்துகிற ஒரு “நிறுவனம்” கம்யூனிஸ்ட்களை வன்முறையாளர்கள் என்று திரும்பத்திரும்ப கூறுவது வேடிக்கையாக உள்ளது.

ஒரு துயர மரணத்திலும் செய்தியை பொய்களை திரும்பத்திரும்ப கூறி மீடியாவை கையில் வைத்துக்கொண்டு இயக்கத்தை தூற்றுவதும் முதலாளித்துவ அடிவருடிகளின் இயற்குணம்.

Anonymous said...

சில மாதங்களுக்கு முன் ஒரு பாலியல் வழக்கில் சரியாக நிலை எடுக்க முடிந்த உ.ரா. அப்போது கூட தனது வாழ்க்கையில் தான் தவறு செய்ததைப் பற்றி யோசிக்கவே யில்லை என்பதில் ஏதோ பொருந்தவில்லையே. அது உங்களுக்கு ஏன் ஏதும் தவறிருந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பவில்லை? கட்சியின் மீதான நம் நம்பிக்கை வேறு. நடைமுறை வேறு. நடைமுறையில் யாரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களில்லை. எல்லா ஊடகங்களும் எதையாவது கிளறி எழுதினாலும் எழுதட்டும். அதில் இருக்கும் கடுகளவு உண்மையையும் நாம் புறக்கணிக்கக்கூடாது என்பது என் கருத்து. அவர்களின் அவதூறை விட்டுத்தள்ளுங்கள்.

Unknown said...

Com.Thamilselvan observation on Com.WRV decision to end his life is not correct. u have very correctly quoted many senior leaders acceptance of disciplinary actions & bringing the party to the glory by many ways.comiting suicide is not at all a solution to any issue, that will not give real solution. Rajendiran