Monday, March 30, 2009

பெண் பாவம் நம்மைப் பின் தொடர்கிறது...

samiyal1copy

 

ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் என்று ஒரு புத்தகம் எழுதினேன்.
மறுபதிப்பில் அதை ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்று பேர் மாற்றம்
செய்து வெளியிட்டேன்.இரண்டு பதிப்புகளும் நல்ல விற்பனைதான்.

சேலத்தில் தோழர்கள் அசோகன்,ஷேக் அப்துல்லா , கவிஞர் நிறைமதி முன் முயற்சியில்
ஆண்களுக்கான சமையல் பட்டறை ஒன்று நடத்தினோம்.80 பேர்வரை
பங்கேற்றனர்.

முதலில் இந்தப் புத்தகத்தலைப்பும் பட்டறை பற்றிய அழைப்பதழும்
புன்சிரிப்பை கேலியான கருத்துக்களை வரவழைத்தாலும்
பலர் சீரியஸ்ஸாக பெண்களின் வேலைப்பளு,ஏமாற்றித்திரியும்
ஆண்மனம் பற்றியெல்லாம் மனம் திறந்து பேசத்துவங்கினார்கள்.
பழைய காலம் போல இல்லை .பெண்கள் எங்கே அடிமையாக இருக்கிறார்கள்?
ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.வீட்டில் அவள்தான் ராணி
என்கிற அறுதப்பழைய ஆண்களின் திமிரான பொய்களை இப்போது பேசுவதில்லை.
பெண்களின் நிலைமை மோசம்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அடேயப்பா இந்த இடத்துக்கு ஆண்மனதைக் கொண்டு வந்து
சேர்ப்பதற்கு எத்தனை பெண்விடுதலை இயக்கங்கள் எவ்வளவு போராட்டங்கள்
எத்தனை எரிப்புகள்  எத்தனை வழக்குகள் எத்தனை உயிர்ப்பலிகள்?
எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகள் நடந்து முடிந்தபின் ஆண் மனம் இளகி வந்து
ஆமாமா  பெண்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளும்  இடத்துக்கு
வந்து சேர்ந்திருக்கிறோம்.இது ஒரு முன்னேற்றம்தானா என்றால் ஆம் என்றுதான்
சொல்லியாக வேண்டும்.ஆனால் இந்த இம்மி அசைவுக்கு இத்தனை காலமா?

இந்தப்புத்தகத்தை எழுத எனக்கு உந்துதலாக இருந்தது சமைப்பதைத்தவிர
வாழ்வில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காது மறைந்து விட்ட என் அம்மாவின்
அகாலத்தில் எம்மைப் பிரிந்துவிட்ட எங்கள் ஒரே தங்கையின் வாழ்க்கைகளை
ஒருநாள் அறிவோடு உற்றுப் பார்த்தேன்.அதுதான்.

நம் கூடவே வாழும் பெண்களை ஆண்களாகிய நாம் just  ஒரு கவனமின்மையில்
இழந்துகொண்டிருக்கிறோம்.வீடுகளின் தீண்டாச்சேரிகளாக இன்னும் சமையலறைகள் நீடிக்கும்
அவலம்-கொடுமை வெகு இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது.

சமைக்கிறதுதான் பெரிய பிரச்னையா சார் என்று சிலர் கேட்பதுண்டு.
எப்போதாவது ஆண்கள் சமைப்பதுண்டு அல்லது சமையலில்
help  பண்ணுவது உண்டுதான்.ஆனால் நாம் கோருவது சமைப்பது
என்னுடைய வேலைதான் என்று மனதார ஏற்றுக்கொண்டு தினசரி
ஆண் சமைக்க வேண்டும்.

என்னிடம் கேட்டால் ஒரு மாத காலம் நம் வீட்டுப் பெண்களை
அடுக்களைப்பக்கமே வரக்கூடாது என்று தடுத்து விட்டு
முற்றிலும் மூணு வேளையும் ஆண்கள் மட்டுமே சமைத்துப் போட்டால்
ஆண்கள் எல்லோருமே நல்லவர்களாக மாறி விடுவார்கள்.ஆண்கள் யார்?இந்தப்
பெண்கள் பெற்ற பிள்ளைகள்தானே?ஆகவே திருந்திவிடுவார்கள் என்று நம்பலாம்.

அடுப்படிக்குள் நாம் நுழைந்தால் அங்கே சுழலும் புகையில்
ஆயிரம் ஆண்டுகளாய் சிதைந்துபோன நம் பாட்டிகளின்
அம்மாக்களின் அக்கா தங்கைகளின் கனவுகள் கலந்திருப்பதைக்
கண்டுணரலாம்.பொசுங்கிப்போன அவர்களின் ஆசைகள்
ஏக்கங்களின் அடர்த்தியை நாம் அடுப்படிக்காற்றில்
சுவாசிப்போம்.

ஆகவே ஆண்கள் சமைப்பது என்பது வெறும் சோறு குழம்பு
வைக்கும் ஒரு  physical work sharing  அல்ல.மனரீதியாக
நம்மை நல்லவர்களாக மாற்றும் ரசவாதம் நடக்கும்
சோதனைச்சாலைகளாக நம் அடுப்படிகள் திகழ முடியும்.

வக்கணையாகப் புத்தகம் எழுதிவிட்டு
நான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.வீட்டில் இருந்தால்தானே
நான் சமைப்பேன்.இப்படியும் பல ஆண்கள் ஊரை
ஏமாற்றிக்கொண்டு அலைகிறோம்.

பெண்களுக்கு நாம் செய்துவரும் பாவங்களுக்கும்
துரோகங்களுக்கும் மன்னிப்பே கிடையாது.

குறைந்தபட்சம் தின்று திரியாமல் சமைப்பது
துவைப்பது பெருக்குவது என்று வீட்டு வேலைகளையாவது
செய்யத்துவங்கலாம்.வெட்டிப்பேச்சு எதுக்கு?

27 comments:

Anonymous said...

ஆம்பளீங்களா இப்பே சமையல் கட்டுக்கு ஓடுங்க அதான் பெண் சமத்துவம்! சரியா மண்டைய ஆட்டாதிங்க சட்டியும் பானையம் தூக்கங்க

விடுதலை said...
This comment has been removed by the author.
விடுதலை said...

//அடுப்படிக்குள் நாம் நுழைந்தால் அங்கே சுழலும் புகையில்
ஆயிரம் ஆண்டுகளாய் சிதைந்துபோன நம் பாட்டிகளின்
அம்மாக்களின் அக்கா தங்கைகளின் கனவுகள் கலந்திருப்பதைக்
கண்டுணரலாம்.பொசுங்கிப்போன அவர்களின் ஆசைகள்
ஏக்கங்களின் அடர்த்தியை நாம் அடுப்படிக்காற்றில்
சுவாசிப்போம். //

மிகச் சரியாக சமைத்து மிகத் தவறான வாழ்க்கைக்கு இறையானவர்கள் மேற்குறிப்பிட்டவர்கள்.

தோழர் உங்கள் புத்தகம் படித்ததோடு பாண்டிச்சேரியிலும் ஒரு ஆண்களுக்கான சமையல் பட்டரை நடத்தினோம் தோழர் ராம்ஜி தலைமையில் அதில் பங்குபெற்ற கையோடு எங்க வீட்டுக்கு போய் சமைக்கபோணா உணக்கு என்னடா ஆச்சி போய் வேற வேலையை பாருடான்னு எங்க அம்மா சொல்லிட்டாங்க அது எனக்கு வசதியாகவும் இருந்தால் சமையல் கத்துகின்னும் ஆசையும் போச்சி. மீண்டும் முயற்சி செய்து பார்க் இப்போது உங்கள் நினைவூட்டல் பதிவுக்கு நன்றி

மண்குதிரை said...

சரிதான் உடலுக்கும் நல்லது. சமுதாய மறுமலர்ச்சிக்காக இல்லை என்றாலும் டாக்டர் எச்சரிக்கைக்காகவது செய்யலாம்.

//காலத்தை நறுக்க
நீ கிளம்பிவிட்டால்
காய்களை நறுக்குவது ஒன்றும்
கடினமில்லை எங்களுக்கு-யுகபாரதி//

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

எம்.எம்.அப்துல்லா said...

//சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

//

சரியாகச் சொன்னீர்கள் ஜ்யோராம் அய்யா :)

Joe said...

//அடுப்படிக்குள் நாம் நுழைந்தால் அங்கே சுழலும் புகையில்
ஆயிரம் ஆண்டுகளாய் சிதைந்துபோன நம் பாட்டிகளின்
அம்மாக்களின் அக்கா தங்கைகளின் கனவுகள் கலந்திருப்பதைக்
கண்டுணரலாம்.பொசுங்கிப்போன அவர்களின் ஆசைகள்
ஏக்கங்களின் அடர்த்தியை நாம் அடுப்படிக்காற்றில்
சுவாசிப்போம். //
எவ்வளவு நிதர்சனமான வரிகள்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய ஆண்மக்கள் கூட, முதுகலை பட்டம் பெற்ற மனைவிகளை, துணி துவைக்கவும், சமையல் செய்யவும், பாத்திரம் கழுவவும் மட்டுமே செய்ய விடுகிறார்கள்.

Anonymous said...

//நம் கூடவே வாழும் பெண்களை ஆண்களாகிய நாம் just ஒரு கவனமின்மையில்
இழந்துகொண்டிருக்கிறோம்.வீடுகளின் தீண்டாச்சேரிகளாக இன்னும் சமையலறைகள் நீடிக்கும்
அவலம்-//very true statements Tamil.Your article spark something more in brain---R.Selvapriyan-Chalakudy

சுப்பு said...

ஆண்களுக்கான சமையல் குறிப்புகளே நான் முதலில் படித்த உங்கள் எழுத்து. நீங்கள் சொல்லியிருக்கும்விதம் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நறுக்கென்றது. அதன் பின்னர் சாப்பிட உட்காரும்போதெல்லாம் ஒருவித குற்றவுணர்வுடனே சாப்பிடத் தொடங்கினேன். அதிலிருந்து விடுபட சமைக்கத்தொடங்கினேன். சமையலறையே காதல் செய்ய சரியான இடம் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு சரி.
புத்தகத்தின் சில இடங்களில் மெல்லிய நகைச்சுவையோடு நீங்கள் சொல்வது சிரிக்காமல் திட்டுவது போல் இருக்கும்.

malar said...

உங்கள் மனதை தொட்டு தான் சொல்கிறீர்களா ? காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே ?

மாதவராஜ் said...

//Blogger malar said...

உங்கள் மனதை தொட்டு தான் சொல்கிறீர்களா ? காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே ?//

நான் தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஓரிரு நாட்கள் தங்கியுமிருக்கிறேன். அவர்தான் சமைப்பார். பிரமாதமாக சமைப்பார். சமைக்காமல் தின்று திரியும் என் போன்றவர்களை “என்னய்யா” என்று கொஞ்சம் வேதனையும், வருத்தமும் கலந்த தொனியில் பார்ப்பார். மீன்குழம்பு, ரசம் எல்லாம் வைக்கச் சொல்லிக்கூட தந்தார்.ம்ஹூம்.

அக்ரஹாரத் தெருவில் இருக்கும் அவர் வாசல் தெளித்து கோலம் போட்ட அனுபவத்தை தனிப் பதிவாக எழுதலாம் என்பது என் பரிந்துரை.

Deepa said...

இந்தப் புத்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். ஐம்பது முறையாவது படித்திருப்பேன். நிறைய ப்யன் தரும் குறிப்புகளையும் நினைவில் வைத்திருக்கிறேன். உண்மையில் சொல்கிறேன். பெண் விடுதலை, பெண்ணியம் என்று ஆயிரம் பக்கங்களில் சொல்லக் கூடிய எவ்வளவோ விஷயங்களை அந்தச் சின்ன புத்தகத்தில் அருமையாகச் சொல்லி இருந்தீர்கள். வணக்கம் செலுத்துகிறேன் உங்களுக்கு.

பின் குறிப்பு: யார் படிக்க வேண்டுமோ அவரைக் கெஞ்சிக் கூத்தாடிப் படிக்க வைக்க வேண்டியதாயிற்று. செயல் முறை எப்போதென்று அவருக்கே வெளிச்சம்.

“அம்மாவையும் மனைவியையும் நேசிக்கும் எந்த ஆணும் சமைக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டான்” நச்!

Deepa said...

என்னிடம் கேட்டால் ஒரு மாத காலம் நம் வீட்டுப் பெண்களை
அடுக்களைப்பக்கமே வரக்கூடாது என்று தடுத்து விட்டு
முற்றிலும் மூணு வேளையும் ஆண்கள் மட்டுமே சமைத்துப் போட்டால்
ஆண்கள் எல்லோருமே நல்லவர்களாக மாறி விடுவார்கள்

குறைந்தபட்சம் தின்று திரியாமல் சமைப்பது
துவைப்பது பெருக்குவது என்று வீட்டு வேலைகளையாவது
செய்யத்துவங்கலாம்.வெட்டிப்பேச்சு எதுக்கு?

உங்க கால் எங்க சார்!!

நந்தா said...

உங்களுடைய புத்தகங்களில் நான் முதலில் படித்தது ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது வைத்தான்.

அதில் சொல்லியவற்றிலும் சரி இப்போது இங்கே சொல்லியிருப்பவையிலும் சரி ஒரு புள்ளி கூட வேறுபட முடியவில்லை.

தொடருங்கள்.

ச.தமிழ்ச்செல்வன் said...

இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் எதிர்வினைகள் உற்சாகமளிக்கின்றன.முதல் எதிர்வினையாளர் மட்டும் “ சமையல் கட்டுக்கு ஓடுங்க அதுதான் பெண் சமத்துவம் “ என்று நக்கலாக எழுதியிருக்கிறார். நன்று.இதுபோன்ற விமர்சனங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.ஆனால் நாம் எப்போதும் எங்கேயும் ஆண்கள் சமைப்பது மட்டுமே பெண் சம்த்துவத்தைத் தந்துவிடும் என்று சொன்னதில்லை.ஆண் சமைக்காமல் தப்பித்துக்கொண்டே பெண்விடுதலை பற்றித் தத்துவமாகப் பேசிக்கொண்டு மட்டும் இருப்பேன் என்று சொன்னால் அது பெரிய ஃபிராடு.ஆண் பெண் இருவருமே சமைக்காமல் பொதுச் சமையல் ஏற்பாடு பற்றி லெனின் கனவு கண்டார்.அது வரும்வரை?

நாங்கள் புளியங்குடியில் டீக்கடைகளில் ரெட்டைக் கிளாஸ் முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது டீக்கடைக்காரர்கல் use and throw cup களில் டீ போடத் தயாராக இருந்தார்கள்.பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த RDO வும் ஓகே என்றார் ஆனால் நாங்கள் ஏற்கவில்லை. பிரச்னையே தலித் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் ஒரே கிளாசில் டீ போட வேண்டும் என்பதுதானே. ஆகவே ஒரு ஆறு மாத காலம் ஒரே கிளாசில் டீ போட்டுக் கொடுங்க அப்புறமா use and thorow வுக்குப் போங்க என்று வாதிட்டோம். அதே வாதம்தான் இங்கும் ஆயிரம் ஆண்டுகளாகத் தெத்திக்கொண்டு திரியும் ஆண்கள் சமைங்க முதலில்.அதை தவிர்ப்பதற்காக புரட்சி வேசம் போட்டும் ஏமாத்த முயலாதிங்க.

ஆண்களாகைய நாம் நமக்குள் ஒரு உள்நோக்கிய பயனம் நடத்த வேண்டும்.அதற்கு ஆயிரம் வேலைகள் செய்ய வேண்டும்.அதில் ஒன்று ஆண் சமைப்பது- நிச்சயமாக.

ப்.கு. நம்ம நக்கல் சார் என்னுடைய ‘பெண்மை என்றொரு கற்பிதம்’ என்கிற செம்மலர் கட்டுரைத்தொடரை வாசித்தால் நாம் பிறவற்றைப் பற்றியும் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை அறியலாம்.

பொ.வெண்மணிச் செல்வன் said...

உடல்நிலையை மிகத்தாமதமாக கருத்தில் கொண்டு தோசை மட்டும் சுடத்தெரிந்த தைரியத்தில் பரீட்சாத்த முயற்சியாய் சமையல் தொடங்கியிருந்த காலத்தில்தான் புத்தக கண்காட்சியில் இந்த புத்ககம் வாங்கியிருந்தேன். படித்து முடித்த போது சமைத்தே தீருவதென்ற முடிவுக்கு வந்துவிட்டேன். புத்தகம் குறித்து ஆச்சரியத்தை அப்பாவிடம் பகிர்ந்துகொண்ட போது, அப்பா உங்களைப் பார்க்க வந்திருந்தபோது அப்பாவிடம் பேசியபடியே சர்வ சாதரனமாக நீங்கள் சிக்கன் சமைத்துப் போட்டதையும் அதன் சுவை பற்றியும் சொன்னார்கள். "புத்தகத்தைப் பற்றி உன் மனதில் தோன்றுவதை அப்படியே அவருக்கு கடிதமாய் எழுதிப் போடு" என்றும் சொன்னார்கள். தயக்கத்தில் செய்யாமலேயே விட்டு விட்டேன். நண்பர்களையும் புத்தகத்தை படிக்கச் செய்தேன். சமையல் ஒரளவுக்கு வெற்றிகரமாகவே நடந்தது. பிரச்சனை சமைப்பதில் இல்லை. பாத்திரம் கழுவதில்தான். குக்கரை கழுவி முடிக்கயில் மூச்சு முட்டிவிடும். அதற்குப் பின்னும் ஏதேனும் மூலையில் சின்னதாய் அழுக்கைப் பார்த்து விட்டு கோவத்தில் தூக்கி எறிந்த நிகழ்சிகளும் உண்டு. வெக்கையில் நிற்பது கஷ்டமாய் இருந்தாலும், அப்பளம் மலர்ந்து விரிந்து வருவதையும், வெந்ததும் மணம் வீசுகிற சாம்பாரையும் ரசிக்க முடிவது போல, தேய்க்க தேய்க்க பளபளக்கத் தொடங்குகிற பாத்திரங்களை ரசிக்க முடிவதில்லை. களைப்பும் சலிப்பும்தான் எஞ்சும். அதனாலேயே சமையலும் நின்று போனது. தோல்வியை ஒப்புக் கொண்டு சமையல்காரிக்கு ஏற்பாடு செய்துவிட்டோம்.
அந்த சமையல் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். பருப்பு குழம்பு வைக்கிறேன் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட பத்து போன் கால்கள் அம்மாவிற்க்கு, குறிப்புகள் கேட்டு. எப்படியோ சமைத்து முடித்து சாப்பிட்டுவிட்டு அமர்கையில் அம்மா போனில் அழைத்தார்கள்."எப்படிப்பா இருந்தது?" "பரவாயில்லம்மா, பருப்பு கொஞ்சம் வேக்காடு கம்மி, உப்பும் பத்தல, சாப்பிடும்போது போட்டுக்கிட்டேன். நல்லாத்தான் இருந்துச்சி. ஆனா நீங்க வைக்கிற குழம்பு ருசி வரலம்மா" என்றேன். கொஞ்ச நேரம் அம்மா பக்கம் அமைதி. தளுதளுத்த குரலில் "என் பிள்ளை இப்பிடி ஏங்கிப் போய் கிடக்க, இங்க நான் பொங்கி சாப்பிடறதெல்லாம் சோறுதானா?" என்றபடி அழவே தொடங்கிவிட்டார்கள். எப்படியோ பேசி அம்மாவை சமாதானப்படுத்திவிட்டு, ரொம்ப நேரம் அம்மாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

செல்வநாயகி said...

தமிழ்ச்செல்வன்,

எத்தனையோ முக்கியமான விசயங்களைத் தொட்டு எழுதியிருக்கும் உங்களின் எழுத்துக்கள் பலதையும் படித்தாலும் உங்கள் பெயர் நினைத்தவுடன் முதலில் மனதில் உதிப்பது உங்களின் இந்தப் பிரதிதான். தமிழ்ச்சமூக, இலக்கியப் பரப்பில் இதை நீங்கள் துணிச்சலாக முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றி..


///பழைய காலம் போல இல்லை .பெண்கள் எங்கே அடிமையாக இருக்கிறார்கள்?
ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.வீட்டில் அவள்தான் ராணி
என்கிற அறுதப்பழைய ஆண்களின் திமிரான பொய்களை இப்போது பேசுவதில்லை.
பெண்களின் நிலைமை மோசம்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ////

எதையும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும் எனும் வகையில் இது சரியாக இருக்கலாம். ஆனால் இணையம் திறந்து இலக்கியம் சமைக்கும் ஆவலில் உள்ளே குதித்துப் படித்த பெருமகன்களின் சபையில் வீட்டுச் சமையல் ஆண்களுக்கும் முடியுமென எங்கள் கருத்துக்களை முன்வைத்து அதற்கு எதிர்வினையாகக் கம்ப்யூட்டர்க் கனவான்கள் சிலர் எடுத்த ஆயுதங்கள் அடங்கிய கதைகளை நிறையச் சொல்லவேண்டும் உங்களுக்கு:))

நட்புடன் ரமேஷ் said...

தமிழ்..
பேருந்து பயனங்களை முடித்துவிட்டு வீட்டில் உள்ள வேலைகளை பகிர்ந்துக் கொள்வது சுகானுபவம்தான் இருப்பினும் இந்த சமையல் செய்வது கடினமாய்தான் உள்ளது இருப்பினும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
நல்ல பதிவு
எஸ்.ஜி.ரமேஷ்பாபு

துளசி கோபால் said...

இந்த விசயத்துலே இங்கே நியூஸியில் பெண்கள் கொடுத்துவச்சவுங்க(நம்ம வீட்டில் இல்லை)

முக்கால் வாசி வீடுகளில் சமையல் செய்வது ஆண்கள்தான். மாலை வேலை முடிஞ்சு போகும்போது அப்படியே சூப்பர்மார்கெட் போய் அன்றைக்கு வேண்டிய சமையல் பொருட்கலை வாங்கிப்போறாங்க.

மகள் வீட்டிலும், மருமகந்தான் தினமும் வேலை முடிஞ்சு வந்து சமைச்சுப்போடறார்!!!!

ச.தமிழ்ச்செல்வன் said...

துளசி கோபால் அவர்கள் சொவதைப் பார்த்தால் உலகம் மாறிக்கொண்டு வருகிறது நாமதான் அப்படியே பழைய மூடத்தனத்தில் அமிழ்ந்து கிடக்கிறோம் போல.தூரத்து தேசங்களிலாவது நம் பெண்களுக்கு நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறதே என்று மனம் சற்றே ஆறுதலடைகிறது.

வெண்மணி இந்த வீதிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி ஆறூஈறாஊ- ஸாஆஈஆ ஆஆஆஆஈ ஈறூஊ ஏற்றா ஏஊஆஆளாஏ ஏஏளாஆண்ஆஈ ஓண்ணூஸ்ஸாஆஈஈண் ஊஆள்ஆற் ஆஆற்.

ரமேஷ் கண்ணா பஸ் பயண அலுப்பு பெரிசா நம் மக்களைப் பெற்று வளர்த்து தம் உடம்பைப் பிள்ளைகளுக்காக அழித்துக்கொள்ளும் நம் பெண்களின் அழுப்பு பெரிசா?

Santhoshkumar said...

I am new to your blog and it is very interesting to read topics on various subjects. It injects a new blood to me. Thanks for your good work...............

ச.தமிழ்ச்செல்வன் said...

welcome and thanks to Santhoshkumar

உண்மைத்தமிழன் said...

படிப்போடு, கூடுதல் தகுதியாக சமையலும் ஆண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற சூழல் வரும் என்பது போல் தெரிகிறது..

என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி சேம் ஸைடு கோல் போடக் கூடாது ஸார்..?

ச.தமிழ்ச்செல்வன் said...

உண்மைத்தமிழன் சார் பட்ப்போடு சமையலும் ஆண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற காலம் வரும் என்று ரொம்ப positive ஆக எழுதியிருப்பது ரொம்ப மகிழ்ச்சியளிக்கிரது.

sameside goal இல்லை சார்.ஆண் என்று நம்மை இன்னும் கருதிக்கொள்வது சரியா? ஆண் என்ன பென் என்ன? நமக்கு குழந்தை பெறும் வாய்ப்பும் பாலூட்டும் வாய்ப்பும் இயற்கை தரவில்லை அந்த இரண்டைத்தவிர ஆண் என்ன பெண் என்ன? எல்லாம் மனிதப் பிரவிகள் தானே?

முத்துக்கிருஷணன் said...

வீட்டு வேலைகளை செய்து பார்த்தால் தான் அது எத்தனை நச்சரிக்கும் வேலை என்பதை உணர முடியும், அது வேறும் உடல் உழைப்பு சார்ந்த வேலை மட்டுமே என்பது தான் பொது புத்தியின் புரிதல். வீட்டு வேலைகளை செய்பவர்களுக்கு தான் தமிழ்செல்வன் சொல்கிற வார்த்தைகளில் உள்ள அர்த்தம், உள்-அர்த்தம் விழங்கும் மற்றவர்களுக்கு அது கேளியும் கிண்டலுமாய் தான் தெரியும். வீட்டு வேலைகளிலேயே முடக்கப்பட்ட பல பெண்கள் பெரும் மன அழுத்த்தத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது சகஜமாக உள்ளது, அப்படியான பலருக்குத் தான் இன்று தொலைக்காட்சி தொடர்கள் பெரும் ஆறுதல் தரும் வெளியாக உள்ளது. சீரியல் பார்க்கும் பெண்களை போகிற போக்கில் நையான்டி செய்வது கூட நாம் மறுபரிசிலனை செய்ய வேண்டிய விஷயமாக உள்ளது. நமக்கு தேநீர்கடை, புத்தக்க்கடை, நன்பர்கள், தோழர்கள் என பெரும் வட்டரம் இருக்கிறது, அதே வேலையில் நம் வீட்டு பெண்களுக்கு அப்படி தங்களின் மனதின் வடிகாலாக வட்டம்- தோழிகள்/தோழர்கள் என ஏதும் உண்டா, அல்லது அப்படி ஒரு வட்ட்த்தை அமைக்க நம் குடும்பங்களில் அனுமதி உண்டா என்பவை எல்லாம் நாம் விவாதிக்க வேண்டும்.
நம் ஊர் முதல் அமெரிக்கா வரைக் கூட குடும்பத்திற்கு கை நிறைய சம்பாதித்து கொடுக்கும் பல பெண்கள் கூட தங்கள் வீட்டுக்கு ஒரு வித பதட்டத்துடன் நேரம் ஆகிவிட்டதே என தங்கள் பணியிடங்களிலிருந்து அவசர கதியில் வர நேர்கிற சூழல் மிக அவலமானது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்கள் நிதானமாக பதட்டங்களின்றி வீடு திரும்பும் காலம் வருமோ!
ஆண்கள் அனைவரும் சமையல் கட்டுக்குள் நுழையும் வரை இதை பேசித் தான் ஆக வேண்டும்.
ஆண்கள் சமைக் துவங்கி விட்டால் பின்பு சாம்பாரில் உப்பு இல்லை சப்பு இல்லை என்கிற வசைகளும் அடங்கிவிடும்.

துளசி கோபால் said...

நண்பர் முத்துக் கிருஷ்ணன் சொன்னதை அப்படியே வழிமொழிகின்றேன்.

சென்ஷி said...

//ஆண்கள் சமைக்கத் துவங்கி விட்டால் பின்பு சாம்பாரில் உப்பு இல்லை சப்பு இல்லை என்கிற வசைகளும் அடங்கிவிடும்.//

யார் கண்டது. அப்புறம் பொண்ணுங்க ஒழுங்கா சமைக்கத் துப்பு இருக்கான்னு கேக்க மாட்டாங்கன்னு என்ன நம்பிக்கை! :-)

அதுக்கப்புறம் துளசி டீச்சர் வந்து ஆதியில் பெண்களும் சமைத்தார்கள் அப்படின்னு ஒரு புத்தகம் எழுதுனாலும் எழுதலாம்.

:-)

நான் இன்னும் இந்த புத்தகம் வாசிக்கவில்லை. முன்பே ஒரு பதிவில் இப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் படித்ததுண்டு. நன்றிகள் பல...