Saturday, March 28, 2009

நாக்கின் திசைநோக்கி...

 

non veg

  1. இப்போதெல்லாம் நாக்கின் திசையில் போய்விடக்கூடாது
    என்கிற எச்சரிக்கையுடனே ஒவ்வொரு வேளை அப்பத்தையும்
    தின்ன வேண்டியிருக்கிறது.கொழுப்பு அதிகமாகிவிட்டபடியால் கண்டிப்பாக
    வாக்கிங் போகவேண்டும்.எண்ணெய்ச் சத்து
    தவிர்க்கப்படவேண்டும்.எடையைக் குறைக்க வேண்டும்.

மருத்துவருக்காக- அவரிடம் - ரத்த சோதனைத்தாளைக்
கையில் பிடித்தபடி யெஸ்.. வெரி நைஸ்..வெரி குட்..
என்று நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக வாழ்வின்
அன்றாடம் அத்தனையையும் மாற்றி அமைக்க வேண்டியிருகிறது.
டாக்டர் தொழுதெழுது வாழும் காலமும் நமக்கு வந்ததே.
நமக்கும் வந்ததே என ரொம்பச் சிணுங்குகிறது மனம்.

இதெல்லாம்கூடச் சமாளிக்கிறேன்.சமாளிப்பது என்றால் டாக்டரை சந்திக்காமல்
தப்பிப்பது உள்ளிட்ட பல உபாயங்களைக் கடைப்பிடித்துத்தான்..
சமாளிக்கவே முடியாத ஒரு விஷயமாக இருப்பது சாப்பாட்டின் அளவைக்
குறைத்து தொப்பை மற்றும் எடையைக் குறைக்க வேண்டும் என்பதுதான்.
தொப்பை என்பது தொந்தி அல்ல.அது உடல் சார்ந்த விஷயம் மட்டுமா?
இந்திய கீழ் மத்திய தர வர்க்கத்தின் பண்பாட்டு அடையாளமல்லவா?

தொப்பை மற்றும் தொந்திகள் இந்திய மண்ணில் வர்க்க அடையாளங்களோடு
பின்னிப் பிணைந்தவையல்லவா? என்னளவு தொப்பைகள் மத்தியதர வர்க்கம் என்றால்
பித்தான் தெறிக்கிற மாதிரி ஆனால் ஒருநாளும் தெறிக்காத அளவிலேயே நீடிப்பது நமது
அரசுப் பேருந்து நடத்துனர்களின் அடையாளம்.பித்தானைப்போட முடியாதபடிக்குத்
தொங்கிச் சரிவது போலீஸ்காரரின் தொப்பை. மூச்சுவிட முடியாத அளவுக்குத் திணறித்
திணறிப் பேச வைக்கும் தொந்தியோடு இருப்பவர் ஓட்டலில் கல்லாவில் உட்கார்ந்திருப்பவர்.

இந்தியாவையே வயித்துக்குள் போட்டுவரும் ரத்தன் டாட்டாவுக்கும்
அம்பானி சகோதரர்களுக்கும் சொல்லும்படியான தொந்திகள் இல்லை.என்ன ஒரு நகை முரண்? 
காடு கரைகளில் உழைத்துப்பிழைக்கும் நம்ம சனங்களில் யாருக்கும்
தொந்தியும் இல்லை.தொப்பையும் இல்லை.
கிடைத்ததையெல்லாம் கிடைத்தபோதெல்லாம் விட்ராதே மகனே என்று தின்று
(ஜாக் லாண்டனின் உயிராசை கதையில் வரும் நாயகனைப்போல)
வாழ விதிக்கப்பட்ட நம்ம வர்க்கத்தாருக்குத்தான் இந்த தொப்பை
ஒரு உயிரியல் அடையாளமாகத் துவங்கி இன்று பண்பாட்டு
அடையாளங்களில் ஒன்றாக மாறி நிற்கிறது.

இதெல்லாம் டாக்டர்மார்கள் ஏற்பதில்லை.தினசரி 45 நிமிடம் பிரிஸ்க் வாக்
போங்க தன்னாலே தொந்தி கரையும் என்று ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

தினசரி ஒரு ஊரில் வாழும் என் போன்றவர்களுக்கு டாக்டர் சலுகை ஏதும் வழங்குவதில்லை.
காலையில் ரயில் போய்ச் சேரும் நேரம் வெயில் வந்து விடுகிறது டாக்டர்
அப்போ சாயங்காலம் போங்க....
சாயங்காலமெல்லாம் கூட்டங்கள் இருக்கே டாக்டர்..
அப்போ ராத்திரி வாக் போங்க..
ராத்திரியும் கூட்டம் இருக்குமே..
டாக்டர் ஒரு  சிரிப்புடன் எப்போ ஒரு மணி நேரம் கிடைக்கிறதோ அப்போ நடங்க.

தமிழகத்தின் பெருநகரம்,சிறுநகரம்,சிற்றூர்,பேரூர் என விதவிதமான ஊர்களின்

விதவிதமான சாலைகளில் விதவிதமான வேளைகளில்
இப்போ நடந்து கொண்டிருக்கிறேன்.டிசம்பர் குளிரைக் காரணம்
சொல்லி ரெண்டு மாசம் நடைக்கு டேக்கா கொடுத்துப்பார்த்தேன்.
ப்ளட் டெஸ்ட் காட்டிக்கொடுத்து விடுகிறதே. நட மகனே நட.

பல நகராட்சிகள்,மாநகராட்சிகள் -பேரூராட்சிகளில்
அரசாங்கச்செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்களைச் சுற்றி அல்லது
பூங்காக்களுக்குள் வாக்கிங் போகிறவர்களுக்காக நடைபாதைகள்
அமைக்கப்பட்டுள்ளன.இல்லாத ஊர்களில் அவை ஆர்வத்துடன் அமைக்கப்பட்டு வருவதையும்
என் பல் ஊர் நடைப்பயணங்களினூடே பார்த்து வருகிறேன்.

Opinion makers  என நம்பப்படுகிற இந்த மத்திய தர வர்க்கத்தின் மீதுதான்
அரசுகளுக்கு என்ன கரிசனை?முடிவெடுக்கும்  இடங்களில் உட்கார்ந்திருக்கிற நம்ம
வர்க்கத்து ஆளுக்கும்தான் தொப்பை இருக்கே.
இந்தத் தொப்பை வர்க்கம் பற்றி
The Great Indian middle class  என்றொரு நல்ல புத்தகத்தை
பவன் கே.வர்மா என்பார் எழுதியுள்ளார்.

நிற்க.கதைக்கு வருவோம்.

நடப்பது நடக்கிறது.நடந்துதான் பார்ப்போமே.
ஆனால் சாப்பாட்டைக் குறைப்பது என்பதுதான் முடியவே முடியாத காரியமாக இருக்கிறது.
அதிலும் இரவுச்சாப்பாட்டைக் குறைக்க வேண்டுமாம்.
‘ காலையில் ராஜா மாதிரி சாப்பிடணும்.மதியம்
மந்திரி மாதிரி சாப்பிடணும்.இரவில் பிச்சைக்காரனைப் போலச் சாப்பிடணும் ‘
என்பது போல உணவு பற்றிய பழமொழிகள் சொலவடைகள்
என  ஏராளம் கேட்டுவிட்டேன் சமீப நடைக்காலத்தில்.

என்ன்மோ பிச்சைக்காரன் ராத்திரி கொஞ்சமாகச்

சாப்பிடுவதுபோல ஒரு கற்பிதம் நம்ம ஆளுகளுக்கு..
கூட இருந்து பார்த்தது போல.

எனக்கு என்ன பிரச்னை என்றால் பால்ய காலம் முழுவதும்
கிராமத்தில் விவசாயம் சார்ந்த வாழ்க்கைச் சூழலில்  வாழ்ந்தவன்.
ராத்திரிதான் சுடு சோறு ஆக்குவார்கள்.காலையும் மதியமும் பழையதுதான்.அல்லது
கம்பஞ்சோறு-கேப்பைக்கூழ் தான்.ஆகவே ராத்திரிதான்
எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு இறுக்கு இறுக்கிவிடுவது என்று பழகி வந்துள்ளேன்.
கிராமத்து மனிதர்கள் எல்லோரும் இப்படியான உணவுப்பண்பாட்டில்தான் வளர்ந்திருப்பார்கள்.

விஞ்ஞானத்தின் கேடுகளில் ஒன்றான அலோபதி மருத்துவர் மட்டுமல்ல
பிற மாற்று மருத்துவத்தினர் கூட இரவுச் சாப்பாட்டைக் குறைக்கத்தான் சொல்கிறார்கள்
என்று நினைக்கிறேன்.இல்லை எனில் என்னைத் திருத்துங்கள்.

உணவில் பண்பாட்டு அமிசம் இருப்பதை மருத்துவர்கள் கணக்கில் கொண்டு ஆலோசனைகள்
வழங்கிட வேண்டும்.

இப்படி அளவைக்குறைக்க முடியாமல் புலம்பித்திரியக்கூடாது என்பதற்காக

அவ்வப்போது குற்ற உணர்வு வரும் அளவுக்கு வெட்டி விடுகிறேன்.மனப்பயிற்சி

என்று சமாதானம் சொல்லிக்கொள்வது.

 

ஆனால் மனச்சாட்சிக்குத் தெரியும் நாக்கை வெல்ல முடியாத பையன் இவனென்று....

14 comments:

சுப்பு said...

எங்கள் நண்பர்களுக்கிடையில் நாங்கள் கிண்டலாகச் சொல்லிக்கொள்வோம்... “தொப்பை வளமான வாழ்வின் அடையாளம் (Belly is the symbol of prosperity)“ என்று.
எங்கள் அலுவலகத்திலும் சிலர் மாங்குமாங்கென்று மாதம் மூவாயிரம் வரை கட்டி தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிசாலை செல்பவர்கள் உண்டு. நான் செய்வதென்னவோ நாலாவது மாடியிலிருக்கும் எனது வீட்டிற்கு லிப்ட் பயன்படுத்தாமல் படிகளில் ஏறிச்செல்வதுதான்.
நீங்கள் சொல்வதுபோல் இரவு உணவு எனக்கான வேட்டைக்களமாக இருக்கிறது. இதுநாள் வரை இதைப் பற்றிக் கவலைகொண்டதில்லை. இனிமேலும் கவலைகொள்வாதாயில்லை. நமது அரசு பேருந்துகளே உங்களது உடற்பயிற்சி தேவையினைக் கவனித்துக்கொள்ளும் என்று கருதுகிறேன். பெரும்பாலும் இரவுகளை பயணங்களில் கழிப்பவராயிற்றே நீங்கள்...

யாத்ரா said...

தங்களுடைய பகிர்வில் பல இடங்களில் சிரித்துக்கொண்டே வாசித்தேன்,

மாதவராஜ் said...

தமிழ்!


அன்று சாத்தூரில் நாம் ஓட்டலில் சாப்பிடும்போது இத்தனை வேதனைகளோடும்தான், சிந்தனைகளோடும் தான் சாப்பிட்டீர்களா?

கடைசியில் டாக்டருக்கும் ஆலோசனை வழங்கிய இடம் இருக்கிறதே...

வாய்விட்டுச் சிரித்தேன்.

காஞ்சி கோபி said...

ஹா.ஹா.ஹா... வாய்விட்டு சிரிக்க வைக்கவிட்டது. வாங்க, வாங்க, உங்க நகைச்சுவை உங்க படைப்புகளில் (கட்டுரையும் படைப்புதானே!) கொஞ்ச நாளாக காணோம். நீங்க ஈரோட்டில் காலையில் தயிர்வடை மட்டும் சாப்பிட்டது இதற்குத்தானா!

மண்குதிரை said...

//இந்தியாவையே வயித்துக்குள் போட்டுவரும் ரத்தன் டாட்டாவுக்கும்
அம்பானி சகோதரர்களுக்கும் சொல்லும்படியான தொந்திகள் இல்லை.என்ன ஒரு நகை முரண்?//
ரசித்தேன்.

நேற்றுதான் சார் உங்களுடைய பூ படம் இங்கே விற்பனைக்கு வந்தது.

வந்த உடனே வாங்கி பார்த்தேன்.

அந்த மாரிப்புள்ள கண்ணுக்குள்ளே நிக்கிறா சார்

அசல் கோயில்பட்டிகாரியாக தெரியுது சார் அந்த பொண்னு

மற்ற நடிகர்களும் நல்ல நடித்திருக்கிறார்கள் குறிப்பக மாரியின் அம்மா பாத்திரம், மாரியின் வீட்டுக்காரர்

நிறையத் தடவ மாறி மாறி பாத்திக்கிட்டே இருந்தேன்.

சசி கொஞ்சம் compromise ஆகமே இருந்திருக்கலாம். (அந்த டீக்கடை காமெடி, சில தேவையில்லாத பாடல்கள்)

மண்குதிரை said...

//இந்தியாவையே வயித்துக்குள் போட்டுவரும் ரத்தன் டாட்டாவுக்கும்
அம்பானி சகோதரர்களுக்கும் சொல்லும்படியான தொந்திகள் இல்லை.என்ன ஒரு நகை முரண்?//
ரசித்தேன்.

நேற்றுதான் சார் உங்களுடைய பூ படம் இங்கே விற்பனைக்கு வந்தது.

வந்த உடனே வாங்கி பார்த்தேன்.

அந்த மாரிப்புள்ள கண்ணுக்குள்ளே நிக்கிறா சார்

அசல் கோயில்பட்டிகாரியாக தெரியுது சார் அந்த பொண்னு

மற்ற நடிகர்களும் நல்ல நடித்திருக்கிறார்கள் குறிப்பக மாரியின் அம்மா பாத்திரம், மாரியின் வீட்டுக்காரர்

நிறையத் தடவ மாறி மாறி பாத்திக்கிட்டே இருந்தேன்.

சசி கொஞ்சம் compromise ஆகமே இருந்திருக்கலாம். (அந்த டீக்கடை காமெடி, சில தேவையில்லாத பாடல்கள்)

ச.தமிழ்ச்செல்வன் said...

சுப்பு இரவு வேட்டைக்காரர்கள் சங்கம் ஒன்று ஆரம்பித்து விடலாமா?

ஆமா மாது அன்று மட்டுமில்லை அன்றாடம் இதே சோகம்தான்

மண்குடிரையார் பூ படம் பற்றிச் சொன்னது சரிதான் ஆனால் சசிக்கு பணம் கொடுத்தவர்களையும் அவர் திருப்திப்படுத்தணுமே பாவம்

தயிர்வடைப்படலம் ஞாபகத்தில் இல்லை கோபி... எத்தனையோ கடைகள் எத்தனையோ வடைகள்...

நன்றி யாத்ரா

Joe said...

நல்ல பதிவு!

தினமும் உடற்பயிற்சி செய்து, இரவு உணவைக் குறைத்து, ஆரோக்கியமாக வாழ, எனது வாழ்த்துக்கள்.

ஷண்முகப்ரியன் said...

உங்கள் 'பூ'படம் என்னைக் கவர்ந்த படங்களில் ஒன்று.இன்றுதான் யதேச்சையாக உங்கள் பதிவுக்கு வந்தேன் வந்த இடத்தில் வாழ்த்துகிறேன்,தமிழ்ச்செலவன்.
வாழ்க.வளர்க..

Anonymous said...

you have represented millions of middle class men feelings.Really you enjoyed and written this article.It is difficult to control the mouth-
R.Selvapriyan-Chalakudy

ச.தமிழ்ச்செல்வன் said...

ஷண்முகப்பிரியன் சாருக்கு என் நன்றி.

venu's pathivukal said...

anbulla thozhar

you must please read a chapter on this 'belly' problem in Udalum Ullamum Nalam Thana book under the caption "Munnukku varum pirachanayai Kavanikkanum".

you are simply great. what I am worried about is the fate of doctor you keep meeting everytime, for, he may have to study the whole course thereafter, everytime....!

svv

Anonymous said...

ஆறு மணிக்கு இரவுச் சாப்பாட்டை முடித்து விடுங்கள். நமது வட்டாரத்தில் ஒன்பது ஒன்பதரைக்கு வயிறுமுட்ட சாப்பிட்டு பத்து மணிக்குப் படுத்துவிடும் பழக்கம் இருக்கும் வரை செரிமானக்குறைவையும் தொப்பையையும் தவிர்க்க முடியாது. ஏதோ மேம்போக்கான யோசனை போலத் தோன்றும் - முயன்று பார்த்தால் பலன் தானாகத் தெரியும்.

புதுச்சேரி அன்பழகன் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் உடற்பயிற்சி மிக அவசியம். இன்றைய சிக்கலை தீர்க்க உங்க ஆதங்கம் நிச்சயம் உதவும்.