Friday, March 27, 2009

ஒரு கவிஞனின் மரணம்

death

நேற்றிருந்த அப்பாஸ் இன்று இல்லை.
அவர் விட்டுச்சென்றுள்ள நான்கு கவிதைத்தொகுதிகளினூடே
அவர் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்.

‘கேசவா
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என் தனிமையைக் காலி செய்து கொண்டிருக்கிறேன்
தனிமையை காலி செய்ய முடியுமா
இல்லை பசவராஜ்
நமது வேலையே அதுதான்’

என்று தொடங்கி

‘சரித்திரமும் தத்துவங்களும்
முதல் பிறப்பை விசாரித்துக்கொண்டிருக்கும்போது
.......
முதலில் இறந்தவன்தான் எனக்கு முக்கியம்
உனக்குத் தெரியாது
அவன் மிக மிக முக்கியமானவன்’

என்று பாய்கிற அவரது கவிதையின் தலைப்பு
‘முதலில் இறந்தவன்’

தன்னை பசவராஜ் என உணரும் அப்பாஸ் தன் நண்பர்கள்
டேனியல்,கேசவன் ஆகியோரோடு மது அருந்தியபடி நடத்தும்
உரையாடல்களாக வரும் கவிதைகள் அவரே சொல்வது போல

‘ ஒரு மொழி ஏன் நேராய் இருக்க வேண்டும்
வளைந்து நெளிந்து
ஹேர்ப்பின் பெண்டுகளைப்போல் அர்த்தங்கள்
வளைந்திருக்கக்கூடாதா என்ன
.......
அப்படியே பழகிப் பழகி
கவிழும் நேர்கோட்டு மொழியில்
அப்படி என்ன
விசித்திரம் கிடைத்துவிடப் போகிறது...’

சி.மோகன் குறிப்பிடுவதுபோல அர்த்தங்களை
வற்புறுத்தும் மனங்களுக்கு அப்பாஸின் கவிதைகள்
வெளிறித் தோன்றக்கூடும்.

அப்பாஸ் எங்க ஊர்க்காரர்.கோவில்பட்டியின் வீதிகளில்
நாங்கள் இலக்கிய சர்ச்சைகள் நடத்திக்கொண்டு திரிந்த நாட்களில்
கையெழுத்து இதழ் ஒன்றில் பாலியல் திரிபு சார் கதை ஒன்றை ராமு
எழுதிவிட அதை ஒட்டி நடந்த காரசாரமான விவாதங்களின் போது
அப்பாஸ் அறிமுகமானார்-முற்றிலும் 24 x 7 காதல் வயப்பட்ட இளைஞனாக
ஒரு சைக்கிளில் ஏதோ ஒரு பெண்ணை எப்போதும் பின் தொடர்ந்தபடி.
தஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளில் மிதந்து திரியும் இளைஞனாக
மட்டுமே அவரை நான் அப்போது அறிந்திருந்தேன்.

என்னைவிட என் தம்பி (என் மூத்த தம்பி- நன்றி ரமேஷ் வைத்யா)
கோணங்கியோடுதான் அவர் நெருக்கம்.அர்த்தங்களின் பின்னால்
ஓடுகிறவன் என்றென்னை அவர் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருக்கலாம்.
நாம் என்ன மாதிரி ஆள் என்பது நமக்கே சரியாகப் பிடிபடாத போது
அடுத்தவர்கள் எப்படி நம்மைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?

என்னோடு அவர் நடத்திய உரையாடல்கள் எல்லாமே இலங்கைத் தமிழர்
பற்றி மட்டுமேதான். அகதிகளான மக்கள் குறித்த ஆழ்ந்த துயரம்
அவரை வருத்தியபடி இருந்தது.

“ உரையாடலும் தத்துவமும் வாழ்தலும்
புத்துணர்ச்சி பெறாமல்
பதுங்கு குழியில் இருந்து
குண்டுகளை எதிர்பார்க்கும்
அந்தச் சிறு குழந்தையின் கண்களில் வழியும்
பகலையும் இரவையும் மரண பயத்தையும்
இன்னும் எத்தனை காலங்களுக்கு
தத்துவ மொழியில் உறைய வைப்பது.”

என்று அவர் தன்னுடைய மூன்றாவது தொகுப்பின் முன்னுரையில்
குறிப்பிடுவது இந்த மனோநிலையின் பின்னணியில்தான் என்று நினைக்கிறேன்.

என்னை ஒரு இயக்கவாதி என்று மட்டுமே அறிந்துகொண்டு
இலங்கைப்பிரச்னை பற்றி மட்டுமே என்னோடு பேசிச்சென்ற
அப்பாஸ் ஏதேனும் ஓர் நாள் என்னோடு கவிதைகள் பற்றியும் பேச
வருவார் எனக்காத்திருந்தேன்.

காலத்தின் அழைப்பு அகாலத்தில் அவரை நம்மிடமிருந்து
பிரித்துவிட்டது.குடித்துக் கல்லீரல் கெட்ட அப்பாஸின் இறுதி நாட்களை
நம் கவிச்செல்வங்கள் பாடமாகக் கொள்ள -வருந்தி -அன்புடனும் அக்கறையுடனும்
கேட்டுக்கொள்கிறேன்.

அப்பாஸ்...
முதலில் இறந்துபோன எங்கள் மண்ணின் கவிஞனே
என் அஞ்சலியை ஏற்றுக்கொள்.
உன் கவிதைகளை நான் அக்கறையுடனும்
உன் வாழ்வை நான் கவலையுடனும்
பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன் என்கிற செய்தியைக்கூட
கடைசிவரை உனக்குத் தெரிவிக்காமலே
கடந்து விட்டது எல்லாம்.

அப்பாஸின் கவிதைத்தொகுதிகள்

1. வரைபடம் மீறி
2.வயலட் நிற பூமி
3.ஆறாவது பகல்
4.முதலில் இறந்தவன்- உயிர் எழுத்து பதிப்பகம்,
9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,
கருமண்டபம்,திருச்சி-1. விலை ரூ.50

9 comments:

மண்குதிரை said...

ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.

அந்த கோவில்பட்டியில் வீதியில் அலைந்து திரிந்தவன் என்ற முறையில் அவரை இதுவரை வாசிக்காதது என்னை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது.

ஏற்கனேவே அழகிய சிங்கர் ப்ளாக்கில் மூலம் அவருடைய மரணச் செய்தியை அறிந்தேன்.

அந்த கவிஞனுக்கு என் அஞ்சலிகள் !

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நீங்கள் இங்கே வழங்கியிருக்கும் சில கவிதைத் துளிகளே அவரின் கவிதை மீதொரு மரியாதையைக் கூட்டுகின்றன. அந்தக் கவிஞருக்கு அஞ்சலி செய்வதோடு அவரின் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்ற உணர்வும் கொள்கிறேன்.

வலையுலகத்தில் தங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களது சிறுகதைகளைத் தேடித் தேடி கடைசியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தமிழினி பதிப்பகத்தில் வாங்கினேன். 'மிதமான காற்றும் இசைவான கடலலையும்' என்னைக் கவர்ந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றானது. தங்கள் புத்தகம் குறித்தான என் பார்வையை என் வலைப்பூவில் வெளியிட(http://puththakam.blogspot.com/), அதற்குக் கருத்து சொன்ன ஒரு Anonymous மூலமாகத் தங்கள் வலைப்பூவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு. அவருக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். இன்னும் உங்கள் படைப்புகளை உணர்ந்தறியும் ஆவலுடன்,

-ப்ரியமுடன்
சேரல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

“ உரையாடலும் தத்துவமும் வாழ்தலும்
புத்துணர்ச்சி பெறாமல்
பதுங்கு குழியில் இருந்து
குண்டுகளை எதிர்பார்க்கும்
அந்தச் சிறு குழந்தையின் கண்களில் வழியும்
பகலையும் இரவையும் மரண பயத்தையும்
இன்னும் எத்தனை காலங்களுக்கு
தத்துவ மொழியில் உறைய வைப்பது.”

என்று தத்துவத்தையே உறைக்க வைத்த உன்னையும் இன்று இழந்தோம்.ஈழவனாக நானிருந்தும்
உன்னை நான் வாசிக்கவில்லையே என்கிற வருத்தம் என்னை நெருடுகிறது.
ஆயினும் என் செய்வேன் மரணம் எம்மைப் பேய் போல தொடர்ந்து துரத்துகிற நேரமிது. யாரூக்காக நான் அழுவேன்.உன் கவிதைகள் உன்னை மேலும் உன்னதமாக்கட்டும். உன் ஆன்மா சாந்தி பெறட்டும்.
தமிழ்சித்தன்

selventhiran said...

நம் கவிச்செல்வங்கள் பாடமாகக் கொள்ள //
குடித்தலை தகுதியெனக் கொள்ளும் கவிஞர்களுக்கு அது உரைப்பதில்லையே...

அவரின் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்ற உணர்வும் கொள்கிறேன். //
சேரல், நகுலன் இறந்தபோது உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. நீங்கள் ஒரு எழுத்தாளரைப் படிக்க அவர் சாக வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா?

உண்மைத்தமிழன் said...

இந்தக் கவிஞர்களைப் பிடித்த சாபக்கேடோ குடிப்பழக்கம்.

தன்னை வருத்திக் கொண்டுதான் கவிதை புனைகிறார்கள். தங்களை துயரப்படுத்தித்தான் மக்களுக்கு துயரத்தைக் காட்டுகிறார்கள்.. தங்களுடைய மரணத்தைக் காட்டித்தான் வாழ்க்கை மீதான பயத்தை மக்களிடம் புகுத்துகிறார்கள்.

மிக, மிக வருத்தப்படுகிறேன்.. வேதனைப்படுகிறேன்..

அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

யாத்ரா said...

மிக கனத்த மனத்தோடு தான் நானும் என் வலைப்பூவில் புலம்பினேன், இப்படி பகிர்ந்து தான் தணித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது துயரத்தை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மிகப் பெரிய சோகத்தைகூட இருண்ட நகைச்சுவையாக்கிவிடக்கூடிய சூழல்தான் தமிழில் இருக்கிறது - உதா: செல்வேந்திரன் மற்றும் ஒன்றிரண்டு பின்னூட்டங்கள்.

உங்கள் மீதும் எனக்கு வருத்தமிருக்கிறது : நீங்களும் ஜெமோமாதிரியே அவரது குடிப்பழக்கத்தை இங்கே சொல்லியிருக்க வேண்டுமா?

ஏற்கனவே இங்கு சிறுபத்திரிகைகாரனுக்கு நல்ல பெயர் :(

ச.தமிழ்ச்செல்வன் said...

அந்தக் கவிஞனுக்கு அஞ்சலி செய்ய வீதிக்கு வந்த உள்ளங்களுக்கு நன்றி.

ஜ்யோராவ் நான் படைப்பாளிகள் குடித்தால் ஜெமோ மாதிரி அவர்களை வெறுத்து ஒதுக்குபவனுமல்ல கைநீட்டி அடிப்பவனும் அல்லன்.ஒரு சகோதர வாஞ்சையோடு கவலைப்படுகிறேன்.குடி எப்படிப்பார்த்தாலும் ஒரு கட்டத்துக்குப் பிறகு உடம்பை மட்டுமல்ல creative mind ஐயும் அழிக்கத்தானே செய்யும்.அளவோடு குடிக்கலாமே என்பதுதான் என் இறைஞ்சுதல்.

na.ve.arul said...

kalleeral kettupoi sethuponan oru kavignan enbathu ethunai vethanaiyanathu. oru athikalai sevalum oru koovalodu ninru pona oru padalasiriyanai parthathuan thamizh cinema ulagam. kalleeral kettu pogatha kavithaiai nam nenjai vittu neengamal abbas.

na.ve.arul