Tuesday, March 17, 2009

பார்வையற்றவரின் பார்வை

இருட்டிலிருந்து ஒளி பாய்ச்சும் படைப்பு

தேனி சீருடையானின் நாவல்-நிறங்களின் உலகம்-ஓர் அறிமுகம்

தேனி சீருடையானின் ‘நிறங்களின் உலகம்’ நாவலைப் படித்து முடித்த அந்த நள்ளிரவில் மனம் கனத்த மௌனத்திலும் சோகத்திலும் அமிழ்ந்து கிடந்தது.உறக்கம் தொலைந்த இரவாக அது நீண்டது.ஒரு தன் வரலாற்று நூல் போல நம் மனங்களில் படரும் இந்நாவல் தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒரு தனித்துவம் மிக்க படைப்பாக விளங்கும்.

பிறக்கும்போது கண்பார்வையுடன் பிறந்து இடையில் பத்தாண்டுகாலம் பார்வை இல்லாதவராக வாழ்ந்து மீண்டும் எதிர்பாராத அறுவைச்சிகிச்சையால் தற்செயலாகப் பார்வை பெற்ற சீருடையானின் சொந்த அனுபவங்களின் மேல் கட்டப்பட்ட இந்நாவல் பாண்டி என்கிற கண் தெரியாத சிறுவனை மையமாகக் கொண்டு சுழல்கிறது.

வறுமை,பசி பற்றிய அனுபவமில்லாத தமிழ் மத்தியதர வர்க்கத்து வாசகர்களாகிய நம்மால் முழுமையாக இந்நாவலை உள்வாங்க முடியுமா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.ஒரு நாவல் புரிந்து கொள்ளப்படுவதில் வாசகனின் வாழ்வனுபவத்திற்கு உள்ள பாத்திரம் முக்கியமானதல்லவா.

சாப்பாடு மற்றும் சாப்பிடுவது பற்றிப் பல இடங்களில் இந்நாவல் காட்சிகளை விரித்துச்செல்கிறது.அப்படி விரிவாக சாப்பாடு பற்றிப் பேச வேண்டும் என்று கருதுகிற படைப்பாளியின் உளவியல் நம் ஆழ்ந்த கவனத்துக்கு உரியது என்று படுகிறது.அன்று இரவு ரசமும் துவையலும் உணவாகக் கிடைத்தது என்று சாதாரனமாக ஓடுகிற வரிகள் மனதைத் துணுக்குறச்செய்து நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கணவனால் துரோகம் இழைக்கப்பட்ட- பட்டினியை வெல்ல முடியாத அந்தத்தாய் தன் கண் தெரியாத மகனையும் மகளையும் இழுத்துக்கொண்டு கிணற்றில் விழப்போகும் காட்சி கல்மனமும் கரைந்துருகும் காட்சியாகும்.இது பசித்த மக்களின் வாழ்வை அவர்களில் ஒருவராக நின்று அதே பசியோடு அனுபவத்தைச் சொல்லும் கதை என்று வகைப்படுத்தலாம்.

கண் தெரியாத பாண்டியை ‘குருட்டுப் பள்ளிக்கு’ அழைத்துச்செல்லும் சுப்புமாமா சென்னை செல்லும் ரயிலில் ஏற முடியாமல் பாண்டியை ஒரு பெட்டியில் ஏற்றிவிட்டு தான் வேறு ஒரு பெட்டியில் தொற்றிக்கொண்டு போகும் ஆரம்பப் பக்கங்கள் வாசகக மனதைப் பதட்டம் கொள்ளச் செய்யும் பக்கங்களாகும்.

கண் தெரியாதோர் பள்ளியில் சொறி சிரங்கு வந்து புறக்கணிப்புக்கும் பிற மாணவர் கேலிக்கும் ஆளாகும் பிள்ளைகள் பற்றிய பக்கங்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு தேனி சீருடையான் வழங்கியுள்ள பெரும் கொடையாகும்.நம் கிராமங்களின் சொறி சிரங்கை இதுவரை யார் சாமி இலக்கியமாக்கியிருக்கிறார்கள் தமிழில்?

இது எல்லாவற்றையும் விட தமிழ் இலக்கியத்தில் இதுவரை யாரும் தொடாத ஒரு புதிய பிரதேசத்தில் இந்நாவல் அநாயசமாக நடந்து செல்கிறது. கல்வியும் புத்தக வாசிப்பும் தருகிற மனவிசாலம்- மன மகிழ்ச்சி- அறிவின் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கும் போது மாணவ மனம் பெறுகிற அதிர்வு முதன்முறையாக எழுத்தில் பதிவாகியுள்ளது.பள்ளிக்கால வாழ்க்கை பற்றி இதுவரை தமிழில் எழுதப்பட்டதெல்ல்லாம் படிப்பு தவிர்த்த பிற பால்யகால நடவடிக்கைகள் பற்றியே பேசியுள்ளன. ஒரு புதிய வார்த்தையைக் கற்றுக்கொள்ளும் கணம் தருகிற ஆனந்தம் எழுதப்பட்டதில்லை.தேனி சீருடையான் அதைத் துவக்கி வைத்திருக்கிறார்.ஆசிரியரிடம் கற்றதை விட சக மாணவரான பத்மநாதனிடம் கற்றதே அதிகம் என்பது மிகச்சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.பிரைல் எழுத்துக்களை பாண்டி கற்றுக்கொள்ளும் விதம் எழுச்சிகரமான மனநிலையை நமக்குத் தரும்விதமாகச் சொல்லப்பட்டுள்ளது.

உணர்ச்சிகரமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுத்து விளையாட்டாகவும் ஏராளம் படித்து இலக்கியம்னா இப்படி இருக்கணும் என்று தகவமைக்கப்பட்டுள்ள நம் வாசக மனம் இதையெல்லாம் இவ்வளவு விரிவாக எழுதியிருக்கணுமா என்று சிணுங்கக்கூடும். ஆனால் இந்நாவல் முற்றிலும் வேறான ஒரு புதிய வாசக மனதை வாசிப்பு முறையைக் கோரிநிற்கும் படைப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கண் தெரியாதார் வாழ்வின் அன்றாடம் ஒவ்வொன்றும் நாம் அறியாத புதிய உலகின் நடைமுறைகளாக நம் மனம் கொள்ளும் விதமாக விரிகிறது நாவலில்.ஆண்-பென் பேதமின்றி அன்புகொண்டு உறவாடும் அவர்களின் உலகம் எத்தனை ஆரோக்கியமானதாக இருக்கிறது.சாதி-மத பேதமற்ற-விதவிதமான சத்தங்கள் –குரல்கள் மட்டுமே மனித அடையாளங்களாக மாறிப்போகிற அந்த உலகம் பற்றிய இப்படைப்பு நமக்குள்- கண் தெரிந்தார் உலகத்து மனிதர்களாகிய நமக்குள் பல கேள்விகளை எழுப்பி நம் வாசக மனச்சாட்சியை உலுக்குகின்றது. தொட்டுத் தொட்டு உணரும் அவர்களின் உலகம் தொட்டால் தப்பு தொட்டால் தீட்டு என்று இழிந்து கிடக்கும் நம் உலகை மௌனமாகக் கேலி செய்து சிரிக்கிறது.

இவ்வளவு பேசுவதால் இந்த நாவல் கண் தெரியாத ஒரு வாழ்வனுபவத்தை மட்டும் முன்வைத்து நம்மிடம் இலக்கிய அந்தஸ்த்துக் கோருவதாகத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.கண் தெரியாத வாழ்க்கைப் பகுதி போக இந்நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் அது அதற்கேயுரிய அழகோடும் குரூரத்தோடும் அசலான மனிதர்களாக உலவுகிறார்கள். ஒடுக்கபட்ட மக்களின் உயிர்த்துடிப்புமிக்க இலக்கியம் இந்நாவல் என்று எந்த மேடையில் நின்றும் பிரகடனம் செய்யலாம்.

நாவலில் வரும் அந்தத்தாய் என்ன மாதிரி ஒரு மனுஷி! ஏமாற்றும் கணவனோடு சண்டை போடும்போதும் சரி அடுத்த அரை மணிநேரத்தில் அவனோடு ரகசியமாய்க் குலாவும்போதும் சரி அச்சு அச்லான மனுஷியாக அவள் நம்முன் வாழ்கிறாள்.

பசியும் பட்டினியும் பஞ்சமும் பீடிக்கும் நாட்கள் அந்தத்தாய் தான் பட்டினி கிடந்து பிள்ளைகள் பசியாறத்துடிக்கும் இடங்கள் காவியமாக வரையப்பட்ட காட்சிகள்தான்.249 ஆம் பக்கத்தில் அந்தக் கண் தெரியாத பையன் நினைக்கிறதான “ அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சை உருக்கின.இந்தக்குடும்பத்தின் வறுமையை விரட்டும் ஆற்றலை என் கைகளுக்குக் கொடு ஆண்டவனே என்று வேண்டினேன் . அம்மாவும் அக்காவும் இல்லாத சமயம் பார்த்து மதிலோரம் மறைந்து கண்களைக் கசக்கினேன் “ என்ற வரிகளை வாசித்தபோது உண்மையிலேயே கதறி அழுதேன்.என்ன மாதிரி வாழ்க்கையடா இது.

பசியில் மனித குணங்கள் பிறழ்ந்து போகும் ரசமாற்றம் மனம் வலிக்க இந்நாவலின் பல பக்கங்களில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது.

கீழே படுத்துக்கிடந்த குழந்தையைக் கண் தெரியாத பாண்டி மிதித்து விட அவனுடைய அம்மா போட்டு அவனை அடித்தும் வார்த்தைகளாலும் தாக்குகிறாள். ‘குருட்டுப்பள்ளி’யிலிருந்து லீவுக்கு வந்த பாண்டி நினைக்கிறான்

“ சரசக்கா ஞாபகம் வந்தது. உடம்பு பூராவும் செரங்கு நிறைந்து அரிப்பெடுத்துக் கிடந்தபோது கூட இப்படியெல்லாம் பேசியதில்லை.முன்பின் பழக்கமில்லாத அந்த அக்காவை விட அம்மா மோசமா?... எப்போது லீவு முடியும் என்றிருந்தது.”

ஆம்.அவர்களின் உலகத்துப் பண்பாட்டோடு ஒப்பிடுகையில் அம்மாவும் வாழ்கிற நம்முடைய உலகத்துப் பண்பாடு ரொம்பக்கீழானதுதான்.இந்த உணர்வை வாசகன் வந்தடைவது இந்நாவலின் கலை வெற்றியால்தான்.

சீருடையானின் முன்னே நின்று அவருடைய இரு கரங்களையும் இறுகப்பற்றிக்கொண்டு கண்களில் நீர் திரையிட கும்பிடுறேன் சாமி உங்க வாழ்வின் சாயல் படிந்த இந்த நாவலை என்று சொல்லத் தோன்றுகிறது.மிகையாக நான் ஏதும் சொல்லவில்லை.

தமிழ்ச்சமூகம் இந்நாவலைக் கொண்டாட வேண்டும்.

வெளியீடு: அகரம்,மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613007 : விலை –ரூ.150

ச.தமிழ்ச்செல்வன்

6 comments:

Deepa said...

//ஒரு நாவல் புரிந்து கொள்ளப்படுவதில் வாசகனின் வாழ்வனுபவத்திற்கு உள்ள பாத்திரம் முக்கியமானதல்லவா. //

எழுத்தாளராவதற்கு மட்டுமல்ல வாசகராவதற்கும் நல்ல மனப்பயிற்சி வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்.

உங்கள் விமர்சனம் வெகுவாகப் பாதிக்கிறது. கண்டிப்பாக இந்நாவலை வாங்கிப் படிக்க முயல்கிறேன்.

Deepa said...

ஓட்டுப் போடுவதற்காக தமிழிஷ் பட்டனைக் கிளிக் செய்தேன். நீங்கள் submit செய்யாததால் நானே செய்து விட்டேன்; உங்கள் அனுமதியின்றி. மன்னிக்கவும்.

venu's pathivukal said...

Anbulla Thozhar Thamizh

I continue to keep looking at you with an enormous amount of amazement and astonishment asto how you are able to go on reading different kind of works by various authors and keep registering your views honestly then and there. It is difficult to have a plain and uncorrupt vision in the first place. Next comes the unassuming mindset to shower appreciation on others who deserve that. My salutes to you. I will come back to you after reading the Novel wholeheartedly recommended by you.

svv

யாத்ரா said...

நல்லதொரு அறிமுகத்தை செய்து வைத்தீர்கள், மிக்க நன்றி

INIYAVAN said...

Tholar Tamilselvan avargalukku

ungalin katturai youthful vikatanil kanpadu mikka mazchiya ullathu

nanum tamil nadu eluthalar kalaichargal santhil chennai mavatta kuluvil irukiren en bathai perumaiyodu kuri kulkiren

edu varai nan naval adigam padithathu illai anal intha navala padikka en manam parakkirathu

enrum tholamaiyudan

M Arul raj

Anonymous said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்