வேண்டாம் இந்த வெறுப்பின் அரசியல்
(எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைக்கு எதிர்வினையாக..)
ச.தமிழ்ச்செல்வன்
மார்ச் 2009 தீராநதியில் வெளிவந்துள்ள எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ என்கிற கட்டுரையைப் படித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.பல நாவல்கள் பல சிறுகதைத்தொகுப்புகள் கட்டுரை நூல்கள் என ஏராளமான படைப்புகளை வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகிலும் சினிமா வட்டாரத்திலும் பேரும் புகழும் பெற்ற ஒரு எழுத்தாளரான அவர் புதிதாகத் தன் முதல் நாவலுடன் நுழைகிற சு.வெங்கடேசனின் நாவலை இவ்வளவு வன்மத்துடன் தாக்கி எழுதியிருப்பது அதிர்ச்சி தருகிறது.அவர் போன்ற ஓர் ஆளுமைக்கு இந்தக்கட்டுரையின் மொழியும் அதில் கொட்டிக்கிடக்கும் ஒருவிதக் குரோதமும் எவ்விதத்திலும் பொருத்தமாகவும் இல்லை.அழகாகவும் இல்லை.இக்கட்டுரை அவரது ஆளுமையில் ஒரு வீழ்ச்சி என்றே கருதுகிறேன்.
கட்டுரையின் முதல் ஒண்ணரைப்பக்கம் நாவலை வாசிப்பதற்கு முன்னேயே எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முன் முடிவோடு நாவலுக்குள் நுழைந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது. எத்தனை ஊர்களில் காவல்கோட்டத்துக்கு கூட்டங்கள் வெளியீட்டு விழாக்கள் நடத்துகிறார்கள் என்று கோபப்படுகிறார் எஸ்ரா. கவிஞர்.சு.வெங்கடேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்களில் ஒருவர்.எழுத்தாளர்களுக்காக ஒரு சங்கம் வைத்திருப்பதே இப்படி எழுத்துக்களை ஊர் ஊராகக் கூட்டம் போட்டு மக்களிடம் அறிமுகம் செய்வதற்காகத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். உண்மையில் இன்னும் ஒரு அறுபது இடங்களில் காவல் கோட்டம் அறிமுகக் கூட்டங்கள் மற்றும் வெளியீட்டு விழாக்கள் நடத்த ஏற்பாடு இருக்கிறது.ராமகிருஷ்ணன் வருத்தப்படுவதால் வெளியீட்டு விழா என்று போடாமல் ராமகிருஷ்ணன் அனுமதிக்கிற ஒரு வார்த்தையைப் போட்டு நடத்த சம்மதிக்கிறோம்.எங்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துக்கள் முக்கியம்.அமைப்புக்கு வெளியே இருக்கும் எழுத்தாளர்களோடு எப்போதும் நட்பும் நல்லுறவும் விரும்பும் அமைப்பு எங்களுடையது.
அப்புறம் நாவலின் சைஸ் பற்றி நக்கல் அடிக்கிறார் எஸ்ரா. தமிழ் வாசகர்களுக்கு 700 பக்கம் 800 பக்கம் என்று நாவல்களும் கட்டுரை நூல்களும் போட்டு ‘ தண்டனைகளை’ முதன் முதலாகத் துவக்கி வைத்தது யார் என்கிற கேள்விக்கான விடையை அவருடைய மனச்சாட்சியே சொல்லட்டும்.நீங்கள் முதன் முதலாகப் புத்தகம் போட்டபோது ‘பந்தல் போட்டார்’ வண்டவாளம்’ தன்னைத் தானே சவுக்கால் அடித்தது என்றெல்லாம் கொடூரமான வார்த்தைகளால் நாங்கள் யாராவது புண்படுத்தும் விதமாகப் பேசினோமா?இதுதான் இத்தனை ஆண்டுகாலம் நவீன தமிழ் இலக்கிய உலகில் வாழ்ந்து நீங்கள் கற்றுக்கொண்ட நாகரிகமா என்று வேதனையுடன் கேட்கிறேன்.
தமிழின் மிக முக்கிய ஆளுமைகளான ஆ.சிவசுப்பிரமணியன்,வ.கீதா, ஆ.இரா.வேங்கடாசலபதி, நாஞ்சில் நாடன்,கோவை ஞானி உள்ளிட்ட ஒரு 500 பேருக்கு மேற்பட்ட வாசகர்கள் காவல்கோட்டத்தை மிலிட்டரியில் வேலை செய்த அனுபவம் ஏதும் இல்லாமலே படித்து முடித்து விட்டார்களே.படிக்கச் சிரமம் என்றால் சாரு நிவேதிதா சொன்னது போல படிக்காமல் நிறுத்தி விடுவதுதானே புத்திசாலித்தனம். உங்களையும் உங்கள் கருத்துக்களையும் முக்கியம் என்று மதித்து தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவில் பேச வேண்டும் என்று எஸ்ராவை அழைத்த சு.வெங்கடேசனுக்கு நல்ல மரியாதை கிடைத்து விட்டது.
நாவலின் மீது மேற்சொன்ன ஆளுமைகள் எல்லோருமே பாராட்டுக்களை மட்டுமல்ல கூர்மையான விமர்சனங்களையும் வைத்துள்ளார்கள். காலச்சுவட்டில் வேங்கடாசலபதி அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியே பாராட்டையும் பதிவு செய்துள்ளார். அது ஆரோக்கியமானது. இப்படியான ஆரோக்கியமான மனநிலை உள்ளவர்தான் எஸ்ரா என்பதை நானும் அறிவேன்.காவல்கோட்டம் விஷயத்தில் ஏன் அந்த ஆரோக்கியம் பிறழ நேர்ந்தது?
தவறான பாட்டுக்கு மன்னன் பரிசளித்து விடக்கூடாதே என்கிற சத்திய ஆவேசம்தான் காரணம் என்று அவர் நிறுவ முயற்சிப்பது எனக்கு ஏற்கும்படியாக இல்லை.வெளியீட்டு விழாக்களில் கோவை ஞானி,நாஞ்சில் நாடன் போன்றோர் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களின் மொழி ,நடை பற்றி நாங்கள் வியந்திருக்கிறோம் அதையெல்லாம் காவல் கோட்டம் நாவல் தாண்டி விட்டது என்று பேசியதுதான் எஸ்ராவின் கோபத்துக்குக் காரணம் என்றால் இவ்வளவு பலவீனமானவரா எஸ்ரா என்கிற வருத்தமும் ஏமாற்றமும் எனக்கு ஏற்படுகிறது. புதுசாக ஒருத்தன் எழுத வரும்போது உற்சாகப்படுத்துவதற்காக மூத்த படைப்பாளிகள் சிலர் கூடுதலாக சில வார்த்தைகள் பேசிப் பாராட்டுவது சகஜம் என்று அதை விட்டுத்தொலைக்காமல் அதைப்போய் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு எஸ்ரா இவ்வளவு கூத்துப் பண்ணியிருக்க வேண்டியதில்லை.
தன்னுடைய வலைத்தளத்தில் ஆயிரம் பக்கமும் அபத்தம் என்று இவர் எழுத அதற்கு எதிர்வினையாக மணிமாறன் எழுதிய கட்டுரையில் எஸ்ராவுக்கு பதிலும் சொல்லி எஸ்ரா பாணியிலேயே மோசமான ஒரு மொழியில் இன்னும் மோசமாக தனிப்பட்ட தாக்குதலில் இறங்கி விட்டார்.அதையும் நான் ஏற்கவில்லை. மணிமாறனின் பல வரிகள் கண்டனத்துக்குரியவை.அதைத்தொடர்ந்து வலைத்தளங்களில் எதிர்வினை என்ற பெயரில் எஸ்ரா வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கொட்டப்பட்ட குப்பையும் கூளங்களும் நாகரிக சமூகத்தில் வளர்ந்த எவராலும் ஏற்க முடியாதவை. புறக்கணிக்கத்தக்கவை.
இத்தகைய ஒரு வெறுப்பின்பாற்பட்ட அரசியலுக்கு எஸ்ராவின் கட்டுரை வித்திட்டு விட்டது. போதும்.இத்தோடு எல்லோரும் நிறுத்துங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். நாவல் குறித்து எத்தகைய விமர்சனத்தையும் யார் வேண்டுமானாலும் வைக்கலாம்.அது ஆரோக்கியமான மொழியில் இருக்கட்டும் என்பது மட்டுமே எனது வேண்டுகோள்.
நாவலை முழுமையாக வாசித்தவன் என்கிற முறையில் நாவல் பற்றிச் சில வரிகளை இங்கே பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன். காலனிய எதிர்ப்பு-பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கத்தோடு வந்துள்ள தமிழின் மிக முக்கியமான நாவல் காவல்கோட்டம் என்பதுதான் என் கணிப்பு. இதுதான் அவரது முதல்நாவல் என நம்ப முடியாதபடிக்கு அற்புதமான கதை உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறார் சு.வெ.
என்னதான் முயன்றபோதும் காலனிப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் பண்பாட்டை அதன் சமூக மனதை காலனியவாதிகளால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்பது நாவலின் அடிச்சரடாக ஓடுகிறது.கள்ளர் சமூகத்தை முன்வைத்து அக்கருத்தை இந்நாவல் உயிரோட்டத்துடன் விரித்துச்சொல்கிறது. இவ்வகையில் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் போல எஸ்ராவின் நெடுங்குருதி போல கோணங்கியின் பிதிராவில் வரும் பல பகுதிகளைப்போல அருணனின் கடம்பவனம் போல ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி போல ஜோ.டி.குரூசின் ஆழிசூழ் உலகு போல சு.வெங்கடேசனின் காவல் கோட்டமும் ஒரு இனத்தின் வரலாற்றுப்பக்கங்களின் ஊடாக மதுரை என்கிற மாநகரின் பிரதானமான வரலாற்றுக்கு ஊடாக பல சந்து பொந்துகளின் வரலாற்றைப் பின்னிச்செல்லும் மிக முக்கியமான நாவலாகும். இனவரைவியல்,உள்ளூர் வரலாறு,பெருங்கதையாடல் என வர்ணிக்கப்படும் எழுதப்பட்ட வரலாறு -நாட்டார் மரபுகள்- மிஷனரிகளின் தஸ்தாவேஜிகள் என சகலத்தினூடாகவும் பயணப்படும் இந்நாவல் தமிழ்ச்சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டிய ஒரு நாவல்(கொண்டாட மனமில்லாமல் போனாலும் கூட).
முன் முடிவுகள் ஏதுமின்றி பாரம்பரிய இடதுசாரி எதிர்ப்பு மனோபாவம் இன்றி காவல்கோட்டத்தை வாசிக்கும் எளிய வாசகர் எவரும் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை இந்நாவலின் மூலம் பெறுவார்கள். வரலற்றுப் பாடப்புத்தகத்தில் உள்ளது அப்படியே நாவலில் வந்துள்ளது என்று எஸ்ரா கோபப்படுகிரார். அப்படி வரக்கூடாது என்று எந்த நாவல் பீடாதிபதி சொன்னார்? ஒரு பத்திரிகை பிட் செய்திகூட நாவலில் வரலாம்.தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா நாவல் முழுக்கவும் பேப்பர் கட்டிங்ஸ்தானே. அதை உலகம் ஏற்கவில்லையா? நாவல் என்றால் என்ன என்று ஒரு பக்கத்துக்கு மேல் வகுப்பு எடுத்துள்ள எஸ்ரா கோபம் தவிர்த்து சமனப்பட்ட மனநிலையோடு நாவலை ஒருமுறை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.அது சவுக்கடி என்று இன்னும் நீங்கள் கருதினால் நாவலின் கதியை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொள்ளலாம்.தமிழ் வாசக உலகம் உங்களிடமிருந்து இன்னும் முதிர்ச்சியான பல படைப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.நாங்களும் பல வேலைகளுக்கு இடையே இந்த விவாதத்திலும் பங்கேற்றுக்கொண்டிருக்காமல் அந்த அறுபது விழாக்களுக்கான வேலைகளைத் துவங்க வேண்டியிருக்கிறது.
தீராநதியும் ஆரோக்கியமான விசயங்களை மட்டும் வலைப்பக்கங்களில் இருந்து மறுபதிப்புச் செய்வது நல்லது என்கிற வேண்டுகோளையும் வைக்கிறேன்.
ச.தமிழ்ச்செல்வன்
19 comments:
நீங்கள் சொல்வது மிக்க சரி, தோழரே... சகலமும் விருப்பு வெறுப்புக்குட்பட்டவைதானே... நீங்கள் சொல்வது எனக்கு எஸ்ரா மேல் என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை.
தங்களின் நடுநிலையான அணுகுமுறை மகிழ்ச்சியாயிருக்கிறது, எஸ்ரா எப்போதுமே இப்படி எழுதி பார்த்ததில்லை, அதை படித்த போது சற்று அதிர்ச்சியாகக் கூட இருந்தது
Hi All,
He made his comment after reading full novel. So in his point he is correct only. We should appreciate his open talk about the novel.
Vijay
அவசியமான பதிவை சரியான காலத்தில் பதிந்தமைக்கு நன்றி. எஸ்ராவின் எழுத்துமீது தீராத காதல் கொண்டவன் நான். அவர் எழுத்து மீது கொண்ட அபரிதமான ஈடுபாட்டால் ஈரோட்டிற்கு, எங்கள் அமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கியமான கூட்டத்தில் பேச ஒருமுறை அழைத்திருந்தோம், அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து வெங்கடேசன் அவர்களை அதே முக்கியமான கூட்டத்தில் பேச அழைத்தித்திருந்தோம்.
வெங்கடேசனின் படைப்பு குறித்து எஸ்ராவின் மனவோட்டம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது. அவருடைய விமர்சனம் ஒருதலைப் பட்சமாக, அதே சமயம் உக்கிரம் மிகுந்த வன்மமான தாக்குதலாகவே எனக்கு பட்டது.
இந்த முறை எஸ்ரா ஏனோ தடுமாறியிருக்கிறார்.
மிகச்சரியான அர்த்தத்திலும், தொனியிலும் சொல்லியிருக்கிறீர்கள்.
நாவலைத் தாண்டி, எழுத்தாளன் மீது கொண்ட வெறுப்பு எஸ்.ராவின் விமர்சனத்தில் இருந்தது. அவரது வார்த்தைகளில் அவை வெளிப்பட்டிருந்தன.
முற்போக்கு எழுத்தாளர்களே எஸ்ரா-வின் விமர்சனத்தை நுணுகி ஆராய்ந்து அவரது வன்மத்தை கண்டு கொதித்துப் போயுள்ள நீங்கள், ஜெயமோகன் உங்கள் மீது வைத்த கடுமையான - குரூரமான விமர்சனம் அதே தீராநதியில் வந்தபோது, இதுபோன்ற ரியாக்ஷனோ அல்லது எதிர்வினையோ சரியாக ஆற்றாமல் போனதேன்! நான் இங்கே எஸ்ராவிற்காக வாதாடவில்லை நான் காவல்கோட்டத்தை படிக்காத போது எஸ்ராவை படித்து என்ன பயன். ஜெயமோகன் மட்டுமல்ல வினவு போன்ற தளத்தில் தமுஎச குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள் அப்போதெல்லாம் உங்களுக்கு இந்தக் கோபமே வரவில்லையே அது ஏன் என்பதற்கு நீங்கள்தான் விளக்கம் சொல்லவேண்டும்.
அதேபோல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூன்று தூண்களில் ஒருவராக தூக்கிப் பிடிக்கும் பாரதியை பார்ப்பனீயத்தின் பிரதிநிதியாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பாரதிக்கு எதிரான எழுத்துக்களை இணையத்தில் காண முடிகிறது. இதன் மீதும் உங்களது மெனத்தை கலைத்திட வேண்டுகிறேன்.
It is heartening Tamizh, to see you speaking your mind in blog. Happy Welcome to you!
You have come out with a very sensible and responsible response to an unpleasant discussion going on about Kaaval Kottam.
svv
தோழர்,
வணக்கம். வலைப்பூக்கு வருக. உங்கள் எழுத்துக்கள் இங்கே மிகவும் தேவை படுகிறது. மிக சரியாய் எழுதியிருக்கிறீர்கள். படைப்பின் மேல் விமர்சனமே தேவையே தவிர, படைப்பாளி மீது அல்ல.
//பேசுவது எழுவதில் எதையும் மறைப்பது தப்பு என்று சின்ன வயதிலேயே தலையில் ஏறி விட்டதால்..//
அது சரி, அப்ப இது என்னவாம்? நாசூக்கு!!?
//பல நாவல்கள் பல சிறுகதைத்தொகுப்புகள் கட்டுரை நூல்கள் என ஏராளமான படைப்புகளை வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகிலும் சினிமா வட்டாரத்திலும் பேரும் புகழும் பெற்ற ஒரு எழுத்தாளரான அவர் ......அவர் போன்ற ஓர் ஆளுமைக்கு இந்தக்கட்டுரையின் மொழியும் அதில் கொட்டிக்கிடக்கும் ஒருவிதக் குரோதமும் எவ்விதத்திலும் பொருத்தமாகவும் இல்லை.அழகாகவும் இல்லை.//
மனசாட்சியே இல்லாமல் எழுதுவது என்பது நாசூக் தானே ஒழிய எதையும் மறைப்பதாகாது போல, என்ன தோழர்?
எஸ்ரா நான் மதிக்கும் எழுத்தாளர். விமர்சனத்தை வாசிக்கும்போதே சங்கடப்பட்டேன், ஏன் இப்படி எழுதியுள்ளார்என்று, இன்னும் கேட்டால் காவல் கோட்டத்திற்கு இது ஒரு negative publicity தான். போற்றுவார் போற்ற புழுதி வாரி தூற்றுவார் தூற்ற என்பதுபோல காலத்தின் கரங்களில் அப்படைப்பை தந்துவிட்டு அமைதியாக நம் வேலைகளைச் செய்வதுதான் இப்போதைக்கு சரியான முடிவு தோழர். தீராநதிக்கு இந்த வேலை தேவையில்லைதான்.
வந்தவாசி "வெண்ணிலா" -
தெருப் புழுதிகள் அற்ற,மனசின் உணர்ச்சிப் புழுதிகள் நிரம்பிய வலைப் பக்கங்களுக்கு வருகைத் தந்திருக்கும் உங்களுக்கு என் அன்பின் வரவேற்பு.
எஸ்.ரா.வின் ஆளுமை வீழ்ச்சி வெளிப்பட்ட கணத்தில் உங்களின் குரல் உடன் ஒலித்திருக்க வேண்டும்.எதற்கும் உடனடியாக எதிர்வினையாற்றி விடக் கூடாது என்ற கொள்கையில் பிடிப்புடையவர் அல்லவா நீங்கள்.அதன்படியே யோசித்து எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள்.
இந்த எதிர்வினையில் உங்களுக்கு இரண்டு பொறுப்பிருப்பதாக நான் உணர்கிறேன்.முதலாவது தமுஎகச அமைப்பின் பொதுச்செயலாளராக.இரண்டாவது காவல் கோட்டம் நாவலின் மிகச் சிறந்த வாசகராக:அப்படைப்பைக் கொண்டாடிய முதன்மை படைப்பாளியாக.
உண்மையில் வருத்தமாக இருக்கிறது.....உங்கள் எதிர்வினையை படித்தப்பிறகு.இரு பொறுப்பையும் நீங்கள் சரியாகச் செய்யவில்லையோ என்று.
அமைப்பிற்கு வெளியே உள்ள படைப்பாளிகளை மதிக்கும்,அவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்கள் பண்பு உங்களுக்கு நல்லப்பெயரையே பெற்றுத் தந்திருக்கிறது.A right man in a wrong party’-நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களுக்கு வந்தடைந்திருக்கும் உங்களை பற்றிய வெளி உலகப்புரிதல் இதுதான்.உங்களின் இந்த மனசு தான் எஸ்.ராவு.க்கு வெறும் வருத்தத்தையும் மணிமாறனுக்கு கண்டனத்தையும் சொல்லவைத்திருக்கிறது.எதிரி தானே நம் ஆயுதத்தை தீர்மானிக்கிறான்.மணிமாறனின் ஆடுகளம் கண்டனத்துக்குரியது என்றால் மணிமாறன் தேர்வு செய்யவில்லையே ஆட்டத்தை .
காவல் கோட்டம் வெளி வருவதற்கு முன்பே அந்நாவலைப் படித்து ஆச்சரியத்து,அதிர்ந்து போய் பல இரவுகள் தூக்கம் தொலைத்து.,,தொலைபேசியில் பேசிய ஒவ்வொருவரிடமும் வியந்து கொண்டிருந்தீர்கள்.வெங்கடேசன் இனி செத்துப் போனாலும் பரவாயில்லை..இந்தஒரு நாவல் அவன் பெயர் சொல்லும்..என்றீர்கள்..நாவல் பற்றிய உங்களின் இந்த குரல் எதிர்வினையில் எங்குமே பதிவாகவில்லை.
நாவல் குறித்து தமிழின் முக்கிய ஆளுமைகள் எஸ்.ரா.வுடன் ஒப்பிட்டுப் பேசியதை ‘புதிதாக ஒருத்தன் எழுத வரும்போது உற்சாகப் படுத்துவதற்காக படைப்பாளிகள் சிலர் கூடுதலாக சில வார்த்தைகள் பேசிப் பாரட்டுவது சகஜம்.அதைப் பெருசுப் படுத்தக் கூடாது’என எஸ்ரா வுக்கு ஆறுதல் கூறியிருக்கிறீர்கள்.
கோவை ஞானியும் வ.கீதாவும் நாஞ்சில் நாடனும் ஆ.சிவசுப்ரமணியமும் மேடையில் உணர்ச்சிவசப் பட்டுப் பேசுகிற அளவிற்கு மேடைக்குப் புதியவர்கள் அல்ல.தங்கள் கருத்துக்களை மீறி வெறும் உற்சாகப் படுத்துதல் என்ற மேலோட்டத் தளத்தில் நின்று கருத்துக்களை கூறுபவர்கள் அல்ல என்பதை தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்.இந்த இடத்திலாவது நீங்கள் நாவலின் ஆன்ம பலம் பற்றி பேசியிருக்கலாம்.பேசாதது மட்டுமல்ல,,அவர்கள் உறுதியாக முன்வைத்த நாவல் பற்றிய மதிப்பீட்டையும் ‘உணர்ச்சிவசப்பட்ட உரையாக’க் குறைத்து மதிப்பீட்டுள்ளீர்கள்
இன்னொன்று...வலைத்தளதில் எஸ்ரா விற்கு ஆதரவாகவும் எதிராகவும் மின்னஞ்சல்கள் கொட்டப் படவில்லை.உண்மையான அக்கறை கொண்ட சிலர் மட்டும் தான்.,அதுவும் நாகரிகமான முறையில் பதில் எழுதத் தொடங்கினார்கள்.பிறகு வலைத்தளத்தில் அரங்கேறிய கூத்துக்கள் எந்த மனிதகுல அறத்திற்குள்ளும் அடங்க மறுப்பவை.வேதனையும் துக்கமும் அருவெறுப்பும் பொங்கி நிலைத் தடுமாற வைத்த கணங்கள் அவை.தன் வாழ்வை உருக்கி படைப்பைத்தரும் ஒரு படைப்பாளி இந்த அவமானம் சுமக்க வேண்டுமா?’சாதிய அடையாளத்தை தூக்கிப் பிடிக்கும்,திருட்டுப் படைப்பு’ என்ற படைப்பாளியை மிகக் காயப்படுத்தும் குற்றச்சாட்டிற்காவது நீங்கள் பதில் சொல்லியிருக்கலாம்.
தமிழில் படைப்பாளியை படைப்பிற்காகக் கொண்டாடுவது,படைப்பை மட்டும் முன்னிலைப் படுத்தி விமர்சிப்பது என்ற படைப்பை வளர்த்தெடுக்கும் பண்புகள் போய் 25-30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.இலக்கிய குழுக்கள்,கோட்பாடுகள்,சாதி,பெருவட்டம்,சிறுவட்டம்...இப்படி பல வட்டங்களைத் தாண்டித்தான் தமிழ்ப் படைப்பாளி தமிழ் வாசகர்களை சென்றடைகிறான்.வாசகர்களிடம் இருந்து படைப்பாளிகள் விலகியே இருக்க இப்படியான வகைபிரித்தல்கள் உதவி செய்கின்றன.தமிழ் நாட்டைத் தாண்டி ஒரு தமிழ் படைப்பாளியும் சென்றுவிடமுடியாமல் நாம் எல்லோரும் கவனமாக காய் நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.
காழ்ப்புணர்ச்சியும்,வஞ்சம் தீர்க்கும் மிருக உணர்ச்சிகளையும் தொலைப்பதுதான் மனித இனத்தின் குறைந்தபட்ச விழிப்புணர்வு.பக்குவப்பட்ட மனிதப் பண்பின் எச்சங்களைக் கூட கொண்டிராதவர்களை படைப்பாளிகளாக கொண்டாடிக் கொண்டிருந்தது இன்றைக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்ற புரிதலோடு மனதை திடப் படுத்திக் கொண்டு இவ்விஷயத்தைக் கடக்கிறேன்.
இந்த பதில் எஸ்ராவுக்கு எழுதியிருக்க வேண்டும்.அருகில் நெருங்கவே முடியாத அளவிற்கு அவர் இருந்ததால் பதில் சொல்லும் இடத்திற்குக் கூட என்னால் செல்லமுடியவில்லை.உங்களுக்கு எழுத நேர்ந்தது துரதிர்ஷ்டமே.
விமர்சனங்களை வரவேற்று, காழ்ப்புணர்ச்சிகளை தூக்கி எறியச் சொல்லி மிக மிகத் தேவையான, எவர் மனமும் புண்படாதவாறு சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
தமிழ் இலக்கிய உலகு இப்போதிருக்கும் சூழலில் இது எஸ்.ராவுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தக் கூடிய ஒன்றுதான்.
>>இதுதான் இத்தனை ஆண்டுகாலம் நவீன தமிழ் இலக்கிய உலகில் வாழ்ந்து நீங்கள் கற்றுக்கொண்ட நாகரிகமா என்று வேதனையுடன் கேட்கிறேன்.<<
எனக்குத் தெரிந்து 25-30 ஆண்டுகாலமாக நீங்கள் சிற்றிதழ் இலக்கியச் சூழலில் (நீங்கள் அதை 'நவீன' இலக்கிய உலகு' என மயக்கம் கொள்வது குறித்துப் புன்னகைக்கிறேன்) புழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தச் சூழல் ஏற்படுத்தும் இனக்குழு மனோபாவம்,தன்னோக்கிய பார்வை, இவை நாகரீகம் கற்றுத் தருபவனவாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுவதைப் பார்க்கும் போது வியப்பேற்படுகிறது. கல்கி பற்றி பு.பி எழுதிய் கசப்புணர்வு சிந்தும் கட்டுரைகள், கடிதங்கள், 70களில் நடந்த சிற்றிதழ் மோதல்கள், 'இலக்கிய ஊழல்' முற்போக்கு முகாம் மீது அறிவுஜீவிகளின் எள்ளல்கள், அதன் பின் 2000ல் இலக்கியக் கூட்டங்களில் கவிஞர் பெருமான்களின் பின் நவீனத்துவ நடததை பற்றிய குறிப்புகள், மலம் துடைக்கக் கிழிக்கப்பட்ட இலக்கிய மலர்கள் இவற்றில் எதை அனுப்பட்டும் 'நவீன' உலக கனவான்களின் நயத் தக்க நாகரீகம் பற்றி நீங்கள் தெளிவு பெற.
நண்பரே, இலக்கியச் சிற்றுலகின் அச்சு அரசியல். தன்வயமான ஈகோக்களின் அரசியல்.ஒன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதற்கு மாற்றான தன்னுடைய அரசியலைக் கண்டெடுக்கட்டும். அது சாத்தியப்படாத பட்சத்தில் குறைந்த பட்சம் இந்த அரசியலைக் காணாது ஒதுக்கட்டும்.
பாம்பும் சாகாத, கழியும் நோகாத இந்த வழி(சல்) எதற்கும் உதவாது.
நண்பர் மாலனின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை நான் ஏற்கிறேன்.சிற்றிதழ் இலக்கிய வட்டத்தில் எல்லோருமே மோசம் என்று நான் நம்பவில்லை.அமைப்புக்கு வெளியில் உள்ள நல்ல இதயங்களோடு ஒரு நட்பை மனப்பூர்வமாக விரும்புவதால்தான் சந்தேகத்தின் பயனைப் பயன்படுத்தி நட்புக்கரம் நீட்டுகிறேன்.ஆகவே வழிசல் என்றாலும் இந்த வழி சரி என்றே கருதுகிறேன்.
வெண்ணிலாவுக்கு வணக்கம்.எனக்குத்தெரிந்த அளவில் என் மனநிலைக்கு ஏற்ற வகையில் நான் எதிர்வினையாற்றியிருக்கிறேன்.காவல்கோட்டம் நாவலை இப்போதும் அதே அளவில் கொண்டாடுகிறேன்.எல்லோரிடமும் பேசுகிறேன். ஒரு படைப்பைப் பாராட்டினால் பலர் கோபித்துக்கொள்ளும் சூழலில் இந்த அளவுக்கு எழுத்தில் பதிவு செய்வது சரி என்று என் அறிவுக்குப் பட்டது. என் வீதிக்கு வந்தமைக்கு நன்றி.
S.RAMAKRISHNAN derailed in his article/writings--R.Selvapriyan-Chalakudy
தமிழ்ச்செல்வன் அய்யா ஈழத்தமிழர்கள் சாவிலே சந்தோசம் காணும் எத்தனை ரிட்டயட்டு எடுத்தாளர்கள் இலக்கியத்தின் அன்பைச் சொல்கிறார்கள் பாருங்கள். வெறுப்பின் அரசியலைப் பற்றிப் பேச இந்த டில்லிபாபுகளுக்கு என்ன அருகதை?
முற்போக்கு பிற்போக்கு வயிற்றுப்போக்கு பெரும்போக்கு. இப்படியே வட்டங்களை வைத்துக்கொண்டு மாவாட்டுங்கள். மக்கள் சாகிறார்கள். உங்களுக்கெல்லாம் இலக்கியம் ஒரு பிடிக்கீரை. எஸ்ரா, ஜெமோ, மாலன், ராஜநாயகம், நீங்கள் எல்லோருமே இலக்கியப்பூச்சாண்டி காட்டுகிறீர்கள். நேரமிருக்கிற ஆளுங்க இலக்கியம் பண்ணரீங்க. அசல் மக்கள் இலக்கியத்தை எழுத கூடறவன் அல்லாம் நாளாந்த வேலைல செத்துகிட்டிருக்கானுங்க. போங்கய்யா! உங்க புகழும் இலக்கியமும். மனுசனை கவனியுங்க
துணையெழுத்து படித்தபிறகு எஸ்.ராமகிருஷ்ணன் மீது பெரும் மதிப்பு வந்தது. ஆனால் சண்டைகோழி படத்தில் கவிஞர்.குட்டி ரேவதியை அவர் மிக கேவலமாக வம்பிழுத்ததைப் பார்த்தபிறகு அடச்சீ என்றாகிவிட்டது.
-----
சரி தெரியாம கேக்குறேன், உங்க ஆளு சு.வெ பற்றி அவர் பேசுனவுடனே, இப்படி பொங்குரீங்களே, குட்டி ரேவதியை அவர் வம்பிழுத்தப்போ உங்க எதிர்வினை என்ன???
Post a Comment